சின்ன அக்காவின் காலில் சிறிதாக ஒரு கொப்புளம் முளைத்திருந்தது. பத்தாம் வகுப்புப் படிக்கும் குறும்புச் சிறுவனாக நான், “நம்ம தாத்தாவுக்கு இப்படித்தான் கொப்புளம் வந்தது, அப்படியே பெரிதாகி, பெரிதாகி செத்துப்போய்ட்டார்” என்றேன். விளையாட்டுப் பேச்சு விபரீதமாகி சண்டையில் முடிந்தது. மூன்று பர்லாங்க் தண்ணீர் சுமக்கும் அக்காவுடன் நானும் உடன் சென்று குடம் சுமந்து தாஜா செய்தாலும், உதட்டைப் பிதுக்கிக்கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் என்னிடம் பாரா முகமாகவே இருந்தார். பள்ளியில் இருந்து திரும்பிய மாலை ஒன்றில், பெரிய அக்காவும், சின்ன அக்காவும் வெள்ளமென நீர் வரும் கண்களுடன் வாசலில் அமர்ந்திருந்தார்கள். யாருக்கு என்னாச்சு என்றெல்லாம் நான் கேட்கவில்லை. அவர்களுடன் இணைந்து நானும் கண்ணீர் வடித்தேன். கண்ணீர் சேர்த்து வைத்த இளைப்பாறலில், சின்ன அக்கா, தான் வாசித்த பி.டி. சாமியின் நாவலை கொடுத்து இந்த இந்த பாராவை நீ படிக்காதே, மற்றதெல்லாம் படி என்று கொடுக்குமளவு ராசியாகிவிட்டோம்.
இரண்டு மூன்று வயது வித்தியாசத்தில் பிறந்துவிட்ட என் இரு மூத்த சகோதரிகளுக்கு ஒரே மேடையில், தாடிக்கொம்பில் அழகர் கோவிலில் கல்யாணம். ஆரம்பப் பள்ளி மாணவர்களான எனக்கும் தம்பிகளுக்கும் ஒரே கலரில் டவுசர் சட்டை. வெவ்வேறு கலரில் எடுத்தால் , அடுத்தவன் கலர் சட்டைதான் நன்றாக இருக்கிறது என போட்டி போடுவோமென, வீட்டுக் குழந்தைகளுக்கு ஒரே கலரில் எடுப்பதை என் அப்பாவும் பெரிய சித்தப்பாவும் சித்தாந்தம் செய்து வைத்திருந்தார்கள். கழுத்தில் தாலியேறும் நேரம், அக்காக்களின் கண்களில் எங்கள் ஊர் காட்டாற்றின் கொடகனாறு ஓடியது. கல்யாணத்தில் மணப்பெண்கள் அழுவார்கள் என அதுவே நான் முதலில் பார்த்தது. இளைய அக்காவின் கண்ணில் கண்ணீர் வடிந்ததை பார்த்த, அவரை கை பிடித்த இளைய மாப்பிள்ளையும் கண்ணில் கண்ணீர் விட அனைவரும் அவரைக் கிண்டல் செய்தார்கள். எழுபதுகளின் ஆரம்பத்தில், மாப்பிள்ளையும் பெண்ணும் அவர்கள் வீட்டில் ஆறு நாட்கள், இவர்கள் வீட்டில் பத்து நாட்கள் என்று போகவும் வரவும் இருப்பார்கள். பெண்ணுடன் அவரது சகோதரன் உடன் சென்று விட்டு அழைத்து வரவேண்டும் என்பது வழமையாக இருந்தது. சின்ன அக்கா-வுடன் நானும், பெரிய அக்காவுடன் என் அண்ணனும் என முறை போட்டுப் போகச் சொல்வார்கள். பிற்காலத்தில் கல்யாணச் சித்தப்பா என்று எல்லோராலும் அழைக்கப்படவிருக்கும் சித்தப்பாவும், அண்ணனின் வயதில் இருந்ததால், அவருக்கும் அண்ணன் பொறுப்பைக் கொடுத்து பெண்ணையும் மாப்பிள்ளையும் கூட்டிச் சென்று அழைத்துவரும் வேலையை ஒப்படைப்பார்கள். அவருக்கும் பெரிய அக்கா வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு. சின்ன அக்கா வீட்டிற்குச் செல்ல , தரிசு தரிசாக நடந்து செல்லவேண்டும். அது எனக்குப் போரடித்திருந்தது. பெரிய அக்கா வீட்டை வேறு பார்த்திருக்கவில்லை. முளையிலேயே பழுத்துவிட்ட கோபக்காரனான நான், இந்த முறை பெரிய அக்கா மாப்பிள்ளையுடன் துணைக்குச் செல்கிறேன் என்று அடம் பிடித்தேன். அண்ணனும், சித்தப்பாவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சின்ன அக்கா, அழ ஆரம்பித்துவிட்டார். என் வீட்டிற்கு வர யாருக்குமே இஷ்டமே இல்லை. அப்படிப்பட்ட இடத்தில் என்னைக் கட்டிக் கொடுத்துவிட்டீர்கள் என்ற ஒரு அவதானிப்பையும் சொல்லி அழுதார். “உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என அவரது இளைய கணவரின் கண்களிலும் கண்ணீர். இளையவன் வாக்கு அரங்கத்தில் செல்லுபடியானதாக சரித்திரம் இல்லை. நான்தான் இளைய தம்பதிகளுடன் செல்லவேண்டியிருந்தது. ரத்தக் கண்ணீர் படக்கதையை சொல்லி , அந்த நெடும் பயணத்தை இனிமையாக்கினார் எங்கள் வீட்டு மாப்பிள்ளைகளில் உயரமான சின்ன அக்காவின் கணவர். ஒவ்வொரு முறை வீட்டுப் பந்தலை சீர் செய்யும்பொழுதும் , என் தந்தை , அவர் வந்தால் தலை இடிக்குமா எனக் கேட்டுக்கொண்டு இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என உயர்த்துவார்.
தனித்தனியான குடும்பங்களாக வாழ்ந்தாலும், எங்கள் குடும்பமும், மற்ற மூன்று சித்தாப்பக்களின் குடும்பங்களும் ஒன்றெனவே Decentralization முறையில் இயங்கின. சுர்று வட்டாரத்தில் சொந்தத்தில் பழக்கத்தில் ஒரு திருமணமென்றால், இந்த நான்கு குடும்பங்களில் ஒருவர் சென்றால் போதும் என விதி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு அவர்கள் விவசாய வேலைகள் நேரத்திற்கு நடக்கவேண்டும். தன் அடிமடியில் கைவைத்துப் பால் கறக்க காலையிலும் மாலையிலும் “பெட்ரமாஸ் லைட்டேதான் வேண்டும்” என்று குறிப்பிட்ட நபரையே எதிர்பார்க்கும் பசுக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். விவசாய வீட்டில் பிறந்தும் பசுவின் மடிபிடித்துப் பால்கறக்கத் தெரியாத எனக்கு ஊரில் நடக்கும் கல்யாணங்களுக்கு செல்லும் கடமை ஒப்படைக்கப்படும். திண்டுக்கல்லில் இருக்கும் என் சித்தாப்பாவிடம், என்ன உங்களை எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் பார்க்கவில்லையே என்று ஒருவர் கேட்டால், எங்க சின்னப்பையன் வந்திருப்பானே என்று தனது கணீர் குரலில் அவர் பதிலிறுப்பார். கேட்டவர் நடுங்காமல் இருந்தால் சரி. கல்யாணங்களுக்கு செல்லும் கடமையை, கண்ணென கொண்ட எனக்கு, “தாலியேறும் கணம்” மணப்பெண்கள் கண்ணீர் வடிப்பார்கள், அவளை வழியனுப்பும் பெற்றோரும், உடன் பிறந்தோரும் கட்டற்று அழுவார்கள் எனும் உணர்வுகள் பிடிபட ஆரம்பித்தது. தந்தையின் நீண்ட பெருங்கண்களை தனதென பெற்றுக்கொண்ட, நான் கைபிடித்த என் மனைவியும் எங்கள் திருமண நாளில் கண்ணீர் வடித்தார். பெருங்கண்ணுடையவளின் கண்ணீர் அவளது தந்தையை பற்றிக்கொண்டதை பார்த்து நின்றேன். அந்த நேரத்தில், அழகிய கண்களிலிருந்து கூட கண்ணீர் வருமா என்று அதிசயத்திருந்தேன்.
சாம் பட்ரோடா அறிவுறுத்தலின் பேரில், பிரதம மந்திரி ராஜீவ் காந்தியின் ஆட்சியில், மத்திய அரசாங்க அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட, நாடெங்கும் இருந்த அரசு அலுவலகங்கள் கணினிகளால் இணைய, ஒன்றாக படித்த, ஒரே ஊரில் வசித்த நண்பர்கள் எனக் கூட்டம் கூட்டமாக வேலை கிடைத்து டில்லிக்குச் சென்றோம். புதிய வேலை கிடைத்து , மகிழ்ச்சி நிறைந்து , முதல் மூன்று மாதங்கள் கடந்துவிட, ஒவ்வொருவராக ஊர் வந்து தங்கள் குடும்பத்தையும் நண்பர்கள் குடும்பத்தையும் பார்த்து புதுச் சம்பாத்யத்தில் வாங்கிவந்த பரிசுகளை கொடுத்துச் சென்றோம். வேலை கிடைத்து எங்களுடன் பயணித்தவர்களில் திருச்சி மாவட்டத்திலிருந்து இரு தோழிகளும் இருந்தார்கள். ஶ்ரீரங்கத் தோழியின் பிரதிநிதியாக, அவரது பெற்றோரைப் பார்க்கச் சென்ற நண்பரை பார்த்த தந்தை, “என் பெண்ணையே, பார்த்ததுபோல் உள்ளது” என்று கண்ணீர் விட்டார். எல்லாவற்றையும் குறும்பென பார்க்கும் வயதில் இருந்த நாங்கள், அந்த நண்பரை, உன்னைப் பார்த்தால், அந்தப் பெண்ணையே பார்ப்பதுபோல இருக்கிறது என்று அந்த தோழியின் பெயரை சொல்லிக் கிண்டல் செய்வோம்.
தந்தையென்று இல்லை ஆண்கள் அழுவதையே தர்க்கத்துக்கும் கிண்டலுக்கும் உட்படுத்துவதை சமுதாயத்தில் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். ஜெயமோகன் அமெரிக்காவிற்கு வந்துவிட்டு திரும்பிச் செல்லும்பொழுது கண்ணெல்லாம் குளமாகும் நண்பர்களை பார்த்திருக்கிறேன். அதைக் கண்டு உளம் கமராத ஒருவரால் யாவரும் போற்றும் படைப்பாளியாக இருக்கமுடியாது. அவரது கண்களிலும் ஒளியில் பல வண்ணங்களை மின்னும் திவலைகளைப் பார்த்திருக்கிறோம்.
மணமேடையிலேயே சிரித்து சிரித்துப் பேசுவதும், ஒருவரையொருவர் கிள்ளிக்கொள்வதுமென காலமும் மணமக்களும் மாறிவிட, இனிமேல் கண்ணீர் விடும் மணமகளையும் அவளது தந்தையையும் காணமுடியாது என என்னை புதுயுகத்திற்கு தயார் ஆக்கிக்கொண்டேன். ஜூன் இறுதி ஞாயிறில் நடந்த என் நண்பர் மகளின் திருமணத்திற்கு நானும் ராதாவும் சென்றிருந்தோம். சிறுமிகள் பூக்களைத் தூவிக்கொண்டு முன் நடந்துவர, பெண்கள் சிலர் நடனமிட, நண்பரின் மகள் மணமகளாக மணமேடைக்கு நடந்து வந்தாள். அவள் ஆறு வயது சிறுமியாக எங்கள் புதுவீட்டின் கிரகப்பிரவேஷத்தில் விளையாடியது நினைவில் படர என் கண்களில் நீர் அரும்பியது. “பொசுக்குனு இவன் கண்ணில் தண்ணி வந்துடும்” என்று என் அக்காக்கள் காதில் வந்து சொல்லிவிட்டுச் சென்றார்கள். என் கண்ணுக்கினியவள், இவர் இப்படித்தான் என்று புரிந்தவராக அருகில் அமர்ந்திருந்தார். அணிந்த நகையும், கன்னத்தில் குழி விழும் முக நகையுமென மணமேடையில் அமரும் இந்த மணமகள், காதலித்தவனை கைபிடிப்பதால், கண்ணில் நீர்வடிக்கப்போவதில்லையென உறுதியாக இருந்தேன். எட்டாயிரம் மைல்கள் தூரத்தில் வாழும் உறவினர்களை இருபத்து நான்கு மணி நேரப் பயணத்தில் சென்று பார்த்து வரமுடிகிறது. SpaceX என்றாவது ஒரு நாள் நிலவில் குடில்கள் அமைப்போம் என்று விண்ணில் ராக்கெட்களை பறக்கவிட்டு ,எரிக்கவிட்டு சோதனைகள் செய்தவண்ணம் உள்ளது. நேற்று செய்த வேலைக்கும் இன்று செய்யவிருக்கும் இருக்கும் வேலைக்கும் மாற்றமில்லையெனில், அதை செயற்கை நுண்ணறிவை வைத்து சாதிக்கலாம் என நிறுவனங்கள் பிரகடனப்படுத்துகின்றன. ஒருவர் ஆங்கிலத்தில் பேச, மற்றவர் ஹிந்தியில் எதிர்வினையாற்ற தானியங்கி மொழியாக்கங்களின் உதவியால், உரையாடல் மொழி பேதமின்றி நடக்கிறது. மகளை தந்தை தாரை வார்க்கும் அந்த தருணத்தில் என் நண்பர் அழ, மணமகள் அழ, அவர்களை சுற்றி நின்றவர்கள் அழ, தந்தைகளின் கண்கள் கண்ணீரின் ஊற்றுக்கள் என மீண்டும் கண்டேன்.

Leave a comment