(மறு பிரசுரம்)
‘பொன்னியின் செல்வன்’ படம் எப்பொழுது தியேட்டருக்கு வரும் என்று காத்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன். படம் பார்ப்பதற்கு முன்னர் , கல்கியின் நாவலை வாசித்து தன்னை தயார் செய்துகொண்டவர்களில் ஒருவன். ‘பொன்னி நதி பாக்கனுமே’ பாடல் வெளிவந்த நாள் முதல், அலுவலகம் செல்லும் ஆறு மைல் பயணத்தில் தினமும் இரண்டு முறை, அதைக் கேட்பவன். இத்தனைக்கும் பிறகு, முதல்முறை படம் பார்த்தபொழுது, ஏதோ ஒன்று இல்லாததைப்போல உணர்ந்தேன். படத்தின் உள்சென்று நான் அமரவில்லை.. அறிமுகக் காட்சியில் ராஸ்டரகூடா சண்டையும், ஆதித்ய கரிகாலனும், வந்தியத்தேவனும் நட்புடன் பார்த்துக்கொள்வதும், குந்தவையின் அழகும், நந்தினி கண்களிலேயே கடத்தும் உணர்வுகளும், தோட்டா தரணியின் கைவண்ணத்தில் நிமிர்ந்து நின்ற கோட்டைகளும், கதவுகளும், வானதியும், வந்தியத்தேவனும், கிருஷ்ணன், கம்ஷனாக நடனமிடுவதும் என துண்டுதுண்டாக ரசித்தேன். கதையில் ஒரு இணைப்பைக் கண்டடையவில்லை. எனக்குத் தெரிந்த குழந்தைகளிடம் , எட்டு வயதாக இருந்தாலும் சரி, பதினெட்டு வயதாக இருந்தாலும் சரி, ‘கதை புரிந்ததா? பிடித்ததா?’ என்று கேட்டேன். அவர்களுக்குப் பிடித்திருந்தது. ஒரு பாத்திரத்திற்கும் இன்னொரு பாத்திரத்திற்குமான உறவை, உரையாடல் வரிகளை சொல்லி விளக்கம் சொன்னார்கள். சில குழந்தைகள், இரண்டாம் பாகத்தில் என்ன இருக்கும் என்றும் மிகச்சரியாக ஊகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ‘ஒரு குழந்தை தவறாமல் படம் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்கள், படம் வெற்றி’ என்று நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
இரு கால்களையும் டேபிளின் மேல் வைத்துக்கொண்டு, சேரில் தலைசாய்த்து நான் ஏன் முழுமையாக ரசிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்ததில் நான் கண்டடைந்தது.. சமீபத்தில்தான் நாவலை வாசித்திருந்ததால், நாவலில் கல்கி எழுதிய உரையாடலும், வரலாற்றுப் பின்னனியும் நன்கு நினைவிலிருந்ததால், படம் முழுக்க ஒரு ஆராய்ச்சி மாணவனாக பார்த்திருக்கிறேன். இந்த வசனம், நாவலிலிருந்து அப்படியே எடுக்கப்பட்டுள்ளது, இங்கே ஜெயமோகனின் ஸ்டைல் தெரிகிறது என்று ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்திருக்கிறது. கந்தன் மாறனின் தங்கை, மணிமேகலையின் பெயர் உரையாடலில் மட்டும் குறிப்பிடப்படுகிறது, அவள் படத்தில் இல்லை. அருண்மொழி வர்மனுக்கு, பொன்னியின் செல்வன் என்ற பெயர்க்காரணம் உரையாடலோடு உரையாடலாக குறிப்பிடப்பட்டுள்ளது, காட்சியாக இல்லை. பூங்குழலி, புதை மணலில், வந்தியத்தேவனை மாட்டவிட்டு மகிழ்வது நன்றாக இருக்குமே, எங்கே அதைக் காணோம் என்று ஒரு தேடல்.

இரண்டாம் முறை , வாசகனை வீட்டில் விட்டுவிட்டு, சினிமா ரசிகனாக மட்டும் சென்று பார்த்தேன். வானில் அந்த வால் விண்மீன். அதனால் ராஜ குடும்பத்தில் ஒரு இழப்பு இருக்கலாம் என்று சுந்தரசோழனும், ஆதித்ய கரிகாலனும், அருண்மொழி வர்மனும் பொம்மைப் படங்களாக வர கமல்ஹாசன் அழகிய முன்னுரை வழங்குகிறார். படம் முழுக்க அந்த வால் நட்சத்திரம் பயணம் செய்ய, ரசிகனுக்கு யாராயிருக்கும் என்று ஒரு படபடப்பைக் கொடுக்கிறது.
ராஸ்டரகூட சண்டைக்குப்பிறகு, ஆதித்ய கரிகாலனின் (விக்ரம்) ஓலையை எடுத்துச் சொல்லும் வந்தியத் தேவனின் (கார்த்திக்) பார்வையில், ரவி வர்மனின் உதவியுடன் காவிரியையும் சோழர்குல ரம்பைகளையும் ரசிக்கமுடிகிறது. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் (ஜெயராம்) வரும் இடமெல்லாம், பக்கத்து சீட்காரர் திரும்பி முறைக்குமளவு சத்தமாக சிரிக்கவேண்டியதாக இருந்தது. சென்றமுறை பார்த்தபொழுது, ‘அரியும் சிவனும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்று சொல்லும்பொழுது இது நாவலிலேயே இருக்கே என்று உட்குரல் சொன்னது. இந்தமுறை அப்படிப் போகாமல் பார்த்துக்கொண்டேன்.
திரிஷாவை , கேமரா, படம் முழுக்க வெகு அருகிலேயே காண்பிக்கிறது. கண்கள், உதட்டசைவில் மட்டும் காட்டும் நடிப்பில், குந்தவையை ரசிகனுக்கு தெளிவாக அறிமுகப்படுத்தி விடுகிறார். ‘எங்கே தேவி சொல்வதை கேட்பவர் என்றால் ஆற்றில் குதியுங்கள்’ என்று சொல்லும்பொழுது குறும்பும், நந்தினியை நேரில் சந்திக்கும்பொழுது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் ஆளுமையும், சிற்றரசர்களிடம், ஒவ்வருவொருக்கும் பெண் உள்ளது என்று சீண்டுகின்ற அரசியலும் என மிளிர்கிறார்.

வந்தியத்தேவனிடம், ‘நீ நினைத்தே பார்க்காதது கிடைக்கும்’ என்று ஆசை காட்டியும், நகையைக் கழட்டச்சொல்லி, திரும்பி நின்று, பழவேட்டரையரை சீண்டியும் நினைத்ததை சாதிக்கிறது. நந்தினி (ஐஸ்வர்யா ராய்) எனும் அழகிய நஞ்சு.
கடலில் மூழ்கி சாப்பிட மீன் பிடித்து எழும் பூங்குழலி (ஐஸ்வர்யா லட்சுமி ), பாயை இழுக்கும் வேகத்தில், ஓடம் ஓட்டும் பெண் என்பதை நம்பமுடிகிறது,
இடைவேளைக்கு அப்புறம்தான் அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) வருகிறார். சட்டை போடாமல், நிறைய நகை போட்டுக்கொண்டு வரும் இளவரசன். அபிமன்யு ,மன்னாதி மன்னன், மனோகரா, உத்தமபுத்திரன் என இளவரசர்களையும், அரசர்களையும் பார்த்த ரசிகர்களுக்கு, ஒரே வாள் வீச்சில் இரு வீரர்களைக் கொல்லும் தோள்வலிமை காட்டும் அருண்மொழி வர்மனின் தோற்றம், தமிழ் சினிமாவின் சரித்திர நிகழ்வு.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை, படத்திற்கு முதுகெலும்பு. கடம்பூரில் தேவராளி நடனத்திற்கான இசை உக்கிரம். அருண்மொழி வர்மனும், வந்தியத்தேவனும் இடும் சண்டை, தோழமை சண்டைதான் என்பதை உணர்த்தும் பின்னனி இசை. ஆதித்ய கரிகாலன் நண்பன் பல்லவ இளவரசன் பார்த்திபனிடம் , எல்லாவற்றிற்கு காரணம் என்று நடந்த கதை சொல்ல, ‘சோழா சோழா’ பாடல் அதற்கு உரம் போடுகிறது. படம் முடிந்து எல்லோரது பெயரும் திரையில் ஓட திரும்பவும் இந்தப் பாடல் ஒலிக்க, விக்ரமின் நடனம் மனதில். பிருந்தா மாஸ்டருக்கும் ஒரு கைதட்டல்!

சரித்திர நாயகர்கள் உலாவரும் கதையில், தண்ணீரில் நடக்கும் போரில் அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்களோ என நினைக்கும் நேரம் அவர்களைக் காப்பாற்றும் ஊமை ராணி. இது கற்பனை கலந்த உண்மைக் கதை என்பதால், யானை ஏறிவரும் ஊமை ராணியை ஏற்றுக் கொள்ளலாம்.
நாவலிலிருந்து வெகு சிறப்பென நான் பார்ப்பது. பாண்டிய வீரர்கள், ஆபத்துதவிகள் படத்தில் சித்தரிக்கப்பட்ட விதம். ரவிதாஸ் (கிஷோரின்) குரலே வஞ்சத்தை சொல்கிறது. படகில் வந்தியத்தேவன், பொன்னியின் செல்வன் இருவரும், ரவிதாஸ் கும்பலுடன் மாட்டிக்கொள்ள, அவர்களின் குதூகலம் அதிகரிக்கிறது. பார்வையாளனுக்கும் அவ்வளவுதான் என்ற உணர்வைக் கொடுக்கிறது.
எனது தெலுங்குத் தோழி சொன்னார். நம் குழந்தைகளுக்கு சரித்திர நாயகர்களை அறிமுகப்படுத்த இப்படி படங்கள் வரவேண்டும். இல்லையென்றால், கிரேக்க கதை நாயகர்கள்தான் அவர்களுக்குத் தெரியும் என்றார். இயக்குனர் மணி ரத்னமும் அவரது குழுவும் சோழ சரித்திரத்தை குழந்தைகளிடம் (அடுத்த தலைமுறையிடம்) எடுத்துச் செல்வதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். குழந்தைகள், திரிஷா படத்தைப் பார்த்ததும், குந்தவை என்று சொல்லும் காலம் வரவிருக்கிறது.
(முதல் பிரசுரம் – 10/09/2022)

Leave a comment