சசிகுமார் – அன்றாடத்தின் நாயகன்

Published by

on

இரண்டு வருடங்களுக்கு முன்னர் , எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள், டாலஸ் தமிழ் சங்கவிழாவில் நடிகர் சசிகுமார் அவர்களை எனக்கும் ராதாவிற்கும் அறிமுகப்படுத்தினார். சசிகுமார் அவர்கள் ஜேம்ஸ் வசந்த், சரியான தமிழ் வார்த்தைகளை யூகிக்கும் வினாடி வினா ஒன்றை குழந்தைகளுக்காக நடத்தினார்.  சசிகுமார் அவர்களும் ஒரு பள்ளிச் சிறுவனைப் போல யூகித்து வடமும் இடமுமாக அமர்ந்திருந்த எங்களிடம் பகிர்ந்து  சரியாக இருந்தால் புன்முறுவல் புரிந்தார். பவா, அவரது கதையாடலின்போது, தங்கள் குழந்தைகளை பொறியியல், அறிவியல் வல்லுனர்கள் என வளர்க்கும் சூழலில், தங்கள் பிள்ளையை எழுத்தாளனாக ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் என என்னையும் ராதாவையும் அறிமுகப்படுத்தினார். சசிகுமார் , சஹாவின் புகைப்படத்தை ராதா காண்பிக்க , ஒரு நெடு நாள் நண்பனைப் போல ஆவலாகப் பார்த்தார். எனக்குப் பிடித்த முதல் ஐந்து படங்கள் என்று பட்டியிலிட்டாலும், அதில் சுப்ரண்யபுரம் இருக்கும். ஒரு பிரமிப்புடன்தான், இயக்குனர் சசிகுமார் என அருகில் அமர்ந்தேன். நிகழ்வின் இறுதியில் நண்பனென உணர்ந்தேன். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், நட்புடன் பேசிக்கொண்டிருந்த அவரிடம் இருக்கும் மானுட அன்பை உணர்ந்தேன்.  இப்பொழுது ஆஸ்டினில் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டிருக்கும், டூரிஸ்ட் ஃபேமிலி வெளியானதும் இரண்டாம் நாளே நாங்கள் குடும்பமாக சென்று பார்த்தோம். படத்தில் பார்த்த குடும்பஸ்தன் தர்மதாஸுக்கும்,  நாங்கள் நேரில் சந்தித்த சசிகுமாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நாடோடிகள் படத்தில் கருணாகரன் நடராஜா-வாக வரும் சசிகுமார் , தனது உயிரைப் பணயம் வைத்து  நண்பனின் நண்பனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். உற்ற நண்பன் தனது சொந்த தங்கையையே காதலித்தாலும் கொந்தளித்து சண்டை போடாமல், பெற்றோர்களையும் அவர்களது காதலுக்கு சம்மதிக்க வைக்கிறார். கல்யாணம் செய்யத் தவறவிட்ட முறைப்பையன் கிண்டலை முகத்திற்குப் முன் கோபமும், பின் அகத்தில் அந்தக் கிண்டலை ரசிப்பவருமாக வரும் அந்தப் பெண்ணின் சிரிப்பு சுந்தரபாண்டியன் சசிகுமார் அனைவருக்கும் பிடித்தமானவன் எனப் பறைசாற்றுவது.   வெற்றிவேல் சசிகுமார், நண்பனுக்காக மணப்பெண்ணை கடத்தப்போய் ஆள் மாற்றி கடத்திவிட அவரது நிலை கருதி தானே மணம் செய்துகொள்கிறார். மனைவியே ஆனாலும், அவர் தயாராகாமல், ஜெண்டில்மேனாக விலகி நின்று உணர்வுகளை மதிப்பவராக காத்திருக்கிறார். இந்த நல்ல பையன் , நண்பர்கள் விரும்பும் நாயகன், அயோத்தி படத்தில்,  ராமேஷ்வரத்திற்கு  யாத்திரை வந்த வட இந்திய குடும்பத்தில், குடும்பத்தலைவி விபத்தில் இறந்துவிட,  அவர்களது விருப்பபடி பிரேதத்தை விமானத்தில் அனுப்ப உதவி செய்யும் பாத்திரமாக. படம் முழுக்க போட்ட பச்சை சட்டையை மாற்றாத அந்தப் பாத்திரத்தின் பெயர் சொன்னால், படத்தின் இறுதிக் காட்சியில், அந்த நொடிகளில் சிலர் விடும் கண்ணீரையும், உணர்வுப் பெருக்கத்தையும் திருடியவன் ஆகிவிடுவேன். 

இவ்வளவு நல்லவர் குடும்பஸ்தனாக எப்படியிருப்பார்? அந்தப் பாத்திரம்தான் டூரிஸ்ட் ஃபேமிலியில் வரும் தர்மதாஸ். குடும்பத்திற்காக எதையும் செய்யும் தகப்பனாக, பிரியமான கணவனாக , தந்தையாக, உயிர் ஊசலாட கேட்பாரற்று சாலையில் கிடப்பவரை காப்பாற்றும், மன நோயால் பாதிக்கப்பட்ட பக்கத்துவீட்டுக்காரரை சாப்பிட்டாயா என்று கேட்கும், மனைவி இழந்து யாருமற்றவர் என நிலைகுலைந்து இருப்பவரிடம் நாங்கள் இருக்கிறோம் என இறுதி சடங்கு செய்யும் சக மானுடனாக பரிணமத்திருக்கும் நாயகன் தர்மதாஸ்.

தங்களின் நாயகன் தங்களோடு ஒருவனாக நடமாடுபவன். தங்களின் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் பங்கு பெறுபவன். அன்றாட சிக்கலில் துணை நின்று தோள்கொடுப்பவன். அந்த நல்ல மானுடனை தொடர்ந்து வரும் படங்களில் பார்க்கும் மக்கள் எங்களின் கனவு நாயகன் இவனே என கைதட்டி ரசிக்கிறார்கள். அதை நான் ஆஸ்டின் திரையரங்கில் பார்த்தேன்.  

Leave a comment