ஏலே – பார்க்கலாம் மீண்டும் பார்க்கலாம்

Published by

on

(மறு பிரசுரம்)

‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் கூட்டணியில் இருந்த சிலர், இணைந்து இன்னொரு இனிப்பான படத்தைக் கொடுத்துள்ளனர். நான்கு குறும்படங்கள் கொண்ட அந்தப் படத்தில், ஒன்றான ‘காக்கா கடி’ கதையில் காதலன் முகிலனாக வந்த மணிகண்டன் இந்தப் படத்தில் பார்த்தி. அப்பா இறந்த செய்தி கேட்டு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர்கூட வரவில்லையென அவரே கதை சொல்ல படம் ஆரம்பம். வீட்டில் அப்பாவின் பிணம் இருக்க பக்கத்து ஊருக்கு பஸ் ஏறிச் சென்று கொத்து பரோட்டாவை பிச்சிப்போட்டு குருமா ஊற்றி சாப்பிடும் அவருக்கு அப்பாவின் மேல் அப்படி என்ன வெறுப்பு? இறந்தவரின் பெயர் விபரங்கள் கேட்டு காசுக்கு ஒப்பாரி சொல்பவரின் வாயிலாக, அப்பா முத்துக்குட்டியின் கதை விரிகிறது. ‘சில்லு கருப்பட்டியின்’ நான்காவது கதையில், இயந்திர வாழ்க்கை வாழ்ந்து இயந்திரமாக மனைவியிடம் நடந்துகொள்ளும் கணவனாக நடித்த ‘சமுத்ரகனி’, முத்துக்குட்டியாக பெட்டி ஐஸ் விற்கிறார். எப்பொழுதும் அண்டர்வேர்க்கு மேல் நிற்கும் வேஷ்டி. எடுத்ததற்கெல்லாம் கிண்டல். தில்லு முல்லு வேலைகளில் காசு பார்ப்பது. வயிறு முட்ட சாராயம். பையனுக்கு அப்பாவின் மேல் வெறுப்பு வளர்ந்து வளர்ந்து ஒரு கட்டத்தில் பேசுவதே நின்று விடுகிறது.

ஐஸ் விற்கும் முத்துக்குட்டியிடம் தான் வைத்திருக்கும் ஐஸ்க்ரீமைக் கொடுத்துவிட்டு , குச்சி ஐஸ் வாங்கும் சிறுமி நாச்சியைக் கண்டதும் நமக்கு வளரவிருக்கும் கதாநாயகி அவர்தான் எனத் தெரிந்துவிடுகிறது. அமராவதி ஆற்றில் ஒளித்து வைத்த தங்கக் காசை மூழ்கி எடுத்த பார்த்தியின் மேல், அந்த நாச்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக காதல் துளிர்விடுகிறது. இயக்குநர், ஹலீதா ஷமீம் பாடலாசிரியராக எழுதிய, ‘என் சீவனுக்கே சீவன் கொடுத்தாளே’ பாடல் படமாக்கப்பட்ட விதமும், அவர்கள் இருவரின் கண்களில் தெரியும் காதலும், மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும்.

பார்த்தி, நாச்சியின் காதலை பிரித்தது வழக்கமான ஜாதியில்லை. சரியாகப் பேசிக்கொள்ளாததால் வந்த சிக்கல் என சித்தரிக்கப்பட்டிருப்பது ஒரு ஆறுதல். கல்யாணத்திற்கு முதல் நாள் இரவில் , வெகு சாதாராணமாக , என்ன அக்கா இவ்வளவு பூ தொடுத்துக்கிட்டு இருக்கீங்க என்று உரையாடிக்கொண்டே மணமகள் வெளியேறுவது நம்பும்படியான வெளிநடப்பு. அப்பா இறந்ததற்கு வந்த பெரியவரிடம், ‘நீங்க எப்ப?’ என்று கேட்பது, எழவு வீட்டில் உட்கார்ந்து கொண்டு நீ முதலா நான் முதலா என்று டாஸ் போட்டு பார்க்கும் கிழவர்கள். அக்கா அந்தப் பக்கம் திரும்பி நின்றிருக்க, தம்பி பேசிக்கொண்டே இந்தப் பக்கம் திரும்பி மூத்திரம் பெய்வது. ‘என்ன அண்ணே , அண்ணி ஸ்டேடஸ் பார்த்தேன் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனையா?” என்று கேட்கும் நண்பன். ‘பன்றியை அடித்த விட்ட வாகனத்தை அடுத்து உபயோகிக்க கூடாது என்ற நம்பிக்கை. இப்படி படத்தில் யதார்த்தத்தை தெளித்து கதையை நகர்த்துவைதை அடுக்கிக் கொண்டே போகலாம். உறுத்துவது வலுக்கட்டாயமாக வரும் சண்டைக் காட்சிகள். கதாநாயகன் ஒருவனே எல்லோரையும் அடித்து வீழ்த்தி ஜெயிக்கிறார் என்று காண்பிக்காததால் இந்தப் படம் வேறுபட்டு நிற்கிறது.

பார்த்தியின் சகோதரி மீனா வளர்ந்த பெண்ணாக வருகிறார் சானா உதயகுமார். பிணத்தின் மேல் விழுந்து அழுபவர், சாப்பிட்ட வாசனை வந்ததும் உண்மை உணர்ந்து எழுவதில் சின்ன பாத்திரம்தான், என்னையும் கவனிக்கலாம் என சொல்லவைக்கிறார்.

இயக்குநர் , ஹலீதா ஷமீம், ‘சில்லுக்கருப்பட்டி’யை கொடுத்து, அரும்பில் விளையும் காதல் முதல், முதிய வயது உபாதைகளையும் தாண்டி வரும் காதல் வரை சித்தரித்து , netflix-ன் வழி வீட்டில் இருக்கும் சின்னத் திரையின் முன் அமரவைத்தார். ‘ஏலேயில்’ கிராமத்துப் பின்னனியில், வளர்ந்த மகனுக்கு அப்பாவின் மேல் உள்ள புரிதல் பரிணாமம் கொள்வதை காதல், நகைச்சுவை எனக் கலந்து கொடுத்து மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறார்.

(முதல் பிரசுரம் – 09/05/2021)

Leave a comment