(மறுபிரசுரம்)
ஏர்னெஷ்ட் ஹெமிங்க்வே, கற்றுக்கொடுத்த வழியில், சில வருடங்களுக்கு முன்னர், ஆறு வார்த்தைகளில் கதைகள் என்று, எனக்கென்று இருக்கும் ரசிகர்களுக்கு, தமிழில் எழுதி வந்தேன். அவைகளைக் கதைகள் என்று சொல்லலாமா, வெற்று எண்ணங்கள் என்று வகைப்படத்தலாமா, காலம் கடந்து அவைகள் நிற்குமா, நிற்காதா , இலக்கியமா என்று கேள்விகள் கேட்டால், அதை விமர்சகர்களிடமும், வாசகர்களிடமும் விட்டுவிடுகிறேன். எனக்கிருந்த ஒரு குழப்பம், இன்றைய வாழ்க்கையை பிற்காலத்தில் வாசிப்பவன் படித்தால், அது அவ்வளவு தெளிவாக எடுத்து வைக்காது. ஆனால், அன்றைய நடப்பை சொல்வதில், வார்த்தைகள் சரியாக அமைந்துவிட்டால், அது நறுக்கென்று சொல்கிறது என்றே நினைக்கிறேன். ஒரு உவகையை வரவைத்துவிடுகிறது. கேள்விகள் கேட்கிறது. சிந்திக்க வைக்கிறது. பிரதமர் மோடி இன்று இருந்த பணம், நாளைக்கு செல்லாது என்று அறிவித்த மறு நாள், சிறு கிராமத்தில் இருந்து, சென்னை நகரில் நேர்முகத்திற்கு சென்ற பையன் ஒருவன் கையில் ஐநூறு ரூபாய் மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் என்ன என்று யோசித்தபொழுது இப்படி எழுதினேன்.
போன பயைன் திரும்பவில்லை. கையில் செல்லாக்காசு.
நான் விட்டுவிட்ட நிகழ்வுகளையும், சுற்றுப்புரத்தையும், வார்த்தைகளையும் நிரப்பிக்கொண்டு, வாசகர்கள் புரிந்துகொண்டார்கள்.
சில சமயங்களில் காதலையும், மொன்னைக் கத்தியை வைத்துக்கொண்டு வெட்டும் வாழ்க்கையையும் சொல்ல முயன்றிருக்கிறேன். கிராமங்களில் கூரைவீடுகள் குறைந்துவிட்டன. பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று படித்தவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் எண்ணிக்கையில் கூடிவிட்டார்கள். ஆனால், இந்த இனம் பார்த்துக் கல்யாணம் செய்வது, இருந்துகொண்டே இருக்கிறது. வேறு இனம் என்பதால், சுற்றி நின்று அனைவரும் கைகட்டிக்கொண்டு பார்த்திருக்க, காதலனை வெட்டிச்சாய்க்கும் கூட்டம், காதலியை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து தன் இனத்தைச் சார்ந்துவனுடன் மணமுடித்து மகிழ்வது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மானுடம் எல்லாம் மாறி, சமுத்துவம் சமுதாயம் என்று ஆன பின்னர், காதல் கல்யாணங்கள் நடந்தாலும் , வாழ்க்கையும் அதன் பங்கிற்கு வெட்டிச் சாய்க்கவே செய்கிறது. அந்த யோசனையில், ஒரு முறை, சில ஆறு வார்த்தைகள் எழுதினேன். சில உதாரணங்கள் –
பையன் பஞ்சாபி. பெண் தமிழ். குழந்தை ஊமை.
**
உள்ளங்கள் இணைய ஊருக்கு சம்மதம். வருகின்ற நோய்க்கு?
**
கோவிட்-19 வந்து வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. நியூ நார்மல் என்று சொல்லி, சமாதனம் செய்கிறார்கள். பேசவும் மனமில்லை. பேசாமல் இருக்கவும் முடியவில்லை. ஒரு நாள் இல்லையென்றாலும் ஒரு நாள், நடை செல்லும் மாலை வேலையில், நினைவுகள் வந்து பெரும் அலையெனத் தாக்குகின்றது. சினிமாவில் என்றாவது ஒரு நாள் தானும் ஒரு இயக்குனர் ஆவோம் என்ற கனவுகளுடன் இருக்கும் நண்பன், இப்பொழுது துணை இயக்குனராக இருப்பதற்கு கூட வாய்ப்பு இல்லை என்று நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஒரே ஒரு நாள் குடித்தனம் நட்ததிவிட்டு , குழந்தையையும் கொடுத்துவிட்டு, சென்றவன் சென்றவன்தான். அப்படி இருக்கும் மகள் ஒருத்தி இப்பொழுது சாப்பாட்டுக்கு என்ன செய்வாள் என்று நினைக்கும் நாட்களில் உறங்க முடிவதில்லை. என் துக்கத்தையும் மகிழ்வையும் ஆற்றாமையையும் ஆறு வார்த்தைகளோ, அறுபது வார்த்தைகளோ எழுதி, எழுதி கடக்க முயல்கிறேன். ஒரு குழந்தையின் பார்வையில், கோவிட்-19 , எப்படி பாதித்துள்ளது என்று ஆறு வார்த்தைகளில், ஏழு கதைகள் (எண்ணங்களை) இன்று எழுதினேன்.
வீட்டுப் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை. கோவில் பிள்ளையார் தனியாக.
**
அக்காவின் கல்யாணம் ஜூமில். அவரவர் வீட்டில் சாப்பாடு.
**
வராத மாமா வந்து , இருமினார். குடும்பமே ஆஸ்பத்திரியில்.
**
ஊர் சுற்றும் அப்பா வீட்டில். இன்னொரு பாப்பா.
**
நான் சமைக்கிறேன். அம்மா கழுவுகிறார். அப்பா சாப்பிடுகிறார்.
**
ஜூமில் பாடம். யார் நாற்றமும் யாருக்கும் இல்லை.
**
அப்பாவின் கதை பத்திரிகையில். அம்மாவின் சமையல் யூடுயூபில்.
**
(முதல் பிரசுரம் FB பதிவாக – 08/29/2020. Covid காலத்தை பதிவு செய்ய இந்தப் பதிவையும், டிசம்பர் 2020-ல் கி.ரா-வுடன் zoom-ல் உரையாடியபொழுது எடுத்த படத்தையும் மீள்பதிவு செய்கிறேன்).

Leave a comment