இத்தாலியில் மதாரின் மாயப்பாறை

Published by

on

நான் குடும்ப சகிதமாக இத்தாலிக்குச் செல்கிறேன் என்று சொன்னதும், ஒருவர் விடாமல் சொன்னது, புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்றுதான். ரோம், ஃப்ளோரன்ஸ், வெனிஸ், பைசா என்று எந்த நகரில் சுற்றினாலும், எடுத்த புகைப்படங்கள்  அவ்வளவு அழகாக இருந்தன.  அந்தப் புகைப்படங்களின் அழகுக்கு காரணம் இத்தாலி நகர வீடுகளின் அழகா இல்லை ஐந்து அல்லது ஆறு மாடிக் கட்டிடங்களே உள்ள வீதிகளில் மேல் நோக்கிப் பார்த்தாலே தெரியும் நீல வானமா? எனக்கு என்னவோ நீலவானம்தான் என்று தோன்றுகிறது. மதார் அவரது சமையல் கவிதையில், சன்னலை திறந்து வைத்து வானத்தின் மேற்பார்வையில் சமைக்கும் சமையலால் வாழ்க்கை ருசியாகிறது என்கிறார்.  வாழ்க்கையையே ருசியாக்கும் வானம், ஒரு டிஜிட்டல் போட்டோவை அழகுபடுத்ததா என்ன?. 

சமைக்கும்போது 
சன்னலைத் திறந்துவிடுவேன்

மேகம் பார்த்தபடி எண்ணெய் ஊற்றுவேன்
வானம் பார்த்தபடி கடுகு, பருப்பு தாளிப்பேன்
குருவிக் கூவலினூடே வெங்காய் வதங்கல்

வானத்தின் மேற்பார்வையில் சமையல் 
வாழ்க்கை கழிகிறது அழகாக
மிக ருசியாக

வெனிஸ் நகரத்தில் சாலைகள் என்பது நீரோடும் கடலின் கிளைகள்தான். தீவு தீவுகளாக இருக்கும் நகரை நடந்தே கடக்கலாம். இடையில் தீவுகளை இணைக்கும் பாலங்களில் ஏறவும் இறங்கவும் வேண்டும். கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தால் பாவம். நாங்கள் வளர்ந்த சஹாவுடன் சென்றதால் எங்களுக்கு வழிகாட்டவும் பெட்டி சுமக்கவும் உதவியாக இருந்தான். முன்னால் செல்லும் அவன், ராதாவும் நானும் சரியாக ஏறிவிட்டோமா இறங்கிவிட்டோமா என்று பார்த்துக்கொண்டே செல்வான். கவலைப்படாதே ,மதாரின் கவிதை என்னை வழி நடத்துகிறது என்று இரவு ஓய்வு  நேரத்தின்பொழுது வாசித்துக் காண்பித்தேன்.

எண்ணிக்கொண்டே 
படியில் ஏறும்போது
படியில் ஏறுவது
கஷ்டமாகத் தெரிகிறது

பாடிக்கொண்டே 
படியில் ஏறும்போது 
படியில் ஏறுவது 
கொஞ்சம் இலகுவாகிறது. 

நடந்துகொண்டே 
படியில் ஏறுவதே
ஏறிவிட்டபோது
தெரிகிறது 
படியே தெரியாதது. 

“அப்படியா, படி இருப்பதே தெரியாமல் ஏறி விழாமல் இருந்தால் சரி” என்று சிரித்தான்.

இடை இடையே எம். கோபாலகிருஷ்ணன் நிகழ்வு இருக்கிறது.  படிக்கவேயில்லையே என்று எனக்குள் இருந்த மாணவன் கேட்டுக்கொண்டே இருந்தான். இலக்கிய குழுமத்தில் நிர்மலின் மடடுறத்தல் ஒரு புறம். ஜாஜா, நிகழ்வில் மாற்றம் எதுவும் இல்லையே என்று தீர்மானம் செய்வது இன்னொரு தூண்டல்.  மதாரின் மாயப்பாறை தொகுதியை வாசித்தால், அவர் அதற்கு மேல்.

மச்லி

அது இறந்துபோன புலி

அதைப்போலத்தான்
இறக்கவேண்டும்
என்று அவன் சொன்னபோது

நான் விளங்கிக்கொண்டேன்

அதைப்போலத்தான்
வாழ வேண்டும் என்பதை

மச்லி

அது ஒரு வாழும் புலி

அப்படித்தான் 
வாழ வேண்டும் 
என்று அவன் சொன்னான்

மச்லிக்கு 
மரணமில்லை 
மச்லி 
இன்னும் பிறக்கவில்லை. 

என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் எழுத்தாள நண்பர்கள். அவர்கள் பயணம் சென்றாலும் எழுதுகிறார்கள். நானோ அவர்களது வாசகன். எனது இத்தாலிப் பயணத்தில் பகலில் சுற்றவும் இரவில் அவர்கள் எழுதுவதை வாசிக்கவும் செய்தேன். இரவு நேர அமைதியில் மதாரின் மாயப்பாறை கவிதை தொகுப்பை ரசித்து வாசித்தேன். அவர் எந்தக் கவிதையில் என்னுள் நுழைந்தார் என்றால் இதுதான் , இதுதான் என்று சொல்வேன்.

சரியாக
நீ தாய்ப்பால் கொடுப்பதற்கு 
அரை நிமிடம் முன்பு
முத்தமிடுகிறேன் 
என் இந்த அன்பு 
நம் பிள்ளையின் உடலில் சேரும்தானே 

Leave a comment