ரோம் நகரமென்றால், “You too, Brutus” என்று பிரபலமான வசனத்தின் மூலமாக தெரிந்திருந்த ஜூலியஸ் சீசரையும், அவரைக் கொன்ற நண்பர்களையும், சீசரின் காதலியான கிளியோபாட்ராவையும், எகிப்து இத்தாலிக்கான வரலாற்றையும் மேலும் அறிந்துகொள்ள கிளியோ பாட்ரா, ஜூலியஸ் சீசர் வரலாற்றைச் சொல்லும் படங்களை ஆவணங்களை பயணத்தின் முன் தயாரிப்பாகப் பார்த்தோம். மைக்கேல் அஞ்செலோவின் கலைப் படைப்புகளையும் அங்கு பார்க்கவிருக்கிறோம் என்பதை அறிந்திருந்தும், முன்கூட்டியே அனுமதிச் சீட்டை வாங்காததால், Florence-ல் அவரது ஆகச்சிறந்த கலைப்படைப்பான David சிலையை Academy of Gallery-வில் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பை இழந்தோம். அதற்காக பயணத்தின் நாட்களை விரயமாக்கினோம் என்று சொல்லவும் முடியாது. மைக்கேல் ஆஞ்செலோ வரைந்த Creation of Adam படம் உள்ள ஸிஸ்டைன் சேபலையும் (Vatican), ஜுவானி பெல்லினி (Giovanni Bellini) வரைந்த மடோனா குழந்தை ஏசுவுடன் உள்ள விதவிதமான படங்கள் உள்ள Academia Gallery of Venice அருங்காட்சியகத்தையும் பார்த்தோம்.
வாடிகன் அருங்காட்சியகத்தையும், ஸிஸ்டைன் சேபலையும் பார்ப்பதற்கு ஒரே அனுமதிச் சீட்டுத்தான். நேரில் சென்றும் வாங்கலாம், இணையத்திலும் வாங்கலாம். இணையத்தில் தேதி நேரமெல்லாம் குறிப்பிட்டு முன்பதிவு செய்திருந்திருந்தாலும் கூட, இரண்டு மணி நேரம் வரிசையில் நிற்கவேண்டும் என்ற நிதர்சனம் அங்கு முன்னரே சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும். உள்ளே நுழைந்ததும் நாம் பார்ப்பது அருங்காட்சியகத்தின் வெவ்வேறு ஓவியங்களும், சிலைகளும்தான் எனினும், ஸிஸ்டைன் சேபல் என்று வழிகாட்டி போடப்பட்டு, இதோ வந்துவிட்டது இதோ வந்துவிட்டது என்று நம்மை ஒரு எதிர்பார்ப்பு மன நிலையில் வைத்திருக்கும். எவ்வளவு அவசரமாக பார்த்தாலும் கண்ணைப் பறிக்கும் ஓவியங்களும், விழிகளை விரிக்கவைக்கும் சிலைகளும், குறைந்தது இரண்டரை மணி நேரங்கள் நம்மை பார்க்க வைத்துவிடும். நான் பார்த்த வரிசையின்படி, படமெடுத்த ஓவியங்களையும் சிலைகளையும் குறிப்புகளுடன் கொடுக்கிறேன்.
முதலில் பார்ப்பது கிரிகேரியன் எகிப்திய அருங்காட்சியகம், எகிப்திய பண்பாட்டைச் சொல்லும் ஒன்பது அறைகளைக் கொண்டது. யானைமுகத்தானை வேண்டி காரியங்களைத் துவங்கும் எனக்கு சிங்கமுகம் கொண்ட கடவுளின் சிலையும் (Goddess Sekhmet), நாயின் தலை கொண்ட கடவுளின் சிலையும் (Anubis) உடனே கவர்ந்தன. கி.மு 1390-1352 காலகட்டத்தை சார்ந்த செக்மெத் கோபத்தை ஆற்றும் பெண் கடவுள். இரா எனும் எகிப்திய சூரியக்கடவுளின் மகள், அவரது கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் பிறந்தவள்.

எகிப்து நாட்டின் தொன்ம நம்பிக்கையின்படி Anubis , இறப்பிற்கு பின்புள்ள வாழ்க்கையை முடிவு செய்யும் பாதாள உலகத்திற்கான கடவுள். இறந்தவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை காத்தல் இவரது தொழில்.

எகிப்திய பதினெட்டாம் வம்சத்தின் ஆட்சியில் 3 ஆம் அமென்ஹோடெப்பின் மனைவியான ராணி தியேவின் அம்சங்களுடன் செதுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. 19 ஆம் வம்சத்தின் ஆட்சியின் போது, 2 ஆம் ராம்செஸ், அதை அவர் தனது தாய் துயாவுக்கு அர்ப்பணித்தார்.

கிமு 40-30 வாக்கில் செதுக்கியிருக்கலாம் என அனுமானிக்கப்படும் இந்தச் சிலை 1506 ஆம் ஆண்டு ரோமில் உள்ள எஸ்குவிலின் மலையில் கண்டுபிடிக்கப்பட்டு லாவோகூன் என்று அடையாளம் காணப்பட்டது. பிளினி தி எல்டர், இதை ரோட்ஸ் சிற்பிகளின் தலைசிறந்த படைப்பு என விவரித்தார். ட்ரோஜன் போரின் போது, டிராய் நகரத்தில் அப்பல்லோவின் பாதிரியாரான லாவோகூன், கிரேக்கர்கள் நகர வாயில்களுக்கு வெளியே விட்டுச் சென்ற மரக் குதிரையை, எடுத்துச் செல்ல வேண்டாமென தனது சக ட்ரோஜான்களை எச்சரித்தார் என்பது கதை. கிரேக்கர்களை ஆதரித்த ஏதெனா மற்றும் போஸிடான், இரண்டு பெரிய கடல் பாம்புகளை அனுப்பி , லாவோகூன் மற்றும் அவரது இரண்டு மகன்களை, அவர்களை சுருள் போல சுற்றிக் கொன்றார்களாம் . ரோமானியக் கண்ணோட்டத்தில், இந்த அப்பாவிகளின் மரணம் லாவோகூனின் எச்சரிக்கையை ஏற்று டிராய் நகரை விட்டு வெளியேற ஐனியாஸின் முடிவுக்கு மிக முக்கியமானது, இது இறுதியில் ரோம் நிறுவப்பட்டதற்கு வழிவகுத்தது. இவ்வளவு முக்கியமான சிற்பத்தை போப் இரண்டாம் ஜூலியஸ் (1503-1513) சிலைகள் முற்றத்தில் மையப் பொருளாக காட்சிப்படுத்தினார் என அருங்காட்சியகத்தின் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hall of Muses என்ற மண்டபம் 1784 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இந்த மண்டபம், டிவோலிக்கு அருகிலுள்ள காசியஸ் வில்லாவில் காணப்பட்ட Hall of Muses சிற்பங்களைக் காட்சிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த மியூசஸ் சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு கலைக்கு அல்லது ஆற்றலுக்கான தேவதைகள் எனலாம். உதாரணத்திற்கு இடது புறத்தில் உள்ள காகிதச் சுருளை வைத்திருப்பது போன்ற சிலை, வரலாற்றுக்கான தேவதை கிளியோ எனவும், இடையில் உள்ள, யுரேனியாவை வானியல் சாஸ்திரத்திற்கான தேவதை எனவும் வரையறுத்திருந்தார்கள்.
உதாரணங்களுக்கு சில சிலைகளை விவரித்த கையோடு, வாடிகன் அருங்காட்சியகத்தில் பார்த்த ஓவியங்களை அங்கு எடுத்துக்கொண்ட குறிப்புகளுடன் வகைப்படுத்துகிறேன்.

இந்த ஓவியம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது, அவர் கல்லறையிலிருந்து வெளிப்பட்டு ரோமானிய நூற்றுவர் தலைவர்களைப் பயமுறுத்துகிறார். இந்த ஓவியம், ஆக்ஸ்போர்டில் உள்ள ஆஷ்மோலினா அருங்காட்சியகத்தில் ஜியோவன் பிரான்செஸ்கோ பென்னி (1490-1528) வரைந்த மூலங்களின் நகல்களாகத் தெரிகிறது. ஆனால் இதை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாணியின் காரணமாக இதை வரைந்தவர் கிலியோ ரோமானோவாக இருக்கலாம்.

திரைச்சேலையில், இந்தக் காட்சி அரிதாகவே உருவாக்கப்படுகிறது, இது சீசரை நான்கு கொலையாளிகள் தாக்கும் தருணத்தைக் காட்டுகிறது. அந்த நேரத்தில் மற்ற செனட்டர்கள் இருபுறமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வலதுபுறத்தில் தூண்களுக்கு இடையில் ஒரு நிலப்பரப்பு தெரியும். இடதுபுறத்தில் படுகொலைகளுக்கு உடனடியாக முந்தைய ஒரு சம்பவம் தோன்றுகிறது. ஆர்டெமிடோரஸ் சீசருக்கு எதிரான சதித்திட்டத்தை எச்சரிக்க முயற்சிக்கிறார். இந்த திரைச்சீலை பழங்கள் மற்றும் இலைகளின் கனமான மரக்கட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பரந்த எல்லையால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவற்றில் நிர்வாண குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள் , கருங்கல் சிலைகள், சுவற்றில் வரைந்த சுதை ஓவியங்கள் , தீரைச்சிலை ஓவியங்கள் எனப் பார்த்து பார்த்து நேரம் சென்றதே தெரியாமல் இறுதியாக சிஸ்டைன் தேவாலயத்தை வந்தடைந்தோம். சிஸ்டைன் தேவாலாயத்தில் மேற்கூரையிலும் , தெற்கு மற்றும் வடக்குச் சுவர்களிலும், இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தை சார்ந்த, மைக்கேல் ஆஞ்செலோ, சான்ட்ரோ பொத்திசில்லி, பின்ட்ருசியோ ஓவியர்கள் வரைந்த சுதை ஓவியங்களை காணலாம். சுவரை ஒட்டி நீளமாக போட்ட பெஞ்சில் அமர்ந்துகொண்டும், நின்றுகொண்டும் பார்வையாளர்கள் பார்க்கமுடியும். புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. சுற்றுலா வழிகாட்டியுடன் வருபவர்களுக்கு, ஒவ்வொரு ஓவியத்தை பற்றியும் அவர்கள் விளக்கம் சொல்வதையும், அல்லது அதற்கான ஒலிவடிவ பதிவை வாங்கி காதில் மாட்டிக்கொண்டவர்களையும் பார்க்கலாம். இரண்டு ஓவியங்களை மட்டும் வாடிகன் அருங்காட்சியத்தின் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொண்டு விளக்குகிறேன்.

The Last Judgement : இந்த சிதை ஓவியம் பீடத்தில் காணப்படுகிறது. 1536 மற்றும் 1541 க்கு இடையில் மைக்கேலேஞ்சலோவால் வரையப்பட்ட இந்த மகத்தான ஓவியம் கடைசி நியாயத்தீர்ப்பின் தீர்ப்பு உச்சரிக்கப்படும் தருணத்தை குறிப்பதாகும் (மத்தேயு 25: 31-46). கிறிஸ்துவின் அமைதியான, அதிகாரம் மிக்க ஆளுமை கவனத்தை ஈர்ப்பதாகவும் சுற்றியுள்ள கிளர்ச்சியாளர்களை அமைதிப்படுத்துவது போலவும் தெரிகிறது. கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக கன்னிகை மரியாள் இருக்கிறார். அவள் தலையை தனக்கு இதில் ஒப்புதல் இல்லை என்பதுபோல திருப்புகிறாள். உண்மையில் அவள் இனி எடுக்கப்படவிருக்கும் முடிவில் தலையிட முடியாது. நியாயத்தீர்ப்பின் முடிவுக்காக மட்டுமே காத்திருக்கிறாள். கிறிஸ்துவையும் கன்னி மரியாளையும் சுற்றி அமர்ந்திருக்கும் புனிதர்களும் தீர்ப்பை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை எளிதில் அடையாளம் காணலாம். இரண்டு சாவிகளுடன் புனித பீட்டர், கிரிடிரோனுடன் புனித லாரன்ஸ், மைக்கேலேஞ்சலோவின் சுய உருவப்படமாக பொதுவாக அங்கீகரிக்கப்படும் தனது சொந்த தோலுடன் புனித பார்த்தலோமியூ, பற்சக்கரத்துடன் அலெக்ஸாண்ட்ரியாவின் புனித கேத்தரின் மற்றும் அம்புகளைப் பிடித்தபடி மண்டியிட்ட புனித செபாஸ்டியன். கீழ்ப் பகுதியின் மையத்தில், இறந்தவர்களை எழுப்பும் பேரழிவின் தேவதைகள் உள்ளனர். இடதுபுறத்தில் உயிர்த்தெழுந்தவர்கள் சொர்க்கத்தை நோக்கி (உயிர்த்தெழுதல்) ஏறிச் செல்லும்போது தங்கள் உடல்களை மீட்டெடுக்கிறார்கள், வலதுபுறத்தில் தேவதூதர்களும் பிசாசுகளும் சபிக்கப்பட்டவர்களை நரகத்திற்கு விழச் செய்ய சண்டையிடுகிறார்கள். இறுதியாக, கீழே, சரோன் தனது துடுப்புகளுடன், தனது பிசாசுகளுடன் சேர்ந்து, சபிக்கப்பட்டவர்களை தனது படகிலிருந்து இறக்கி, அவர்களை நரக நீதிபதி மினோஸின் முன் அழைத்துச் செல்லச் செய்கிறார். அவருடைய உடலில் பாம்பு சுருண்டு காணப்படுகிறது.

Creation of Adam : இது மேற்கூரையில் காணப்படும் சிதை ஓவியங்களில் ஒன்று. மனிதனின் படைப்பு அத்தியாயத்தின் ஆதாரப் புள்ளி படைப்பாளரின் விரல்களுக்கும் ஆதாமின் விரல்களுக்கும் இடையிலான தொடர்பு ஆகும். இதன் மூலம் உயிர் மூச்சு கடத்தப்படுகிறது. பறக்கும் தேவதூதர்களால் ஆதரிக்கப்பட்டு, ஒரு கவசத்தில் போர்த்தப்பட்ட கடவுள், ஆதாமை நோக்கி சாய்ந்து, ஓய்வெடுக்கும் விளையாட்டு வீரரைப் போல காட்டப்பட்டுள்ளார். அவருடைய அழகு பழைய ஏற்பாட்டின் வார்த்தைகளை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. அதன்படி மனிதன் கடவுளின் சாயலில், விருப்பத்துடன் படைக்கப்பட்டான்.
(மேலும்)

Leave a comment