காதலிக்க நேரமில்லை – என் பார்வை

Published by

on

தைப் பொங்கலுக்கு வெளிவந்த தமிழ்ப்படங்களில், காதலிக்க நேரமில்லை கலைப்படமல்ல. மாறி வரும் இளைஞர்களின் சிந்தனையை,  போக்கை புரிந்து ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்ததை அளவான நாடகத்தருணங்களுடன் சித்தரிக்கப்பட்ட சினிமா. AR ரஹ்மானின் இசையும்,  பாடல்களும் கதையையும் பாத்திரங்களின் எண்ணங்களையும்  ரசிகனுக்கு கடத்துகின்றன. கதாநாயகியின் பின்னால் சுற்றும் cliche கதாநாயகனை காண்பிக்காமல்,  உலகம் இவ்வளவு கஸ்டப்பட்டிருக்குப்ப நமக்கு குழந்தை வேணுமா எனக் காதலியிடம் கேட்கும் இளைஞன். ஒரு பாலின நண்பனை முழுக்க முழுக்க கிண்டல் செய்யாமல் அவனது உணர்வுகளை மதிக்கும் நண்பர்கள். அவனும் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென சொல்லுவதை கொஞ்சம் கிண்டல் கொஞ்சம் யதார்த்தம் என  உரையாடல்.

எண்பதுகளில் test tube குழந்தை கண்டுபிடிப்பு வந்தபொழுது, சிவசங்கரியின் “அவன் அவள் அது “ நாவல் சினிமாவாகி இந்திய சமுதாயம் எப்படி ஏற்றுக்கொள்ளுமென அலசியது. குழந்தைக்காக இன்னொரு கல்யாணமா என்று கேட்ட அந்தக் காலத்தில் ivf-ஆல் கணவன் மனைவிக்கும் வாடகைத்தாய்க்குமான உறவு சிக்கலைப் பேசியது அது. குழந்தைக்காக கல்யாணமா எனக் கேட்கும் இளைஞர்கள் இப்பொழுது. இப்படத்தின் கதைநாயகி , அவர்களில் ஒருவள். அப்படியென்றால், அப்படிப் பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை? எதிர்கொள்ளவேண்டிய சூழல்? இந்தப் படம் அதை தேவையான அளவில் தொட்டுச் செல்கிறது. நாயகியின் வீட்டின் கூரையை பிரித்துச் சந்தித்த நாயகனை, இந்தப் படத்தில் பின் நவீனத்துவ சிந்தனையை வெளிப்படுத்தும் உரையாடலால், கண் முன்னால் காதலையும் காதலியையும் இழக்கும் பாவப்பட்ட இளைஞனாக சித்தரித்ததற்கு இயக்குனர் கிருத்திகா உதயநிதியைப் பாராட்டவேண்டும். Template நாயகனாக இல்லாமல் நாம் பார்க்கும் இளைஞர்களில் ஒருவராக அவரை பார்ப்பதற்கு மகிழ்வாக இருந்தது. “இமைகள்” என்ற குறும்படத்தில் வந்த அந்த நாயகியை (T. J. பானு), படம் பார்த்திருந்தால் மறக்கமாட்டீர்கள். கொஞ்சம் possessive காதலியாகவும் அதே நேரம் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்பவளாகவும் வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் அதிக நாடகத்தனம் இல்லாமல் தேவையான அளவிற்கு உப்பு என்ற ரீதியில் இயக்குனர் பயன்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தை பற்றிய உரையாடல்களில் ஒன்றில், யோகி பாபு இயக்குனர் தனக்குக் கொடுத்த T-sirt எல்லாம் அவ்வளவு நன்றாக இருந்தது. நான் அப்படியே எனக்கு வைத்துக்கொண்டேன் என்று சொல்லியிருப்பார். நாயகி , நாயகன், நண்பர்கள், நாயகியின் குழந்தை – அவர்கள் போட்டிருந்த ஆடைகள் எல்லாம் அவ்வளவு கச்சிதம். பார்த்தவுடன் Macy’s-ல் எடுத்தது, JC Penny-யில் எடுத்தது, Costco-வில் எடுத்தது என இனம் கண்டுகொள்ளபடும் சட்டையும் பேண்ட்டும் போட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயாம் நமக்கு. பாத்திரங்களின் ஆடைகளை அவைகளின் வடிவமைப்பை கடுகடுவென கண்ணில் தீப்பறக்கப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் என இல்லையெனினும், பார்த்தால் தவறில்லை எனும் படம். கிருத்திகா உதயநிதி, இயக்குனராக நன் மதிப்பை பெறுகிறார். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அளவான உப்பு புளி மிளகாய் காட்சிகள் பாத்திரங்கள் style. ராதா மோகனின் படங்களை அப்படித்தானே பார்ப்பேன்.
ஓ காதல் கண்மணி-யில் எப்படி அறிமுகம் ஆனாரோ, அதே வேகத்துடன் உத்வேகத்துடன் தன் பாத்திரத்தை வெளிப்படுத்தும் நித்யா மேனனுக்காகவும் இந்தப் படத்தை பார்க்கலாம்.