புனைவின் நடை வாசிப்பிற்கு ஒரு தடையா?

Published by

on

அசோகமித்திரனால் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ‘மலை மேல் நெருப்பு’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். அசோகமித்திரனின் பெயர் இருந்ததால் மட்டுமே முழு நாவலையும் வாசித்தேன். வாசிப்பின் பெரும் தடையாக இருந்தது நடை. மென்மையான மொழியில் கதை  நெய்யும் அசோகமித்திரனின் நடையை நாவலில் காணோம்.   காதருகே வந்து கிசுகிசுப்பாக கதை சொல்லும் அவர் குரலை இனம் காண முடியவில்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் நூல்களுக்கே உள்ள ஒரு பொதுவான மொழியில், தட்டையான நடையில் வாசிக்க நேர்ந்ததில்,  தடையின்ற வாசிக்க நடை அவசியமா என அலசிப்பார்க்கிறேன்.

நடையை பிரதானமாக நிர்ணியிப்பது மொழி.  கதை நடக்கும் காலம், இடம் இரண்டையும் படைப்பின் மொழி செவ்வனே எடுத்துச் செல்வதாக அமைந்தால் படைப்பு உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புகள் அதிகம். அவை படைப்புக்கென தேர்ந்தெடுத்த மொழியாக இருக்கலாம் இல்லை படைப்பாளிக்கு அணுக்கமான மொழியாகவும் இருக்கலாம்.  எழுத்தாளர் ஜெயமோகன் , மகாபாரதத்தின் மறு ஆக்கமான வெண்முரசை படைப்பதற்கு வேற்றுமொழி எதுவும் கலக்காத செவ்வியல் தமிழை எடுத்துக்கொண்டார். நிகழ்காலத்தில் வாசிக்கும் வாசகன் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் சென்று வரலாற்றில் வாழும் ஒரு நம்பகத்தன்மையை படைப்பிற்கென தேர்ந்தெடுத்த மொழி கொடுக்கிறது. முதலில் சவால் என நினைக்கும் வாசகனே கூட பல நூறு பக்கங்களுக்குப் பிறகு வெண்முரசின் செவ்வியல் மொழிக்குப் பழகிக்கொள்கிறான்.  படைப்பாளிக்கு அணுக்கமான மொழியில் எழுதப்பட்டவை என,  செல்வம் அருளானந்தம்  அவர்கள் எழுதிய ‘சொற்களில் சுழலும் உலகம்’ , ‘பனிவிழும் பனைவனம்’  நூல்களை சொல்லலாம்.  இங்கு படைப்பாளி தேர்ச்சி பெற்ற மொழி கதையோடு கதையாக முயந்து வருவதால், வாசகனுக்குப் புரியாத இலங்கைத் தமிழ் வார்த்தைகள் சுவை சேர்க்கிறது என சொல்லலாம். 

 நடை என்பது மொழியெனில், மொழி என்று எதைச் சொல்வோம்? மொழியை உருவாக்கும் சொற்கள் என வாசக பரப்பிற்கான விளக்கமாக வைத்துக்கொள்கிறேன். ஆக சரியான சொற்களை, சொற் பிரயோகங்களின் வழியாக, காலத்தை, இடத்தை, இனத்தை ஒரு புனைவு வாசகனுக்கு அடையாளம் காட்டலாம். வாசகனை படைப்பின் பாத்திரங்களுடன் பயணிக்க வைக்கலாம்.  யுவன் சந்திரசேகரின், “குள்ளச்சித்தன் சரித்திரம்”, நாவலில், மொழியின் வழியே அவர் நூறு நூறு ஆண்டுகளாக முன்னரும் பின்னரும் பயணிப்பதை பார்க்கலாம். பாத்திரங்களின் உரையாடலை வைத்து, அவர்கள் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள், எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிடலாம்.  மௌண்ட் பேட்டன் பிரபு , ஒரு பிறவியில் பென்குயினாக இருந்தார் என்று மொழியால் மட்டுமே குறிப்புணர்த்தும் சித்திரமும் உண்டு. 

அப்படியெனில் படைப்பு சார்ந்து மொழியை தேர்ந்தெடுத்தால் போதுமா ? இல்லை.  எழுத எழுத படைப்பாளி அவனுக்கான மொழியை இனம் காண்கிறான். அதுவே அவனது நடையென ஆகிறது. மிகக்குறைந்த வரிகளில் காட்சிகளை கண் முன் நிறுத்தும் சுஜாதா,  அவருக்கென்ற முத்திரையை பதித்துச் சென்றுள்ளார். ஒரு பக்கம் முழக்க காலை நேரப் பேருந்து நிலையத்தை காட்சிப்படுத்தும் (எச்சம்) , வண்ணதாசன் இருக்கிறார். இருவருமே அவரவருக்கான வாசகனை அடைந்துள்ளார்கள்.  

படைப்பாளி தனக்கான மொழியில்,  நடையில் கதை சொல்வதில் ஏதேனும் இழப்பு உண்டா ? புனைவின் அனைத்துப் பாத்திரங்களும் ஒரே அகமொழியில் உரையாடும் சாத்தியங்கள் அதிகம். பத்து வயது சிறுமி தந்தையுடன் உரையாடுவதை சொற்களால் வேறுபடுத்தி காண்பிக்கமுடியும் என்பதும் தேர்ந்த படைப்பாளிக்குத் தெரியும். மொழியாக்க நாவல்களில் பாத்திரங்களின் உரையாடலில் உள்ள வேறுபாட்டை மூல  நூலில்  இருந்து  மாற்றாமல் கொடுப்பது ஒரு சவால் என்பது எனது புரிதல். 

கதையை நிகழ்த்தாமல், கூறலில் மட்டும் நகரும் கதையில் படைப்பாளியின் மொழியே போதுமானதாக இருக்கலாம். நிகழாத கதையில் வாசகன் சலிப்புற வாய்ப்புண்டு. 

காட்சி அமைப்பிற்கும் விவரணைகளுக்கும் தத்துவ விசாரனைகளுக்கும் படைப்பாளியின் பண்பட்ட மொழியும், பாத்திரங்கள் உரையாட படைப்பிற்கென்று தேர்ந்தெடுத்த மொழியும் இணைந்திட வாசிப்பின்பம் நல்கும் என்பது எனது சித்தாந்தம். 

பேசுபொருள் படைப்பாளியின் ஓரிரு படைப்புகளை வாசிக்கவைக்கும். தனக்கென சிந்தனைகள் கொண்டுள்ள படைப்பாளி அவனுக்கென்று ஒரு நடையை அடைந்திருப்பான். அவனே அவனுக்கான வாசகனை அடைந்திடுவான்.  செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்டு இயங்கும் காலத்தில் படைப்பாளியை இனம் காட்ட அவனது நடைதானே (சிந்தனைதானே) முக்கியம்.   

Leave a comment