(மீள் பதிவு)
மாரி செல்வராஜை , தொலைபேசியில் கூப்பிட்டு , “நான் நேற்று , பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன். எப்படி தம்பி, இப்படி ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்தீர்கள்? எல்லா பாத்திரங்களையும் எப்படி உங்களால் பார்வையாளனின் மனதிற்குள் திணிக்கமுடிந்தது?” என்று கேட்கலாம் என இருந்தேன். எனக்கு அவரை நேரடியாகத் தெரியாது என்பதால், எனக்குத் தெரிந்து திரைத்துறையில் வேலை செய்யும் நண்பன் லிவிக்கு போன் செய்து , “தம்பி, நீ ஒருபடம் எடுத்தாலும் இப்படி எடுக்கனும்” என்று என் ஆசையை அவனுக்குள் விதைத்து, மாரியிடம் பகிரவேண்டிய பாராட்டையெல்லாம் அவனிடம் பகிர்ந்தேன். நான் ரசித்த காட்சிகளை அவனிடம் அட்டவணையிட்டேன்.
தன் தகப்பன் செய்யும் வேலையை , வெளியே சொல்லத் தயக்கப்பட்டு , ‘வண்டி மாடு’ வைத்திருக்கிறார் என்று கல்லூரியின் முதல்வரிடம் அறிமுகமாகும் பரியேறும் பெருமாள் (கதிர்), பாத்திரத்திற்கு தேவையான தயக்கத்துடன் இருந்தாலும், பார்வையாளனுக்குள் தயக்கம் இல்லாமல் நுழைந்துவிடுகிறார்.
A பார் ஆனந்த், அம்பிகா என்று A -யில் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு அட்டவணை படிக்கும் கதிரும், சின்ன C-யா ? பெரிய C-யா ? என்று மறுவிளக்கம் கேட்கும் ஆனந்தும் (யோகி பாபு) மூன்றாம் வகுப்பு படிக்கும் தன் அக்காள் பெண்ணிடம் எழுதி வாங்கி வந்தேன் என்று அவர்களை கலாய்க்கும் ஜோவும் கூட்டணி சேர்ந்து நம்மை சிரிக்கவும் வைக்கிறார்கள்.
தேவதைகளின் தயவில் லா காலேஜ் வரை வந்துவிட்ட கதிருக்கு இங்கிலிஷ் வராது. ஆனால் தன்மானம் உள்ளவன். “மற்றவர்கள் நோட்டையும் பாருங்கள். எத்தனை கோழிகள் இருக்கின்றன எனத் தெரியும்” என்று பேராசிரியரை தைரியமாக கேள்வி கேட்பவன். இடையில் இருக்கும் பெஞ்சாக இருக்கட்டும் , குட்டை சுவராக இருக்கட்டும் ஜோ கூப்பிட்டால் ஸ்டைலாக தாண்டி தாண்டி செல்வான். படத்தில் அவன் அப்படி செல்வது அங்கங்கே அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தன் காதலை முதல் முதலில் , யார் எப்படி தெரிவிப்பார்கள்? அதை எந்தப் படத்தில் சிறப்பாக செய்துள்ளார்கள்? போன்ற கேள்விகளுக்கு, ஜோ (ஆனந்தி) கண்ணைமூடிக்கொண்டு, பரியேறும் பெருமாளிடம் (கதிர்) சொல்லும் இந்தப் படத்தின் காட்சியை உதாரணமாகச் சொல்லுவேன். அந்த அழகிய காதலர்களின் உரையாடலை ரசித்துக்கொண்டிருக்கும்பொழுதே, காட்சியில் சிறிதே பின்னணியில் தெரிபவர், நெஞ்சில் திகில் ஊட்டுகிறார்.
கல்லூரியில் நடந்தேறும் அவமானங்கள் தலைக்குமேல் போய்விட, முதிர்ச்சியும் தைரியமும் பெரும் கதிர் , தனது தந்தையை கல்லூரிக்கு அழைத்து வருகிறான். மனிதம் இல்லாத பதர்கள் சிலர், அந்த அப்பாவியை சீண்டும் காட்சி, யூடியூபில் ஒரு ரசிகர் சொன்னதுபோல, இன்னும் நூறு வருடங்கள் பேசப்படும். (ஜெயமோகனின் , வணங்கான், நூறு நாற்காலிகள் கதைகள் அநியாயத்திற்கு பின்னணியில் வந்துகொண்டே இருந்தன).
பாரதியார், “சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!” என்று பாடி இருநூறு வருடங்கள் ஆகிறது. மாரி செல்வராஜ் , அவரது பங்கிற்கு, பஸ்ஸில் புளியங்குளத்து ஊர்காரனின் அருகில் அமர்வதற்கு யோசிக்கும் பெரியவரும், பையனின் கையை பிடுங்கிவிட்டு விபத்து என்று செயற்கை மரணத்தை ஒருவர் உருவாக்க , பஸ்ஸின் பின்னால் ஒரு பெண் கேவி கேவி அழவுமென சாதிக்கொடுமை இன்னும் அமுலில் இருப்பதை சந்தோஷ் நாராயணின் இசையின் உதவியோடு , படம் முழுக்க வலிக்க வலிக்க நிறைய சிறுகதைகள் சொல்லியுள்ளார்.

ஜாதியை தாண்டிய காதலை தொண்டைக்குழிக்குள் விழுங்கிக்கொள்ளும் அம்பேத்கார் ஆகப்போகும் கதிர் ஒரு புறம் இருக்கட்டும். அவளுக்கு கிடைக்கவேண்டிய காதலை ஜாதி தின்று விட்டது என்று அறியாத அப்பாவி ஜோ, ஜாதியின் பெயரில் உயிரை இழந்த ஜோடிகள், கூந்தலை இழந்துவிட்ட பெண் என மாரி செல்வராஜ் காட்டும் நின்று ஆடும் நிஜங்கள் முகத்தில் அழுகிய முட்டையை அடித்து ஊற்றுகிறது. என்ன படித்தாலும், எங்கு சென்றாலும் ஜாதிக்கொரு சங்கமும், ஜாதியில் மணம் செய்யும் வழக்கமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மனதில் நெருடல். வலி. அதுவே என்னை மாரியைக் கூப்பிட்டு பாராட்டி பேசி, மகிழ , அழ வேண்டும்போல் இருந்தது. பேசி முடிக்க முடிக்க லிவி கேட்டான், “நீங்களும் நானும் தூரத்தில் இருந்தாலும். நம்மை இணைப்பது வாழ்வின் வலியா?”. நான் பதில் சொல்லவில்லை. மௌனத்தின் மொழி அவனுக்குத் தெரியும்.
(முதல் பதிவு – 11/10/2018)

Leave a comment