சுஜாதாவின் நினைவில் மலரும் கற்றவை

Published by

on

(மறுபிரசுரம்)

சில நாட்கள் அப்படி நடந்துவிடும். ஒன்றும் திட்டமிடாமலே ஒவ்வொன்றும் ஒரே மாதிரி சொல்லிவைத்ததுபோல் நடக்கும்.  நவம்பர் 30, 2021 – எனக்கு அப்படித்தான். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னிடம் இருந்த அவர் எழுதிய நூல்களில், தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி – உயிர்மை பதிப்பகம்) எடுத்தேன். தொகுப்பில் இருந்த ஐம்பது கதைகளில் ஒவ்வொன்றாக விரல் வைத்து, ‘ரேணுகா’, ‘நகரம்’, ‘அரிசி’ போன்ற கதைகள் நேற்றுத்தான் வாசித்ததுபோல் நினைவில் இருக்க, ‘நிபந்தனை’ என்ற கதையை எடுத்து வாசித்தேன். என் மனைவி ராதா , மதியம் சாப்பாட்டு மேசையில், ‘நான் இன்று சுஜாதாவின் கதை ஒன்றை இணையத்தில் தேடி வாசித்தேன் என்றார். என்ன கதை என்று கேட்டால், ‘நிபந்தனை’ என்றார்.

ஒரு தம்பதியர் கோவிலின் வாசலில் பிச்சையெடுக்கும் ஒருவளை சந்திக்கிறார்கள். பெண்,  அந்த அம்மாவிற்குப் பிச்சை போடுவதற்குப் பதிலாக உடன் அழைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறாள். தன் கணவனிடம் பேசி சம்மதிக்க வைத்துக்கொண்டிருக்கும்பொழுது, அங்குள்ள கடைக்காரன் ஒருவன், அவளுக்கு பதினாலு வயதில் மகள் இருப்பதாகவும், அவளை வைத்து தெருவில் அலையவிட்டு சம்பாதிப்பவள் எனவும் சொல்லி அவர்களை அழைத்துச் செல்லவேண்டாம் என்கிறான். காலால் கோலம் போடும் அந்த பதினாலு வயது பெண்ணை பார்த்த அந்த மனைவி என்ன  நினைத்தாளோ , வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். முதலில் அழைத்துச் செல்ல மறுத்த கணவன், இப்பொழுது, உண்மையை தீர விசாரிக்கலாம் என்று வலியுறுத்திகிறான். மனைவி தீவிரமாக மறுத்துவிடுகிறாள். அவளின்  நிபந்தனை என்ன என்பது வாசகனின் கற்பனைக்கு விடப்படுகிறது. வாசகர்களாக நானும், ராதாவும் எங்கள் புரிதல்களை பகிர்ந்துகொண்டோம்.

அன்றே இன்னும் ஒரு அதிசயமும் நடந்தது. தனது முதல்கதையை கண்டுபிடித்துக்கொடுப்பவர்களுக்கு, தனது மகளையும் பாதி இராஜ்யத்தையும் கொடுப்பதாக சுஜாதா சொல்லியிருப்பார். ‘தேர்ந்தெடுத்த சிறுகதைகளின்’ தொகுப்பு முன்னுரையில் கூட, “என் முதல்கதை அச்சில் வெளிவந்தது 1954-இல்” என்று குறிப்பிட்டிருப்பார். இந்த நாளில், அவரது முதல் கதையையும் வாசிக்கும் அதிர்ஷ்டம் பெற்றேன். மகாகவி பாரதியின் பாடல்களை உணர்வுகளுடன் பாடி நடித்து, மக்களின் மனதில் அவரது கவிதைகளை வளர்த்த, கவிஞர் ‘திருலோக சீதாராம்’ அவர்களின் மகன் சுப்ரமணியன் என் நட்புவட்டத்தில் உள்ளார். திருலோக சீதாராம்தான், சுஜாதாவின் முதல் கதையான ‘எழுத்தில் ஹிம்சை’ வெளிவந்த ‘சிவாஜி’ பத்திரிகையின் ஆசிரியர். சுப்ரமணியன் அவர்கள் 1.3.2017-ல் ஆனந்தவிகடனில் மறுபிரசுரம் செய்யப்பட்ட அந்தக்கதையின் பிரதியை எனக்கு அனுப்பிவைத்திருந்தார். ‘சிவாஜி’ பத்திரிகை வெளிவந்துகொண்டிருக்கும்பொழுதே, அது நின்றுவிட்டது என்று தவறுதலாக சுஜாதா குறிப்பிட்டுவிடுகிறார். அதற்கு மன்னிப்புக் கேட்டு, சுப்ரமணியன் (லோகமணி) அவர்களுக்கு, 1979-ல் எழுதிய கடிதத்தின் புகைப்படப் பிரதியையும் அனுப்பியிருந்தார். சுஜாதா, தனது கையெழுத்து சுமார், ஆதலால், அவரது கதைகளை டைப் செய்து அனுப்புவதாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பார். அவரது ‘சுமாரான கையெழுத்தை’யும் அன்று பார்க்கும் அதிர்ஷ்டம் பெற்றேன்.

ஒரு மச்சுவீடு வேண்டும் என்று கனவுகண்டு அதைக் காணாமலே இறந்துவிட்ட அம்மா  நினைவில் வரலாம். ‘ஆண்டிபட்டியில் படித்தாலும் அமெரிக்கா போகலாம்’ என்று அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டு கனவுகண்ட அப்பாவின் நினைவு வரலாம். அதென்ன சுஜாதாவின் நினைவு? சுஜாதா, அவர் எழுதிய புனைவுகளின் , அபுனைவுகளின் வழியாக  நான் அறியாத உலகினை அறிமுகம் செய்துவைத்தார். கணினியின் மீது , கணினியை இயக்கும் கட்டளைகள் மீது ஒரு ஈர்ப்பை வரவைத்தார். இணையமும், சமூக வளைதளங்களும் இல்லாத காலகட்டத்திலேயே, அதெல்லாம் வரவிருக்கிறது என்று கோடிட்டு காட்டினார். இந்தக் கதை வாசித்ததால், இப்படியானேன் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால், சுஜாதாவின் கதைகள் நல்ல எழுத்தாளர்களையும், நல்ல நூல்களையும், வெளி நாட்டு விபரங்களையும், கணினி மீதான தாபத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தன. சில வியாதிகளின் ஆங்கில வார்த்தைகளை, அதன் பாதிப்புகளை, கதையோடு கதையாக கற்றுக்கொடுத்தன. ‘War and Peace’ எனக்குத் தெரிந்ததே, சுஜாதா கதைகளில் வரும் வக்கீல் கணேஷ் அதை படித்ததால்தான்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்கள், கணினி துறையில் வேலை பார்த்தவனாக,  ஐம்பதிற்கும் மேற்பட்ட கணினி நிபுணர்களை உருவாக்கியவனாக, அவரது கதைகளை திரும்பி பார்க்கிறேன். தான் செய்யும் வேலையில் சலிப்புறும் ப்ரோக்ராமர்களை இன்றும் பார்க்கிறேன். 1980-ல் எழுதிய நிதர்சனம் என்ற கதையிலிருந்து –

“நீ என்ன படித்திருக்கிறாய்?”

“படிப்பு முக்கியமானால் நான் பி.டெக்-கம்ப்யூட்டர் சயன்ஸ்”

“கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்திருக்கிறாய். ப்ரொக்ராமிங் செய்கிறாய். சரியான வேலையில்தானே இருக்கிறாய்?”

“அது எனக்கு சரியான வேலையில்லை. மாடசாமிக்கும் முன்சாமிக்கும் சம்பளம் பிடிப்பு எல்லாவற்றையும் கணக்கிட கோபால் ப்ரொக்ராம் எழுதுவது என் திறமைக்குத் தாழ்மையான செயலாக, என் திறமையை அவமானப்படுத்துவதாகப்படுகிறது. எனக்கு உரிய வேலை உங்கள் ட்பார்ட்மெண்டில் இருக்கும் என்று  எனக்குத் தோன்றுகிறது.”

அதுவென்னமோ உண்மைதான். நானும், என் முதல் வேலையில், மத்திய அரசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு, பெயர், வேலை, வேலையின் நிலை, அடிப்படைச் சம்பளம், பிடிமானம் என்று சம்பள ரசீதை  பிரண்டர் சரியாக அச்சடிக்கத்தான் ப்ரோக்ராம் எழுதினேன். இதைமட்டும் செய்தால் வேலைக்கு ஆகாது என்று Oracle படிக்கப்போய்தான் பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு உயரமுடிந்தது.

 ‘விபா’ என்றொரு கதை, இந்த தொகுப்பிலும் உள்ளது. கனடாவில் வாழும் கதைசொல்லியிடம் விபா என்பவள் அவனது நண்பனின் தங்கை என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகிறாள். இந்தியா திரும்பிச் செல்ல விமான டிக்கெட் வாங்க உதவி கேட்டு வந்தவள், அவனுடன் ஒரு நாள் தங்குகிறாள். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. விமான டிக்கெட் கிடைத்து அவள் இந்தியாவிற்கு செல்லும் நாளில், திரும்ப கம்ப்யூட்டர் சைன்ஸ் படிக்க கனடா வருவேன் என்கிறாள். 1982-ல் வந்த இந்தக் கதையில் சுஜாதாவின் வரிகளில் விபாவை ரசித்தவன் , கம்ப்யூட்டர் சைன்ஸ் என்ற வார்த்தையையும் கவனித்திருந்தால் போதும்.

சுஜாதாவிற்கு, அவரது பரந்த வாசிப்பின் வழியாக, பழமையும், நாட்டுப்புற பழக்கங்களும், நம்பிக்கையும் தெரிந்திருந்தது. ஜியாலாஜி, ஹைட்ராலாஜி போன்ற அறிவியல் துறைகளில் அடிப்படை விஷயங்களும் தெரிந்திருந்தது. வாசகனுக்கு இரண்டு விஷயங்களும் அவரது புனைவின் ஊடே பூடகமாக கடத்தப்பட்டுவிடுகிறது. ‘நீர்’ என்றொரு கதை. ஒரு கிராமத்தில் போர்போடுவதற்காக ‘யூனிஸெஃப்’ வெள்ளைக்காரன் ஒருவனுடன் அரசாங்க நிறுவனம் நியமித்த குழு வருகிறது. அவர்கள் போர் போடும் இடத்தில்  ‘நீர் வராது, காற்றுதான் குசு மாதிரி வரும்’ என பெரியசாமி என்றொரு ஊர்ப்பெரியவர் சொல்கிறார். அவர் தன் பேத்தியிடம் இப்படி சொல்கிறார்.

நாப்பத்தைந்து வருசமா அதோட பழகினவம்மா நானு. காத்தை மோந்து பாத்து ஈரம் சொல்வேன். மானத்திலே விசிறிமேகம் தெரியும் பாரு. அதெப்பாத்து எத்தினி  நாள்லே மழை வரும்னு சொல்வேன். இலுப்பை மரம் சிலுத்தா அதில ஒரு சேதி இருக்குது பொண்ணே! பஞ்சாங்கத்தைப் பார்க்கவேண்டாம். பூவரசைப் பார்த்து தேதி சொல்வேன்! குண்டுக் கரிச்சான் ‘சுவி சுவின்னு பாடினா எனக்கு அது வேனக்காலம். பாக்குச்சிட்டு பஞ்சு எடுத்துக்கிட்டுப்போயி தெக்குது பாரு, அது ஒரு காலம். கால் சிவப்பா நாரை மேக்கு தெரியும் பாரு அது ஒரு காலம். எனக்குத் தெரியாது லச்சுமி! தண்ணி இங்க இல்ல. மேக்க இருக்கு. முக்குளி முக்கில ஒருக்கா உனக்குப் பஞ்சிட்டான் குருவி புடிச்சுத் தந்தம் பாரு அங்க இருக்குது தண்ணி! அஞ்சடி தோண்டு போதும். இங்க இவங்க தோண்டறதெல்லாம் வீணு. இது கெந்தக பூமி இல்லை, பொத பொதன்னு போகும். படுகை கிடையாது. எல்லாத் தண்ணியும் முக்குளியில இருக்குது ஒரு மைல் போனாப் போதும்!”

இல்லே தண்ணி இல்லே. வாட்டர் நோ’ என்று சொல்லும் பெரியசாமியிடம் வெள்ளைக்காரன், “அப்படி சொல்லாதீங்க. டெர்ரா மீட்டர் வெச்சு கரெண்ட்டு கொடுப்போம். கீழே இருக்கிற ஈரத்துக்கு கரண்டு வேறுபடும். வெடி வைப்போம். இதை எல்லாம் சார்ட் போட்டு கணக்க பார்த்து சரியா அக்வியையர்னு சொல்வாங்க… இப்ப தோண்டறமே இந்த இடத்திலே தண்ணி சரியா பதினெட்டுப் பாயிண்ட் எட்டு மீட்டர் ஆழத்திலே இருக்குன்னு கணக்குப் பண்ணியிருக்கம்.” என்கிறான்.

‘மெனின்ஜைடிஸ்’ தடுப்பு ஊசி போட்டிருக்கிறதா என்று அமெரிக்காவில் குழந்தைகளை ஆரம்ப பள்ளியில் சேர்க்கும் பொழுதும் கேட்பார்கள், வளர்ந்து ஆளாகி கல்லூரியில் சேரும்பொழுதும் கேட்பார்கள். தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்று, ‘மெனின்ஜைடிஸ்’ போட்ட சர்டிஃபிகேட் இல்லாததால், கல்லூரியில் அட்மிஷன் போடமுடியாமல் திரும்பி வந்தவர்கள் உண்டு. சுஜாதாவின், கதைகளில் தலைசிறந்த கதை என்று இலக்கிய விமர்சகர்களாலும், ஏற்கப்பட்ட கதை , ‘நகரம்’. கிராமத்துப் பெண் வள்ளியம்மாள், அவள் மகள் பாப்பாத்திக்கு வந்திருப்பது ‘மெனின்ஜைடிஸ்’ என்று தெரியாமல், ‘வெறும் சுரம்தானே? வைத்தீஸ்வரனை நம்பினால் போதும்’ என்று ஆஸ்பத்திரியிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றுவிடுவாள்.

ஆறாத சோகத்தைக் கொடுத்து,  நீச்சலின்போது ‘க்ராம்பஸ்’ வந்தால், கைகால் அசைக்காமல் இருக்கவேண்டும் கற்றுக்கொடுத்த கதையும் உண்டு. ‘ஒரே ஒரு மாலை’ கதையில் ஆத்மா, அவன் நண்பர்கள் சொன்ன அறிவுரையை பின்பற்றியிருந்தால், புது மாப்பிள்ளையான அவனும் பிழைத்திருப்பான். இந்துமதியும் உடன் குதிக்கவேண்டியிருந்திருக்காது.

‘கரைகண்ட ராமன்’ கதையில், ராமன், சீதை, லட்சுமணன் பஞ்சலோகச் சிலைகளை திருடன் வெற்றிகரமாக திருடிவிடுகிறான். ஒரு வௌவால் அவனைத் தொட்டுச் செல்கிறது. மருத்துவ உண்மையில், சுஜாதாவின் வரிகளில், திருடனுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது என்ற ஒரு உறுதியை வாசகனுக்கு  கொடுத்துவிடுகிறார். “வௌவால்களுக்கும் Rabies உண்டாம். அப்போது அவை கடிக்குமாம். கடித்து ஹைட்ரோஃபோபியா வந்து பலர் செத்துப்போயிருக்கிறார்கள்.”

சுஜாதாவின் புனைவுகளில் வசந்த் ஜொள்ளு விடும் அழகான பெண்கள்தான் என்ற மேற்போக்கான பார்வையை முற்றிலும் மாற்றிவிடும் சிறுகதை –  நெருப்பு. எட்டு லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் வைத்திருந்த கோடவுன் எரிந்துவிடுகிறது. அந்த நெருப்பு உண்மையில் நடந்த விபத்தா, சேதத்தின் மதிப்பு என்ன என்ற ஆராய இன்சூரன்ஸ் நிறுவனம் அனுப்பியதாக பவித்ரா என்னும் பெண் வருகிறாள். தலைமயிரைப் பற்றியோ, அதை வாரி விடுவதைப் பற்றியோ கவலைப்படாதவளாக வருகிறாள்.  காட்டன் வேஸ்ட், கண்டாமுண்டா சாமான்களை எரித்து ஜோடிக்கப்பட்ட பொய்விபத்து என்று கண்டுபிடிக்கிறாள்.  தனது தொழிலில் பெருநஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், இந்த இன்ஸுரன்ஸ் பணம் வரவில்லையென்றால் தற்கொலை செய்யவேண்டிவரும் என்று ரிப்போர்ட்டை மாற்றி எழுதச்சொல்லி முதலாளி தாமோதர் கெஞ்சுகிறார். அதற்கு பவித்ரா, “அப்பா இறந்தபிறகு, அடுத்தவேலை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த நானே எழுந்துவந்தேன். நீங்கள் தற்கொலை பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்கிறாள்.

சொந்தக்காரர்களோ, தெரிந்தவர்களோ வசதியாகிவிட்டால், முடியாதவர்களுக்கு உதவமாட்டார்கள், எளியோரைக் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று ஒரு பொதுவான அபிப்ராயம் உண்டு. எழுத்தாளன் அனைவரின் பார்வையில் பார்ப்பவன். அவன் கண்ணில் படுவது, நாம் பட்டறிவதுவரை தெரியாது. ’சில வித்தியாசங்கள்’ என்ற கதையில் வரும் பணக்காரர், பண உதவிகேட்டு வரும் கதைசொல்லியிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். “தேவை எல்லாருக்கும்தான் இருக்கு. இந்த தேசத்துக்கே பணம் தேவை. உன் கேஸையே எடுத்துக்கலாம். இத்தனை நாள் டில்லியிலே இருந்திருக்கே. எத்தனை தடவை வீட்டுக்கு வந்திருக்கே?’. இந்தப் பார்வையை, வலியை  இப்பொழுது அவரின் இடத்திலிருந்து பார்க்கமுடிகிறது.

என் நண்பர் ஒருவர், ‘ரிக் ஷா மாமா’ வேலை பார்க்கிறேன் என்பார். என்ன என்று கேட்டால், அவர் மகனையும் மகளையும் , தமிழ் கிளாஸ், soccer, பாட்டு கிளாஸ், kumon என்று ஏதாவது ஒன்றிற்கு கூட்டிக்கொண்டு செல்லவேண்டியதாக உள்ளது என்பார்.  1978-ல் சுஜாதா எழுதிய அரங்கேற்றம் கதையில்,  எட்டுவருஷமாக நடனப்பயிற்சி பெற்று நடன அரங்கேற்றத்திற்கு நந்தினி தயாராகிறாள். அவளுக்கு நடனம் மட்டுமல்ல மற்றதும் உண்டு என சொல்கிறார். ‘டியூஷன்கள்! அதிகாலை எழுந்தவுடன் பாட்டு வாத்தியார் இரண்டு வருஷமாக சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ‘மாய மாளவ கொள்ள’வை இன்னம் தாண்டவில்லை.’ இந்தக் கதையை மட்டும் மொழிபெயர்த்து, என் நண்பரின் குழந்தைகளிடம் வாசித்துக் காண்பித்தால், ‘அப்பா, நீ இந்தக் கதையை சிறுவயதில் வாசிக்கவில்லையா?’ என்று கேட்கலாம். பெற்றோர்கள், தங்கள் கனவுகளை குழந்தைகளின் விருப்பங்களாக திணிப்பது தொடர்கிறது.

வாசகனாக நான் கற்றதும் பெற்றதும் இருக்கட்டும்.  நவீன இலக்கியத்தில் நுழையும் எவரும் அவரை  நுண்மையுடன் வாசிக்கவேண்டும் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.  ‘சுஜாதாவின் குரல்’ என்ற கட்டுரையில் ஜெயமோகன், “சித்தரிப்பின் திறனால்,மொழிநடையின் கூர்மையால் தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத படைப்பாளி. ஆனால் எப்போதுமே ஒரு படி முன்னரே நின்றுவிடும் கலைஞர். சுஜாதாவை வணிக எழுத்தாளர் என ஒதுக்குபவர் தமிழ்நடையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை இழக்கிறார். ஆனால் அவருடைய கலைக்குறைபாட்டை நுண்மையாக உணர்ந்துகொள்பவர் மட்டுமே நவீன இலக்கியத்தின் மையப்பெருக்கில் நுழைகிறார்.” என்கிறார்.

(முதல் பிரசுரம் – 12/11/2021)

Leave a comment