யமுனை ஆற்றிலே

Published by

on

(மறு ஆக்கம்)

மும்பை மாமாவின் போனிற்காகக் காத்திருந்தேன். ஏன் எல்லோரும் அந்த மாமாவைப்போல் யோசிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர் ஒருவரிடமிருந்துதான், இந்த இரண்டு நாட்களாக அம்மாவிடமிருந்து திட்டுகளாக வாங்கிக்கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்ற முடியும். பத்தாம் வகுப்பில் , 500-க்கு 175 வாங்கிய என் அம்மா, எனது 375-ஐத் தாங்கமுடியாமல் அங்கலாயப்பட்டாள். குடியே முழுகிவிட்டதுபோல், ஒப்பாரி வைத்தாள். எனக்குப் பிடித்தப் பாட்டை  அவள் காதுபடப் பாடினால், இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று கூப்பாடு போட்டாள். எழுநூறுக்கும் அதிகமான பேர், 497க்குமேல் வாங்கும்பொழுது , உன்னால் ஏன் நானூறுக்குமேல்கூட வாங்கமுடியவில்லை என்று வசைபாடினாள்.

அம்மா இப்படி என்றால், அப்பா திட்டவே இல்லை. டிகிரி படித்தால் போதும், ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிடலாம் என்று நினைப்பவர் அவர். 375 வாங்கும் இவள், டிகிரி படித்துவிடுவாள் என்ற நம்பிக்கையினாலோ என்னவோ, திட்டவே இல்லை. அப்பாவின் இந்த போக்கும் எனக்குப் பிடிப்பதில்லை.

மும்பை மாமாதான் சரியான ஆள். அவர் திட்டினாலும் சரி, பாராட்டினாலும் சரி ஓர் அர்த்தம் இருக்கும். விடுமுறை ஆரம்பித்த நாள்முதல், நான்தான் வீட்டில் சமையல். அப்பாவிற்குத் தோசை வார்த்துகொண்டிருந்தேன். அம்மாவின் செல்போனில் சுப்ரபாதம் ஒலித்தது. அது மாமாவின் அழைப்பாகத்தான் இருக்கும். போனை எடுத்ததுமே, அம்மா,  உன் மருமகளின் இலட்சணத்தைக் கேட்டாயா என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டாள். அம்மாவின் புலம்பல் அடங்கியபிறகு, மாமா சொன்னார்.

“சமீபத்தில் டாலஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னால் அதிபர்  ஜார்ஜ் புஸ்  பேசுனதை கேட்டயா? அதுல இப்படி சொல்லியிருப்பாரு. நிறைய மதிப்பெண்கள் வாங்கி ஹானர்ஸ் டிகிரி வாங்கியிருந்தால் உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஜஸ்ட் பாஸ் மார்க் மாணவர்களாக இருப்பின், நீங்கள் நாட்டின் அதிபராக வாய்ப்பிருக்கிறது” என்றார் மாமா.

“போனை மருமகளிடம் கொடு!”

“செல்லம் , நீ பாடிக் கேட்டு ரொம்ப நாளுச்சு. ஒரு பாட்டுப் பாடு! ” .

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே… “

(முதல் பிரசுரம் : FB:05/23/2015 – தலைப்பை மாற்றி இறுதியை கொஞ்சம் திருத்தினேன்)

Leave a comment