(மறு பிரசுரம்)
அன்று அம்மா தினம். அம்மாவிற்கு, நான் அம்மாதின வாழ்த்தோ, ஒரு சின்னப் பரிசோ கொடுக்காதது பற்றிச் செல்லக் கோபம். எனக்கோ அம்மாவின் மீது கோபம். அம்மாவிற்குத்தெரியும், எனது கோபத்திற்குக் காரணம், மாலதிக்கு அவள் அம்மாதின வாழ்த்துச் சொல்லவில்லை என்பதுதான்.
எனக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த மாலதி என்னும் ஆசிரியரை அழைத்து, அம்மாதினத்தன்று கூப்பிட்டு, ” அம்மாதின வாழ்த்துக்கள்” சொன்னால், “போடி லூசு” என்றாள்.
“நீ என்றைக்கு மாலதியைக் கூப்பிட்டு அம்மாதின வாழ்த்துக்கள் சொல்கிறாயோ, அன்றைக்குத்தான் உனக்கும் வாழ்த்துச் சொல்லுவேன்” என்றால், அம்மாவும் “போடி லூசு” என்கிறாள்.
நானும் மாலதியும் பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். மாலதி அன்பானவள். அன்பு என்றால் அப்படி ஒரு அன்பு. பகையாளிகள்கூட நண்பர்கள் ஆகிவிடுவார்கள். அவள் பூ வைத்துக்கொண்டால், அது அவளது அன்புக்கு அடிமையாகி, வாடுவதற்கு, நாட்கள் அல்ல வாரங்கள் ஆகும், என்று ஒருமுறை சொன்னதற்கு, “கனவில் மிதக்கும் கவிதாயினி” என்று எனக்கு பட்டமிட்டுவிட்டு, கொஞ்சமாக வெட்கப்பட்டாள்.
மாலதி அன்பானவள் மட்டுமல்ல. அறிவானவள். குறிப்பாக கணிதத்தில். ரூபிக் கூயூபை 20 செகண்டுகளில், சால்வ் செய்துவிடுவாள். கேட்கின்ற டிசைன்களை கண்கள் சிமிட்டுகின்ற நேரங்களில், போட்டுக் காண்பிப்பாள். எப்படி உனக்கு இப்படி அறிவு என்று கேட்டால், அதற்குக் காலையில் எழுந்ததும் பல்லை விலக்கிட்டு காப்பி குடிக்கிறேன் என்பாள். இப்படி என்னைக் குறிவைத்துக் கிண்டலாக பதில் சொன்னாலும், சாதாரணமான என்னையும், கணக்கில், அசாதாரண மதிப்பெண்கள் பெற பயிற்சி கொடுத்தாள்.
இந்தக் கணக்குப்புலிக்கு பதினொன்றாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து, விடுமுறை தினங்களில் ஒரு நாள், உள்ளூர்த் திரையரங்கில், நானும் மாலதியும் பகல் இரண்டு மணி ஆட்டத்திற்குச் சென்றிருந்தோம். இடைவேளைக்கு அப்புறம், இரண்டாவது பாகம் திரையில் ஓடிக்கொண்டிருந்தபோது, மாலதி, வெளியே சென்று வருவதாகச் சொன்னாள். படத்தின் கதையில் மூழ்கியிருந்த என்னை, தொந்தரவு செய்ய மனமில்லாத மாலதி தனியாகவே சென்றாள்.
இருபது நிமடம் கழித்து திரும்பி வந்த மாலதி கொஞ்சம் படபடப்புடன் இருந்தாள். “வா, இப்பொழுதே வெளியே போவோம்” என்றாள். நெற்றியிலும், உடம்பிலும் வியர்வை நிறைந்த மாலதியைப் பார்த்த நானும், ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டு வெளியேறச் சம்மதித்தேன்..
எங்கள் வீட்டை அடைந்ததும், ஆசுவாசப்படுத்திக்கொண்ட மாலதி சொன்னாள். எல்லோரும் படம் பார்த்துக்கொண்டிருந்த அந்த மயான அமைதியில், பெண்கள் பாத்ரூமிற்கே, ஒளிந்திருந்த கயவன் ஒருவன் கை வைத்திருக்கிறான். சுதாரிப்பான மாலதி, தற்காப்புப் பயிற்சி பெற்றிருந்த மாலதி, தன்னைத் தொட்ட கெட்டவனை, முக்கிய இடத்தில் ஒரு உதை விட்டு, தப்பித்து விட்டாள்.
அதையெல்லாம் மறந்துவிட்டதுபோலத்தான் அதற்கு அப்புறமும் மாலதி நடந்துகொண்டாள். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். தனக்குப் பிடித்ததுபோல், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றாள். படித்த கல்லூரியிலேயே கணிதப்பேராசிரியையாக ஆனாள். அவளிடம் கணிதம் பயின்ற பலர், ஹார்வர்டில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் கூகுலில் முக்கியப் பதிவியில் இருக்கிறார்கள்.அடுத்தக் கல்லூரி முதல்வர் அவள்தான் என்று நிர்வாகம் அவளைத் தயார் படுத்திக்கொண்டிருக்கிறது.
பலகுழந்தைகளை, பெரும் ஆளுமைகளாக உருவாக்கிய மாலதி, இன்றுவரை கல்யாணமே செய்து கொள்ளவில்லை. அந்த தியேட்டர் சம்பவம் உன் மனதைப் பாதித்துவிட்டதா, ஆண்களின் மேல் வெறுப்பு ஏற்பட்டுவிட்டதா, என்று கேட்டால், அதற்கும் போடி லூசு என்றுதான் புன்னகை செய்கிறாள்.
(முதல் பிரசுரம் – FB/06-01-2014)

Leave a comment