(மறு பிரசுரம்)
நாய், பன்றி, மனிதன் என எல்லா உயிர்களின் இரத்தமும் திரையையும் தாண்டி எதிரில் இருக்கும் ரசிகன் மேல் தெறிக்கும் அளவுக்கு இரத்தம். அதனால் ஒவ்வாமை வந்து ஒதுக்கிவிட்டோம் என்றால், ஒரு நல்ல படத்தைப் பார்க்கத் தவறவிட்டுவிடுவோம். இரத்தம் சிதற வைக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ்தான், பன்றியை ரசிக்கும் நாயகனையும் அறிமுகப்படுத்துகிறார். அவரே பன்றிகளை பாசத்துடன் வளர்க்கும் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்), பன்றிகளை நாய்களைவிட்டு குதறவைக்கும் ரத்னவேல் (பகத் பாசில்) என்று ஏற்றுக்கொண்டு, மாமன்னன் பார்க்கவேண்டிய படங்களில் ஒன்றெனவே பார்க்கிறேன்.
கதாநாயகன், யார் என்று மனதில் வைத்துக்கொண்டு கதையெழுதும் பொதுத்தன்மையிலிருந்து விலகி, மாமன்னன் (வடிவேலு) என்று ஒரு அன்பான அப்பாவை, கணவனை, நேர்மையான அரசியல்வாதியைச் சுற்றி கதை அமைக்கப்பற்றிருக்கிறது. அதற்கு உரம் ஏற்ற புகைமூட்டத்திற்குள் மறைந்திருக்கும் அப்பா மகனின் அன்பு, ஆதிக்க வர்க்கத்தின் அகங்காரம், அரசியல் மற்றும் அடவாடித்தனங்கள்.
சினிமா சூத்திரப்படி, பாடல்கள் உண்டு. கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டுள்ள தனிப்பாடல், ‘கொடி பறக்கிற காலம் வந்தாச்சு’-வில் பெண்ணியம் பேசுகிறது என்று சொல்லலாம். என்ன செய்வது உரக்கப் பேசியும் பாடியும்தானே முன்னகர வேண்டியிருக்கிறது. நாயகனும் நாயகியும் கைகுலுக்கி சமரசம் செய்துகொள்ள , வரும் டூயட் பாடல் – நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆரா ரி ரோ’-வின் பின்னனியில் கதையும் நகர்கிறது. ரஹ்மானின் இசையும் யுகபாரதியின் வரிகளும் இப்பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.
எங்கு அடக்கி வாசிக்கவேண்டுமோ அங்கு அடக்கியும், எங்கு அட்டகாசம் பண்ணவேண்டுமோ அங்கு அட்டகாசம் செய்தும் மாமன்னனின் பாத்திரங்கள் படத்தை ரசிக்க வைக்கிறார்கள். ரத்னவேல் (பகத் பாசல்) நாயை அடித்து வீழ்த்தும்போதம் , நாயைப் போல மனிதனை அடிக்கும்பொழுதும் ஒரு உடல்மொழி. மனைவியை கட்டிப்பிடித்து சாந்தப்படுவது இன்னொரு உடல்மொழி. மாமன்னன் (வடிவேலு) தனது மனைவியின் காலைத் தொட்டுக்கொண்டு அமர்வதிலும், தனக்கு ஓட்டுப் போடச்சொல்லும்பொழுது நீளமாகப் பேசும்பொழுதும். இரண்டு வெவ்வேறு ஆளுமையாக மிளிர்கிறார். ஆதிக்க வர்க்கம் அமரச்சொல்லாத தன் தந்தையை, ‘நீ உட்காருப்பா’ என்று சொல்லும்பொழுது அதிவீரன்(உதயநிதி ஸ்டாலின்) அதிகம் பேசவில்லை. தன் தகப்பனை மனிதனாக மதிக்காத கூட்டத்தின்மல் இருக்கும் வருத்தத்தை, கோபத்தை ரசிகனுக்கு கடத்திவிடுகிறார். ரத்னவேலுவின் மனைவிக்கு (ரவீனா ரவி) படம் முழுக்க வசனம் இல்லை. கதவைத் தாளிட்டு அமரும் அவரை, கேமரா தூரமாகவே காண்பித்தாலும், கோபக்கார கணவன் அவர் அன்புக்கு அடக்கம் என்பதைச் சொல்லிவிடுகிறது.

“இவ்வளவு நாளா உங்க அப்பாவை உட்கார வைச்சது என்னோட அடையாளம். இன்னைக்கு உன்ன உட்காரச் சொன்னது என்னோட அரசியல்.” என்று பொறிபடப்பேசும் பகத் பாசில், மாரி செல்வராஜின் எதிர்மறைப் பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி கண்ணாலும் உடம்பாலும் கச்சிதமாக கொஞ்சும்கூட மிகைப்படுத்தாமல் நடித்திருக்கிறார். வில்லன் கதாநாயகன் என்று பாரபட்சம் பார்க்காமல் நடிகன் என்று மட்டும் விருது கொடுக்கவேண்டும் என்றால், இவருக்குத்தான்.
படம் முழுக்க ரஹ்மானின் இசையும் கதை சொல்கிறது. மனதைப் பிழியும் இடங்கள் மட்டும் உதாரனத்திற்கு இங்கே. லீலாவிற்கு (கீர்த்தி சுரேஷ்) அதிவீரனின் அம்மா,, அப்பாவுடன் மகன் ஏன் பேசுவதில்லை என்று சொல்லும் ப்ளாஸ்பேக் காட்சியில், பன்னி மேய்க்கும் சிறுவர்கள் கோவில் கிணற்றில் குளிப்பதா என ஆதிக்கவர்க்கம் குளத்தில் கல்லெறியும் சமயம் வரும் இசை,. அடுத்து, ‘பன்னிய என்னப்பா பன்னப்போறாங்க, இருக்காதுப்பா’ என மாமன்னன் வெகுளியாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லும் காட்சியில்,. ரஹ்மானின் இசை, “இல்லை மாமன்னன் இல்லை, உங்கள் மகன் அதிவீரன் சொல்வதுதான் சரி” என்கிறது..
ரசிகனின் மனதைத் தொடும் மாமன்னன் படத்தில் பங்குபெற்றவர்கள் தங்களின் சாதனைகளில் ஒன்றாக சொல்லிக்கொள்ளலாம். மாரி செல்வராஜுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள் !
(முதல் பிரசுரம் – 08/10/2023)

Leave a comment