கொட்டுக்காளி – யாவரும் பார்க்கலாம்

Published by

on

விஜய் ரெங்கராஜன் எழுதிய வெறியாட்டுக் கதையில், கதை சொல்லி ஷண்முகம், தமிழாசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப்படி சொல்கிறான்.  //வேலன் வெறியாட்டு சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு சடங்கு முறை. தன் பெண் மெலிந்துகொண்டிருக்கிறாள் எனக் கண்டு, யாரோ ஒருவன் மீது காதல்கொண்டிருக்கலாம் என்று எண்ணி, அத்தலைவனின் நினைவை அவளிடமிருந்து அகற்றுவதற்காக செய்யும் சடங்காகும். //  செயற்கை நுண்ணறிவு வந்து தன் வேலையே பறிபோகும் என பதறிக்கொண்டிருக்கும் ஒருவன், இந்த சங்ககாலச் சடங்கு இன்றும் வழக்கில் இருக்கிறது என்பதை பி.எஸ். வினோத்ராஜ்  இயக்கத்தில் வெளிவந்திருக்கும் கொட்டுக்காளி படத்தில் கண்டால் அதிர்வானா ? வெவ்வேறு பார்வையாளனாக என்னை நான் முன்வைத்து பார்க்கிறேன்.

அதிகாலையில் நீர் சொட்டும் நீண்ட கூந்தலுடன் அன்னை ஒருவர் தெய்வத்தை வழிபட, பறவைகளின் கானங்கள், பூச்சிகளின் ரீங்காரங்கள் பின்னனியில் படம் ஆரம்பிக்கிறது. எள்ளலுவும் சிதறாமல் கருக்கல் எனும் அதிகாலை ஒளியையும் அப்படியே உள்வாங்கிய கேமராவும் பார்ப்பவனின் கண்ணை குளிர்விக்கிறது. அன்னை நடந்து செல்ல நாமும் பின் தொடர்ந்தால், அவர் குடும்பத்தார் ஒவ்வொருவரும் அறிமுகமாகிறார்கள்.  எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இயற்கையையும், வாழ்வையும் ரசிப்பவர்களை இந்த இடத்தில் விட்டுவிட்டால், படத்தின் மாந்தர்களுடன் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து இயற்கை எழில் பொங்கும் கிராமங்களையும், சூழலையும், அங்கு வாழும் மக்களையும் , அவர்களது நம்பிக்கைகளையும் கண்டுணர்ந்து அவரவர் வாழ்வின் அனுபவத்தின்படி சில சலனங்களை அடையலாம்.  

குழந்தைகள் ஒரு படத்தை பார்க்கலாமா என எப்பொழுதும்  நாம் முன் வைக்கும் கேள்வி. என்னுடன் தொடர் உரையாடலில் இருக்கும் மூன்று வயது துருவை நினைத்துப் பார்த்தேன்.  அவன் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு, காற்றில் அசையும் மரங்களின் இலைகளை ஒரு உவகையுடன் பார்ப்பான். வந்தமரும் பறவையையும், தலை தூக்கி பார்க்கும் அணிலையும் தன்னுடன் விளையாட வந்தவையென கண்கள் இரண்டும் மின்னச் சிரிப்பான். அப்படி நினைத்துப்பார்த்தால், அவன் இதில் வரும் கல்லுடன் கட்டுப்போட்ட தனது காலை விடுவிக்க துள்ளும் சேவல், ரோட்டை மறித்து நிற்கும் காளை, காளையின் திமில் மேல் அமரும் காகம் என ரசித்துப் பார்ப்பான். ஆவாரம் பூக்களையும், எருக்கஞ்செடிகளையும் , வாழைத் தோட்டங்களையும் ரசிக்கலாம். அதில் வரும் குடும்பம், அவர்களுக்குள் வரும் சர்ச்சைகள் போது என்ன செய்வான் ?என்ன கேள்விகள் கேட்பான். தெரியாது. அது அவனை குழப்பலாம் என  நானோ குடும்பத்தாரோ பார்க்க அனுமதிக்கமாட்டோம். ஆனால், குழந்தைகளின் முன்னர்தான் வாழ்க்கையில் எல்லாம் நடந்தேறுகிறது. படத்தில் இயக்குனர், ஒரு ஏழு அல்லது எட்டு வயது பையனையும் மற்றவர்களுடன் பயணிக்கவைக்கிறார். ஆட்டோவிலும், இரு சக்கர வாகனங்களிலும், தன் குடும்பம் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்பதை தவிர வேறு எதுவும் அவனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த நிகழ்வுகள் அவனது வளரும் சிந்தனைக்கு விதைகளாகலாம்.  பெரியவர்கள், வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப, அவன் உடன் வரும் சேவலுக்குத் தானியத்தை எடுத்து வந்து ஊட்டுகிறான். அணங்கென பயணம் செய்யும்  மீனா அக்கா அழ அவனும் அழுகிறான். அவள் சிரிக்க இவனும் சிரிக்கிறான். துருவை எடுத்துக்கொண்டு, குழந்தைகள் வீட்டிற்கு அழைத்துச் சென்றால், அவன் அவர்களை பார்த்துக் குதூகலம் ஆகிவிடுவான். படத்தில் வரும் சிறுவனை பார்த்து, துருவ் தன்னுடன் விளையாட வா என அழைக்கலாம். இல்லை அந்த அண்ணா இருக்கும் ஊருக்கு என்னை அழைத்துச் செல் என கேட்கலாம்.

எனது அமெரிக்க நண்பர்கள் தமிழ் / இந்தியப் படங்களில் எதிர்பாராமல் வரும் பாடல்களையும்,  நடனங்களையும் சொல்லி என்னிடம் கிண்டல் செய்வது உண்டு.  கொட்டுக்காளி படம் நான் வாழ்ந்த சூழலின் பின்னனி கொண்டது , நீங்கள் கிண்டல் செய்யும் படங்கள் போல் இல்லை என்று அவர்களிடம் அறிமுகப்படுத்த முடியும்.  அவர்கள் அந்தக் குறுகிய பாதையில் , ஆட்டோ ட்ரைவர், ரிவர்ஸில் செல்வதை கண்கொட்டாமல் பார்க்கலாம். ஸ்டார்ட் ஆகாத ஆட்டோவை , கயிறு கட்டி இழுத்து இஞ்சினை இயக்க வைக்கும் அவனது அறிவை மெச்சலாம். மளிகை சாமான் விற்கும் கடையில் பாட்டிலில் பெட்ரோல் கிடைப்பதை கண்டு, நடு ரோட்டில் வண்டி நின்று போனா, இவர்கள்தான் இந்த ஊரு AAA என்ற முடிவுக்கு வரலாம். கண்களை கொள்ளை கொள்ளும் மலைகளை கண்டு, அடுத்தமுறை அங்கு கேம்ப் செல்வோமா என கேட்கலாம். சேவலின் கழுத்தை அறுத்து அந்தப் பக்கம் வீசிட்டா,  பெண்ணின் அணங்கு நிலை எப்படி சரியாகும் என்று கேள்விகளை கேட்கலாம். ஆனால், நமக்கு சங்ககாலத்திலிருந்து இந்த முறைமை இருக்கிறது என்று வரலாற்றுப் பின்னனியுடன் ஆர்வத்தை புகுத்தி சொன்னால்,  புரிந்துகொண்டு மேலும் சில கேள்விகளுடன் விவாதங்களை தொடரலாம். 

அமேசான் ப்ரைமில், வாடகைக்கு எடுத்து வீட்டுத் திரையில்தான் கொட்டுக்காளி பார்த்தேன். தூரத்தில் இரண்டு மூன்று மலை அடுக்குகளும், அதன் முன்னர் நீண்ட சுவரும் இருக்கும் ஒரு காட்சியில், கேமரா முப்பது அல்லது நாற்பது வினாடிகள் நகராமல் நிற்கும். சஹா, எங்கள் வீட்டில் இருக்கும் எழுத்தாளர், அமெரிக்காவில் முழுதாக வளர்ந்த இரண்டாம் தலைமுறையின் பிரதிநிதி,  அது சமயம் என்னிடம் எதுவோ கேட்க வந்தார். அவரிடம் இந்தக் காட்சி பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டேன். இவ்வளவு நல்ல இயற்கையான மலைகளும் வாழ்வும் அங்கே உள்ளது, இடையில் சுவரை கட்டி பெண்களை அனுபவிக்க விடுவதில்லை என்று இயக்குனர் சொல்லாமல் சொல்கிறார் என்று படத்தின் பின்னனியை காற்றுவாக்கில் கேட்டதை வைத்து , அந்த ஒரு காட்சியின் வாயிலாக தனது அவதானிப்பை பகிர்ந்தார்.  

ரோட்டில் தெரியாத ஒருவர் அடிபட்டு ரத்தம் ஒழுக வீழ்ந்திருக்க, ஆட்டோப் பிடித்து அவரை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திருக்கு அழைத்தச் சென்ற மனிதாபிமானி என்றுதான்  எனது கல்லூரி நண்பரை அறிமுகப்படுத்தமுடியும். அவரிடம் இந்தப் படம் பார்த்தேன் என்று சொன்னேன். ஒரு காட்சியில், ஒரு வயதான பெண் , பெரும் மூட்டை ஒன்றை தலையில் வைத்துக்கொண்டு செல்வார். அவரை நீங்கள் கவனித்தீர்களா என்று என்னைக் கேட்டார். அவரிடம் நான் அதை கவனிக்கவில்லை என்று சொல்வதில் எனக்கு ஈகோ இல்லை. “எனக்கென்னவோ அந்தக் காட்சி அதுவாக நடந்திருக்கும், இயக்குனர் இருக்கட்டும் என்று விட்டிருப்பார்” என்றார்.  “பெண்களின் கஷ்டம் எத்தனை வயதானாலும் தீர்வதில்லை. பெருஞ்சுமையை சுமக்கும் அவர்களது பணி எந்தவயதிலும் தொடரும்.” என்பது அவரது அவதானிப்பு. இரண்டாம் முறை பார்க்கும்பொழுது, அந்தக் காட்சி என் கண்ணில் பட்டது. ஏனென்றால், இந்த முறை பாண்டி-யின் முடிவு என்னவாக இருக்கும் என்ற பதட்டம் என்னிடம் இல்லை. 

இதில் வரும் கிராமத்து வாழ்க்கை எனது சிறு வயது வாழ்க்கையுடன் ஒப்பிடக்கூடியது. தரிசில் மேயும் மாடுகளை, மாலையில் ஒன்றுகூட்டி ஓட்டி வந்து தொழுவத்தில் கட்டவேண்டிய பணி எனக்கு இருக்கும். அதில் ஒரு காளைக்கன்று சிறுவனனா நானோ , என் சிறிய சகோதரியோ சென்று பிடித்தால்தான் அமைதியாக இருக்கும். படத்தில் ஒரு காட்சியில், ரோட்டின் குறுக்காக நிற்கும் அந்தக் காளையை , இரு ஆண்கள் விரட்டச் சென்று பின் வாங்க,  ஆட்டோவில் பயணிக்கும் பெண்களில் ஒருவர் அல்லது அந்த சிறுவன் அப்புறப்படுத்துவான் என்று இருந்தேன். அண்ணனின் கண்ணில் விழுந்த தூசியை எடுக்கும் சகோதரியும், அண்ணனுக்கு கல்யாணம் ஆகி பையன் பிறந்தால் நான் அவனை அப்படிக் கொஞ்சுவேன் என்று சொல்லும் சகோதரியும் நான் பார்த்து வளர்ந்த சகோதரிகள். எங்கள் குடும்பத்திலும் தாய் மாமனுக்கு மரியாதையும் உண்டு. பொருட்செலவும் உண்டு. நானும் ஒரு தாய்மாமன். பாண்டி, மீனாவின் பூப்புணித நீராட்டு விழாவிற்கு கடன் வாங்கி செலவு செய்து வட்டி கட்டிக்கொண்டுள்ளார். எனக்கு அந்த நிலைமை இல்லை. பாண்டி கூட்டத்தார் செல்லும் வழியில் , பூப்புணித நீராட்டு விழா நடக்கும் வீட்டு ஒலிபெருக்கியில் , கிழக்குச்சீமையிலே விஜயகுமார் தாய்மாமன் பெருமைகளை அடுக்குவார். அப்படி எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டுக்கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். தாய்மாமன் தாய்க்குச் சமமானவன் என்று சொன்ன அவர்களிடம், அப்புறம் எப்படி அக்கா மகள்களை கட்டுகிறோம் என்ற கேள்வியை கேட்க ஆரம்பித்து வெகுதூரம் வந்துவிட்டேன். இந்த இடத்தில் படத்தில் வரும் சிறுவனை நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் நடந்த சலனங்கள் / கேள்விகள் அவனுக்கும் இருக்கும்.

எனக்கு என்னவோ , இயக்குனர், இவர்கள் யாரையும் மனதில் வைத்து படம் எடுக்கவில்லை. சிவகார்த்திகேயன் அவர்கள் செலவை பார்த்துக்கொள்ள, பி.எஸ் வினோத்ராஜ் , மதுரை பக்கம் இருக்கும் கிராமத்திற்கு, தனது பட்டாளத்தை கூட்டிக்கொண்டு சென்று ஒரு அரை நாள் அவர் கண்டதை படம் பிடித்து நமக்குத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் சென்ற அன்று அணங்கு பிடித்த மீனாவை பூசாரியிடம் இட்டுச் செல்கிறார்கள். வேறு ஒரு நாளில் சென்று இருந்தால் வேறு ஒரு நம்பிக்கை / பண்பாடு சார்ந்த நிகழ்வு ஏதாவது நடந்திருக்கும். அப்படித்தானே அவர் கூழாங்கல் படத்தையும் எடுத்து இருந்தார். அது வேறு ஒரு தமிழக கிராமத்தின் தரிசனம். இது இன்னொரு கிராமத்தின் தரிசனம். 

ஆக, குழந்தமை பார்வையுடன், இயற்கையை தரிசிக்கும் ஞானியாக, வேற்று  நாட்டவராக, வேறு சூழ் நிலையில் வளர்ந்தவராக, பெண்ணியம் , ஜாதி ஒழிப்பு போன்ற கண்ணாடிகளையெல்லாம் போட்டவராக யாவரும் கொட்டுக்காளி படத்தை பார்க்கலாம். ரசிக்கலாம். போகிற போக்கில் வாழ்க்கை முன் வைக்கும் கேள்விகளைப் போல இந்த நல்ல கலைப் படைப்பும் உங்கள் முன் வைக்கலாம். ஒரே ஒரு வேண்டுகோள். வீட்டில் பார்த்தாலும், வசதி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், பெரிய தொலைக்காட்சியில், அதனுடன் இணைக்கப்பட்ட நல்லதொரு Sound System அமைப்புடன் பார்க்கவும். முழுமையான தரிசனம் உறுதி. 

Leave a comment