பசிக்கும்லே

Published by

on

ராதாவிற்கு ஒரே கவலை. கோழிக்கறிகூட சாப்பிடாத விரதத்தில் இருக்கும் நாம் இத்தாலி பயணத்தில் பத்து நாட்கள் வெறும் மரக்கறி உணவாக சாப்பிட்டு எப்படி சமாளிப்பது என.  பிஸ்ஸா அவருக்குப் பிடித்த உணவெனினும், பத்து நாட்களுக்கு மனுஷன் அதை மட்டும் சாப்பிட்டிக்கிட்டிருந்தா நாக்கு செத்துப்போகாதா என்ற கவலை. சஹா , “பிஸ்ஸா இங்கு சாப்பிடுவதுபோல இருக்காது. அங்கு வேறு மாதிரி சுவையாக இருக்கும். இங்கு கொத்து பராட்டோ சாப்பிடுவதற்கும், தமிழ்நாட்டில் கொத்து பரோட்டா சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்குமல்லம்மா, அப்படித்தான்” என்று தன் அன்னையை தேற்றிக்கொண்டே இருப்பார். சஹாவிற்கு வெவ்வேறு உணவுகளை முயற்சிப்பதில் ஒரு ஆர்வம். அவரை பொறுத்தவரையில் இத்தாலி உணவுக்கனவுடன் தயாரானார். எனக்கோ இணையத்தில் பார்த்துவிட்டு Gelato-வை ஒரு கை பார்க்கவேண்டும் என்று ஆசை. Gelato சாப்பிட்டு வயிறு நிறையாதுதான். ஆனால், இத்தாலிக்குச் சென்றால் அதை சாப்பிடாமா வராதீங்கனு  அந்த நாட்டிற்குப் பயணம் செய்த ஒவ்வொருவரும் பதிவு செய்துவைத்திருந்தார்கள்.

ரோமில் இறங்கிய முதல் மாலையே சோதனை ஆரம்பமானது. Lauro என்ற உணவகத்தில் , அதன் எதிரில் இருக்கும் மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தவாறு சாப்பிட்டோம். ராதா , பிஸ்ஸா-வும் சூப்பும், நான் சுட்ட காய்கறிகள் (அதில் அதிகம் இருந்தது சுரைக்காய் வகையை சார்ந்த Zucchini), சஹா சீஸ் பால்ஸும் சாப்பிட்டோம். அதிர்ச்சி வைத்தியம் , தண்ணீருக்கும் காசு கொடுக்கவேண்டும் என்பதுதான்.   

நாங்கள் தங்கியிருந்த விடுதியின் அருகில் , முதல்  நாளில்  நடந்துசென்று வேவு பார்த்தபொழுது நிறைய உணவகங்கள் கண்ணில் பட்டன.  காலையில் எழுந்து பசியுடன் தேடினால், அதே கடைகளிண் கதவுகள் மூடப்பட்டு இருந்தது. காலையில் பத்து மணிக்கு சாவகாசமாக கடைகளை திறப்பது சாதாரணம் என அறிந்து, தேடிக் கண்டடைந்த உணவகம் ஒன்றில் அமர்ந்து,  சாப்பிட்டுப் பழகிய Croissant, Scrambled eggs-தானே என்று எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு சம நிலையில் order செய்தோம். இனிப்பே பிடிக்காத ராதா, Croissant-ஐ வாயில் வைத்துவிட்டு கசப்பாக சிரித்தார்.  வாய் வாய்க்கு வந்த சீஸில் ஒட்டிக்கொண்ட உதட்டுடன் எப்பொழுதும் என் முகம் இப்படித்தான் என ராதாவையும் எதிரில் அமர்ந்திருந்த சஹாவையும் பார்த்து நான் விழித்தேன். இத்தாலியில் கிடைக்கும் Cornetti-யில் சர்க்கரை தூவப்பட்டிருப்பதும், உடைந்த முட்டைத் துகள்களின் கூட்டத்துடன் பிரித்தறிய முடியாதளவு சீஸ் இருப்பதும் நமக்குப் பழக்கமில்லை. 

முதல் நாள் ATM எங்கே இருக்கிறது என்று தேடும்பொழுது விடுதியிலிருந்து வெளியே வந்ததும், இடதாக திரும்பவதற்குப் பதிலாக வலம் திரும்பி நடந்ததில் பேஸ்டரி விற்கும் கடையை பார்த்திருந்தோம். அது நினைவுக்கு வர இரண்டாம் நாள் காலை அங்கு சென்றால் எங்களுக்கு சொர்க்கம் காத்திருந்தது. உண்மையிலேயே plain croissant, சீஸ், காய்கறி எதுவும் போடாத பிஸ்ஸா என கிடைத்தது. நல்ல தோசையை சும்மாவே சாப்பிடலாம்போல, காய்கள் எதுவும் stuff செய்யப்படாத foccaccie-வை விரும்பி சாப்பிட முடிந்தது.  அப்பவே முடிவு செய்தோம், Rome-ல் இருக்கும்வரை Breakfast, lunch , டின்னர் எல்லாம் Garage Forno-வில்தான் என்று. வெளியே சுற்றினாலும், ‘பசிக்கும்லே’ என்று மதியத்தில் இங்கு வந்துதான் சாப்பிட்டோம்.  ருசி ஒரு பக்கம் மகிழ்வளித்ததெனில், குறைந்த செலவு இன்னொரு பக்கம் மகிழ்வளித்தது.  கொஞ்சம் டீசண்டான உணவகங்களில், ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்கு 20 யூரோக்கள் செலவு ஆகிறது என்றால், இங்கே மூவர் 20 யூரோக்களில் ஒரு வேளை உணவை சாப்பிடமுடிந்தது. நாங்கள் ரோமில் தங்கியிருந்த இடம் வாடிகன் நகருக்கு (நாட்டிற்கு?) அருகில். பத்து நிமிடத்தில் நடந்தே சென்றுவிடலாம். அதேபோல் ஓர் இந்திய உணவகமும் பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது. சஹா, என்ன அங்கு போய் வெஜிடபிள் பிரியாணி சாப்பிடப்போறீங்களா என்று கிண்டல் செய்துகொண்டே இருந்தார். இந்திய உணவின்  மீதிருந்த மோகத்தையும் தாகத்தையும் கடக்க Garage Forno-வும் அங்கு கிடைத்த Foccaccio-வும்தான் எங்களுக்கு உதவியது.

நினைத்ததெல்லாம் பார்த்துவிட்ட மன நிறைவான  நாளொன்றில், Gelato-விற்கென்றே ஒரு மாலையை ஒதுக்கி நடந்து சென்று, முதல் நாள் பார்த்தோமே குழந்தைகள் விளையாடும் மைதானம், அங்கே சென்று அமர்ந்து ஆளுக்கொரு Gelato வாங்கி சாப்பிட்டு இத்தாலிய அந்தியில் மயங்கினோம்.   

ரோமில் சாப்பாட்டு சாதனைகள் இப்படியென்றால், மைக்கேல் அஞ்செலோ-வின் சிலைகளை காட்சிப்படுத்தும் அருகங்காட்சியகம் உள்ள ஃப்ளோரன்ஸில், ஹவாலி என்ற இந்திய உணவகத்தில் ராதா லெமன் சாதம் சாப்பிட்டு, இத்தாலியிலும் அரிசி பதார்த்தத்தை சாப்பிட்ட சாதனை படைத்தார். நானும் சஹாவும் நான் சாப்பிட்டோம். சொம்பு நிறைய கொடுத்த மசாலா டீ அருந்தினேன். ரோமில் Gelato சாப்பிட்டு நாக்கில் ஒட்டிய இனிப்பை அப்படியே ஆஸ்டின் கொண்டுவரும் மோன நிலையில் இருந்த என்னை விதி அசைத்துப் பார்த்துவிட்டது. சஹா, Cannoli எனும் இனிப்பு பண்டத்தை இரண்டு விதமான flavor-ல் வாங்கினார். Pistachio flavor-ல் வாங்கிய Cannoli-ஐ அவர் வாயில்கூட வைக்கமுடியவில்லை என்று சொன்னதால், அதை சாப்பிட்டு பிறிதொரு மோன நிலைக்குச் சென்றேன்.  ஃப்ளோரன்ஸில் இருக்கும் கதீடரல் சர்ச்சில் உள்ளே சென்று பார்க்க முன்னரே பதிவு செய்திருக்கவேண்டும். இவ்வளவு தூரம் வந்து இதைப் பார்க்கமுடியவில்லை என்ற கவலையுமில்லை. ஐஸ் கிரிமில் காப்பியை ஊற்றுவார்களா, இல்லை காப்பியில் ஐஸ்கிரிமை போடுவார்களா என்று கேட்கும் பக்குவமும் இல்லை. ஆனால், Affagato-வை ரசித்துச் சாப்பிட்டேன்.

வெனிஸில்  தெருத்தெருவாக சுற்றி, பாலம் பாலமாக ஏறி, களைப்புற்று, சஹா, சாப்பிட ஒரு காப்பி வாங்கி கொடுக்கமாட்டாயா என்று கெஞ்ச, St. Mark’s Square-ல் உள்ள Florian எனும் காப்பிக்கடைக்கு கூட்டிச் சென்றார். விலைப் பட்டியலை பார்த்தால் ஓடிவிடலாம் என்று மனது சொன்னாலும், முன்னூறு வருட வரலாறு படைத்த கடையில் காப்பி சாப்பிடுவோம் என்று சமாதானம் ஆகிவிட்டேன். கடுங்காப்பி சூடாகக் கேட்டேன். உடன் வெந்நீரும் கொடுத்தார்கள். காப்பி கப்பில் கொஞ்சம் இருக்கும் நிலையில் வேண்டுமளவு மேலும் வெந்நீர் விட்டு கொள்ளளவை அதிகரித்து குடித்த வண்ணம் இருந்தேன். மஹா அனுபவம்.   

வெனிஸ் தீவிற்கு வந்துவிட்டு, கண்ணாடியில் அழகு அழகு பொம்மைகள் செய்யும்  முரானோ தீவையும், கலர் கலராக வீடுகளை கட்டிவைத்திருக்கும் புரானோ தீவையும் பார்க்காமல் சென்றால் தெய்வக்குத்தம் என்று பார்க்குமிடமெல்லாம் வருத்தி வருத்தி சொல்லப்பட்டதால்,  அந்த இரு தீவுகளையும் பார்த்தோம். வெனிஸில் ஒரு நாள் கூட சஹா , பசிக்கிறது என்று சொல்லவில்லை. ராதா, அவ்வப்பொழுது சொல்வார். எனக்கு நாள் முழுக்க பசி அக்னி இருந்துகொண்டே இருந்தது. புரானோவில் நடக்கும்பொழுது ஒரு கடையில் சீஸ் கட்டிகள் போண்டா போல தெரிய அதை பார்த்து நான் நகர மறுத்துவிட்டேன். Arancini என்ற அந்தப் பண்டத்தை முதலில் ஒரு ப்ளேட் அப்புறம் ஒரு ப்ளேட் என்று வாங்கி சாப்பிட்டுதான் என் பசி அடங்கியது. அதற்கு அப்புறம் என் கலரை கலர் கட்டிடங்களுடன் அழகு அழகாக படம் எடுக்க முடிந்தது. 

கலர் கலராக காய்கறிகளை பார்த்திருப்போம். வெனிஸ் வீதி வழி நடைப்பயணித்தில் பல வண்ணத்தில் மிட்டாய்களை குவித்துவைத்திருப்பதைக் கண்டோம். உடனே அக்கடையில் புகுந்து எடைபோட்டு, ஆரஞ்ச் மிட்டாய், பாதாமை உள் வைத்த சாக்லெட் என வாங்கிக்கொண்டோம். உண்ணும் பண்டங்களில் ஆஸ்டின் வரை உடனும் வந்ததென இவைகளைத்தான் சொல்லமுடியும். மற்றதையெல்லாம் சாப்பிட்டு செரித்து அந்த இத்தாலி மண்ணோடு மண்ணாக போகட்டும் என்று விட்டுவிட்டு வந்தோம். 

Leave a comment