ஜெயமோகனுக்காக, தனது கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்று சொன்ன ரீடர் செந்திலை நண்பர்களுக்குத் தெரியும். இந்த வருடம் ஜனவரியில் பொங்கல் சமயத்தில் ஒரு நாள், அவரை அழைத்திருந்தேன். “சார், ஆசான் அப்பப்ப சென்னைக்கு வருவாரு. நான் போய் பார்த்திட்டு வருவேன். நீங்க போன அக்டோபரில், அவரை கொண்டுபோய் அமெரிக்காவில வைச்சுக்கிட்டீங்க. நான் , நாகர்கோவில் போய் அவர் வீட்டு வாசப்படில பத்து நிமிஷம் உட்கார்ந்திருந்தேன்.” என்றார். வெண்முரசை , முழுக்க முடித்த கையோடு, மீண்டும் முதற்கனலில் இருந்து ஆரம்பித்து வாசிக்கும் வாசகர் அவர். காவியத்தின் மீள்வாசிப்புடன், இந்த முறை தி. ஜானகிராமன் நாவல்களை வாசிப்பதாகவும், மோகமுள், அம்மா வந்தாள் எல்லாம் ஈர்ப்பு உள்ள நடையில் உள்ளது என்றும் சொன்னார். அப்படி ஒரு நடையை அவர் எதிர்பார்க்கவில்லை என்ற ஆச்சிரியத்தில் இருந்தார்.
நான் அதுசமயம், ரவிசுப்பிரமணியனின், “ஓசை உடைந்த கவிதைகளில் இசை” கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தேன். தி. ஜானகிராமனின் நாத மோக உபாசனை என்ற கட்டுரையிலிருந்து , “மோகமுள் நாவல் – காதலா, சங்கீதமா…இல்லை கைக்கிளையா, பெருந்திணையா, மருத நிலத்துப் பண்பாட்டுக் கலாச்சாரப் பதிவா, ஆண் பெண் உறவா, மேன்மையும் பிணக்கும் விசித்திரமும் அல்பமும் கொண்ட பாத்திர விசேஷங்கள? எப்படி வகைப்படுத்தலாம்? எல்லாமும் சேர்ந்த ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரிதான் அது” என்பதை பேசும் சமயமே குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தேன். ஜெயமோகன், அம்மா வந்தாள் நாவலை மூன்றாவது முறையாக வாசித்தது ஒரு கட்டுரையாக உள்ளது என்று அதன் இணைப்பையும் அனுப்பி வைத்தேன்.
அன்று அவரால் தூண்டப்பட்டு, நானும் தி.ஜானகிராமனின் , செம்பருத்தி, அமிர்தம், பிடிகருணை, அபூர்வ மனிதர்கள் என திரும்பவும் இந்த வருடம் ஜனவரி பிப்ரவரியில் இடம் வலம் என சென்று வந்தேன்.
நான் ஒன்றும் யாரையும் காரியம் இல்லாமல் சும்மா அழைப்பவன் இல்லையே. “இங்க பாருங்க செந்தில், நம்ம ரங்கன் சார் இருக்காரில்ல, ஜெயகாந்தன் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செஞ்சாரில்ல, அவருக்கு இரண்டு புத்தகங்கள் வாங்கனும் உதவி செய்யமுடியுமா ?” எனக் கேட்டேன்.
“என்ன புக்குங்க சார், வாங்கிருவோம்”
“R. சூடாமணி சிறுகதைகள் – இரண்டு தொகுப்புகள் மற்றும் தேவனின் நாவல் லக்ஷ்மி கடாட்சம் – மூன்று தொகுப்புகள்”
ஒரு வாரத்தில் லஷ்மி கடாட்சம் நூலை வாங்கிவிட்டு, நூலின் அட்டைப்படத்தை புகைப்படமாக வாட்சப்பில் அனுப்பினார். “இது மூன்று தொகுப்புகள் என்று நாம் பேசிக்கொண்ட ஞாபகம். ஒன்றுதான் கிடைத்ததா? “ என குறுஞ்செய்தியில் கேட்டேன். “Sir, மூன்று தொகுதியும் ஒரே புத்தகத்தில் உள்ளது 750 பக்கங்கள்” என்ற விளக்கம் பதிலாக வந்தது.

ஆர். சூடாமணி – சிறுகதை தொகுப்பு கிடைத்தபாடில்லை என்று முடிவு செய்து தேவனின் நாவலை மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும் நண்பர் ஒருவரிடம் ரங்கனுக்கு கொடுத்தனுப்பலாம் என மனதை தேற்றியிருந்த நாளில், செந்தில் ஒலிவடிவில் ஆர். சூடாமணி நூலும் கிடைத்துவிட்டது என மகிழ்வான செய்தியை அனுப்பியிருந்தார்.

அமெரிக்க நண்பர் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னர், நினைத்த புத்தகங்கள் வாங்கி சென்னையில் அவருக்கு கூரியர் அனுப்பியாகிவிட்டது. செந்திலை அழைத்து, “எவ்வளவு காசு அனுப்பட்டும் ?” என்றேன்.
“நண்பர்களுக்கிடையில் புத்தகம் வாங்கிக் கொடுப்பதற்கு எல்லாம் எதற்கா காசு “ என்று பிடிவாதம் பிடித்தார். அவர் JM Books என்ற புத்தகக்கடையை திருவல்லிக்கேணியில் ஒரு நல்ல வாசகனாக நடத்தி வருபவர். நான் மேலும் மேலும் அழுத்தம் கொடுக்க 900 ரூபாய் வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டார்.

இன்று அந்த இரு புத்தகங்களும், அதற்கான அமெரிக்க வாசகனை நோக்கி பயணிக்கும். வாசிப்பு மாறாமல் ஒளிர்ந்துகொண்டு இருப்பது ரீடர் செந்தில் போன்ற நட்சித்திர வாசகர்களால்தான்.

Leave a comment