வீர தீர சூரன் – பார்க்கவும் ரசிக்கவும்

Published by

on

மணி ரத்னத்தின் இயக்கத்தில் வரும் எல்லா படமும்,  வெற்றி மாறனின் இயக்கத்தில் வெளிவருகின்ற எல்லா படமும் என்று பார்ப்பவன் நான். அந்த வரிசையில் விக்ரம் நடித்த படம் என்றாலும் பார்ப்பவன். அப்படித்தான் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம்,  துஷாரா விஜயன், SJ சூர்யா, நடிப்பில், தேனி ஈஸ்வரன் ஒளியமைப்பில், GV பிரகாஷ் குமார் இசையமைப்பில், வெளிவந்துள்ள “வீர தீர சூரன்”  சினிமா-வை அமேசான் பிரைமில் பார்த்தேன்.

படம் விறுவிறுப்பாக , அடுத்து என்ன என்ற கேள்விக்குறியுடன் ரசிகனை உட்காரவைக்கிறது.  ரசிகனை சந்தோஷப்படுத்தும் ஈர்க்கும் காட்சிகளும் அம்சங்களும் இருந்தன. கோபத்தை, தாபத்தை, பரிதவிப்பை, அன்பை, காதலை கண்ணிலும்,  கையை எங்கு வைப்பது,  தலையை எப்படி சாய்ப்பது என்று  மளிகைக்கடைக்காரனாக முழுவதும் மாறி காளியாக விக்ரம் படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். ஜட்டியுடன் வந்தாலும், மடித்து கட்டிய வேட்டியில் இருந்தாலும் கம்பீரமாக அந்த stylish சியான் / சாமி விக்ரமும் இருக்கிறார். பாலைவன மணலில் புரளவில்லை. ஆறு விதமான அடுக்கு உடைகளில் நாயகனும், அய்யோ பாவம் இந்தப் பாப்பாவிற்கு குளிராதா என வருந்தும் அளவில்  நாயகியும் பனியில் ஆடும் நடனம் இல்லை. மாறாக, மளிகை ஜாமானுடன் இரட்டை சக்கர வாகனத்தில் காதல் மனைவியுடன் இயல்பாக சரசம் செய்துகொண்டு பயணம் செய்யும் காளியும்(விக்ரம்),  அவருக்கு இணையாக குசும்பு செய்யும் கலையும் (துஷாரா விஜயன்) ரசிக்கும்படியான கல்யாணமான காதல் ஜோடிகள்.  பண்ணையாரும் பத்மனியும் படத்தில் சீனியர் சிட்டிஸன் காதலர்களை காட்சிபடுத்திய இயக்குனர் எஸ். யு. அருண்குமார் காளியையும் கலையையும் இப்படி காட்சிப்படுத்தியதில் ஆச்சரியமில்லை. கணவன் மனைவியாக அவர்கள் குழந்தைகளிடம் காட்டும் அன்பு, ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள பிரியம். ஆசை ஆசையாக அவர்கள்மேல் நமக்கும் பிரியம் வரவைத்து காளியோடு நமக்கும் சேர்த்து ஒரு பிரியம் வந்து அவர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று ஆகிவிடுகிறது. போலீஸ் என்றாலே, ஊர்க்கொள்ளைக்காரனுக்கு உடன்போகும் தூர்பாக்கியன் என்ற எண்ணம் தமிழ் ரசிகனுக்கு இருப்பதால், SP-க்கு முன்னரும் பின்னரும் கதை உண்டு என்று ஊகிப்பதில் அதிக அவகாசம் இருக்கவில்லை. ஆனால் அவர் நல்லவரா கெட்டவரா என்று எடையை கூட்டுவது SP ஆக நடித்ததுள்ள SJ சூர்யாதான். திலீப் என்ற பாத்திரத்தை கண்ணில் காண்பிக்காமல், காளியின் பையன் பெயர் திலீப் என்று தாதா ரவியிடம் சொல்லுமிடத்தில் விக்ரமிற்கும் திலீப்பிற்குமான நட்பை புரிந்துகொள்ள வைத்துவிடுகிறார் இயக்குனர். ஒரு பாத்திரத்தை கண்ணில் காண்பிக்காமலே , அவர் இறந்ததை ரசிகனை வருத்தப்படவைத்ததற்கு விக்ரமின் நடிப்பும், இயக்குனரும் எடிட்டருமாக காட்சிகளை அமைத்த விதம் எனலாம். கல்யாணம் செய்துகொள்ளும் மணப்பெண்ணிற்கு குழந்தை உள்ளது, அதற்காகவெல்லாம் ஒரு flash back காட்சி வைத்து அலுக்க வைக்காமல், அதை அப்படியே விட்டுவிட்டு முற்போக்கான காதலாக / கல்யாணமாக வைத்ததற்கு இயக்குனருக்குப் பாராட்டுக்கள். ஆளாளுக்கு துவம்சம் செய்து  அடித்துச் செத்துக்கொண்டிருக்கும்பொழுது,  வெறுமனே இருக்காமல் தன் குடும்பத்திற்காக தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் பெண்கள் – ரவியின் பேத்தியின் கழுத்தில் கத்திவைக்கும் காளியின் மனைவி கலை, ரவியை காப்பாற்ற, காளியின் இடுப்பை பாட்டிலால் குத்தும் ரவியின் மகள் ஶ்ரீஜா – ஆறுதல் தருகிறார்கள். 

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் வந்துள்ள இப்படத்தின் பாடலான, கல்லூரும் பாட்டை நான் ஒரு மாத காலமாக தினமும் கேட்கிறேன். தன் மனைவிக்கு டைலர் ஜாக்கெட் அளவு எடுக்கும்பொழுது possessive ஆகும் காளி,  நடந்து வந்து டைலரிடமிருந்து டேப்பை வாங்கி சுருட்டி வைத்துவிட்டு, பேனா எடுத்து அளவை அவராகவே எழுதிவிட்டுச் செல்வதை ஒவ்வொருமுறையும் ரசித்துப் பார்ப்பேன். இன்னும் சில நாட்கள் நான் அன்றாடும் கேட்கும் பாடல்களில் அது இருக்கும். 

தொய்வே இல்லாமல், படத்தை விறுவிறுப்பாக இட்டுச்செல்வதற்கு முக்கிய காரணம், பிரசன்னா ஜி.கே-யின் படத்தொகுப்பு. குறைந்தது இருபது படங்களில் வேலை செய்துள்ள தேனி ஈஸ்வரன் கையில் கேமரா, குறிப்பாக இரவு நேர காட்சிகளில் இரவெனவே உணரவைத்துள்ளது. படத்தின் ஆரம்பத்தில் இரவு நேர விருந்து, விக்ரமும் கலையும் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சிகள், உதராணமாக சில. 

அருண்குமாரும் அவர் குழுவும் உழைத்த உழைப்பில் வந்துள்ள வீர தீர சூரன் படம்  வெள்ளிக்கிழமை இரவை சினிமாவிற்கு என்று ஒதுக்கும் என்னைப் போன்றவர்களுக்கு சரியான படம்தான். உலகத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் உள்ள என் பொன்னான நேரத்தை வீணடித்தார்கள் என்று சிறிதும் இரக்கமில்லாமல் சொல்லவெல்லாம் முடியாது. 

Leave a comment