படைப்பாளிகள் வாசகர்கள் சூழ படைப்பாளியின் திருமணம்

Published by

on

எழுத்தாளர்  அஜிதன் அவர்களின் முதல் படைப்பான மைத்ரி நாவலே  , அவரது  அடுத்த அடுத்த  படைப்புகளை  என்னை ஒரு எதிர்பார்ப்புடன்  வாசிக்க வைத்துவிட்டன . ஒரு வாசகனாக அவரது படைப்புகளை வாசித்து அவருக்கு சிறுசிறு குறிப்புகளை எழுதி அனுப்புவேன். அவரது படைப்புகளில் ஒன்றை வைத்து ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்களுக்கு சொந்தக்காரர் என்று அன்புடன் அவரை அழைக்கும் அளவிற்கு அணுக்கம். நான் அணுக்கமாவது இருக்கட்டும்.  அஜிதனின் படைப்புகளை வாசித்த வாசகர் ஒருவர் ,  வேறு ஒரு நிலையை அடைந்திருந்தார் என்று சென்ற நவம்பர் மாதக் கடைசியில், அவருடனான உரையாடலில் அறிந்துகொண்டேன்.  அந்த வாசகி மற்றும் காதலி தன்யாவுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டுவிட்டதாகவும், திருமணத்திற்கு வரவேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.  பிப்ரவரி 2024-ல்  திருமணம் இருக்கும் என்று சொல்லியிருந்தார்.  தந்தையை பார்க்கவேண்டும் என்ற ஏக்கம், அஜிதன் தன்யாவை திருவருட்செல்வன்  திருவருட்செல்வியாக பார்க்கும் வாய்ப்பு என எல்லாம் சேர்ந்து ஒரு பயணம் அமைந்து வந்தது. 

கோவை ராம்நகரில், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் அரங்கில் 18, பிப்ரவரி வரவேற்பு, 19-ல் திருமணம். ராதாவும், நானும்,  நண்பரும் இசைமைப்பாளருமான ராலே ராஜனுடன் இரண்டிலும் கலந்துகொண்டோம்.  வரவேற்பு அன்று அஜிதனின் தந்தை எழுத்தாளர் ஜெயமோகன், பட்டன்  டவுன் சட்டை  போட்டு , இன் செய்து , பெல்ட் போட்டு, சூ அணிந்து,   ஒரு தலைமை நிர்வாக அதிகாரியைப் போல  பார்ப்பதற்கும், அவருக்கே உரித்தான புன்னகையுடனும் நின்று வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்.  மாப்பிள்ளை அறைக்குச்  சென்று அஜிதனை பார்க்கலாமா என்ற யோசனையை தவிர்த்து, அஜிதன்-தன்யாவை ஒருங்கே பார்க்க்கலாம் என்ற முடிவுடன்  மண்டபத்தில் உள்ள நண்பர்களை பார்த்து பேச ஆரம்பித்துவிட்டோம். எழுத்தாளர் யுவன் சேந்திரசேகர் அவராகவே வந்து கட்டிப்பிடித்து வரவேற்று  அளவளாவ ஆரம்பித்துவிடடார். அவரது மனைவியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருடன் இருக்கும்பொழுதே ஒரு பெரும் படடாளம் , நீலி ஆசிரியை ரம்யா, ஜெயமோகனின் ஏழாம் உலகம் மொழிபெயர்ப்பாளர் சுசித்ரா, அறம் தொகுதியை ஆங்கில மொழியாக்கம் செய்த பிரியம்வதா ராம்குமார், அவரது கணவர் விஜய் என்று அனைவரும் வந்து வணக்கம் சொல்லிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் . பிரியம்வதாவை பார்ப்பது இதுவே முதல் முறை. போனில் பேசினாலும் நாங்கள் வியந்து பேசக்கூடியவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள்தான். அவரைச் சுற்றியே இப்பொழுது எங்கள் பேச்சு இருந்தது.  

சுனில் கிருஷ்ணன் கண்ணில் பட , ராதாவும் நானும் நின்று அவருடன் உரையாட, சாப்பிட்டீர்களா என்று கேட்டார். வந்திருப்பது திருமண வரவேற்பிற்கு என்று அப்பொழுதுதான் உரைத்தது. வலது பக்கத்தில் சு. வேணுகோபால் அவர்கள் இருக்க அப்படியே நகர்ந்து அவருடன், ‘சுஜாதா கண்டெடுத்த முத்து’ என்ற நாளிலிருந்து அவரது கதை பேசுபொருள்களை முன்வைத்து பேச்சு வளர்ந்தது. விவசாயியின் மகனாக அவரது கதைகளுட னனா  எனது சிறப்பு அணுக்கத்தை பகிர்ந்துகொண்டேன்.  தற்போது அவர் எழுதிக்கொண்டிருக்கும்  நாவலை முதலில் அவர் மெய்ப்பு  பார்ப்பதை பற்றி சொன்னார்.  எழுத்தாளன் , நல்ல படைப்பு என்று எதுவும் தெரியாமல் எழுதிய  ‘நுண்வெளி கிரகணங்கள்’   எழுதிய அனுபவம்தான் சிறப்பு என்றார். 

எங்கள் திருமணத்திற்குப் பிறகு நாங்கள் சென்ற திருமணங்கள் எல்லாம் நாங்கள் முன்னின்று நடத்தும் திருமணங்கள்தான். விருந்தாளியாக மட்டும் மகிழ்ந்திருக்க வந்துள்ள திருமண நிகழ்வு இது. கொண்டாட்ட மனநிலையுடன் சாப்பிடச் சென்றோம்.  என்ன வேண்டுமோ அதைக் கொடுத்து பரிமாறிக்கொண்டிருந்தார்கள். எடுத்தவுடன் ‘ரஷ்யன் சாலட்’ என்று இருந்தது. தட்டில் வைத்தும் வைக்காததுமாக . யுக்ரைன் நண்பர்களின் நினைவாக ஏண்டா எடுத்தாய் என்ற பின்குரல் ஒன்று ஒலிக்க சங்கடமாக போய்விட்டது.  அது வேறு இது வேறு என்று சமாதானப் படுத்திக்கொண்டு சாப்பிட்டேன். எதிரில் வந்த எழுத்தாளர்   ஷைலஜா , பின்னாடி தோசை சுட்டு கொடுக்கிறார்கள், தவறவிடாதீர்கள் என்று  நினைவுறுத்தினார். அவர் சொல்லியிருக்காவிட்டால், நான் பொடி  தோசையை தவற விட்டிருப்பேன். ஈவென்ட் மேனேஜ்மென்ட்-ல்  உபசரிப்பவர்கள், கொஞ்சம் என்றால் கொஞ்சமாக வைக்கிறார்கள்.  அதுதானே நமக்கு வேண்டும். ராதாவிற்கு இனிப்பு பிடிக்காது. நான்  இனிப்பு சாப்பிட்டால் அவருக்குப்  பிடிக்காது. பிடித்தவருக்கு பிடிக்காததை சாப்பிடுவது எனக்குப் பிடிக்காது. இனிப்பைத் தவிர மற்றதெல்லாம் சாப்பிடடேன்.  ராதாவே சர்க்கரை இல்லாத காப்பி என்று எனக்கு வாங்கி வந்து கொடுத்தார். 

சுனிலை சந்திக்கும் முன்னர் , சில நண்பர்கள் வந்து கைகுலுக்கிப் பேசினார்கள்.  நன்றாக இருக்கிறீர்களா ? எப்பொழுது வந்தீர்கள் என்று பொதுவான கேள்விகள் கேட்டு மொட்டை சமாளிப்பு செய்துகொண்டிருந்தேன். ராதா வந்து இணைத்துக்கொண்டு யாரும்மா இவங்கெல்லாம் எனக்குத் தெரியல என்று கேட்க , வலையில் மாட்டிக்கொண்ட எலியாக சில மணித்துளிகள்.  அதில் ஒரு நண்பர் என்னை சென்னையிலும் சந்திப்பதாக சொல்லியுள்ளார். எப்பாடு பட்டேனும் அவரது பெயரை கண்டுபிடித்தாக வேண்டும். 

அண்ணா அண்ணா என்று விஜய் சூர்யா பேசினார்.  நீங்களா சாப்பாடு ஏற்பாடு என்று கேட்டேன். இந்த முறை யார் இவர் என்று ராதா கேட்கவே இல்லை. கேட்டிருந்தால், இவர்தான் மா விஷ்ணுபுரம் விழாவில் கல்யாணச் சாப்பாடு போடுபவர் என்று சொல்லியிருப்பேன். தெரியாத கேள்வியை கேட்டு என்னை அடக்கும் ராதாவிற்கு இவரிடம் தெரிந்து பேசுகிறேன் என்று கண்டு பிடித்திருப்பார். கள்ளி ! 

ஷாகுல் கண்ணில் படவில்லை. வாட்சப் செய்தால் அவர் எடுக்கவில்லை. அவர் அழைக்கும் சமயம் தெரிந்தும் தெரியாமலும் யாருடனாவது நான் பேசிக்கொண்டிருப்பேன். சில சில கண்ணா மூச்சிக்குப்பிறகு ,   ஷாகுலை சந்திக்க, அவர்தான் ஜெயமோகனுடன், சைதன்யாவுடன் எங்களை நிற்கவைத்து போட்டோ எடுத்தார். ஜெயமோகன் , அதற்குத்தான் போட்டோகிராபர் இருக்கிறாரே என்று ஷாகுலை  கலாய்த்தார். எதற்கும் கலங்காத ஷாகுலால்தான், எங்களிடம் சரித்திரத்துடனான புகைப்படம். 

நாங்கள் மட்டும் இருக்கும் நேரங்களில்,  ராதா, நுழைய நுழைய  உயரமா நம்ம சாண்டியாகோ அருண் மாதிரி ஒருத்தரு உங்ககிடட பேசினாரே அவரு யாரு என்று குயிஸ் வைப்பார். நான் அவர்தான்மா நம்ம அட்மின் திரு என்றேன். வாட்சப்பில் போட்டொ வைக்காத ஆட்களையெல்லாம் எப்படி கண்டுபிடிப்பது என்று திருவை திட்டினேன். (திரு எனது கட்டுரைகளை வாசிப்பதில்லை என்ற தைரியத்தில் பதிவு செய்கிறேன்.) இந்தக் கண்களை, புன்னகையை புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன், யாருடன், இவரைப் பார்த்திருக்கிறேன் . ரம் யாவிடம் கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஜெயஸ்ரீ அவராகவே வந்து ஆனந்த் குமாரின் மனைவி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். 

வரவேற்பில் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி கொடுத்தது பவா செல்லத்துரையும் ஷைலஜாவும்தான்.  தெரிந்த நலமான பவாவுடன்  உரையாடியதில் மகிழ்ச்சி.   நண்பர் ரஜினிகாந்தின் அம்மாவும் அப்பாவும் வருவார்கள்  என்று தெரியும். ஒரு மாற்றத்திற்கு டாக்டர் ரஜினியை மையப் பொருளாக வைத்து உரையாடிவிட்டு, பவா, ஷைலஜா , ரஜினியின் பெற்றோர்களுடன் ஒரு புகைப்படம். பவாதான் ,  ஜெ-வின் அண்ணன் சங்கரப்பிள்ளையையும் அவரது மகனையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். சங்கரப்பிள்ளையின் முகம் அறிந்துகொள்ள ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களுக்காக அவருடனும் அவரது மகனுடனும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 

வரவேற்பு மேடையில்  திருவருட்செல்வனும் திருவருட்செல்வியும் அழகுப் பதுமைகளாக ஜொலித்தார்கள்.  இருவரும் அவர்கள் உலகிற்குள் இருந்து மகிழ்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். மீண்டு வந்து வந்தவர்களை வரவேற்று புன்னகை புரிவதிலும் தவறுவதில்லை. மணமகளின் தாத்தா, வாழ்த்துப்பா ஒன்று பாடி மணமக்களை வாழ்த்தினார். 

நான், ராதா, ராலே ராஜன், இயக்குனர் வினோத் எல்லோரும் சேர்ந்து மனமக்களுடன் புகைப்படம் எடுக்கத்தான் ஒன்றாக நின்றோம். அருண்மொழி , நாங்கள் மேடையில் ஏறியதும் எங்களை தன்யாவின் பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்த வந்து இணைந்துகொண்டார். ஆதலால், குடும்பம் குடும்பமாக போட்டொ எடுத்துக்கொண்டோம். ராஜனுக்கும் வினோத்திற்கும்  Four Seasons  படக்குழு அந்தஸ்து கொடுத்து அவர்களுடன் மட்டும் புகைப்படம். அஜிதன் என்னை ‘ஆஸ்டின்  சௌந்தர்’ என்று தன்யாவிற்கு அறிமுகப்படுத்தினார். தன்யா ,” சாரை எனக்குத் தெரியும்” என்றார். 

அனைவரையும் பார்த்தாகிவிட்டதா என்று மனதில் ஓட்டிப் பார்க்க,லோகா வந்து ராதாவை கட்டிப்பிடித்துப் பேசியது, ஓவியர் ஜெயராம் சுருட்டை  முடியுடன் வந்து கைகொடுத்தது, ஜாஜா, அதுதான் சென்னையில் பார்க்கப்போறோமே என்று சுருக்கமாக முடித்துக்கொண்டது, பேச நினைத்த நேரமெல்லாம், முதுகை கட்டிக்கொண்டிருந்த ஈரோடு கிருஷ்ணன், அரங்கா கண்ணில் படவில்லை என்று அவரை வாட்சப்பில் அழைத்தேன்.  நாளைதான் அவர் வருவார் என்று நம்பத்தக்க ஜெயமோகனே சொன்னதால் , அவரை அன்று தேடுவதை நிறுத்தினோம். அருண்மொழி, ஜெயமோகன் அவர்களுடன் சொல்லிக்கொண்டு  அன்றைய இரவை இனிதே முடித்துக்கொண்டோம். உடன் பயணிகள் ராஜனையும், வினோத்தையும் அவர்கள் இருப்பிடத்தில் விட்டுவிட்டு எங்கள் மகள் பப்லு வீட்டிற்கு நானும் ராதாவும் சென்றோம்.

ராதா , காலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் எதுவும் இல்லாமல் எழுந்துவிட்டார்.  காலையில் ஆறு மணிக்கு எழுந்துகொள்ள ஐந்து மணியிலிருந்து வார்னிங் அலாரம் வைத்து உறங்கும் பப்லு உறங்கிக்கொண்டிருந்தாள். பப்லு எழுந்தால்தான் எனக்கு காப்பி, ராதாவிற்கு சேலை கட்ட உதவி எல்லாம் நடக்கும். நான் வெள்ளிக்கிழமை  மாலை அப்டேட் செய்யும் ரிப்போர்ட் பண்ணவில்லை என்பதை நினைத்து திகைப்புற்று, திங்கள் கிழமை அமெரிக்காவில் விடுமுறை , ஆதலால் பரவாயில்லை  என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு  , வாட்ஸப் பார்த்தேன். அரங்கா , ‘தல’ என்று மொட்டையாக குறுஞ்செய்தி போட்டிருந்தார். அவருக்கு ஏழரைக்கு மண்டபத்தில் இருப்போம் என்று பதில் சொல்லிவிட்டு ஆயுத்தமானோம்.  ராதா தன்னை தயார் செய்வதில் நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால், எந்த  இடத்திற்கும் தாமதமாவது அவரால் அல்ல. ஒரு பேண்ட் ஒரு ச ட்டை  போட எவ்வளவு  நேரமாகும் என்று கடைசி வரை இழுக்கும் என்னால்தான் வாதம் ஆரம்பிக்கும். குழந்தைகள் சஹா, பப்லு , சிந்து -விற்கு இதை ரசிப்பதில் அலாதி இன்பம். அன்று  பப்லுவிற்கு இலவச நாடகம். 

எனக்கு அமையும் ஆக்டிங் டிரைவர்-களும் நேரம் தவறுவதில்லை.  நான் கேட்டுக்கொண்ட நேரத்தைவிட பதினைந்து நிமிடம் முன்னரே வந்து காரை கழுவி துடைத்து தயாராக இருப்பார்கள். அன்றும் அவர்களின் கர்ம சிரத்தையான நேரம் தவறாமையால், ராஜனையும் வினோத்தையும் சொன்ன  நேரத்திற்கு அழைத்துக்கொண்டு ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தை அடைந்தோம். அதிகம் யாரும் இல்லை. மாப்பிள்ளை அஜிதன்தான் வேஷ்டி சட்டையில், விருந்தினர் ஒருவருடன் உரையாடிக்கொண்டு காபி குடித்துக்கொண்டிருந்தார்.  2018 விஷ்ணுபுரம் விருது விழாவில் முதன் முதலில் அவரை பாத்தபொழுதே அஜிதன் அழகன் என்று என் மனதில் பதிவாகியிருந்தது. இந்த இரண்டு  நாட்களாகவும் அப்படியே அவரைப் பார்க்கிறேன். மாப்பிள்ளைகள் க்ளீன் சேவில் இருப்பது ஜெயமோகன் அருண்மொழி காலம். மாப்பிள்ளைகள் ட்ரிம் செய்த தாடியுடன் இருப்பது அஜிதன் தன்யா காலம்.  தாடி அஜிதன் அப்பொழுதே தயாரான மாப்பிள்ளையாகத்தான் இருந்தார். நான் கேட்டதற்கு , முகூர்த்தத்திற்கு பட்டு வேஷ்டி பட்டு வேஷ்டி கட்டி வருவேன் என்றார். எங்களை சாப்பிட சொன்னார்.  பந்திக்கு முந்தியவர்களாக சாப்பிட சென்றோம்.  விஷேச நாளில் மன்னிப்பு வழங்கப்பட்டு, எனக்கு கேசரியும் சர்க்கரை பொங்கலும் சாப்பிட ராதா அனுமதி அளித்திருந்தார். இட்லி, வடை, பொங்கல், இடியாப்பம், பூரி என எல்லாவற்றையும் அளவாக பரிமாறச் சொல்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அருண்மொழி வந்தவர், ராதாவிடம்,  உங்கள் அணிகலன்கள் தேர்வு நேற்றும் நன்றாக இருந்தது, இன்றும் நன்றாக உள்ளது  என்று பாராட்டிவிட்டு, எங்கள் எதிரில் அமர்ந்திருந்த அவரது அம்மாவையும் அப்பாவையும் அறிமுகப்படுத்தினார்.  இசைமைப்பாளருக்கான கெத்துடன் ஷெர்வானி அணிந்திருந்த ராலே ராஜனுக்கு , அருண்மொழி ஹைபை கொடுத்தார். 

அரங்காவின் சந்திப்பு  நாங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு அமைந்தது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இது நேர் சந்திப்பு. எந்த அளவுக்கு இடைவெளி என்றால், வினோத்தை அரங்கா எனக்கு அறிமுகப்படுத்துகிறார்.  நடிப்பு சொல்லித்தரும் வினோத் நடிக்கவேண்டியதாகிவிட்டது. நின்று அமர்ந்து என்று உரையாடி ,அரங்காவிற்கு இடைவேளிகளை நிரப்பினோம். 

இன்று எல்லாவற்றையும் நேருக்கு நேர் பார்த்து விடுவது என்று ராதா, முதல் வரிசை நாற்காலிகளில் நட்ட நடு நாயகமாக இருந்த ஒன்றில் அமர்ந்துகொண்டு இன்னொரு நாற்காலியில் தனது கைப்பையை வைத்துக்கொண்டார். நண்பர்களைக் கண்டால் ஓடிவிடும் எனக்கு ரிசர்வ் செய்ய அந்தப் பை.  கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஜெயமோகன், எழுத்தாளர்கள், ஆளுமைகள் வந்தால், என்னையும் ராஜனையும் கூப்பிட்டு நிறுத்தி அறிமுகப்படுத்தினார்.  இல்லையென்றால் கீரனூர் ஜாகிர்ராஜா-வெல்லாம் நான் அடையாளம் கண்டிருக்கமாட்டேன்.   குருஜி சௌந்தர் இன்றுதான் வந்திருந்தார்.  தனது யோகா குருவை நேரில் பார்த்ததில் ராதாவிற்கு மிக்க மகிழ்ச்சி.  கொஞ்சம் தொலைவில் நின்றிருந்த   , கவிதா  என்னை பார்த்து , ‘நீங்கள்.. க. நா. சு. உரையாடல்’ என்று  புன்னகை செய்துவிட்டு, ராதாவின் பக்கம் கையை காட்டி உங்கள் மனைவியா என்றார்.  கதிரை குடும்பத்துடன் பார்த்தேன். அவரது மகள் இவனை நம்பலாமா சிரிக்கலமா என்று பார்த்தாள்.  

மாப்பிள்ளை , பெண் , அவர்களது பெற்றோர்கள் என  சம்பிரதாயங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தன. நேற்றே கல்பற்றா  நாராயணனை பார்த்திருந்தேன். மலையாளத்தில் பேசமுடியாது என கூச்சப்பட்டு  நேரம் காலம் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று எனது அருகில் அவர். ‘தொடு  திரை’-யைச் சொல்லி வாசகனாக அவரிடம் என்னை முன் வைத்தேன். தூரத்தில் அமர்ந்திருந்த ஜெயமோகன் , ‘நீ அவரிடம் எப்படி பேசுகிராய்’ என்று புன்னகைத்து பார்த்துக்கொண்டிருந்தார். கலப்பற்றா , நேற்றே வந்தீர்களா என்று கேட்ட கேள்வி எனக்குப் புரியாமல் போக ஆங்கிலத்திற்கு மாறிவிட்டார். சுமித்ரா, கே.வி. ஷைலஜா, ஆஸ்டின் தட்பவெப்பம், தமிழ் மக்கள் எண்ணிக்கை அதில் ஜெயமோகனின் வாசகர்கள் என்று உரையாடல் வளர்ந்தது. கேரளாவில், முகூரத்தம் திருப்பூட்டிற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டேன். இருபது நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடும் என்றார்.  ஆனால் சம்பிரதாயப்படி இப்படித்தான் ஆற அமர எல்லாம் செய்யவேண்டும் என்றார். எதற்காக அவசரப்படவேண்டும் என்றார். 

நேற்று பார்த்தவர்களை இன்றும் பார்த்தோம். பிரியம்வதா, விஜய், சுசித்ரா, ரம்யா, ஜெயராம், ஷாகுல், ஜாஜா, செந்தில், மீனா , யோகேஸ்வரன், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் , ரவிசுப்பிரமணியம்  என அனைவருடனும்  ஓரிரு சொற்கள், தலையாட்டல் எல்லாம் நடந்தன.  நவீனின் மனைவி கிருபாவிற்கு என்னைத் தெரிந்திருந்தது. ராதாவைத் தெரியவில்லை. நவீனும் கிருபாவும் விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கிறார்கள். நேற்று இரவு பார்த்த பாரதி பாஸ்கர்,  ராஜா, விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களை இன்று காணவில்லை. ஆனால்,  நேற்றே அவர்களுடன் இனிய உரையாடலை நிகழ்த்தியிருந்தேன்.பாரதி பாஸ்கர் , சஹா எழுத்தாளராக தன்னை நிறுத்திக்கொண்டான் என்பதை நினைவு வைத்திருந்தார். ராஜா,  சில  கூட்டங்கள், நிறைய சுற்றி பார்ப்பது என்று இருந்தால் அமெரிக்க சுற்றுப்பயணம் நன்றாக இருக்கும் என்றார்.   பாரதி பாஸ்கர் ஷாகுலின் கப்பல்காரன் கட்டுரைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

மணமகன் மணமகளை தங்கள் கைபேசிகளில் அடக்கிக்கொள்ள ஒரு கூட்டம்.  இடையில் ஒருவர் மைக் பிடித்து சொல்லிப் பார்த்தார். திருப்பூட்டு நேரம் வரும் முன் பாதிக் கூட்டம் மணவறையின் முன்னரும் பக்கவாட்டிலும். திருப்பூட்டுதல், மணமகன் மணமகள் குடத்தில் போட்ட மோதிரத்தை தேடுதல், மாலை மாற்றுதல் , எல்லாவற்றையும் பார்க்கும் பாக்கியம் நிற்கும் விருந்தினர்களுக்கே. திருவருட்செல்விகள்  எப்படி மாறி வருகிறார்கள் என்பதை கவனித்தேன். எனது சகோதரிகள் என்னைவிட பத்து பதினைந்து வயது மூத்தவர்கள். அவர்கள் கழுத்தில் தாலி ஏறியதும் கண்ணில் மாலை மாலையாக நீர் வடித்தார்கள். ராதா ஊரைவிட்டு கிளம்பும்பொழுது சிறிது கலங்கினார். தன்யா திருப்பூட்டு முடிந்து , தனது தந்தையை பார்த்து எல்லாம் ஓகேதானே என்பதுபோல ஒரு புன்னகை செய்தார். அவரும்  தம்ஸ் அப் சைகை செய்தார்.  எங்கள் வழக்கில் மாப்பிள்ளைக்கு தோழன், மணப்பெண்ணிற்கு தோழி துணையாக அமர்ந்து எல்லாம் பார்த்துக்கொள்வார்கள். கர்ச்சீப் வைத்து முகத்தில் வடியும் வியர்வையை  துடைத்துவிடுவார்கள். தலையில் விழும்  முகூரத்த அரிசியை எடுத்துவிடுவார்கள். பெண்ணின் நகையை சரி செய்வார்கள். அஜிதனும் தன்யாவும் அவர்களே எல்லாம் பார்த்துக்கொண்டார்கள்.  தன்யா முழு ஆளுமையாக தன்னைத்தானே பார்த்துக்கொண்டார்.  நிதானம் , நிமிர்வு. இன்று மணமக்களுடன், நாங்கள் நினைத்தபடி , ராலே ராஜன், வினோத் , ராதா , நான் என படம் எடுத்துக்கொண்டோம். 

பவா, “திருப்பூட்டு முடிந்தால் மண்டபமே காலியாகிவிடும். இங்கே பாருங்கள் எல்லோரும் அப்படியே அமர்ந்துள்ளார்கள்” என்றார். நீங்களும் ராதாவும் திருவண்ணாமலை வந்து இரண்டு நாட்கள் தங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஷைலஜாவும் அதையே சொன்னார். அவர்கள் இருவருடனும் அமர்ந்து உளமார உரையாடினோம். பாவண்ணன் ,  முகூர்த்த நாள் , பல திருமணங்கள்.  அவரது மனைவி, அவர்  ஆளுக்கு ஒரு ப்ரோக்ராம் பங்கிட்டு அட்டென்ட் செயகிறார்கள். அவரது மகன் , அஜிதன், சைதன்யா எல்லாம் குழந்தைகளாக இருக்கும்பொழுது ஒன்றாக விளையாடியவர்கள்  என்றார். நாங்கள்  பெற்றோர்கள் எல்லாம் ஒன்று கூடி இலக்கியம் பேசுவோம், இவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்றார். 

குருகு இதழின் ஆசிரியர்கள் அனங்கன்   , புதுவை தாமரைக்கண்ணன் அவர்களும் அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடினார்கள். அமெரிக்கப் பண்பாடு, இசை , தத்துவம், வாழ்வியல் , பயணம் கட்டுரைகளை தங்கள் இதழ்களுக்கு வரவேற்பதாக சொன்னார்கள். ஆங்கிலத்தில் இருந்தாலும், மொழியாக்கம் செய்து வெளியிடலாம் என்று அனங்கன்  சொன்னார்.  ‘நீலி’ இதழில்   வெளியான ‘ஒரு நண்பகல் சந்திப்பு’  இருத்தலியல் சார்ந்து அமெரிக்க வாழ்வை எப்படி பிரதிபலிக்கிறது என்று எனது கருத்தை முன்வைத்தேன். அப்படியென்றால், மொழியாக்கம் நன்றாக வந்துள்ளதாக எடுத்துக்கொள்கிறேன் என்று பத்மநாபன் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி காட்டினார்.

நண்பர்களுடனான உரையாடல்கள் முடிந்த பாடில்லை. அஜிதனும் தன்யாவும்,  வரிசையில் நின்று வரும் விருந்தினர்களுடன்  புகைப்படம் எடுக்க சிரித்துக்கொண்டிருந்தார்கள்.  மகள் பப்லு  இன்றாவது என் வீட்டில் சாப்பிடுங்கள் என்று அழைத்துக்கொண்டே இருந்தாள்.  ஜெயமோகன், அருண்மொழி, அஜிதன் , தன்யா, சைதன்யா ஐவரிடமும் சொல்லிக்கொண்டு ராதாவும் நானும் இனிய நினைவுகளுடன் வீடு திரும்பினோம்.