வாடிகன் அருங்காட்சியகத்தில், ஓவியங்களை பார்த்து அதிசயத்திருந்த நாங்கள், மைக்கேல் அஞ்செலோ வாழ்ந்த ஊரான ஃப்ளொரன்ஸில் அவர் வடிவமைத்த சிலையை பார்க்க முடியாமல் போன ஏமாற்றம், எல்லாம் சேர்ந்து வெனிஸில் ஒரு அருங்காட்சியகத்தையாவது முழுக்கு முழுக்க நிதானமாக பார்க்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தோம். வெனிஸ் சென்றும் சேராததுமாக, Gallerie Academia-விற்கு முன்பதிவு செய்வதற்கான முயற்சிகளை எடுத்தோம். இணையத்தில் பதிவு செய்வதில் இருந்த இன்னல்களை கடக்கமுடியாத நிலையில் , நாங்கள் தங்கியிருந்த விடுதியினரை அபயம் கேட்டு அணுகினோம். அவர்கள், இந்தக் கலைக்கூடத்திற்கு முன்பதிவு செய்யத்தேவையில்லை. எப்பொழுது சென்றாலும் அனுமதிச்சீட்டை பெறமுடியும் என்றதொரு தைரியத்தை கொடுத்தார்கள். மார்ச் 18 காலையில், 10:30 மணிக்கு சென்று நபர் ஒன்றுக்கு 15 யூரோக்கள் கொண்ட அனுமதிச்சீட்டுக்களை வாங்கிக்கொண்டோம். முதல் தளத்தில் 24 அறைகள் , அடித்தளத்தில் 13 அறைகள் என வெவ்வேறு ஓவியரின் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அடித்தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள, 14 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் பிரபலமான வெனிஸ் ஓவியர்களில் ஒருவரான, கேடரினோ வெனிசியானோ (Catarino Veneziano) ஓவியங்களை முதலில் பார்த்தோம். அன்னையை வணங்கிவிட்டு அடுத்து அடுத்து காரியங்கள் செய்வதுபோல, கேடரினோ வெனிசியானோ வரைந்த கன்னி மேரியின் பட்டாபிஷேகம் (Coronation of the Virgin) ஓவியத்தை பார்த்தோம்.
எங்களது ரசனையில் அடிப்படையில் என்று கணிக்கவேண்டாம். நாங்கள் அதிக நேரம் செலவு செய்து ஒருவரின் ஓவியங்களை ரசித்தோம் என்ற நடைமுறையின்படி, அவைகள் பெல்லினி வம்சா வழியில் வந்த மிகவும் பிரபலமானவராக அறியப்படும் 1435-1516 காலகட்டத்தில் வாழ்ந்த ஜியோவானி பெல்லினி (Giovanni Bellini) வரைந்த ஓவியங்கள்தான். உணர்வுப்பூர்வமான மற்றும் வண்ணமயமான பாணியை நோக்கி எடுத்துச் சென்றவர் என அறியப்படுபவர். தெளிவான, மெதுவாக உலர்கின்ற எண்ணெய் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தியதன் மூலம், ஜியோவானி ஆழமான, செழுமையான சாயல்கள் கொண்ட மற்றும் விரிவான ஓவியங்களை உருவாக்கினார். அவரது வண்ணமயமான, நிலப்பரப்புகளை காட்டும் ஓவியபாணி அவரது மாணவர்களான ஜியோர்ஜியோன் (Giorgione) மற்றும் டிடியன் (Titian) மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின எனவும் அவரது நினைவாக பெல்லினி காக்டெய்ல் உருவாக்கப்பட்டது எனவும் கற்றுக்கொண்டோம்.

ஒரு அறை முழுக்க ஜியோவானி பெல்லினியால் வரையப்பட்ட அன்னை மடோனா குழந்தை யேசுவை வைத்திருப்பதைப் போல விதவிதமான ஓவியங்கள் இருந்தன. உறங்கும் யேசுவை மடோனா மடியில் வைத்துக்கொண்டு ஆசையாக / பக்தி மனநிலையுடன் அவரை பார்ப்பதுபோன்ற ஓவியம்.

மறுமலர்ச்சி காலகட்டத்தில், தேவ ஆலயத்திலுள்ள இசைக்கருவிகளின் கதவுகள் (Organ Shutters) பெரும்பாலும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்குமாம். இந்த இயேசு பிறப்பின் முன்னறிவுப்பு (Annunciation) ஓவியம், ஜியோவானி பெல்லியனால் கருத்துருவாக்கப்பட்டு, அவரிடம் பயின்றவர்களால் வரையப்பட்டிருக்கலாம். இசைக்கருவியின் கதவை மூடும்பொழுது இந்த ஓவியமும், திறந்தால் பீட்டர் மற்றும் பவுலின் ஓவியங்கள் தெரியும்படியும் இருந்துள்ளன. பவுலின் படம் தொலைந்துவிட்டதாக கருதப்படுகிறது. “இயேசு பிறப்பின் முன்னறிவுப்பு” ஓவியத்தில், கன்னி மேரியின் அறையின் சுவர்களும், பீட்டர் இருக்கும் இடமும், பதினைந்தாம் நூற்றாண்டின் விலைமதிப்பற்ற பவோனாஸ்ஸோ (pavonazzo) பளிங்கு அலங்காரத்தை எதிரொலிக்கின்றன. இந்த ஓவியம் முதலில் வைக்கப்பட்டிருந்த சாண்டா மரியா டீ மிராக்கோலி ( Santa Maria dei Miracoli) தேவாலயத்தில் பளிங்கு அலங்காரத்தை இன்றும் பார்க்கலாம்.

இத்தாலி உச்சரிப்பில் பியேட்டா (Pieta) எனும் இந்த ஓவியம், சிலுவையிலிருந்து இறங்கிய பிறகு இயேசு கிறிஸ்துவின் மரண உடலை மடியில் கிடத்தியிருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவை சித்தரிக்கிறது.
இயேசுவை சிலுவையில் அறையும் ஓவியங்களையும், சிலைகளையும் பார்த்துப் பழக்கமான எங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்களை சிலுவையில் அறையும் ஓவியம் ஒன்றைக் கண்டதும் அசந்து நின்றோம். இதை வரைந்த விட்டோர் கார்பாசியோ (Vittore Carpaccio) , ஜியோவானி பெல்லினியின் அண்ணன், ஜென்டில் பெல்லினியிடம் மாணவனாக இருந்தவர். இவரது ஓவியங்களில் இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினாவின் (Antonello da Messina) பாணியும், நெதர்லாந்து ஓவியப் பாணியும் பாதிப்பைச் செலுத்தியுள்ளன என்பது வல்லுனர்களின் கருத்து. அவரது ஆசிரியரான பெல்லினியுடன் ஒப்பிடும்போது, விட்டோர் கார்பாசியோ, கட்டிடக்கலை விவரங்களுக்கு கொடுக்கும் கவனமும், மரணத்தை ஒட்டிய கருப்பொருள்கள் மற்றும் அடர்த்தியான வண்ணங்களை பயன்படுத்துதலும் அவரை மற்ற இத்தாலிய மறுமலர்ச்சி கலைஞர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. இந்தக் குறிப்புடன் இந்த ஓவியத்தை ஆராய்வோம்.

ஒரு இத்தாலிய ஓவியர் இந்த விஷயத்தை தனது கலையில் காண்பிக்க முயன்றது இதுவே முதல் முயற்சி என்கிறார்கள். இந்த ஓவியம் நூற்றுவர் தலைவன் அகாசியஸின் ஆணையின் படி ஆர்மீனிய கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராட அனுப்பப்பட்ட ஒன்பதாயிரம் ரோமானிய வீரர்களின் வரலாற்றை விவரிக்கிறது. முதலில் தோல்வியை சந்திக்கும் அவர்கள், அராத் மலையில் , ஒரு தேவதை தோன்றி ஆசிர்வதிக்கப்பட்டு கிறிஸ்துவத்திற்கு மாற்றப்படுகின்றனர். அவர்கள் எதிரியை தோற்கடிக்கும் வல்லமையை பெறுகிறார்கள். இந்தச் செய்தியை கேள்விப்பட்ட ரோமானியப் பேரரசர், மற்ற ஆறு பாகன் மன்னர்களுடன் இணைந்து, கிறிஸ்துவை உட்படுத்திய அதே சித்திரவதையை மதம் மாறிய இவர்களுக்கும் அளிக்கிறார். அகாசியஸும் அவரது வீரர்களும் காட்டிய இறை நம்பிக்கையை அதனால் அவர்கள் பெற்ற வலிமையை கண்டு மேலும் ஆயிரம் வீரர்கள் மதம் மாறுகிறார்கள். அவர்களுக்கும் அதே தண்டனை கொடுக்கப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் இந்த ஓவியத்தில் கீழே வலது மூலையில் ரோமப் பேரரசுருடன் உடந்தையாக இருந்த ஆறு பாகன் மன்னர்கள் குதிரையில் காணப்படுகிறார்கள். “இந்த ஓவியம் கார்போசியோவின் ஆசிரியர் பெல்லினியிலிருந்து வேறுபட்டு உள்ளது. இவரது படம் பல்வேறு உருவகங்களைக் கொண்டுள்ளது. அவை மைக்கலேஞ்சலோ மற்றும் டியூரர் கலைஞர்களின் ஓவியங்களின் சாயலுடன் காணப்படுகிறது. “ என காட்சியகத்தின் அடிக்குறிப்புகள் கூறுகின்றன.

கிறிஸ்துவை சிலுவையில் அறையும் இந்த ஓவியத்தை வரைந்தவர் பாவ்லோ காலியாரி அல்லது பாவ்லோ வெரோனீஸ் (Paolo Veronese) வெனீஸை சார்ந்த இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர். மதம் மற்றும் வரலாற்று ஓவியங்களை வரைவதில் பெயர் பெற்றவர். கானாவில் நடந்த திருமணம் (Wedding at Cana) – யேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய நிகழ்வு ஓவியமும், லெவியின் வீட்டு விருந்து (The Feast in the House of Levi) ஓவியமும் இவரது புகழ்பெற்ற ஓவியங்கள். இந்த ஓவியத்தில், கிறிஸ்துவை சிலுவையில் அறைவதை இடதுபுறத்தில் வரைந்ததன் மூலம், ஒரு புது மாறுதலை உறுவாக்குகிறார். அந்தியில் தாழ்வான வானத்தின் கீழ், சிலுவையில் கிறிஸ்துவை ஒளிரச்செய்யும் ஒளிக்கதிர் தெரிகிறது. அவரது காலடியில் மேரி மக்தலேனா, யேசுவை தேவ தூதன் என ஏற்றுக்கொண்ட நூற்றுவர் தலைவனும் இரக்கத்துடன் மண்டியிட்டுள்ளனர். மையத்தில் மூன்று மரியாள்கள் மயக்கமடைந்த கன்னிக்கு உதவுகிறார்கள். மத்தேயு நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்புறத்தில் சடலம் அதன் கல்லறையிலிருந்து வெளிவருவது உயிர்த்தெழுதலுக்கான ஒரு குறிப்பாக காணலாம்.

லூகா ஜியோடானோவின் (Luca Giordano), சிலுவையிலிருந்து இறங்குதல் (The Descent from the Cross) ஓவியம் அதிகமான பிரதிகள் எடுக்கப்பட்டு பிரபலமான ஓவியம். இந்த பலிபீட ஓவியம் ஜியோர்டானோவின் கலைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பல தளங்களில் கட்டமைக்கப்பட்ட காட்சியில், பலரை கூட்டமாக அமைக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அகமும் தெரிவதுபோல நுண்மையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஓவியர்கள் ஜூசெப் டி ரிபெரா (Jusepe de Ribera) மற்றும் டிடியான் (Titian) பாதிப்புகள் இந்த ஓவியத்தில் உள்ளன என்பது நிபுணர்களின் கருத்து. டிடியன் ஓவியம், ஜியோர்டானோவை அவரது வெனிஸ் பயணத்தில் ஆழமாக பாதித்துள்ளது.
மாதிரிக்காக சில ஓவியர்களையும், அவர்களது கலைப் படைப்புகளையும் இங்கு கொடுத்துள்ளேன். காலிஸ்டோ பியாஸ்ஸாவின் (Callisto Piazza)-வின் ஜான் பாப்டிஸ்ட்டின் துண்டிக்கப்பட்ட தலை, ஜாகோபோ ரோபஸ்டியின் (Jacopo Robusti ) கிறிஸ்துவை சிலுவையில் அறைதல் ஓவியம், ஜியாம்பட்டிஸ்டா சிமா டா கோனெக்லியானோ (Giambattista Cima da Conegliano) வரைந்த புனிதர்கள் , ஜார்ஜ், நிக்கோலஸ், அந்தோணி மடாதிபதி, செபாஸ்டியன் மற்றும் லூசி ஓவியங்கள் அடுத்து அடுத்து பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் இருந்தன. பயணத்தின் இறுதியில் ஓவியங்களை ஆழ்ந்து பார்க்கும் மாணாக்கர்களாக மாறினோம் என சொல்லலாம்.

Leave a comment