அயல் நாட்டில் நடக்கும் சமயம், நம்மைப் போன்றவர்களை, நாம் அறியாமலேயே நம் கண்கள் தேடும். கால்களை அகற்றி வைத்து நின்றிருந்தாலும் சரி , ஒட்டி வைத்து நின்றிருந்தாலும் சரி நம்மவர் என்று அடையாளம் காண அவ்வளவு நேரம் பிடிக்காது. எதிர் கொண்டு நடந்தால், அவர் முறைக்கும் முறைப்பில் நம்மவர் என இனம் கண்டுவிடமுடியும். இதில் அத்தி பூத்தாற்போல் சிரிப்பவர்களும் உண்டு. எனது அண்மைப் பயணமான இத்தாலி நகரங்களில், நான் கண்ட நம்மவர்கள், திரைகடலோடியும் திரவியம் தேடும் உழைப்பாளிகளை, இமயமலைக்குக் கீழே உள்ள நாட்டார்களை பார்த்ததை இங்கே பகிர்கிறேன் .
அட்லாண்டா விமான நிலையத்தில் ரோம் விமானத்திற்காக காத்திருந்த நேரத்தில், அருகில் இருந்த இருக்கைகளில் ஒரு கணவனும் மனைவியும் அமர்ந்திருந்தார்கள். மனைவி , கணவனிடம் வெளியே சாப்பிடச் செல்கிறேன் உனக்கு எதாவது வாங்கிக்கொண்டு வரட்டுமா என்று கேட்டார். கணவன் , தனது பண அட்டையை எடுத்துக் கொடுத்து , உனக்கு என்ன வேணுமானாலும் வாங்கிக்கோ எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொன்னார். இவர்களை நான் ஞாபகத்தில் வைத்திருப்பேனோ இல்லையோ, ராதா அவர்களை , குறிப்பாக மனைவியிடம் என்ன வேண்டுமென்றாலும் வாங்கிக்கோ என்ற கணவரை நன்றாக நினைவில் வைத்திருந்தார். அவர்களை நாங்கள், வாடிகன் அருங்காட்சியகம் , Florence Duomo வளாகத்தில் என மீண்டும் மீண்டும் பார்த்தோம். ராதா, அவர்களை கண்டதும் என்னவென்று எனக்கு அடையாளப் படுத்தியிருப்பார் எனப் புரிந்துகொள்வீர்கள்.
முதல் நாள் ரோம் சென்றடைந்த மாலை, தங்கியிருந்த விடுதியிலிருந்து நடந்தே சென்று, பியாஸா நவானா (Piazza Navana)-வை பார்த்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தோம். சுற்றுலா தளத்தின் அருகில் இருக்கும் உணவகங்களில் சாப்பிடாதே (காசு அதிகமாகும்) , கொஞ்சம் நடந்து சென்று வேறு உணவகங்களில் சாப்பிடலாம் என்று எங்களை சஹா இழுத்து வந்துகொண்டிருந்தார். ஒரு உணவகத்தின் முன் வாயிலில் நின்று கொண்டு ஒருவர், வழியில் சென்றவர்களையெல்லாம் “வாங்க வாங்க” என்று அழைத்துக்கொண்டிருந்தார். அட நம்ம பையன் என்று நாங்கள் அவரை பார்க்க, அவர் , தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். “அமெரிக்காவிலிருந்து “ என்றோம். “இல்லை அதற்கும் முன்னால்” என்றார். “இந்தியா” என்றோம். அவர் தான் பங்களாதேஷ் என்று சொன்னார். அங்கேதான் சாப்பிட்டோம் என்று சொல்லத்தேவையில்லை. அவர் order எடுத்து pizza வகையறாக்களை கொண்டு வருவதற்குள், இத்தாலியில் 150 ஆயிரம் பங்களாதேஷிகள் உள்ளார்கள் என்று Google-டம் விசாரித்துத் தெரிந்து கொண்டோம்.

இத்தாலியில் தண்ணீர் குடிக்க, ஒரு பாட்டிலில் , எங்கு பார்த்தாலும் இருக்கும் நீரூற்றுகளில் தண்ணி பிடித்துக்கொள்ளலாம் என ராதாவும் சஹாவும் பாட்டிலுடன் வந்திருந்தார்கள். யாராவது தண்ணி பிடிக்கும் நீரூற்றில்தான் தானும் பிடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த சஹாவின் கண்ணில் அப்படி யாரும் அகப்படவில்லை. சந்து சந்தாக நடந்து விடுதி நோக்கி வரும் வழியில், நம்மவர் ஒருவர் மளிகைக் கடையின் கல்லாவில் இருக்க, அங்கே சென்று தண்ணீரும், சிப்ஸும் வாங்கிக்கொண்டோம். தான் பங்களாதேஷத்தவன் என்று அவரும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இரண்டாம் நாள், Colosseum மற்றும் Roman Forum பார்க்க , தங்கிய இடத்திலிருந்து பஸ்ஸிலேயே சென்றோம். பஸ்ஸை விட்டு இறங்கினால், மழை சாரல். நம்மைப் போன்றவர்கள் அங்கே குடைகளையும், மழையங்கிகளையும் விற்பவர்கள் நடைபாதையில் நடந்து நடந்து விற்றுக்கொண்டிருந்தார்கள். குடைகளை பிடித்துக்கொண்டு நடப்பவர்களை பார்த்தோம். குடைகள் மேல்நோக்கி விரிந்து சிறகென அவர்களை இழுத்துச் செல்ல பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தன. இவ்வளவு தூரம் வந்து மழையால், 80 AD-யில் கட்டப்பட்ட மிகப்பெரிய கலையரங்கத்தைப் பார்க்காமல் செல்வதா என , நாங்கள் மழையங்கியை வாங்கி அணிந்து செல்லலாம் என முடிவு செய்தோம். முப்பது யூரோக்களுக்கு மூணு என்று விற்றுக்கொண்டிருந்த பங்களாதேஷ்காரரிடம், இருபதுக்கு மூணு கொடு ராசா என்று வாங்கி அணிந்துகொண்டோம். இந்த அங்கியில் எங்கள் மூவரில் யாருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது என்று அருகில் நடந்தவர்கள் இத்தாலி மொழியில் பேசியிருப்பதற்கு சாத்தியங்கள் அதிகம்.

ரோமில் நான்கு நாட்கள் தங்கியிருந்து , திட்டத்தில் வைத்திருந்த Vatican Museum, Trevor Fountain, Spanish Steps, Pantheon எல்லாம் பார்த்துவிட்டு, Florence-ற்கு இரயிலிலேயே சென்றோம். இரயில் நிலையத்திலிருந்து தங்கவேண்டிய விடுதி 13 நிமிட நடையென்பதால், கையில் வைத்திருக்கும் பைகளை இழுத்துக்கொண்டே நடந்தோம். இடப்புறமாக திரும்பும் முன் , ஒரு மூலையில் பார்த்தால், “Authentic Indian Food’ என்று இருந்தது. அப்பொழுதே, இன்றைய உணவு இங்குதான் என்று முடிவு செய்துவிட்டோம். அந்த ஹவேலி உணவகத்தில் உள்ளே நுழைந்ததுமே, வரவேற்பு மேசையில் சுடிதார் அணிந்த பெண்மணி, வாங்க வாங்க என்று இரு கை கூப்பி வணங்கியவர் என இந்திய முகங்கள். உள்ளே சாப்பிட உட்கார்ந்தால், எங்களுக்கு தண்ணீர் வைத்த பையன், “நீங்கள் தமிழா ? “ என்று வழக்கமான மரபு முறையில் தமிழில் கேட்டார். “ஓ, நீங்களும் தமிழா” என நான் ஆவலுடன் கேட்க, அவர் கேரளம் என்றார். நாங்கள் (பார்ப்பதற்கு) இந்தியர்கள் என்று அறிந்ததாலோ என்னவோ, உணவக முதலாளி, முதலில் வணக்கம் போட்டவர், எங்கள் மேசை முன்னர் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசினார். Chef Jyoti , 25 வருடங்களாக அந்த உணவகத்தை நடத்தி வருவதாகவும், பஞ்சாபிலிருந்து வந்தவர் குடும்பமாக Florence-ல் வாழ்வதாகவும் சொன்னார். 13 கி.மீ. சுற்றளவே உள்ள இந்த நகரில், தனது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை குடும்பமாகவும் தெரியும் என்றார். நான் ஆஸ்டின் என்றதும், அவர் பெண் எடுத்திருப்பது Houston என்றார்.
இத்தாலி வந்துவிட்டு , சிறுவயதிலிருந்து பார்க்கவேண்டும் என்று கனாக்கண்ட பைசா நகர சாய்ந்த கோபுரத்தை பார்க்காமல் செல்வது எப்படி ? Florence-லிருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருக்கும், Pisa சென்று சாய்ந்து நிற்கும் கோபுரத்தை பார்த்தோம். ராதா சொன்னார் என்று அண்ணாந்து பார்த்தால், மேகம் நகர, கோபுரம் கீழே சாய்வது போல் பூச்சாண்டி காட்டியது. அங்கிருந்த சாலையோரக்கடைகளை நடத்துபவர்களை யாரென பார்த்தால், அவர்களும் பங்களாதேஷ் மக்கள். “யே கித்தனா ?” என்று ஒருவரிடம் கேட்க, அவர் ஒன் யூரோ என்று சொன்ன பைசா கோபுரத்தின் மாதிரியை வாங்கிக்கொண்டேன். ரயிலில் கொறிக்க ஏதவாது இருந்தால் நன்றாக இருக்கும் என்று விண்ணப்பம் வைத்த ராதாவை திருப்திபடுத்த, பைசா இரயில் நிலையம் அருகே பங்களாதேஷ்காரரின் மளிகைக் கடையை பார்த்தோம். டில்லி மிக்ஷர் மாதிரியில் இருந்த நொருக்குத்தீனியை அவரிடம் வாங்கிக்கொண்டோம். இவர் முகம் மிக கண்டிப்பானதாக இருந்ததால், எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

இத்தாலி நகரங்கள், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை , கரூர் நகர சந்துகளை நினைவுறுத்தும் சிறுசிறு சந்துகளால் ஆனது. வித்தியாசம், தெருக்கள் சுத்தமாகவும், கல்பதிக்கப்பட்டு நேர்த்தியாகவும், வழிந்தோடும் கழிவு நீர் சாக்கடைகள் கண்ணில் படாமலும் இருக்கும். அப்படி கல்பதிக்கப்பட்ட சந்துகளை ரசித்துக்கொண்டு, நடக்கையில், Falafel என்று ஒரு கடையின் சுவற்றில் எழுதியிருந்த அட்டவணையில் பார்த்ததும் இங்குதான் இன்றைய மதிய உணவு என்று நின்று கொண்டேன். உள்ளே நுழைந்தால், குறுந்தாடி வைத்த சுறுசுறுப்பான பையன், சமையல் செய்துகொண்டிருந்தான். அவனே சமைத்தான். சாப்பிட்டதற்கு காசும் வாங்கி போட்டுக்கொண்டான். நான் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கும்பொழுது இனம் கண்டு, எந்த ஊர் என்று கேட்டான். அவனிடம் சாப்பாடு நன்றாக இருந்தது என்று சொன்னேன். அவன் நன்றி சொல்லிவிட்டு, அவனும் பங்களாதேஷ் என்றான். சிரிக்க சிரிக்க சமைத்த அவன் முகம் அன்னம் வழங்கும் ஒரு அன்னையின் முகம்.

Leave a comment