புண் உமிழ் குருதி – அசோகமித்திரன்

Published by

on

(மறுபிரசுரம்)

எழுத்தாளர் பவா செல்லத்துரை , புத்தகங்கள்  அலமாரியில் சீராக அடுக்கப்படாமல், சமையலறை, படுக்கையறை , வரவேற்பறை என்று அங்கங்கே இறைந்துகிடப்பதுதான் அழகு என்று நிலம் நாவலில் , ‘இழப்பின் வலி’ கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்.  அவர் சொன்னதுபோல், எங்கள் வீட்டில்  சமையலறை, படுக்கையறை மற்றும் வரவேற்பறை என்று இறைந்துகிடக்கும் புத்தகங்களில் ஒன்று அசோகமித்திரனின், ‘புண் உமிழ் குருதி’ எனும் சிறுகதை தொகுப்பு.  அப்படி இருப்பதால்தான் அதில் இருக்கும் இருபத்து ஏழு கதைகளையும், கிடைக்கும் சிறிய இடைவெளியில்கூட  மீண்டும் , மீண்டும் படிக்க முடிகிறது. ஒவ்வொரு கதையும் மற்றதிலிருந்து முற்றிலும்  வேறுபட்டவை. தனக்கென்று தனித்தன்மை படைத்தவை. வெவ்வேறு மாந்தர்களின் யதார்த்த வாழ்க்கையை அசோகமித்திரனின் எளிய நடையில் கண்முன் நிறுத்துபவை.

நீர் நிறைந்த நதியின் கரையில் நடக்கும்பொழுது , ஒவ்வொரு மரத்தையும், பூச்சிகளைத் தேடி பிடித்து சாப்பிடும் பறவைகளையும், வாலை நிமிர்த்தி வைத்துக்கொண்டு நிற்கும் அணிலையும் நின்று பார்த்து ரசிக்கிறோம். “இந்தச் செடியில் நேற்று இந்த பூ இருந்த மாதிரி தெரியவில்லையே”  என்று அதிசியத்துப் போவோம்.  இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை வாசிப்பது அப்படி நதியின் கரையில்  நடப்பதை போன்ற அனுபவம்தான்.

கல்வி என்ற கதையில் , தலைப்பிலேயே அசோகமித்திரனின் அங்கதம்  தெரிகிறது.  ஒரு எட்டு வயது சிறுமி காலையில் புத்தகப் பெட்டியையும், தண்ணீரையும், சாப்பாட்டு  பையையும், எடுத்துக்கொண்டு ரிக்க்ஷாவில் மற்ற பெண்களுக்கு நடுவில் சிரமத்துடன் அமர்ந்துகொண்டு பள்ளிக்கு செல்லும் புறப்பாட்டுடன் ஆரம்பிக்கும் கதை, பள்ளியில் அவள் படும் அவஸ்தைகளையே அவளுக்கு கிடைக்கும் கல்வியாக சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. அவளுடன் பயணம் செய்யும் பெரிய வகுப்பு படிக்கும் பெண்கள் , தண்ணீர் குடிக்கும் இடத்தில் அவள் மேல் தண்ணீர் தெளிக்கிறார்கள். ஒருவள் , வாயில் இருக்கும் நீரை அப்படியே அவள் மேல் துப்புகிறாள். இப்படி பல தொந்தரவுகளுக்கு  ஆளாகும் அவள், அசதியாக வகுப்பில் ஒரு நாள் தூங்கிவிட , மிஸ் அடிக்க, சொக்காய் சாக்ஸ் என்று எல்லாவற்றையும் நனைத்து விடுகிறாள். மகளுக்குப் பரிந்து பேச அவள் தந்தை வந்து மேலாளரை பார்த்துவிட்டு செல்ல, அந்த டீச்சர் அவளுக்கு பயங்கரமான பகையாளியாகிவிடுகிறார். ரிக் ஷாக்காரன் தவறால்,  ஒரு நாள் பள்ளிக்குத் தாமதமாக வர,  இங்கிலிஷ் மிஸ் அவளை நாள் முழுவதும் வகுப்பிற்கு வெளியே நின்று பாடம் கவனிக்க வைத்துவிடுகிறாள். வெளியே நின்றாலும், ஆசிரியர்களிடம் இரண்டு விரல்களை காட்டித்தான்  தொலைதூரத்தில் இருக்கும் பாத்ரூமிற்கு செல்ல வேண்டும். பாத்ரூமுக்குச் செல்லும் வழியில் , வெய்யில் தாங்காமல் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறாள். மயக்கம் போட்ட மகள்,  வீட்டில் இரண்டு நாள் ஒய்வு எடுக்க,  அவளது புத்தகப் பெட்டியையும், சாப்பாட்டுப் பையையும் வாங்க, அவள் அம்மா பள்ளிக்கு வருகிறாள். அவரிடம்,டேர்ம் கட்டணம், அந்தக்  கட்டணம் இந்தக்  கட்டணம் என்று வசூலிப்பதில் ஹெட் மிஸ்டிரஸ் குறியாக இருக்கிறார்.  (1979-ல் எழுதப்பட்ட இந்தக் கதை இன்றையச் சூழலுக்கும் பொருந்தும்).

புண் உமிழ் குருதி எனும் தலைப்புக் கதையில் , பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மாணவன் , கிடைக்கும் மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், பெயிண்ட் அடித்து சம்பாதிக்கிறான். பெயிண்ட் டப்பாவை வைத்துக்கொண்டு பஸ்ஸில் பயணம் செய்யும் அவன்,  யார் மேலும் படாமல் இருக்க சிரமப்படுவதை பார்த்து,   ஒரு பெரியவர்  தனது அருகில் அமர இடம் கொடுக்கிறார், இறங்கியதும்தான் தெரிகிறது,  அவன் வைத்திருந்த பதினைந்து ரூபாயைக் காணவில்லை என்று.  அந்த பஸ்ஸில் திரும்பவும் ஏறி,   தொலைந்த பணத்தை தேட, கண்டக்டர் அந்த பெரியவர்தான் எடுத்திருப்பார் என்று திருடுவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்று ஒரு வாழ்க்கைத் தத்துவமும் சொல்கிறார்.  மூன்று மாதத்திற்கு அப்புறம் அந்த வயதான பெரியவரை கண்ணகி சிலை அருகே பார்க்கிறான்.  பார்த்ததும் என்ன ஏது என்று சொல்லாமல் அவரை அடிக்கிறான். அவனோடு , வழியில் செல்பவர்களும் அடிப்பதற்கு  சேர்ந்து கொள்கிறார்கள்.  அடி வாங்கி, கிழிந்த சட்டையை சரி செய்யும் கிழவர்   “நீ பஸ்ஸை விட்டு போனப்பறம், நீ கஷ்டப்பட்டு படிக்கிறதை பற்றி நிறைய தடவை நினைச்சு பார்த்தேன், ஆனா , நீ என்ன அடிப்பேன் எதிர் பார்க்கல”  என்பார். அவர் காசு எடுத்தாரா என்ற கேள்விக்கெல்லாம், கதையில் பதில் இல்லை. சூழ்நிலையை வைத்து , நாம் ஒருவரை எப்படி புரிந்துகொள்கிறோம் என்ற ஒரு புரிதலை,  கதை வாசகனுக்கு  கொடுக்கிறது.

திரை என்ற கதையில் , அந்த உயரமான பெண்ணை, வெற்றிலை பாக்கு விற்கும் கடையில்  வைத்து அவன் பார்க்கிறான்.  வெட்கத்துடன் காதல் கொள்கிறான். அவளுடைய உடலமைப்பு காரியாலயத்தில் வேலை செய்பவள் போல் இல்லை என்று தீர்மானம் செய்துகொள்கிறான். அவளது பெரிய கண்களும், நீண்ட கூந்தலும்  நேரில் பார்க்க நன்றாக இருக்கிறது, ஆனால்  கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பைக் கொடுக்காது என்று அனுமானம் செய்து கொள்கிறான். தனி அறையில் தங்கி, வேலை பார்த்து மாதம் ஐம்பது ரூபாய் பெற்றோருக்கு அனுப்பும் அமைதியான வாழ்க்கை , அவளைத் திருமணம் செய்வதால் குலைந்துவிடாதா என்று தனுக்குத் தானே கேள்வி கேட்டுக்கொள்கிறான். அவளை நேரில் சென்று பார்த்துப் பேச தயங்கும் அவன்,   திரையை விளக்கி செல்லும்பொழுது அவள் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்படுகிறாள்.

குடும்பத்  தலைவருக்கு, அவர் அலமாரியில்  வைத்திருந்த எழுபத்தெட்டு ரூபாய் காணாமல் போய் விடுகிறது. 78  என்று தலைப்பிட்ட கதையில் தொலைந்த பணம் கிடைத்ததா என்பதும் , யார் எடுத்தார் என்பதும் கதையின்  அடிநாதம் அல்ல. சீட்டுக் கம்பெனியில் கடன்  வாங்கி ஒரு சிக்கலை முறித்து இன்னொரு சிக்கலை உருவாக்கிக்கொள்ளும் நடுத்தர மக்களின் வாழ்க்கை, எண்பதுகளின் விலை வாசி, திருடனைக் கூட கண்ணே முத்தே என்று சொல்ல வைக்கும் பண்பாடு என்று யதார்த்தத்தையும், மனிதனின் மன நிலையையும்   அசோகமித்திரனின் நுணுக்கமான எழுத்து அலசி எடுக்கிறது.

கடைசி காலத்தில் புண்ணியம் தேட காசிக்குச் செல்வார்கள். இப்படிஅடிப்படை சிந்தனை கொண்ட நமக்கு, அம்மாவைத்தேடி கதையில்,  அசோகமித்திரன் கதையோடு கதையாக சில கேள்விகளையும், யோசனைகளையும் நம்  முன் வைக்கிறார். காசியில் பத்தடி நடந்தால் இரண்டு படி ஏறவேண்டும். சாவதற்கு என்று இங்கு வந்தால்கூட , காலை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  பொதுவாக ஈரத்துணியுடன் சுப காரியங்கள் செய்யக்கூடாது. ஆற்றங்கரை கோயில் அதற்கு ஒரு விதிவிலக்கு. எப்போதும் சாவை நினைவு படுத்தும் இந்த ஊரிலும் பிறந்தவர்கள் இருப்பார்கள். அப்பா, அம்மா இறந்தவர்கள் இந்த ஊருக்கு வந்தால் எள்ளும் தண்ணீரும் தெளிக்க வேண்டும். அப்படியென்றால் அப்பா அம்மா உயிருடன் உள்ளவர்கள் இங்கு வந்தால்?

‘சினிமாவுக்குப் போன சென்ஸாரு’ என்ற கதையை படிக்கும்பொழுது  1979-1980-களில் வந்த படங்களை வைத்து வரும் உரையாடலில் குலுங்க குலுங்க சிரிக்க வேண்டியதாயிருந்தது.

பாதுகாப்பு எனும் கதையில், பஸ்ஸில் ஒரே சீட்டில் சேர்ந்து அமரவேண்டும் என்று நினைக்கும் இரு  தோழிகள் , ஒருவளுக்கு வந்த மிரட்டும் காதல் கடிதத்தை இருவரும் படிக்கிறார்கள். படித்த கடிதத்தை கிழித்து தூக்கி எறிந்தால்,  ஒரு சிறு துண்டு அடுத்தவன் கையில் கிடைத்தால்கூட ரகசியம் தெரிந்து அம்பலமாகிவிடும் என்று நினைப்பவள் ஒருத்தி. ‘ஒழுங்கா என் வழிக்கு வான்னா என்ன அர்த்தம்’ என்று வெகுளியாக கேட்கும் இன்னொருத்தி.

இரண்டே இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள, ‘அது’ கதை, தேவையான அளவு திகிலை அள்ளித் தருகிறது (ஆம். அசோகமித்திரனும் பேய்க் கதை எழுதியுள்ளார்).

என்னிடம் இருக்கும் ‘புண் உமிழ் குருதி’,  காலவரிசைப்படி கவிதா வெளியீடு வெளியிட்ட நான்காவது தொகுப்பு.   இதற்கு முந்தைய மூன்று பதிப்புகளும் என்னிடம் இல்லை. அடுத்த முறை ஹூஸ்டன் மீனாட்சியம்மன் கோவில் சென்றால் அங்கு உள்ள நூலகத்தில் (அதுதான் புத்தகக் கடையும்), மற்ற  தொகுப்புகளையும் வாங்க வேண்டும்.  எஸ் ராமகிருஷ்ணன், தமிழில் தலை சிறந்த சிறுகதைகள் என்று 100 கதைகளைக் குறிப்பிட்டுள்ளார் அவற்றில் ஒன்றான. அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ சிறுகதை மூன்றாவது தொகுப்பில்தான் உள்ளது.

(முதல் பிரசுரம் – FB-யில் 08/31/2018)

Leave a comment