பாத்திரங்களாக மாறிவிட்ட நட்சத்திரங்கள்

Published by

on

(மறு பிரசுரம்)

பள்ளி , தேர்வு, செய்யும் வேலை இப்படி விட்டுவிட்டு சில படங்களை சினிமா ஆர்வலனாக வெளியிட்ட அன்றே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் பொன்னியின் செல்வன் – 2 பார்த்தது ஒரு பள்ளிக்கால அனுபவம். ஏப்ரல் 27 அமெரிக்க மாலை நான்கு மணிக்கு முதல் காட்சிக்கு (இந்தியாவில் ஏப்ரல் 28-ன் காலைக் காட்சி ஆரம்பிக்குமுன்) சென்று பார்த்தேன். ஆரம்பக் காட்சியே, ஆதித்த கரிகாலன்  நந்தினியின் பதின்பருவக் காதல், ஒரு சிறுகதை போல அள்ளிச்செல்கிறது. ‘போருக்கா, இந்த வயதிலா’ எனக் கேட்கும் குட்டி நந்தினியின் முகத்தில் அத்தனை வேதனை. இளவரசனே அந்த அனாதைப் பெண்ணை தனது அரசி என்கிறான். தமிழகம் கண்ட பொற்காலத்தைக் கொடுக்கவிருக்கும் அரசு சும்மா விடுமா? அச்சிறுபெண்ணை மூட்டை கட்டி வீரர்கள் படகில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். ரசிகனுக்கு நந்தினியின் வேதனையும், ‘யாதினி கொள் யானே’ ஆகிவிடும் ஆதித்த கரிகாலனின் விரக்தியும் ரசிகர்களுக்கு ஒட்டிக்கொள்கிறது. அடுத்த காட்சியில், கமல் குரல் முன் கதைச் சுருக்கம் பகுதி 1-ஐ நினைவுறுத்த, ஆமாம், அருண்மொழி வர்மனும், வந்தியத் தேவனும் என்ன ஆனார்கள் என்ற பதபதைப்பு பற்றிக்கொள்கிறது. சோழ நாட்டு மக்களாகவும், காதலர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகனாகவும் படத்தை தொடர, எந்த ஒரு தொய்வுமில்லாமல், தேர்ந்த திரைக்கதையால் மணி ரத்னமும், ஜெயமோகனும், இளங்கோ குமாரவேல் அவர்களும், நம்மை திரைக்குள் இழுத்துக்கொள்கிறார்கள். அழகிய காட்சிகள், கலகலப்பான, பதைபதைக்கும் காட்சிகள் என தனித்தனியாகவும் படத்தை ரசிக்கமுடிகிறது.

பொன்னியின் செல்வன் – 2-ல், வானதிக்கு அருண்மொழி வர்மனுடன் யானையில் பயணிக்கும் அதிர்ஷ்டம். காதல் டூயட்டெல்லாம் இல்லை. வானதியின் கடைக் கண்ணில், உடல் மொழியில் அருண்மொழி வர்மன் என் காதலனாக்கும் என்று அழகாக காட்டிவிடுகிறார். குந்தவையைத் தனியாக சந்திக்க, தன்னந்தனித் தீவில், வந்தியத்தேவன் விடப்படிகிறார். கழுத்தின்மேல் வைத்த வாளின் மேல் கைவைத்து , நகர்ந்து குந்தவையின் கையில் பயணம் செய்யும் வந்தியத்தேவன் கைகள் பேசும் காதல், காலத்திற்கும் பேசப்படும் காட்சியாக இருக்கப்போகிறது.

புத்த விஹாரில் சந்திக்கும் சகோதரி சகோதரர்கள் உரையாடும்பொழுது, தோளில் சாய்ந்துகொள்ளும்பொழுது, கடம்பூர் செல்லாதே அண்ணா என்று கெஞ்சும்பொழுது கொள்ளை அழகு. உண்மையில் எனக்குப் புல்லரித்தது.

குந்தவை, தந்தை சுந்திர சோழனை சந்தித்து, ஊமை ராணிக்கும் அவருக்குமான உறவை கேட்க, சுந்தர சோழன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டு தான் செய்த தவறை , குற்ற உணர்ச்சியை பகிர கேமரா மேலிருந்து படம்பிடிக்க குற்றம்பட்ட நெஞ்சின் வேதனை காட்சி வடிவிலும் ரசிகனுக்கு வந்து சேர்கிறது.

ஜெயமோகனின் வசனங்களின் கூர்மையில் காட்சிகள் கலகலப்பாகின்றன.

ஆதித்த கரிகாலன், குதிரையில் அமர்ந்துகொண்டே, பெரிய பழுவேட்டரையரையும், கடம்பூர் அரசரையும், பாட்டா, மாமா என்று கலாய்த்துப் பேசுவது. அதுவும் விடைபெற்றுச் செல்லும்பொழுது, இந்த முறையாவது, மதுராந்தகச் சோழனை சின்னப்பாட்டியின் பல்லக்கில் அனுப்பவேண்டாம் என்று கிண்டலுடன் புன்னகைப்பது. பாண்டிய ஆபத்துதவிகள், வந்தியத்தேவனை கட்டிப்போட்ட இடத்தில், வந்து நிற்கும் ஆழ்வார்க்கடியானை,  வந்தியத்தேவன் அடையாளம் காண்கிறார். அவர் எப்படி என வியக்க, உனக்கும் முன்னால் வரும் தொப்பைதான் என்கிறார் வந்தியத்தேவன். அதே கட்டிப்போட்ட இடத்தில், நந்தினியிடம், அம்மாவிடம் தலையுடன் வருவேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை எனச் சாதுர்யமாகப் பேசி தலை தப்பிக்க, தலை முக்கியம்தான் தேவி என இறுதியில் முறுவலிக்கிறார் வந்தியத்தேவன்.

நாவல் வாசித்தவர்கள் வாசிக்காதவர்கள் எந்தத் தரப்பினரும் ஆவலாய் எதிர்பார்க்கும் நாடகீயமான ஆதித்த கரிகாலனும், நந்தினியும் சந்திக்கும் காட்சியிலும் ஜெயமோகனின் வசனமும் ரவி வர்மனின் ஒளிப்பதிவும், ரசிகனுக்கு மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுக்கிறது. ‘மறக்கமுடியா விட்டாலும், மன்னிக்க முடியாதா’ என்று கேட்கும், தான் செய்த தவறை, நடைப்பிணமான தன்னைப் பற்றி ஆதங்கப்படும் ஆதித்த கரிகாலனான விக்ரமையும் உடல் முழுக்க நந்தினியாக உணர்வுகளைக் கொட்டும் ஐஸ்வர்யா ராயையும் தூரமாக, நெருக்கமாக என பல கோணங்களில் ரவி வர்மன் படம்பிடித்து காட்சிவடிவிலும் ஒரு கதை சொல்கிறார். 

புத்த விஹாரத்தில் அருண்மொழி வர்மனை ராக்கம்மா ஆட்கள் கொலை செய்துவிடுவார்களோ, அதுவும் அந்த யானைப்பாகன். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் துடியாக துடிக்க,  நாமும் பதபதைக்கிறோம். அருண்மொழிவர்மனோ யானையின் காதில் இரகசியம் பேச , அது அவனை துதிக்கையால் கழுத்தை நெரித்துக் கொல்கிறது. வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் மற்றும் நாமும் நிம்மதியடைகிறோம். அரசன் சுந்தரசோழனை கொல்லமுயன்று தோற்ற சோமன் கூட்டத்தை வதம் செய்யும் அருண்மொழிவர்மன் வீரன். சோமனின் உடம்பில் கூரிய வாள் இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கம் சென்று வருகிறது.

தோட்டா தரணியின் கைவண்ணத்தில், தஞ்சாவூர் மாளிகை நுழைவாயில், கடம்பூர் மாளிகை நுழைவாயில், தேவராளம் ஆட்டம் ஆடிய , சதித்திட்டம் தீட்டிய இடம், நந்தினியின் அறை என பொன்னியின் செல்வன் – 1-ல் பார்த்த இடங்கள் நினைவில் வர, ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் அதற்கு இசைவாக ஒத்துழைக்கிறது. காதாலும், கண்ணாலும் நாம் ஒருமிக்க தெரிந்த இடத்திற்குச் செல்ல முடிகிறது. வரப்போகும் பாத்திரங்கள் யாரென ஊகிக்க முடிகிறது. ஊமை ராணிதான் காட்சியில் இருக்கிறார் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா என்று இல்லாமல் ஆதித்த கரிகாலன், நந்தினி,  அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன் , குந்தவை என்று பாத்திரங்களாக மாறியிருப்பது சோழச்சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வசனம் அல்லாமல் அவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்ளும்பொழுது பகிர்ந்துகொள்ளும் பாசம், துக்கம், அன்பு, கோபம் என எல்லாமும். அருண்மொழி வர்மனும், குந்தவையும் ஆதித்த கரிகாலனை கடம்பூர் போகவேண்டாம் என சம்மதிக்க வைக்கமுடியவில்லை. அண்ணன் மேல் உள்ள மரியாதையால் , இதற்கு மேல் என்ன செய்யவிருக்கிறது என வந்தியத்தேவனை அழைத்து வந்து நீங்கள் சொல்லுங்கள்  என்கிறார் குந்தவை. ஒருவரை ஒருவர் புரிந்தவர்களாக, மதிப்பவர்களாக அவர்கள் உடல் முழுக்க நடிக்கின்றன. அடுத்தவர்களுக்குத் தான் சொல்ல நினைப்பதை வசனம் எதுவும் இல்லாமல் கடத்திச் செல்கிறார்கள்.  வானதியுடன், அருண்மொழி வர்மன் தஞ்சை அரண்மனையில் யானையின் மேல் அமர்ந்து நுழைகிறார். பெரிய வேளாரை, சேனாதிபதி என்று அழைத்து அருண்மொழி வர்மன் இளவரசனாக கட்டளையிடுகிறார். பின்னால் அமர்ந்திருக்கும் வானதியின் கண்களும் உடலும் இப்படி வசனம் பேசுவதாய் எடுத்துக்கொள்ளலாம் – “நீ என்னுடைய பெரியப்பாவாக இருக்கலாம். என் காதலன் ராஜாவாக்கும்,”

நடிகர் கிஷோர், குணச்சித்திர பாத்திரம், வில்லன் பாத்திரம் என எந்த பாத்திரம் எடுத்தாலும் தனது முத்திரையை பதிப்பவர். பாண்டிய ஆபத்துதவிகளில் ரவிதாஸனாக வரும் அவரும் அவருடன் துணைபுரியும் ஒவ்வொருவரும் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை சிரத்தையுடன் ஏற்று நடித்துள்ளார்கள். குந்தவையின் சிகையலங்காரம், அவர் போடும்   நகைகள், நந்தினிக்குப் போட்டிருக்கும் கண் மை, அவர் தோழி இன்னுமா ஏமாற்றிய சோழனின் புலிசின்னம் பொறித்திருக்கும் மோதிரத்தை வைத்திருக்கிறாய் எனக் கேட்கும்பொழுது மோதிரத்தில் தெரியும் புலி, பூங்குழலியின் கைகளிலும், பின்முதுகிலும் இருக்கும் ஓவியங்கள், ஆதித்த கரிகாலன் முகத்தில் வெட்டுத் தழும்புகள், அருண்மொழி வர்மன் வாளை ஊன்றி அமர அவரை பார்ப்பதா, வாளை பார்ப்பதா? எதை உற்றுபார்த்தாலும் படத்தை ரசிக்க எவ்வளவோ இருக்கிறது. மணி ரத்னத்தின் இயக்கத்திற்காக ஒரு முறை, ஜெயமோகனின் வசனத்திற்காக ஒரு முறை, தோட்டா தரணியின் கலை வடிவமைப்புக்காக ஒரு முறை, ரவி வர்மனின் ஒளிப்பதிவுக்காக ஒரு முறை, ஏ.ஆர். ரஹ்மானின் இசைக்காக ஒரு முறை என பல முறைகள் பார்த்த பின்னரே இந்தப் படத்திற்கு முழுமையான ஒரு விமர்சனத்தை வைக்கமுடியும். நான் இரண்டு தடவைதான் பார்த்திருக்கிறேன்.

இரண்டு விஷயங்களில் எனக்கு ஏமாற்றம். ஜெயமோகனின் வசனத்தின் கூர்மையும் நயமும் English Subtitle-ல் போய்விடுகிறது.  இளையபாட்டியார் என்று ஆதித்த கரிகாலன் சொன்னால், திரையில் வெறும் நந்தினி எனவே வருகிறது. ‘கடம்பூர் மாமா நீங்க பண்றது நியாயமா’ என்ற வசனம் ஜோடனைகள் எதுவும் இல்லாமல் ஆங்கிலத்தில் வருகிறது. படம் என்றால் பாட்டு என்று கேட்டு வளர்ந்த ரசிகனுக்கு, ஒரு பாடலாவது ஆடலுடன் இருந்திருந்தால் கூடுதல் மகிழ்வடைந்திருப்பேன்.

பொன்னியின் செல்வன் – 1 பார்த்துவிட்டு வந்த ஒரு ஏழு வயது சிறுமியிடம் கதை கேட்டேன். “என் லவ்வரைக் கொல்லாத கொல்லாதனு, அவ கதற கதற இவன் அவரைக் கொன்னுட்டான். அவள் இவனைப் பழிவாங்க பார்க்கிறா’ என்றாள்.  அந்தக் குழந்தைக்கான பதில் இரண்டாம் பாகத்தில்  உள்ளது. ஒரு காதல் கதையாக,  நிறைவேறாத காதலின் துயரில் துயில்பவனின் கதையாகப் பார்த்தாலும் ஆதி முதல் அந்தம் வரை ஒரு இணைப்பு உள்ளது. முதல் படத்தில் வானில் தோன்றிய வால் விண்மீன் , சோழ அரச குலத்தில் ஒருவரை பலிகொள்ளும் என்ற பின்னனியில் கமல் சொன்னதைத் தொடர்ந்தாலும் யார் அந்தச் சோழன் என முடிவு தெரிகிறது.  யாருக்குப் மணிமுடி சூடப்போகிறார்கள் என்ற கேள்வியுடன் பார்த்தாலும், உண்மையான சரித்திர நிகழ்வின்படி அருண்மொழி வர்மன், மதுராந்தகனுக்கு மணிமுடி சூட்டுகிறார்.   நாவல் வாசிக்காதவர்களுக்கு , கதையாக பார்ப்பவர்களுக்கு இது ஒரு அழகான எதிர்பாராத திருப்பம். எதிரணியின் விருப்பம்தானே நிறைவேறுகிறது!.

படத்தின் இருபாகங்களையும் பார்த்துவிட்டு நாவலை வாசிக்க ஆரம்பித்த நண்பர் ஒருவர் , முதல் பத்து அத்தியாயத்திலேயே, படம் பரவாயில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டதாக சொன்னார். என்னிடம் இருக்கும் பொன்னியின் செல்வன் பதிப்பில் உள்ள முடிவுரையில்,  நாவல் தொடராக வந்து முடிந்தபொழுது வாசகர்கள் கூறியதாக கல்கி இப்படிக் குறிப்பிட்டுள்ளார். “கதை முடிந்தபிறகு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. இக்கடிதங்களில் பெரிதும் கருத்து வேற்றுமை காணப்படுகிறது. பாதிப்பேர் கதையைப் பாராட்டிக் கதையின் முடிவையும் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாதிப்பேர் கதை முடிந்த விதத்தை குறை கூறியிருக்கிறார்கள்”. நூறாண்டுகள் கடந்து பொன்னியின் செல்வன் நாவல் இன்றும் தமிழ் வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கும் நாவலாக நிலைத்து நிற்கிறது. பொன்னியின் செல்வன், இருபாகங்களும் வெளிவந்திட்ட நிலையில், ரசிகர்கள் வைக்கும் வெவ்வேறு விதமான விமர்சனங்களை கடந்து, காலத்தால் அழியாத கலையாகவே  நிற்கவிருக்கிறது. 

(முதல் பிரசுரம் – 05/15/2023)

Leave a comment