2024-ல் மொத்தம் 101 புத்தகங்கள் எங்கள் வீட்டு நூலகத்தை வந்தடைந்துள்ளன. 2023-ல் அவற்றுக்கென நாங்கள் கட்டியமைத்த புத்தக அல்மேராவைக் கண்வைத்திருக்குமென நினைக்கிறோம். டஜன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. 2023-ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது வாங்கிய யுவன் சந்திரசேகரை மார்ச் 2024-ல் ராதாவும் நானும் பார்க்கச் சென்றோம். “அன்புடன் யுவன்” என்று அவர் கையெழுத்திட்ட இரு புத்தகங்கள் (சரி செய்யமுடியாத சிறு தவறுகள், வேதாளம் சொன்ன கதை). அதே மார்ச்சில், நண்பர் ஜா. ராஜகோபாலன் அவர்களின் அழைப்பின் பேரில், நண்பர்களுடன் சிவராத்திரி இரவு முழுக்க சென்னை அருகிலிருந்த சிவன் கோவில்களை பார்வையிட்டோம். விடிந்ததும் அவர் வீட்டுக்குச் சென்று காப்பி அருந்திவிட்டு பை பை சொல்கையில், அவர் எழுதிய “ஆட்டத்தின் ஐந்து விதிகள்” நூலை அன்பளிப்பாக கொடுத்தார். 2023-ல் தமிழ் இலக்கியத்தோட்ட இயல் விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணனை, 2024 செப்டம்பரில் , பெங்களூரில் உள்ள அவர் இல்லத்தில் பார்க்கச் சென்றோம். அவரும் அன்புடன், பிரியங்களுடன், நட்புடன் எனக் கையெழுத்திட்டு மூன்று புத்தகங்கள் (கனவு மலர்ந்தது, ஆனந்த நிலையம், நயனக்கொள்ளை) பரிசளித்தார். பிப்ரவரியில் எங்களைப் பார்ப்பதற்கென்றே பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் வரை வந்த மகளும் தோழியுமான ஸ்வேதா , ஷங்கர்ராமசுப்பிரமணியன் கவிதைகள் தொகுப்பு ஒன்றை நல்கி மகிழ்வித்தார். சஹா , தான் வாசித்ததை பெற்றோர்களும் வாசிக்கட்டும் என கொடுத்த மூன்று புத்தகங்கள் டஜனில் அடங்கும். எழுத்தாளர் பெருந்தேவி டிசம்பரில் மூன்று வாரங்கள் ஆஸ்டின் வந்து நண்பர்கலள் கிரி பூரணி இல்லத்திலும் எங்கள் இல்லத்திலும் தங்கி இருந்தார். அந்த நாட்களை , வாழ்க்கையில் சேர்த்து வைத்திருந்த இலக்கிய ஆர்வக்கோளாரான கேள்விகளையெல்லாம் சிறிதும் கூச்சப்படாமல் கேட்டோம். ஶ்ரீவள்ளியின், “பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை” கவிதை நூலிலிருந்து கவிதைகளை வாசித்து கவிதையாகி வரும் இடங்களை தருணங்களை அவரவர் பார்வையில் விவாதித்தோம். விவாதத்தின் முடிவில், இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான் என்று கொடுக்கவும் செய்தார்.
நண்பர்களில் ஒருவர் எழுத்தாளர் என உலகம் அறியும் நிகழ்வும் இந்த வருடம் நடந்தது. நண்பர் ராலே ராஜன் வீட்டிற்கு நாங்கள் செப்டம்பரில் சென்றபொழுது, புது எழுத்தாளர் ஜெகதீஸ் குமாரும் அவரது மனைவி அனுவும் தம்பதி சகிதமாக வந்து பார்த்து “பொற்குகை ரகசியம்” நூலை எங்கள் அண்ணா என்று ஜெககதீஸ் கையெழுத்துப் போட அன்பளிப்பாக கொடுத்தனர்.

அ. முத்துலிங்கம் அவர்கள் , “வாசகர் தேவை” என்ற கட்டுரையில், “ஜே.கே. ரோலிங்க் எழுதிய புத்தகங்கள் 400 மில்லியன் உலகம் முழுக்க விற்றிருக்கின்றன. எத்தனை பேர் புத்தங்களை வாசித்தார்கள். எத்தனை பேர் பாதிவரை படித்து மூடிவைத்தார்கள். எத்தனை பேர் தொடவே இல்லை போன்ற கணக்கெடுப்புகள் இல்லை. “ என்று குறிப்பிட்டிருப்பார். ராதாவும் நானும் நாங்கள் வாங்கியதை வாசித்ததை 2016-லிருந்து பட்டியிலிட்டுக் குறித்து வைத்திருக்கிறோம். ஒவ்வொரு வருட இறுதியிலும் வாசித்த அட்டவணையை நண்பர்களுக்குத் தெரிவிக்கிறோம். இந்த வருடம் கொஞ்சம் தாமதம். தாமதமானாலும், பொதுவெளியில் எங்கள் வாசிப்புக் கணக்கை அறிவிக்காவிட்டால், அ. முத்துலிங்கம் அவர்களின் மேற்கண்ட வாசகம் தலைக்குடைச்சலாகிவிடும். 101 மந்திரங்கள் சொல்லலாம். 101 புத்தகங்களை வாசிக்கமுடியுமா என்ன? இதற்கு முந்தைய வருடங்களில் வாங்கிய புத்தகங்களும் போட்டிக்கு உள்ளன. என் பங்கிற்கு 49 புத்தகங்களும், ராதா பங்கிற்கு 36 புத்தகங்களும் வாசித்துள்ளோம்.
உடல்நலன் இல்லாமல் இருந்த தந்தையின் இறுதி நாட்களில் உடன் இருக்கும்பொருட்டு ராதாவும் நானும், பிப்ரவரி, மார்ச், மாதங்களில் சில நாட்களும், அவர் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சேர்ந்த ஆகஸ்ட் மாதம் முழுக்கவும் கிராமத்தில் இருந்தோம். உளம் குன்றிய நாட்களிலும் தொட்டதும் விட்டதுமாக அந்த விவசாய வாசனின் வீட்டில் உள்ள நூல்களை வாசித்தோம். சுஜாதாவின் “வீட்டிற்குள் ஒரு உலகம்” அங்கிருந்து எடுத்துப் படித்தோம். ஏவுகணைகளின் பணியையும் ஆண்டெனாக்களையும், தொலைக்காட்சிகளுக்கு அவை எங்கனம் உதவுகின்றன எனவும் அவர் தமிழில் விளக்கியிருப்பது இப்பொழுது வாசித்தாலும் வியப்பளிப்பதாகவே இருந்தது. தந்தை நல்ல வாசகர். பயண நூல்களையும், வரலாறு சம்பந்தமான நூல்களையும் விரும்பி வாசிப்பார். தி. ஜானகிராமனின், அடுத்து வீடு ஐம்பது மைல் நூலின் கட்டுரைகளில் வாசித்தறிந்த அனுபவங்களை அவரே சென்று வந்ததுபோல பேசுவார்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , அவர்களது க.நா.சு உரையாடல் அரங்கில் , ஜனவரி – 2024-ல் சுரேஷ்குமார இந்திரஜித்தை அழைத்து உரையாடல் நடத்தியது. பரீச்சைக்கு படிக்கும் மாணவர்கள் போல, அவரது நூல்களை – ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி, நானும் ஒருவன், நான் லலிதா பேசுகிறேன், தாரணியின் சொற்கள் – வாசித்தோம். தமிழில் வந்திருக்கும் “குறுங்கதைகளை” சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுடையதுதான் முதன் முதலாக அதிகம் வாசித்தோம். கதாபாத்திரங்களின் பெயரிலேயே அவர்களது குணங்களை கடத்திவிடும் அவரது சுருக்கமான நடை பிடித்திருந்தது. இவரது கதைகளில், தற்செயலென மாயங்கள் நடக்கும். அதில் காரண காரியங்களையெல்லாம் அலசாது. கடவுளின் பரிசு எனும் கதையில், “டோரதி, டோரதி” என தனது பழைய காதலியின் பெயரைச் சொல்லி லாரன்ஸ் என்பவன் தன் நண்பனிடம் புலம்புவான். ரோட்டாரோமாய் காரை நிறுத்தி தண்ணியடித்துக்கொண்டிருக்கும் அவர்களை எதேச்சையாக சந்தித்து காசு கேட்கும் கிராமத்துப் பெண், தனது பெயர் “டோரத்தி” என்பாள்.
யுவன் சந்திரசேகர் அவர்களை சென்னையில் பார்த்ததல்லாமல், அவரும் அவரது மனைவி உஷா அவர்களும் டொரான்டோ, கனடா வந்திருந்தபொழுது மகன் சஹா, நண்பர்கள் பழனி, மகேஷ் , வெங்கட் பரஸாத் சகிதமாக ஜூலையில் அங்கு சென்று பார்த்தோம். காலம் செல்வம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த யுவன் அவர்களுக்கான சந்திப்பில், நானும் நண்பர் பழனியும் அவரது படைப்புகள் பற்றி பேசினோம். குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை நான் இந்த வருடத்தில் மீள் வாசிப்பு செய்தேன். இந்த நூலை வாசித்தால் குழப்பம் வருகிறது , முன்னர் பின்னர் என இணைக்கமுடியவில்லையென குழும்புபவர்களுக்கு கொடுப்பதற்கென்றே சிறு குறிப்பு ஒன்று எழுதி வைத்தேன். ஆகஸ்ட் மாதத்தின் அந்த நீண்ட பயணத்தில் யுவனின் வெளியேற்றம் நாவல்தான் துணைக்கு வந்தது. “சரி செய்யமுடியாத சிறு தவறுகள்” தொகுப்பில் இருந்த கதைகளும் பிடித்தவையாயின. மதக் கலவரம், சதி ஏறாத ராஜமாதா, வெள்ளைப் புடவை பஜனை பெண்கள், கணவனை இழந்த பெண் என உட்கதைகள் நிறைந்த தேஷ் ராகம் சிறுகதை இந்தத் தொகுப்பில் அடங்கும். இது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவேண்டிய கதை என்று யுவனிடம் குறிப்பிட்டேன். யுவனின் நினைவுதிர் காலம், முழு நாவலும் இருவருக்கிடையே நிகழும் நேர்முகம் போல் அமைக்கப்பட்டுள்ளது. கேள்வியும் பதிலுமாக யுவனே இருவருமாக இங்கே. அவாது இசை பற்றிய நுண்ணர்வும், மனிதர்கள் பற்றிய புரிதலும் நேர்முகத்தை சுவாரஸ்யத்துடன் நடத்திச் செல்கிறது. ரவி ஷங்கர், பீஸ்மன் ஜோஸி இசைமேதைகளின் பெருமைகள் நிகழ்வுகள் என அவர்களது உரையாடலில் இடம்பெறுவதால், புனைவு பாத்திரங்களை உண்மை என நினைக்கும் ஒரு மாயத்தை நிகழ்த்துகிறது. ஹிந்துஸ்தானி பக்கமிருந்து வந்த வயலின், கர்நாடக சங்கீதத்தில் முக்கியத்துவம் ஆவது போன்ற சரித்திரப் பதிவுகளும் நாவலில் உண்டு.

கவிதை என்றால் என்ன ? கிலோ என்ன விலை? என்று கேள்வி கேட்பவனுக்கு அல்ல யுவனின் “நிலவைச் சுட்டும் விரல்” நூல். அது ஏற்கனவே கவிதையில் ஊறி கவிதானுபவம் கொண்ட வாசகனுக்கானது. திருக்குறளை கவிதையென விளக்கும் கட்டுரைகள், படிமம் பற்றிய அடிப்படை புரிதல்கள், ஞானக்கூத்தனின் சைக்கிள் கமலம் கவிதை பற்றி அலசல் அடங்கிய இந்த நூல் இலக்கிய வாசகனின் பெட்டகத்தில் இருக்கவேண்டியவைகளில் அதிமுக்கியமான ஒன்று.
“எல்லோரிடமும் அனைத்து உயிரனங்களுடனும் பற்றுடன் இருக்கிறீர்கள். ஆனால், ஒவ்வொருவர் பார்வையிலும் உலகத்தை / தீர்வைக் காண்கிறீர்கள். பற்றுடன் இருப்பினும், ஒரு விலகலுடன், பன்முகப்பார்வையுடன் எப்படி உங்களால் இவ்வளவு எழுதமுடிகிறது ? “ என்று வியந்து யுவனிடம் கேட்டேன். “நான் என்ன சொல்வது?”என்று புன்னகை புரிந்தார்.

எழுத்தாளர் பாவண்ணன் 2024-ல் பெங்களூரில் நடந்த புக்பிரம்மா நிகழ்வில் தமிழ் ஒருங்கிணைப்பாளர் என்கிற பணியை ஏற்றி நிறைவு செய்திருந்தார். எங்களது நேர் சந்திப்பில் அது குறித்து எனது மகிழ்வையும் பாராட்டையும் தெரிவித்தேன். அனைவரிடமும் இருந்த ஒத்த எண்ணமும் கனவும்தான் இந்த நிகழ்ச்சியை சாத்தியமாக்கின என்றார். ஜா. ராஜகோபாலனும், பாவண்ணனும், நவம்பரில் மலேசியா சென்று ம. நவீன் ஒருங்கமைத்த இலக்கிய முகாமில் கலந்துகொண்டார்கள். “பேசும் புதிய சக்தி”யில் பாவண்ணன், தனது மலேசிய அனுபவத்தை பற்றி கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். வரலாற்றுத் தகவல்களும், சித்தர்கள் பற்றிய குறிப்பும், இலக்கிய முகாம் உரைகள் பற்றிய சித்திரமும், மை ஸ்கில்ஸ் அமைப்பு பற்றி அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் என அந்தக் கட்டுரை ஒரு நூலுக்கான சாத்தியத்துடன் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது.
ஜெகதீஸ் குமாரின் “பொற்குகை ரகசியம்” கதைகளை வாசித்த ராதா, அவரது நடை வாசிக்க வைக்கிறது என்றார். ஊனுடலில் எழுதிய உணவின் விவரணைகளை வாசிக்க வாசிக்க பசி வந்துவிட்டதெனவும், G.H. கதையில் வரும் பேய் அவரை மயிர்க்கூச்செரிய வைத்துவிட்டதெனவும் எங்களது மாலை நடைப் பயணத்தின்பொழுது குறிப்பிட்டார். எதுவுமே இல்லாத ஒன்றை எடுத்துக்கொண்டு ஏதோ பெரிதாக இருப்பதுபோல் தனது எழுத்துச் சித்திரத்தால் மட்டும் சாதிப்பது என்பது முற்றிலும் ஒரு கலைஞனாலேயே முடியும். அந்த எழுத்தாளனை, தொகுப்பில் உள்ள “சொல்லப்படாத கதை”-யில் கண்டேன். இந்த தொகுப்பை வம்சி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. ஜெகதீஸிடம் ஒரு சிறுகதையை நல்லபடியாக எழுதவேண்டும் என்ற மெனக்கெடல் உள்ளது. அப்படியெல்லாம் எந்த முயற்சியும் இல்லாமல் எழுதுபவர்கள் இருப்பதால் வாசகனுக்கு ஒரு அயற்சி வந்துவிடுகிறது. குறைந்த அளவாவது வாசகனை மகிழ்ச்சிப்படுத்தும் அக்கறை வேண்டும். ஜெகதீஸ் அந்த மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து எழுதுகிறார்.
நண்பர் விஸ்வநாதன் அவர்களும் , பயணக்கட்டுரைகள் அடங்கிய “இரு கடல் ஒரு நிலம் “ நூலை , விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வழியாக கொண்டு வந்தார். எழுத்தாளர்கள் ஜெயமோகனும், அருண்மொழி நங்கையும் 2022-ல் அமெரிக்கா வந்தபொழுது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரை வரை நண்பர்கள் ராஜன், ஶ்ரீராம், எழுத்தாளர் (விசு), பிரமோதினி சகிதமாக காரில் பயணம் சென்று வெவ்வேறு நகரங்களை, மலைகளை , பாலைவன நிலங்களை பார்த்தார்கள். பயணத்தில் பார்த்த இடங்கள், கண்டறிந்த விஷயங்கள் என ஒற்றைப் பார்வையில் அந்தப் பயணத்தை பதிவு செய்யாமல், அமெரிக்கா வந்து படிக்கும் மாணவனின் கஷ்டங்கள் , அவர் வளர்த்துக்கொண்ட கனவு, பயணத்தின் பொழுது பார்த்த மாநிலங்கள், நகரங்களின் வரலாற்றுப் பின்னணி என எடுத்தால் கீழே வைக்கமுடியாம்ல வாசிக்க வைக்கும் புனைவென படைத்ததால், விசு எழுத்தாளாராக இந்த நூலின் வழியாக பரிணமிக்கிறார்.

கவிஞர் பெருந்தேவி , அமெரிக்காவில் , ஒரு கல்லூரியில் வேலை பார்க்கிறார் என்ற தகவல் மட்டுமே தெரியும். அவரது குறுங்கதைகளையும் கவிதைகளையும் ஒரு முகநூல் நண்பன் அளவே வாசித்திருந்தேன். இலக்கிய வாசகனாக அவரை அணுகவும், உரையாடவும், இந்த வருடத்தில் வாய்ப்புகள் அமைந்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் க.நா.சு. உரையாடல் அரங்கில் அவர் பங்கேற்று சிறப்பிக்க, நட்பு மேலும் வளர்ந்து வருட இறுதியில் ஊருக்குப் போகும் முன், ஆஸ்டின் வந்து தங்குமளவு அணுக்கமானது. அவர் கதைகளையும், கவிதைகளையும் வாசித்துவிட்டு எனது அவதானிப்புகளை அனுப்புவேன். அதற்கு அவர் காத்திரமான எதிர்வினை கொடுப்பார். அவருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பும் முன் ஒரு முறைக்கு இரு முறை வாசித்துப் பார்ப்பேன். கதை, கவிதை, நாவல், இலக்கியம் சம்பந்தமான விஷயங்களை, எந்த நேரத்திலும் சும்மா பேச்சுக்கு என்பதெல்லாம் அவரிடம் இல்லை. அசோகமித்தரனின் கதையானாலும் சரி, பெருந்தகையுடன் பெருந்தேவி நடத்திய உரையாடல்களானாலும் சரி மணிக்கணக்கில் பேசலாம். அவர் வேலை பார்ப்பது மானுடவியலில். தமிழ் கற்பிக்கும் ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் அவர் பதிவு வகித்தால், தமிழுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குறுங்கதைகள் நன்றாக இருக்கின்றன என்பதை தவிர கூர்மையான விமர்சனம் வைக்க எனக்கு இன்னும் இலக்கியப் பயிற்சி தேவை. எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், பெருந்தெவியின் குறுங்கதைகளே தமிழில் சிறந்தவை என வரையறுத்ததை எடுத்துக்கொள்கிறேன். எங்கள் புத்தக அலமாரியில், அழுக்கு சாக்ஸ், வாயாடிக் கவிதைகள், விளையாட வந்த எந்திர பூதம், அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது, இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம், உன் சின்ன உலகைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய் எனக் கவிதை நூல்களும், ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் குறுங்கதை தொகுப்பும் உள்ளன. அவரோ, விளையாட வந்த எந்திர பூதம் – புத்தகம்தான் தனக்குப் பிடித்த புத்தகமென அவரது கையெழுத்தை அன்புடன் பதிவு செய்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக ராதாவும் நானும் கமலதேவியின் படைப்புகளை அவரது வலைப்பக்கத்தில் மட்டுமே வாசித்தோம். இந்தியப் பயணத்தின்பொழுது வாசகசாலை அருண் அவர்களிடம் பேசி , இதுவரை வெளிவந்திருந்த அனைத்துப் படைப்புகளையும் (கடல், சக்யை, அகமும் புறமும், கடுவழித்துணை, துறைமுகம், ஆழி, குருதியுறவு) வாங்கி துணிகளுடன், பாத்திர பண்டங்களுடன் அவைகளையும் அடுக்கி எடுத்துவந்தோம். கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் வாசித்ததில்லை. கமலதேவியின் கற்பனையில் அந்த மேதையின் வாழ்வின் சிறுதுளியை துறைமுகம் சிறுகதையின் வழி ரசித்தோம். அமெரிக்காவில் இருந்துகொண்டு, அவரது கதைகளால் தமிழகத்தின் துறையூர் கொல்லிமலை சார்ந்த கிராமங்களில் வாழமுடிகிறது. நாங்கள் பார்த்து விட்டுவிட்டு வந்த சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை , குழந்தைகள் எல்லாம் வேறு விதமாக உருமாறிவிட்டார்கள் (in positive sense) என்பதை இவரது புனைவகள் காட்சிப்படுத்துகின்றன. முன்னர் பின்னர் நகரும் அவரது கதைகளில், யாருக்கு யார் என்ன உறவு என்பதை வாசகன் சில சவால்களுடன் புரிந்துகொள்ளவேண்டும். தொடர் உரையாடலில் இருக்கும் அவரிடம், உங்கள் பாத்திரங்களை ஒளித்துவைத்து விளையாடுகிறீர்கள் என ஒரு புன்னகை எமோஜியுடன் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
கம்பராமாயணத்தையும் சிலப்பகிதாரத்தையும் முழுசாக வாசிக்க ஆசை. இந்த வருடத்தில், அ.கா. பெருமாளின் அத்யாத்ம ராமாயணம்-தான் வாசிக்கமுடிந்தது. ராமன் ஜனகனுக்கு பூமியில் கிடைத்த சீதையை மணந்தான் எனத் தெரியும். லட்சுமணனுக்கும், பரதனுக்கும், சத்துருக்கனனுக்கும் வந்த மனைவிமார்களின் பெயர்களில் அவர்கள் யாருடைய என ஒரு தெளிவு கிடைத்தது. நடக்கும் நடக்கவிருக்கின்ற எல்லாவற்றிற்கும் ஒரு காரணகாரியம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் முன்னரே சொல்லப்படுகிறது. பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் வரிசைக்கிரமமாக மீட்டெடுப்பதற்கு இந்த நூல் உதவும். குழந்தைகளுக்கு ராமாயாணம் கதை சொல்பவர்கள், கொஞ்சம் சரிபார்த்துக்கொண்டு சொல்ல வசதியாக இருக்கும்.

கனடாவிலிருந்து வெளிவரும் காலம் பத்திரிகை 60-வது இதழாக வெளிவந்தது. சஹா , சீதை தீக்குளிப்பதை மாறுபட்டச் சிந்தனையில் மறு ஆக்கம் செய்து ஆங்கிலத்தில் கதையாக எழுத, நான் தமிழில் மொழியாக்கம் செய்ய அது இந்த 60-வது இதழில், வாடிய மல்லி என்ற பெயரில் பிரசுரமாகியது. முழு இதழிலும் வந்த கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் வாசித்த நான், காலம் செல்வம் அவர்களின் உழைப்பையும் அவருக்கு உதவி புரியும் உஷா மதிவாணன் அர்ப்பணிப்பையும் வியந்து முகநூலில் பதிவு ஒன்று எழுதினேன்.
கண்மணி குணசேகரின் அஞ்சலை வாசிக்க, புனைவுகளின் வழி அறிந்த புரிந்த பெண்களில் அவளும் ஒருவளென ஆகிவிட்டாள். மலர்வதியின் தூப்புக்காரியும் நானும் உள்ளேன் என்று இணைந்துகொண்டாள். வயலும் நெல்லும், கடலும் மிளகாயும் என்ற விவசாயத்தை அறிந்த எனக்கு அஞ்சலையின் முந்தரித்தோட்டத்து உழைப்பு புதிதாக இருந்தது. தூப்புக்காரி, அரசாங்க மருத்தவமனையில் மலத்தை நீர் ஊற்றிக் கழுவினாள், முட்டுத்துணியை துவைத்தாள். கணினி , AI, Chatbot என்று ஆழ்ந்திருக்கும் நேரங்களில், நிஜவாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்ட இது போன்ற புனைவுகள் மண்ணில் காலூன்ற வைக்கிறது.
2024-ல் வாசிப்பில் ஆங்கில புனைவுகளும் அபுனைவுகளும் வாசிப்பது குறைந்துவிட்டன. 2025-ல் அதை மீட்டெடுக்கவேண்டும். மாதமிருமுறை வாசிப்பனுபவம் எழுதும் பழக்கத்தையும் விட்டுவிட்டேன். தாமதமானாலும் வாசகனான என்னை தக்கவைத்துக்கொள்ள 2025-ல் முதல் பதிவாக இதை எழுதி என்னை நானே மீட்டெடுக்கிறேன். 2025-லும் ராதாவும் சௌந்தரும் வாசிப்பார்கள்.
