தமிழ் சினிமா விமர்சனம் – கசக்கும் உண்மை

Published by

on

வாசிப்பனுபவம் எழுதுவதற்கு என, தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்கள் க.நா.சுப்ரமண்யம், அசோகமித்திரன், சி.சு. செல்லப்பா, ஜெயமோகன் எழுதியுள்ள புத்தக மதிப்புரைகளை வாசித்து, எழுதி எழுதி சாதனை படைத்தவர்களின் இலக்கிய விமர்சன உரைகளை கேட்டு என கற்றுக்கொள்ளும் முயற்சிகள் பல செய்து இருக்கிறேன். ஆடிக்காற்றுக்கும், அமாவாசைக்கும் மட்டும் சினிமா விமர்சனம் எழுதுபவன் என்றாலும், வாசிப்பனுபவம் எழுத எடுத்த சிறு சிறு முயற்சிகளேனும் சினிமா ரசிகனாக செய்து இருக்க வேண்டும். சினிமா விமர்சனம் பற்றிய நூல்கள் இருக்கின்றனவா என்று தேடியதுகூட இல்லை. தமிழ் சினிமா பற்றி ஆராய்ச்சி செய்து, நூல்கள் பல எழுதியுள்ள தியடோர் பாஸ்கரன், எனும் ஆய்வாளர், எழுத்தாளர் அவரது ‘பாம்பின் கண்’ எனும் நூலின் முன்னுரையில், “தமிழ் சினிமாவை ஒருவர் புரிந்துகொள்ள விரும்பினால், படங்களைப் பார்ப்பதோ அல்லது அவற்றின் அழகியல் கூறுகளைப் பற்றி எழுதுவதோ மட்டும் போதாது. இதைப் போன்ற புத்தகங்கள் வெளியிடும் நோக்கம் இதுவே” எனக் கூறியுள்ளார். அந்தக் கூற்றில் உள்ள உண்மை சுருக்கென்ற பட ‘பாம்பின் கண்’, ‘சினிமாக் கொட்டகை’ என்ற அவரது இரு நூல்களை உடனடியாக அமேசான் கிண்டிலில் வாங்கி வாசித்து முடித்தேன்.

ஒரு விஷயத்தை விமர்சன ரீதியில் எழுதுவதற்கோ, பொதுவெளியில் உரையாடுவதற்கோ, அதன் வரலாற்றை , தொன்மத்தை அறிவது என்பது அவசியம். இரு நூல்களுமே, மௌனப் படங்கள் வந்த காலம் முதல் ஒலி மெல்ல மெல்ல நுழைந்து பேசும் படங்களான தமிழ் சினிமாவின் வரலாற்றைச் சொல்கின்றன. இந்த நூல்களை வாசிப்பதன் மூலம், தமிழ் சினிமாவில் பாடல்கள் ஏன் முக்கிய பங்கு வகிக்கின்றன என்ற புரிதல் வருகிறது. நீண்ட வசனங்கள் மக்கள் மத்தியில் எப்படி முக்கியத்துவம் அடைந்து , பிறகு எப்படித் தொற்றிக்கொண்டன என்று தெரிய வருகிறது. தமிழ்ப் பட வளர்ச்சிக்கும், ஆங்கிலப் பட வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டின் காரணங்கள் புரிகின்றன. தமிழ் சினிமாவும், அரசியலும் இரண்டறக் கலந்த வரலாற்றுப் பின்னனியை அறிந்துகொள்ள முடிகிறது.

மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக்கதையை எடுத்து வெளியிடப்பட்ட , ‘கீசகவதம்’-தான், 1916-இல் தமிழில் வந்த முதல் மௌனப்படம். கதாப்பாத்திரங்கள் தமிழில் பேசி நடித்திருந்தாலும், ஒலித்தடங்கள் அப்பொழுது இல்லை.அவர்கள் பேச்சு திரையில் எழுத்து உருவில் விவரண அட்டைகள் (title cards) மூலம் காட்டப்பட்டன. நடிகர்களுக்கு ரசிகர் குழுக்கள் இயங்குவது மௌனப்படக் காலத்திலேயே தமிழ் நாட்டில் துவங்கிவிட்டது என்கிறார், தியடோர் பாஸ்கரன். அன்று இருந்த நம்பிக்கைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத காலங்கள் என்பதால், ஆண்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர். 1935-ல் வெளிவந்த ‘மேனகா’, என்ற திரைப்படத்தில், பெருந்தேவி என்ற விதவைப் பெண் வேடத்தில் ஒரு ஆணே நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட எழுபத்தி மூன்று மௌனப் படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ‘விஷ்ணு லீலா’ எனும் படம்தான் சென்னையில் தயாரிக்கப்பட்ட கடைசி மௌனப்படம்.

இங்கிலாந்து , பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில், மௌனப்படங்களிலிருந்து நேரடியாக பேசும் படங்களுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்து உள்ளது. சலனப்படங்கள் 16 ஆண்டுகள் கோலோச்சியிருந்தாலும், தமிழ் சினிமாவோ கம்பெனி நாடகங்களிலிருந்துதான், பாட்டு , நடனம், இசையமைப்பு என அனைத்தையும் ஸ்வீகரித்துக்கொண்டன. தமிழின் முதல் படமான காளிதாஸில் (1931), ஐம்பது பாடல்கள், கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையைக் கொண்டிருந்தன. பாடல்களே ஆதிக்கம் செலுத்திய முப்பதுகளில் வெளிவந்த படங்களுக்கு மாறாக, 1937-ல் வெளிவந்த அம்பிகாபதியில், வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. உரையாடாலாசிரியர் இளங்கோவன்தான் இந்தப் பாணியை முதலில் ஆரம்பித்து வைத்தார் என்பது ஆய்வாளரின் கணிப்பு. சி.என். அண்ணாதுரையின் புகழ் பெற்ற மேடை நாடகத்தின் திரை வடிவமான, வேலைக்காரி போன்ற படங்களிலிருந்துதான், நீண்ட பாத்திரப் பேச்சும், கவர்ச்சிகரமான வசனங்களும் திரைப்படங்களில் நுழைய ஆரம்பித்தன என்கிறார் தியடோர், மந்திரகுமாரி (1950) படத்தில் வரும், பின்னால் முதல்வரான மு.கருணாநிதியின் அடுக்குமொழி உரையாடல்தான், படத்தின் வெற்றிக்கு காரணம் என்கிறது ‘பாம்பின் கண்’.

படத்தின் காட்சியமைப்பும், கேமரா கோணங்களும் எப்படி பரிமாண வளர்ச்சி அடைந்தன என இரு நூல்களும் தக்க உதாரணங்களுடன் விளக்கங்கள் தருகின்றன. நாடகங்கள் மூலம் புகழடைந்த கதைகளை படமாக எடுத்ததால், ஒரு நாடகத்தை நடிக்க வைத்து, அதை அப்படியே படம் எடுக்கும் முறையைப் பின்பற்றியுள்ளார்கள். வேலைக்காரி படத்தைப் பற்றிய விமர்சனத்தில், காதுகளால், மட்டுமே கேட்டு ரசிக்கும்படியாகவும், கண்ணால் பார்த்து ரசிப்பதற்கு குறைந்த வாய்ப்பு இருந்த்தாகவும் குறை சாற்றுகிறார் நூலின் ஆசிரியர். கதா பாத்திரங்கள் கேமராவை நோக்கித் திரும்பினரே தவிர, கேமரா, நடிகர்களை நோக்கித் திரும்பவில்லை என நகைச்சுவையுடன் காத்திரமான கருத்தைச் சொல்கிறார். காமிராக்கோணங்கள் கூட ஒரு பாத்திரம் சினிமாப்பார்வையாளர்களை நோக்கி ஒரு பிரசங்கம் பண்ணுவது போல அமைக்கப்பட்டிருந்தன என பராசக்தி படத்தின் காட்சியை எடுத்துக்காட்டாக, சினிமாக் கொட்டகை நூலில் குறிப்பிட்டுள்ளார். காதல் காட்சிகள், டூயட் பாடல்கள், சண்டைக் காட்சிகள் எனத் திரைப்படங்களின் வழக்கங்களை புறந்தள்ளி வந்த படம் என ‘முதல் தேதி’ (1955), படத்தைப் பாராட்டுகிறார். கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரலாற்றுச் சம்பவங்களை துல்லியமாக படமாக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினாலும், படத்தின் பிற்பகுதியில் இருந்த சிறைக் காட்சிகளும், சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கும் காட்சிகளும் யதார்த்தமானவையாக இருந்தன என்கிறார். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை படமாக்கியதில், படத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒளிப்பதிவு அமையவில்லை எனவும், காருக்குள் கங்கா கற்பழிக்கப்படும்பொழுது, திருமணம் போன்ற மங்கலமான நிகழ்ச்சிகளில் ஒலிக்கப்படும் நாதஸ்வர ஓசை பின்னனியில் எழுப்பப்பட்டதை சுட்டிக்காட்டி, நாவலின் வீரியமும், நேர்மையும் சில காட்சிகளில் நீர்த்துப் போயின எனவும் விமர்சனம் வைக்கிறார். பாம்பின் கண் நூலில், ‘அவள் அப்படித்தான்’ படத்தின். காட்சிகளில் கொடுக்கப்பட்டிருந்த ஒளியூட்டம், மஞ்சுவின் தனிமையையும் அவளது மனக்குமறல்களையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது எனவும், ஓர் ஆவணப்படத்துக்காக அருண், மாணவர்களையும் பணியாளர்களையும் நேர்காணல் செய்யும் காட்சிகள் யதார்த்தமாக இருந்தன எனவும் நம்பகத்தனமான படங்களுக்குள்ள இலட்சணங்களை விளக்கிச் செல்கிறார்.

தனது சினிமாக் கொட்டகை நூலில், “ஒரு இயக்குனர் என்ன கதை சொல்கிறார் என்று சொல்லாதே கதையை எப்படி சொல்கிறார்” என்று விமர்சனம் இருக்கவேண்டும் என்று முறையிடுகிறார். ‘பாம்பின் கண்’ நூலில், “கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட ‘கோவலன்’ (1933) திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தவர் சில காட்சிகளில் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். ‘சீதா வனவாசம்’ (1934) படத்தில் அஞ்சல் தலை ஒட்டியிருக்கும் உறையைக் காட்டில் இருக்கும் ராமர் பிரிப்பார்” என்று காலத்தைப் பற்றிய சரியான பதிவு இல்லை எனச் சுட்டிக்காட்டுகிறார். ரசிகர்களின் பெரும் பாராட்டை பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனில் (1959) ஆண் பாத்திரங்களுக்குச் சற்றும் பொருத்தமற்ற அலங்காரம் செய்வித்து, டாம்பிகமான பட்டும் பீதாம்பரமும் அணிவித்து, ஆடை அலங்காரத்திற்கு சிறிதும் மதிப்பு தரவில்லை என்கிறார். சினிமாக் கொட்டகை நூலில், கமலஹாசன் இயக்கி 2000-ல் வெளிவந்த ‘ஹே ராம்’, ஒரு நல்ல வரலாற்றுப் படம் என்கிறார் தியடோர் பாஸ்கரன். “காந்திஜி, சுராவர்தி, அபுல் கலாம் ஆசாத், கோட்சே போன்றோர் படத்தில் கதை மாந்தர்களாகத் தோன்றுகின்றனர். ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின்னரே படம் தயாரிக்கப்பட்டு இருப்பது ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகின்றது. உடை அணிகலன், ஆபரணங்கள் , சிகையலங்காரம் இவற்றைக் கச்சிதமாகக் காலத்திற்கேற்பச் சரிதா, அமைத்திருந்தார்” என்று பாராட்டுகிறார். 2008-ல் வெளியான தசாவதாரத்தின் முதல் பகுதியில் சோழ மன்னன் தோன்றும் காட்சி வரலாற்றுக் காலத்தை ஒட்டி அருமையாக உருவாக்கப்பட்டிருந்ததாகவும், 2010-ல் மதராஸ்பட்டணம் படம் நூறாண்டுகளுக்கும் முந்தைய சென்னையை அழகாகப் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் பாராட்டியிருப்பதிலிருந்து கட்டபொம்மன் படம் எடுத்த காலத்திலிருந்து நம் தமிழ் சினிமா கலை வடிவமைப்பில் வெகுதூரம் வந்துவிட்டிருப்பது தெரிகிறது.

பொதுப்புத்தியின் புரிதலில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள்தான் சினிமாத்துறையில் அதிக சம்மந்தம் கொண்டிருந்தார்கள் என்று நினைத்திருந்தேன், 1930-களின் இறுதியில், வெளிவந்த மாத்ரு பூமி படத்தின் முதல் காட்சியை, எஸ். சத்தியமூர்த்தி, தொடங்கிவைத்து, அந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டுப்பற்று உணர்வைப் பாராட்டிப் பேசியுள்ளார். மனோகராவில், நாயகனின் தந்தையான அரசன் வேடத்தில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நடித்தார் என்றும், 1958-ல் கே.பி. சுந்தராம்பாள், காங்கிரஸ் ஆதரவில் நாட்டிலியே முதன்முதலில் சட்டசபைக்குள் நுழைந்த திரைப்பட நடிகர் என்றும் தியோடர் பாஸ்கரன் அவர்களின் நூல்கள் மூலம் காங்கிரஸே முன்னோடி என்ற அறிதல் வருகிறது.

சிட்னியிலிருந்து வெளிவந்த Tamil Cinema: The cultural Politics of India’s other Film Industry என்ற நூலையும் லண்டனிலிருந்து வெளிவந்துள்ள தமிழ் சினிமா பற்றிய கட்டுரைகள் அடங்கிய the cinema of India என்ற நூலையும் சினிமா அழகியலைப் புரிந்துகொள்ள தியடோர் பாஸ்கரன், தமிழ் சினிமா விமர்சகனுக்குப் பரிந்துரை செய்கிறார். சினிமா பற்றி கற்று அறிந்து, படமெடுப்பதிலும் பரிச்சயமுள்ளவர்கள் என்று மதுர் பந்தர்க்கர் என்பவரையும் மற்றும் சொர்ணவேல் என்பவரையும் அவர் அறிமுகம் செய்துள்ளார். மதுர் பந்தர்க்கர், இந்திப்படங்களைப் பற்றி எழுதுகிறார். சொர்ணவேல், 1996-ல் ஐ.என்.ஏ தாமிரபரணி எனும் ஆவணப்படத்தை எடுத்து சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள ‘சினிமா: சட்டகமும் சாளரமும்’ புத்தகத்தைப் பற்றிய நீண்ட விமர்சனம் ஒன்று சினிமாக் கொட்டகை நூலில் உள்ளது. அதில் எடிட்டிங் பற்றி இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது – “சரிவரப் படங்கள் கோர்க்கப்படாவிட்டால் கதை புரியாது. அது மட்டுமல்ல கதையின் தாக்கமும் நீர்த்துப் போய்விடும். இது கற்பனை வளம் மிக்கவர் செய்ய வேண்டிய வேலை”.

தமிழ் சினிமாவின் முதல் பேசும்படமான, ‘காளிதாஸ்’, சென்னையில் வெளியிடப்பட்ட நாள், 31.10.1931.  கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஆகியும், தமிழ் சினிமா விமர்சனம் வளரவில்லை என்ற உண்மை இந்த நூல்களை வாசிப்பதன் மூலம் ஒரு புரிதல் வருகிறது. உண்மை கசக்கிறது.