வாசிப்பு வைத்தியன்

Published by

on

முதல் நாள் அந்த நிறுவனத்திலிருந்து நிதிப்பற்றாக்குறையால் வெளியில் அனுப்பப்பட்ட ஏழாயிரம் அலுவலர்களில் அவரும் ஒருவராக இருக்கலாம். மறு நாள் காலையில் அவர் பார்க்கும் தொலைக்காட்சியில் இருபது வருடங்களுக்கு முன்னர் ஆயிரம் டாலர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது உங்கள் கையில் நூறாயிரம் டாலர்கள் இருக்கும் என்று தொலைக்காட்சியில் ஒருவர், மேலே மேலே செல்லும் நிறுவனத்தின் பங்குகளின் விலையை படம் போட்டுக் காட்டினால் எப்படி இருக்கும் ? நடப்பதே அவரது அன்றாடத் தொழில் என்று இருப்பவரிடம் ஒருவரின் நலனுக்கு தினமும் பத்தாயிரம் காலடிகள்  நடக்கவேண்டும் என்று போதித்தால் எப்படி எடுத்துக்கொள்வார் ? விமானப் பயணத்தில் தன் அருகில் அமர்ந்திருக்கிறார்  என்ற ஒரே காரணத்திற்காக, தான் பார்த்து வந்த Golden Gate Bridge பற்றி விலாவாரியாகக் கூறி முடித்ததும், சக பயணி வசிப்பதே சான் பிரான்சிஸ்கோ என்றால் சொன்னவரின் முகம் எந்தப்பக்கம் போகும் ?

அந்த மூவரில் ஒருவரைப்போலத்தான் நானும் , வாசிப்பை வளர்க்கிறேன் என்ற பெயரில், என் மேற்பார்வையில் வளர்ந்த குழந்தைகளுக்கு, புதிய நண்பர்களுக்கு அவர்கள் விருப்பம் எது என அறியாமல் புத்தகங்களை பரிந்துரைப்பேன். டில்லியில் மாதம் இரண்டாயிரத்து நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் காலத்தில் ஐயாயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிக்கொண்டுபோய் கொடுப்பேன். நான் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகள் யாரும் வாசகராகவில்லை.  பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் , உன் ஊரில் இருக்கும் நூலகத்தில் சுஜாதா நூல்கள் இருக்கும் , எடுத்து வாசி என்று அந்த உறவினர் பெண்ணிடம் கூறினேன். நான் இப்படிச் சொன்னதையே அவர் மறந்துவிட்டார் என்பதை பத்து வருடங்களுக்கு அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது. ஜெயமோகனின் ‘சோற்றுக்கணக்கு’ கதையை வாசித்துவிட்டு  மூளையிலிருந்த பதற்றம் கால்கள் வரை பரவியவனாக,  வம்சி பதிப்பகத்தில் பதினைந்து அறம் நூல்களை வாங்கி, நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தேன். அவர்கள் யாவரும் எனக்கு மிக அணுக்கமானவர்கள் என்பதால் மரியாதையின் நிமித்தம் வாசித்தார்கள். ஆனால், எவர் ஒருவரும் வாசகரென அவதானிக்கவில்லை.  புதிதாக என் நட்பு வட்டத்திற்குள் நுழையும் ஒருவரிடம் வாசிக்க வைத்துவிடமுடியும் என சிறு பொறி தட்டினால் கூட, தமிழ் தெரிந்த அனைவரும் வாசிக்கவேண்டிய  நூல்கள் என என்னிடம் இருக்கும் இருபத்தைந்து நூல்கள் அடங்கிய பட்டியலை குறுஞ்செய்தியில் அனுப்பிவிடுவேன். பாலகுமாரன், சுஜாதா, சாண்டில்யன் என்று யாரும் உள் நுழையலாம் போன்ற நூல்களும், உழைப்பைக் கோரும் விஷ்ணுபுரமும் அந்தப் பட்டியலில் இருக்கும்.   நான் பரிந்துரைத்த 25 நூல்களிலிருந்து அவர் இதையெல்லாம் வாசித்தார், இதைத் தொட்டு அதைத் தொட்டு மேல் சென்று என்னால் வாசகரானார் என யாரையும் சுட்டிக்காட்டும் நிலைமை இன்றுவரை உருவாகவில்லை. 

பஸ் பிடிக்க மூன்று மைல் செல்லவேண்டிய கிராமத்து வாசியாக, வாழ்ந்த சிறுவன் வாசிப்பின் வழியாகவே கணிணியின் பயனை எண்பதுகளிலேயே அறிந்துகொண்டேன். Oracle, C எல்லாமே ஒரு வாசகனாக வாசித்தே கற்றுக்கொண்டேன். எனது  நேரத்தை நான் நினைத்தபடி செலவு செய்யக்கூடியவனாக, சுதந்திரமானவனாக வாழ உதவுவது,  நான் வாசித்த முதலீட்டுப் புத்தகங்களும்,  தமிழ் இலக்கியப் புனைவுகளும்தான். முதலீட்டுப் புத்தகங்கள் முதலாளித்துவக் கோட்பாட்டில் இயங்கும் அமெரிக்க  நிறுவனங்களை புரிந்துகொள்ள வைத்தன. புனைவுகள் வாழ்க்கையின் இனிமையையும் வெறுமையையும் ஒருங்கே புரியவைத்தன. இரண்டு புரிதல்களும் இணைய அவசியமென நினைத்ததை மட்டும் தேடி அடைந்தேன்.  இதையெல்லாம் சொன்னால், சுயதம்பட்டம் என எடுத்துக்கொள்வார்கள். ஆதலால், பொதுப்புத்தி குடிமகன் வாழ்க்கையின் லட்சியம் என கருதும் பில் கேட்ஸை உதாரணமாக சொல்வேன். அவர் உறங்குவதற்கு முன்னர் ஒரு மணி நேரம் தினமும் வாசிப்பார். தான் வாசித்த  நூல்களை, கோடையில் வாசிக்கவேண்டியவை, காலத்துக்கும் எனக்கு விருப்பமானவை என அவர் வகைப்படுத்தும் நூல்களை தெரிந்தவர்களுக்கும் அறிந்தவர்களுக்கும் அனுப்பி வைப்பேன்.  அடுத்தமுறை அந்த நண்பர்களில் ஒருவர் குடும்பவிழாவில் என்னைப் பார்த்தால் , சிறு புன்னகையொன்றை உதிர்த்துவிட்டு, கைபேசியை காதில் வைத்துக்கொண்டு இதோ வருகிறேன் என்று நகர்ந்துவிடுவார்.  நான்தான் அவர் திரும்பி வந்தால் பராக் ஒபாமா இந்தக் கோடையில் என்ன வாசித்தார் தெரியுமா என்று சொல்லலாம் எனக் காத்திருப்பேன். 

சினிமாதான் தன் மூச்சே என்று இருப்பவர்களுக்கு ஆர்வம் வரவழைக்கலாமென, வெற்றிகரமான இயக்குனர்களின் வாசிப்பை பற்றி சொல்வேன். இயக்குனர் மிஸ்கின் அவர்கள், தனது பதினேழாம் வயதிலேயே டால்ஸ்டாய், தாஸ்தோவஸ்கி நாவல்களை வாசித்திருந்தார்.  இடியட் நாவலை வாசித்திருந்தால் அவரது பெயரின் காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்பேன்.   இயக்குனர் பாலா, நாஞ்சில்  நாடனின் எடலக்குடி கதையை வாசித்த அனுபவத்தை ‘இவன்தான் பாலா’ நூலில் , கோடி மின்னல்கள் தாக்கியதுபோல் உலுக்கியது என பதிவு செய்திருப்பார் என உரையாடல்களுக்கு இடையில் போட்டு வைப்பேன்.  இதைக்கேட்டு நாஞ்சில் நாடன் கதைகளை தேடி வாசிப்பார்கள் என்ற என் கனவு கனவாகவே இருக்கும். 

காலப்போக்கில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் மூலம், என்னைவிட பலமடங்கு வாசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் எனக்கு அறிமுகமானார்கள். அவர்களுக்கு நான் வாசித்ததை பரிந்துரைப்பதிலோ, அவர்களிடமிருந்து நானும் கற்றுக்கொள்வதிலோ எந்த சிக்கலும் இல்லை என்பதை அறிந்துகொண்டேன். மொன்னையாக யாருக்கும் புத்தகங்களையோ, வாசிப்பையோ அறிமுகப்படுத்துவதில் அர்த்தம் எதுவும் இல்லை என்ற பக்குவம் கிடைத்தது.  ஒரு மருத்துவனைப் போல அனுகி ஆராய்ந்து, அவரவர் ரசனைக்கேற்ப பரிந்துரைப்போம் என முடிவுக்கு வந்து எனது வாசக வைத்திய சாலையை திறந்து வைத்து காத்திருந்தேன்.

மூன்று வாரங்களுக்கு முன்னர்,  கிட்டத்தட்ட ஒருவருட காத்திருத்தலுக்குப் பிறகு ஒரு நண்பர் என்னிடம் பேசினார். என்னிடம் பேச யாரும் ஒரு வருடம் காத்திருக்கத் தேவையில்லை. இடையில் இருக்கும் நண்பர் அறிமுகம் செய்தும்,  ஏதோ ஒரு வகையில் , நானும் அவரும் பேசுவதற்கு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரு வருடம் அவர் காத்திருந்தார் என்று சொல்லி உங்கள் புருவங்கள் உயர்வதை என் கற்பனையில் பார்ப்பதில் ஒரு சிறு சந்தோஷம்.

 அவர் கணிணி பொறியாளர். Data Science, Cloud, AI எல்லாம், அவரது சொல்லத்தக்க திறமைகளில் அடக்கம். அவர் திறமைக்குள்ள ஊதியம் அவருக்கு இருக்கும் என்று புரிந்துகொண்டேன்.  வேலை நேரம் போக, மனதிற்குப் பிடித்து என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். உடற்பயிற்சி செய்வது பிடிக்கும் என்றார். “மனப் பயிற்சிக்கு என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டேன். “படங்கள் பார்ப்பேன். ஆனால், உங்கள் அளவுக்கு ஆராய்ந்து பார்க்கமாட்டேன்”  என்றார். “என்னை தங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கியுள்ளார்” என்றேன்.  தான் மேலும் முன்னேற என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். புதிய முன்னேற்றங்களின் பால் உங்களுக்கான சிந்தனையையும் எண்ணங்களையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக,  AI வளர்ச்சியை சரியாக புரிந்து உரையாற்ற வேண்டும் என்றால், மனிதனின் மூளையும் அதற்கு செய்திகளைக் கடத்தும் நரம்புகளும் எப்படி வேலை செய்யும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அதற்கு இந்த நூலை வாசியுங்கள் என “A Thousand Brains” என்ற Jeff Hawkins நூலை அறிமுகம் செய்தேன். புதிய வாசகராக இந்த நூலை வாசிக்க அவருக்கு அயர்ச்சியாக இருக்கலாம் என , யாரையும் கவரும் சுயசரிதை நூலை ஒன்றை பரிந்துரைக்கலாம் என்று யோசித்தேன். பத்தாவது பதிப்பைக் கண்டுள்ள, ரேச்சல் நயோமி ராமெனின் உண்மைக் கதைகள் அடங்கிய “Kitchen Table Wisdom”  பரிந்துரைக்கலாம் என்றால், நானே அதை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. சிரிக்க சிரிக்க வாசிக்கட்டும் என, “Surely, you’re Joking Mr. Feynman!” நூலை பரிந்துரைத்தேன். வாசக வைத்தியனாக என் முதல் பரிசோதனை முயற்சியின் முடிவை அறிய உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன். 

Leave a comment