(மறு பிரசுரம் )
அந்தக் கொடுமை நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும், ஒரு பார்வையாளனாகத்தான் நான் இருந்திருக்கிறேன். வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டு,ஒரு கையாளாகாதவன்போல், நின்றுகொண்டிருந்த என்னைப்பற்றி, ஜோசப் என்ன நினைத்து இருப்பான். என்மேல், கண்டிப்பாக கோபப்பட்டிருப்பான். அவனுக்கு அந்தக்கொடுமை நடக்கும் நாட்கள் நடந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இன்று நினைத்தாலும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து போகிறது. நாம் ஏதாவது செய்திருக்க வேண்டுமோ என்று.
நான் அப்பொழுது கலிபோர்னியாவில் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பள்ளியின் பக்கத்தில், ஆறு முதல் எட்டு வரைப் படிக்கும் மாணவர்களுக்கான நடுநிலைப்பள்ளியும் உண்டு. பள்ளி முடிந்ததும், பஸ்ஸிற்காக அனைவரும், ஒரே இடத்தில்தான் நிற்போம். அந்தோனி என்கிற எட்டாம் வகுப்புப் படிக்கும் பையன், ஜோசப் என்னும் ஆரம்பப்பள்ளி மாணவனைக் கொடுமைப் படுத்துவான். முகத்தில் ஒரு குத்து, அவன் மர்மஸ்தானத்தில் ஒரு குத்து. பற்றாததிற்கு, ஜோசப்பின் குடும்பத்தைப் பற்றிக் காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி, விமர்சனம் வேறு செய்வான். ஜோசப் பேசும்பொழுதுக் கொஞ்சம் திக்குவான். அதைக் கேலிசெய்துதான், அந்தோனி அவனை ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்துவான். அந்தோனி செய்வது தவறு என்று தெரிந்தும், அதைத்தட்டிக்கேட்கப் போய் நாமும் வேடிக்கைப் பொருளாகிவிடுவோமோ என்ற தயக்கத்தில் நான் ஒன்றுமே செய்யவில்லை. நான் அல்லாமல், மற்றவர்களும் வேடிக்கை பார்த்தவண்ணமே இருப்பார்கள்.
தொலைக்காட்சியில் வரும் கேலிச்சித்தரங்களில், கொஞ்சம் பலவீனமாக இருக்கும் பாத்திரங்களை, பெரிய உருவங்கள் கொண்டப் பாத்திரங்கள் சித்தரவதைகள் பல செய்யும் . சிறிய உருவம் படைத்த பாத்திரங்களின் தலையில் கழிவுநீரை ஊற்றும், அந்த இடத்தில் அடிக்கும் அதைப் பார்த்து நாமும் சிரிப்போம். நிஜ வாழ்க்கையில், இவையெல்லாம் நடக்கையில், அது சிரிக்கும் விஷயம் அல்ல.பள்ளியில் படிக்கும் குழந்தைகளில், எழுபத்தைந்து சதவீதத்தினர், என்றாவது ஒரு நாள், குறும்பர்களின் கேலிக்கும், கூத்துக்கும் ஆளாகிறார்கள். பாதிக்கப்படுபவர்கள் அவதிப்படப்போவது அன்று ஏற்படும் சிறு காயத்தின் வலியினால் மட்டுமல்ல. பிற்கால வாழ்க்கையில் அது. அவர்களுக்குத் தீராத தலைவலி, தன்னம்பிக்கையின்மை, வாழ்க்கையில் பற்று இல்லாமை என்று ஆகிவிடும். சிலர் தன்னை மாய்த்துக்கொள்ள தற்கொலை வரை சென்றுவிடுவார்கள். கேலிவிளையாட்டின் காரணமாக, உலகத்தில் அரைமணிக்கு ஒருமுறை, படிக்கும் வயதில் உள்ள ஒரு மாணவன் தற்கொலை செய்துகொள்கிறான்.
கேலிக்கும், கூத்திற்கும், இன்றைய அறிவியல் வளர்ச்சியான சமூக வலைதளங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. போபே பிரின்ஸ் என்ற மாணவி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டதற்குக் காரணம் குறும்பர்கள் சமூகவலைதளங்களில் அவளைத் தொடர்ந்து செய்த கலாட்டாதான். ஜான் கார்மிக்கல் என்ற மாணவன், தன்னைக் குள்ளன் என்று எல்லோரும் கேலி செய்கிறார்கள் என்று தற்கொலை செய்துகொண்டான். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர் யாரும், குறும்பர்களின் அட்டகாசத்திற்குப் பயந்து, தனது ஆசிரியரிடமோ, தக்க அதிகாரிகளிடமோ, தனக்கு நடந்துகொண்டிருக்கும் கொடுமையை முறையீடு செய்வதில்லை.
இந்தக் குறும்பர்கள், கேலியும் கிண்டலும் செய்வதற்கு, அவர்களது தாழ்வுமனப்பான்மை என்று பொதுவாக நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், அதற்கு நேர்மாறு. இந்தக் கொடூரர்கள், தாங்கள்தான் எல்லாரையும் விட பலசாலிகள் என்றும், முக்கியப்புள்ளிகள் என்றும் அளவுக்கு அதிகமான தற்பெருமை கொண்டவர்கள். ஆதலால்தான், அவர்கள் தன்னைவிடப் பலவீனமானவர்களைக் காயப்படுத்தி, தான் பெரியவன் என்றுக் காண்பித்துக்கொள்கிறார்கள். இதில் இந்தக் கொடூரர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கவில்லை. அவர்களும் இதில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம். இவர்களில் பெரும்பாலோர், சண்டையின் மூலம் காயம் அடைகிறார்கள். குடிக்கும், போதைக்கும் சிறு வயதிலேயே அடிமையாகிறார்கள். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். தனது இருபத்து நான்கு வயதை அடையும் முன், சட்டத்திற்கு புறம்பான ஒரு குற்றத்தைச் செய்துவிடுகிறார்கள்.
இந்தக்கொடூரர்கள், காயப்படுத்துவது, பலவீனமானவர்களை மட்டுமல்ல. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளனையும்தான். ஒருவன் கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, பார்வையாளனும், மன உளைச்சலுக்கு ஆளாகிறான். தனக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைப்போல் உணர்கிறான். ஒரு பார்வையாளனாக, ஜோசப்பிற்கு நடந்தக் கொடுமையைக் கண்ட எனக்கு, அந்த நாட்களில், ஒரு பயம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். அந்தோனி என்னைப் பின் தொடர்ந்து வருவது போலவும், அவன் எந்த நேரமும் என்னைத்தாக்கலாம் என்பது போலவும் தோன்றும். ஆனால், அப்படி ஒன்றும் எனக்கு நடக்கவில்லை. ஒரு வேளை, எங்கள் குடும்பம் டெக்சாஸ் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்ததால், நான் அவனிடமிருந்து தப்பித்திருக்கலாம்.
இந்தக்கொடுமையிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றப் பள்ளிகளில் ஒரு திட்டம் உண்டு. அதற்குப் பெயர்தான் zero tolerance policy. அது எந்த அளவிற்குக் குழந்தைகளைக் காப்பாற்றுகிறது என்பதில்தான் உண்மை கொஞ்சம் கசக்கும். திட்டத்தை அமுல் படுத்தும் முறையில், பள்ளிக்குப் பள்ளி வேறுபடும். சில பள்ளிகள் சின்னச் சின்னக் கேலிவிளையாட்டுக்களைக்கூட மிகப்பெரிதாக எடுத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு, சில வருடங்களுக்கு முன்னர், ஒரு நடுநிலைப் பள்ளியில், லிசா ஸ்மித் என்ற மாணவி இருந்தாள். அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. விளையாட்டில் வித்தைகள் பல செய்பவள். பல குழுக்களுக்குத் தலைவி. அவள் பள்ளியின் தலைமையாசிரியரின் அறைக்குச் செல்கிறாள் என்றால், அது ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு, நிதி உதவி கேட்பதற்காகத்தான் இருக்கும்.அப்படிப்பட்டவளை ஒரு சிறு தவறுக்காக, பள்ளி நிர்வாகம், ஐந்துமாதங்கள் தாங்கமுடியாத தண்டனைகளைக் கொடுத்தது. அதற்காக, நான் zero tolerance policy திட்டத்தை எடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்களும் உதவுங்கள். நீங்கள் அடுத்தமுறை ஒரு பலவீனமான மாணவன் கொடுமைப் படுத்தப்படுவதைப் பார்த்தால், அந்தச் சண்டையை நிறுத்துங்கள் .உங்களுக்கு, அந்தக் கொடூரர்களிடம் பயமென்றால், பாதிக்கப்பட்டவனிடமாவது பேசுங்கள்.. அவனதுக் காயத்திற்கு மருந்து போடுங்கள். தன்னைப் பார்த்துக்கொள்ள இன்னொருவன் இருக்கிறான் என்று தெரிந்தால்,அவனுக்கு, இந்த வாழ்வின்மீது நம்பிக்கை வரும். தன்னை மாய்த்துக்கொள்ளும் தற்கொலையை நாடமாட்டன். அடுத்தமுறை, நீங்கள் பலவீனமானவனை, பலமுள்ளவன் கேலியும் கிண்டலும் செய்தால், நீங்கள், கைதட்டி சிரிக்காதீர்கள்.அது அவனை உற்சாகப்படுத்துவதுபோல் ஆகிவிடும். அவர்களுக்குத்தேவை, அந்த தற்காலிக ஈர்ப்பும், உற்சாகமும்தான். அது கிடைக்கவில்லை என்றால், அடுத்தமுறை அவனுக்கு, கிண்டலும், கேலியும் செய்வதில் ஆர்வம் குறைந்துவிடும்.
பலசாலி என்று தன்னை நினைத்துக்கொண்டு, பலவீனமானவர்களைக் கிண்டலும் கேலியும் செய்துக் காயப்படுத்துவது என்பது ஒரு வியாதி. அதனால், பாதிக்கப்படுவது, அந்தக் கொடூரன், பாதிக்கப்பட்டவன், அதைப்பார்க்கும் பார்வையாளன். இப்படிப்பட்டக் கொடுமைகளைப் பார்க்க நேர்ந்தால், பார்த்துக்கொண்டு சும்மா நிற்காதீர்கள். உங்களால் முடியவில்லையென்றால், தகுந்த அதிகாரிகளிடம் சொல்லுங்கள். நடவடிக்கை எதுவும் எடுக்காத பார்வையாளனாக மட்டும் இருந்தால், பாதிக்கப்படப்போவது நீங்களும் உங்கள் மனதும்.
மூலம் – சஹா சௌந்தரராஜன், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சமயம், Bullying பற்றி ஆங்கிலத்தில் எழுதிப் பேசியது. இதில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
(முதல் பிரசுரம் – 09/20/2014)

Leave a comment