நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் பாவக்கதைகள் படத்தைப் பார்த்துவிட்டு, இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா, இதைப் போன்ற ஆணவக்கொலைகள் இன்றும் நடக்கின்றனவா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே சினிமாப் பார்க்கும் வசதி உள்ள இந்த நாளில், என்றாவது ஒரு நாள் செய்தியாக வரும் விஷயங்களை, என்னமோ அன்றாடும் நடக்கும் விஷயம்போல் படம் எடுத்திருப்பது, தவறான செய்தியைப் பரப்பவது போல் ஆகிறது என்று எழுதப்படும் விமர்சனங்கள். இவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக, சினிமாவை அரசியல் சமூகம் பண்பாடு சார்ந்து விமர்சிக்கும் ‘ஸ்டாலின் ராஜாங்கம்’ அவர்கள் எழுதியுள்ள ஆவணக்கொலைகளின் காலம் என்ற நூலில் இருந்து நான் கண்டறிந்தவைகளையும், விவாதங்களையும், தீர்வுகளையும் முன் வைக்கிறேன்.
ஒரு வருடத்தை வெய்யில் காலம், மழைக்காலம், குளிர்காலம், வசந்தகாலம் என்று பிரிப்பதைப்போல், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மொத்தக் காலத்தையும் ஆணவக்கொலைகளின் காலம் என்று வகைப்படுத்தும் ஸ்டாலின் ராஜங்கம், தமிழகத்தில் நடந்த இரண்டு ஆணவக்கொலைகளின் பின்னனியில் உள்ள உண்மையை அறியும் ஆய்வில் இறங்கிய குழுவில் பங்கு கொண்டு அறிக்கை சமர்ப்பித்த எழுத்தாளர். 2012 நவம்பரில் இளவரசன்-திவ்யா காதலர்களின் திருமணத்தை ஒட்டி , தருமபுரியில் தலித் கிராமங்கள் மீது நடந்த வன்முறை பற்றிய ஆய்வு அறிக்கையும், ஜூலை 2015-ல் நடந்த சேலம் ஓமலூர் தலித் இளைஞர் கோகுல்ராஜ் மரணத்தின் மர்மத்தை ஆராய்ந்த ஆய்வு அறிக்கையும் இந்த நூலின் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த இரு அறிக்கைகளை முதலில் வாசித்து ஆணவக்கொலைகள், அதன் பின்னனி என்று தங்களை தொகுத்துக்கொண்டு (context setting), நூலில் உள்ள கட்டுரைகளை பிறகு வாசித்தால், ஒவ்வொன்றையும் இணைத்துப் பார்த்து பொருள் கொள்ள வசதியாக இருக்கும்.
தன் ஜாதியில் பிறக்காத ஒருவனைக் காதலித்ததால், மணந்ததால், பாதிக்கப்பட்ட புதுக்கூரைப்பேட்டை கண்ணகி, சிவகங்கை தமிழ்ச்செல்வி, உசிலம்பட்டி விமலாதேவி, தர்மபுரி திவ்யா, உடுமலைப்பேட்டை கௌசல்யா பின்புலங்களை நன்கு ஆய்ந்து அறிந்தவராகவும், தலித் மக்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத , வட்டாரத்துக்கு வட்டாரம் பெரும்பாண்மையாகி இருக்கும் சில ஜாதிகளின் ஆணவத்தை புரிந்தவராகவும், ஆணவக்கொலைகளின் காலம் என்று இந்தக் காலத்தை நிறுவுகிறார் என்பதை நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் உணரலாம்.
கௌரவக்கொலை என்ற சொல், பாதிப்பை ஏற்படுத்துபவனை பெருமை செய்வதுபோல், நேர்மறையாக இருக்கிறது என்றும், பின்னர் எழுதிய கட்டுரைகளில், ஆதிக்க ஜாதியினர் ஆணவத்தில் செய்யும் இந்தக் கொலைகளை ஆணவக்கொலைகள் எனச் சொலவதே சரி என்கிறார். அவர்கள் இதற்காகவெல்லாம் தலை குனிய மாட்டார்கள் என்ற சந்தேகத்தையும் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சார்ந்துதான், சினிமாவைப் பற்றியதான தனது வாசிப்பு இருக்கும் என்று ஸ்டாலின் ராஜங்கம், தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதை யூடியூப் காணொளி ஒன்றில் கேட்டிருக்கிறேன், ‘தர்மபுரி வன்முறைக்கு முன்பும் பின்பும் என்ற கட்டுரை, அதை உறுதி செய்கிறது. தலித் ஆண்கள் கூலிங்க் கிலாஸ், ஜீன்ஸ் என்று போட்டு காதல் நாடகம் ஆடி, ஆதிக்கஜாதி பெண்களைக் கவர்கிறார்கள் என்று ராமதாஸ் சொன்ன கூற்றையும், சுந்தரபாண்டியன் படத்தின் ஆரம்பக்காட்சி வசனங்களையும் ஒப்பிட்டு , இரண்டும் ஒன்றை ஒன்று அறியாமல் நிகழ்ந்தவை , சமூகத்தின் பிரதிபலிப்பு என்கிறார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரில் ஒருவன், ஆதிக்க ஜாதியினரின் அருமைக்கும் பெருமைக்கும் அடிபணிபவனாக, பாரதியின் கண்ணம்மாவின் நாயகன் தன் காதலை தியாகம் செய்கிறான். சேரனின் இந்தப் படமும் ஒரு காலத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. ‘காதல்’, பாரதி கண்ணம்மா, சுந்தரபாண்டியன் படங்களை , ஜாதி கடந்த காதலின் பாதிப்புகளைச் சொல்ல எடுத்துக்கொண்டவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தையும் எடுத்து அலசியிருப்பது கொஞ்சம் புதுசு. ஜாதி மாற்றி கல்யாணம் பண்ணுவதால், இழப்பது என்ன ? கௌரவம். காதலித்துக் கல்யாணம் பண்ணுவதையே இழிவாக கருதும், கௌரவக் குறைச்சலாக கருதும் நாயகியின் அப்பா, அவசர அவசரமாக 16 வயது பெண்ணிற்கு கல்யாண ஏற்பாடு செய்கிறார். கௌரவம் கருதியே, ஆணவக்கொலைகள் நடக்கின்றன என்ற புரிதலில், வாசித்தால், எழுத்தாளரின் விளக்கம் ஒத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது.
இமையம் எழுதிய ‘செத்தவன்’, ‘சாவு சோறு’, ‘சத்தியக்கட்டு’ கதைகளை எடுத்துக்கொண்டு, சாதி, அரசியல், கௌரவம் சார்ந்து ஆணவக்கொலைகள் செய்யும் சமூகத்தை சாடுகிறார். தருமபுரி சம்பவத்தில் அரசியல் கட்சியின் பாதிப்பு இருப்பதைப் போல , செத்தவன் கதையிலும் கட்சியின் ஈடுபாடு இருக்கிறது. தருமபுரி தலித் கிராமங்கள் எரிப்புக்கு முன்னரே எழுதப்பட்ட கதையில், சமுதாயத்தைப் பற்றிய கலைஞனின் பார்வை இருப்பதை எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார். தண்டிக்க சொல்லும் ஊராரின் மன நிலை வேறு. பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் மன நிலை வேறு. இமையத்தின் கதைகள் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் சொல்வதை, ஸ்டாலின் இந்தக் கட்டுரையில் விவரிக்கிறார். சாதி கடந்த காதலில் விழுந்த பெண்ணை, மானம் கருதி உயிரோடு எரித்துவிட்டு அப்புறம் கிராமங்களில் எதேச்சையாக நடக்கும் சாவுகளையும், எதிர்கொள்ளும் நோய்களையும், அவள் பழிவாங்குவதாக எடுத்துக்கொண்டு, அவளை சாமியாக்கிவிடும் அவலம் நம் சமூகத்தில் உண்டு. அதைப் பிரதபலிக்கும் கதை சாவுக்கட்டு.
ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு தனி மனிதனும், எழுத்தாளனும் பேசலாம், எழுதலாம், சொல்லாடலாம். ஆனால், அதை தடுப்பதற்கு ஒரு ஆற்றல் தேவை. அந்த ஆற்றல், அரசை அமைக்கும் அரசியல் கட்சிகளிடமிருந்துதான் வரவேண்டும் என்கிறார் நூலின் ஆசிரியர். பிராமனியத்தை எதிர்த்து வளர்ந்து திராவிடக் கட்சிகள் கூட, வாக்குகள் சேகரிக்கும் வங்கிகளாக, சாதியை சீராட்டும் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஜாதிமறுப்புத் திருமணங்களை ஆதரித்தும், அப்படிப்பட்ட திருமணங்கள் செய்துகொண்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உதவுதற்கும் அரசியல் கட்சிகளிடம் ஒரு நடவடிக்கையோ நிலைப்பாடுகளோ இல்லை. உதாரணத்திற்கு, தேர்தலின்போது , இதை தங்களது திட்டங்களில் ஒன்றாக அதை அறிவிக்கலாம். மாறாக அரசியல் கட்சிகள் எரியும் தீயை நீர் ஊற்றி அணைக்காமல், எண்ணெய் ஊற்றி வளர்ப்பவையாக இருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சிக்காரரின் பேச்சே நவம்பர் 7, 2012-ல் நடந்த தருமபுரி சம்பவத்திற்கு சமூக உளவியல் காரணமாகிறது என்று தனது கட்டுரைகளில் நிறுவுகிறார். பஞ்சாயத்துக் கூட்டி, பெண்ணின் தந்தையை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவரது தற்கொலை வரை இட்டுச் செல்கிறது. இந்த சம்பவத்தை ஆதிக்கஜாதியினரின் சாதகமாகி, கட்சியின் ஆதரவும் இருக்கப்போய், 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தீக்கிரையாகிறது.
ராஜன் குறை, பெருந்தேவி போன்றவர்கள் பங்குகொண்ட ஃபேஸ்புக் விவாதம், தொகுக்கப்பட்டு, நூலில் ஒரு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் விவாதத்திற்கே உள்ள தடம் மாறுதல்கள் இருந்தாலும், திராவிட இயக்கத்திற்கு, தலித் அறிவு ஜீவிகள் வைக்கும் கேள்வி , “தமிழகத்தில் ஜாதி ஆணவக்கொலைகள், சாதிய ஒடுக்குமுறைகள், சாதிய வன்முறைகள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் திராவிடக் கட்சிகள் மௌனம் காப்பது ஏன்?”
வன்முறை மூலமே சாதியாக்கம் உறுதிபெறுகிறது என்று உடுமலைப்பேட்டை ஜாதி கடந்து திருமணம் செய்துகொண்ட சங்கர்-கௌசல்யா தம்பதியர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை ஒரு கட்டுரை நிறுவுகிறது. இனிமேல் காதலிப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பொதுமக்கள் முன்னிலையில் சங்கரை வெட்டுகிறது ஆதிக்கஜாதி சார்ந்த குழு. தலை நசுங்கி தண்டவாளத்தில் கிடந்த இளவரசன் உடல், துண்டிக்கப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட கோகுல்ராஜின் தலை என்ற மற்ற அண்மைக்கால கொலைகளையும் சுட்டிக்காட்டி சாதி வெறியால் வன்முறை இல்லை, சாதிக்காகவே வன்முறை என்கிறார். ஒரே ஜாதியில் மணம் புரிவதை எப்படி ஜாதியைக் காப்பாற்றும் அலகாக பார்க்கிறோமோ, வன்முறையையும் ஜாதியைக் காப்பாற்றும் அலகாக பார்க்கலாம் என்பது ஸ்டாலினின் பார்வை.
கூகுளில், ஆணவக்கொலை என்று தட்டச்சு செய்து ஒரு சொடுக்கு சொடுக்கினாலே, இந்தியாவில், சாதி மாறி கல்யாணம் செய்வதால், ஒரு நாளைக்கு நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள் என்ற புள்ளி விபரம் உள்ள ஆனந்த விகடனின் கட்டுரை ஒன்று வாசிக்க கிடைக்கும். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ரிட் மனு ஒன்றின் இணைப்பாக, ஆணவக்கொலையில் மரணமடைந்த விமலாதேவியின் வழக்கில் ஈடுப்பட்ட வழக்கறிஞர் உ. நிர்மலாரமணி, தமிழகம் முழுதிலும் உள்ள காவல் நிலையங்களில் பதிவான குற்றங்களிலிருந்து எடுத்த 47 ஆணவக்கொலைகளின் பட்டியல் உள்ளது. வெற்றிமாறனின், ஓர் இரவு படத்தில், அடைத்த அறையில், தந்தையால் விஷம் கொடுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சுமதியின் (சாய் பல்லவி) அலறலில் நம் காதுகளில் இரைவது இந்த 47 குரல்களில் ஒன்றா? இல்லை இந்த 47 குரல்களின் அலரலா? இல்லை நம் அரசாங்கமும், காவல் நிலையமும் அறிந்தே இருக்காத பதிவே செய்யப்படாத ஆணவக்கொலையில் உயிரை இழந்த ஆயிரக்கணக்கான குரல்களின் அலரலா?
பாவக்கதைகளின் படத்தின் கதைக்களங்களை கேள்வி கேட்பவர்களுக்கு பதிலாக என்று மட்டும் இல்லை, சமகாலத்தில் தமிழகம் அல்லது இந்தியா எதிர்கொள்ளும் ஒரு சமூகப் பிரச்சனையை எதிர்கொள்ளத் தேவையான , சிந்திக்க வேண்டிய விவாதங்களை நம் முன் வைக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் நூலை, நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
(முதல் பதிவு 01/18/2021)

Leave a comment