என்னதான் சினிமா ஆர்வலனாக இருந்தாலும், ஒரு சினிமாவை நான் பார்ப்பதற்குப் பொழுதுபோக்கைத் தாண்டி காரண காரியங்கள் வேண்டியதாக உள்ளது. பொழுதைப் போக்க என்னிடம் ஆயிரத்து முன்னூற்றுப் பதினான்கு வழிகள் உள்ளன. வாசித்து முடிக்கவேண்டிய புத்தகங்கள் வேறு வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அதென்ன ஆயிரத்து முன்னூற்றுப் பதினான்கு வழிகள் என்று கணக்குக் கேட்டால், அந்த எண்ணை எவ்வளவு பிரியமாகச் சொல்கிறேன் என்று கொஞ்சம் யோசித்தால் போதுமானது.
செப்டம்பர் 19, 2025-ல் வெளிவந்த சக்தித் திருமகன் படம் பார்க்க, கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான நண்பர் ரவிசுப்பிரமணியன் அந்தப் படத்தில் ஒரு பாத்திரமேற்று நடித்திருக்கிறார் என்பதுதான் முதன்மையான காரணம். அவரது நட்புக்காக மட்டும் இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்க்கமுடியுமா ? நம்பிக்கை அளிக்கும்படியாக மேலும் இரண்டு காரணங்களை தேடி அடைந்தேன். நான் எப்பொழுதுமே இயக்குனரின் ரசிகன். தனது முதல் படமான ‘அருவி’ படத்தின் மூலம் முத்திரையைப் பதித்த அருண் பிரபு-தான் இந்தப் படத்தின் இயக்குனர். விஜய் ஆண்டனி, படத்தின் கதா நாயகன். ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களைப் போல அவருக்கான பாத்திரம் அமைந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று உறுதி செய்துகொண்டேன்.

ஜெயகாந்தன் வாழ்க்கையை சொல்லும் எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன், திருலோகம் என்றொரு கவி ஆளுமை போன்ற ஆவணப்படங்களை இயக்கிய ரவிசுப்பிரமணியன், அடுத்தவர்களை நடிக்க வைப்பவர். ஆனால், இயக்குனர்கள் நடிக்கும்பொழுது நமக்குக் கிடைக்கும் ஏமாற்றத்தை நான் அட்டவணையிடும் முன், பதிவை வாசிப்பவர்கள் மனதில் வந்து செல்லும் இயக்குனர்களின் பெயர்கள் சரியாகத்தான் இருக்கும். ரவி ஒரு காரியத்தை அவரே செய்தாலும் திருந்தச் செய்வார். அடுத்தவர் சொல்வதையும் திருத்தமாகச் செய்துதான் கொடுப்பார். அந்த நம்பிக்கையும் இருந்தது. கதாநாயகனின் முக்கியப் பணியை எடுத்துக்காட்ட, நாற்பது இலட்ச ரூபாய் இழப்பைச் சந்தித்த படத்தின் பாத்திரம் மிக முக்கியம் . உண்மையிலேயே நாற்பது இலட்ச ரூபாய் இழந்த முகத்தையும் கண்ணீரையும் கொண்டு வந்து, படத்தை சூடுபிடிக்க வைத்துவிட்டார் ரவி. ஏமாற்றம் இல்லை.
பொலிடிக்கல் திரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படம், பழிவாங்கும் வழமையான கதையென்றாலும், கிட்டு (விஜய் ஆண்டனி) செய்யும் ப்ரோக்கர் தொழிலை எப்படி தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் என்பதில் ஒரு புதுமை. எதிரியை தரம் இறக்க வெட்டியும் கீறியும் வரும் ரத்தம் மட்டுமல்ல, உட்கார்ந்த இடத்தில் இருந்து நடத்தும் சைபர் தாக்குதலே போதுமானது. அதையும் கனகச்சிதமாக உபயோகித்திருந்தார்கள். கத்தியைவிட மூளைதான் முக்கியம் எனும் பாத்திரத்திற்கு விஜய் ஆண்டனியின் முகமும், உடல் மொழியும் மிகவும் பொறுந்திப் போனது. வேகவேகமாக உதவி செய்யும் கிட்டுவுக்கு, காதலும் வருகிறது. காதலியாக மனைவியாக நடிக்கும் ரியா ஜித்துவுக்கு அதிக வேலையில்லையெனினும், கிட்டுவை வில்லன்கள் துவம்சம் செய்யும்பொழுது, ரசிகர்களுக்கு வரவேண்டிய இரக்கத்திற்குத் தேவையான முகபாவங்களை கொண்டுவரமுடிகிறது.

ஒவ்வொரு பாத்திரத்தையும் அழுத்தமாக பதியவைத்து கதையை நகர்த்துவது ஒரு முறை. தேவையானதை மட்டும் காட்சிப்படுத்தி, அடுத்து அடுத்து என கதையை நகரவைத்து, ரசிகனை சீட்டு நுனியில் உட்காரவைப்பது இன்னொரு ஸ்டைல். இந்த வகைமையில், அருண் பிரபு, தனது எடிட்டர் (ரேய்மண்ட் டெர்ரிக்) உதவியுடன் சரியாக தொகுத்து வழங்கியுள்ளார்.
விஜய் ஆண்டனி தயாரித்த இந்தப் படத்தின் இசையும் அவரே. பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்க்கிறது. “மாறுதோ தடம் மாறுதோ” பாடல் சிறிது காலமேனும் ரசிகர்களின் Play list-ல் இருக்கும்.
பெரும் பெரும் பேனர்களில், அதிபெரும் பொருட்செலவில், பெரும் நடிகர்கள் நடித்த படங்கள் ஏமாற்றத்தைக் கொடுக்கும் காலத்தில், நட்புக்காக சென்று பார்த்த படம், பரவாயில்லையே எனத் திருப்தியுடன் பார்க்க வைத்துவிட்டது. அருகில் இருக்கும் தியேட்டரில் ஓடினால் நீங்களும் பார்க்கலாம் !

Leave a comment