காற்றின் நிழல், ஒரு வாசகனின் பக்கம். ரசிகனின் பக்கம். ஆன்றோரும் , சான்றோரும் எழுதிய புத்தங்களை வாசிக்கும் வாசகனின் பக்கம். சக வாசகர்களிடம், தனது வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்பவனின் பக்கம். ஓடும் நதிகளின் ஓசையில், கடலின் அலையில், மலையின் தலையில் உட்காரும் வெண்பனி தொப்பியில் மனதை லயித்து இதற்குத்தான் பிறந்தேன் போலும் என்று இயற்கையை ரசிக்கும் ரசிகனின் பக்கம். சாப்பிடுவதும், உறங்குவதும் வாழ்வதற்கு அவசியம் என்றால், நல்ல படம் பார்ப்பதும், நல்ல இசை கேட்பதும், நான்கு இடத்திற்கு சென்று பார்ப்பதும், நால்வருடன் சேர்ந்து பேசுவதும் நலமுடன் வாழ்வதற்கு அத்யாவசியம் என்று கருதுபவனின் பக்கம். சுஜாதா பாணியில் சொன்னால், “ஆரக்கிள் தெரியும் என அமெரிக்காவிற்கு ஜல்லி தட்ட வந்தவன் நான்”. “தக்கன பிழைத்துவாழ்தல்” (survival of the fittest ) என்ற தத்துவத்தில் இயங்கும் அமெரிக்க வாழ்க்கையை பிரதிபலிக்கும் செய்திகள் , பதிவுகள் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் வாசிக்காமல் விட்டுவிட்டு, இப்பொழுது விட்டதையெல்லாம் தேடி தேடி வாசித்துக்கொண்டு இருக்கிறேன். அந்த வாரத்தில் அல்லது சமீபத்தில் வாசித்ததில், ஏதேனும் ஒரு வகையில் என்னைத் தொட்டு சென்ற புத்தகங்களை பற்றிய வாசிப்பனுபவம் இருக்கும். பயணத்தில் பார்த்து வியந்த இடங்கள், சந்தித்து அறிந்தகொள்ள வேண்டிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகள், கட்டுரைகள் இருக்கும்.
அரசியலை அறிதலும், ஆராய்ந்து பேசுதலும் அவசியம் என்று நினைத்தாலும், எனக்கு அதில் தேர்ச்சியுடன் எழுதும் ஞானம் இல்லை என்பதால் அரசியல் பற்றி எந்த ஒரு பதிவும் இருப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.
நான் ஒரு தீவிர வாசகன் மற்றும் ஒருங்கமைக்கும் , மேற்பார்வை செய்யும் மேலாளர். வாங்கிய புத்தகங்களையும், அன்பளிப்பாக வந்த புத்தகங்களையும் தேதி வாரியாக கணக்கு வைத்திருப்பவன். படித்த புத்தகத்தையே பிடித்திருந்தால் மீளமீள வாசிக்கும் வாசகனின் கிறுக்கத்தனமும், வாங்கி பத்து வருடமாகிறது இன்னுமா படிக்கவில்லை என்று கேட்கும் மேலாளரின் கறாரும் இணைந்து என் இலக்கியப் பயணத்தை கட்டமைக்கின்றன.
ஆஸ்டின் சௌந்தர்