பொய் சத்தியம் செய்தவளே, நீ வரவில்லை

Published by

on

அவனை நேர்முகம் செய்வதற்காக நானும் உடன் வேலை பார்க்கும் நண்பர்களும் நீண்ட மேசையை சுற்றிலும் அமர்ந்திருந்தோம். டக் இன் செய்து முழுக்கை சட்டை போட்டு கண்ணாடிக் கதவை திறந்து வந்த அவனுக்கு கல்லூரியில் வெளிவந்து ஓரிரு வருடங்கள் ஆகியிருக்காது என்பது போன்ற முகம். அவனது விண்ணப்பத்தில் இதுவரை வேலை பார்த்த விபரங்களுடன் மதிப்பெண் விபரங்களும் குறிப்பிடப்பட்டிருந்ததால், அவன் வேலைக்குப் புதியவன் என்று ஏற்கனவே அனுமானித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் அனுபவம் பெற்றவர்களின் விண்ணப்பத்தில் மதிப்பெண் விபரங்கள் இருக்காது. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், தெளிவான பதில்கள். நேர்முகம் நடந்த முழு நேரமும் முகத்தில் ஒரு மாறாத புன்னகை. அந்தப் புன்னகைக்கு காரணம் அவனது பள்ளிக்காலத்திலிருந்து காதலித்த பெண்ணுடன் இனி ஓரிரு மாதத்தில் திருமணம்  நடக்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சிதான் என்பதையும் தெரிந்துகொண்டோம்.  அவனை வேலைக்கு எடுப்பதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. அவன் எங்கள் அலுவலகத்தில் சேர்ந்தபிறகு,  எனது குழுவினரிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ அவனைப் பற்றி பாராட்டுக்கள்தான் வரும். அவனை நம்பி எந்த ஒரு வேலையையும் கொடுக்கலாம். அவனைப்போன்றவர்களால்தான் நான் நிம்மதியாக உறங்கினேன் என்று சொல்வேன். அப்படிப்பட்டவனைப் பற்றி இன்னொரு குழுவை சேர்ந்த மேலாளர் ஒருவர், அவன் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம் விளையாடுகிறான் பார்த்திருக்கிறாயா என்று என்னிடம் புகார் செய்தார். எனக்கு அது தெரியாமல் இல்லை. அவன் வேலையில் பழுது இல்லாததால் நான் கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால், பிராது என்று ஒன்று வந்துவிட்டால், கேட்டுத்தான் ஆகவேண்டும். அவனிடம் விசாரிக்க, அவன் , “தீர்வு காண கொடுக்கப்பட்ட பிரச்சனைக்கு சரியான பதில்களை கண்டடைய முடியாமல்  உடைக்கமுடியாத சுவற்றில் முட்டி  நிற்கும் சமயங்களில், நான் வீடியோ கேம் விளையாடுவதுண்டு. மற்றவர்கள் எல்லாம் பிங்க் பாங்க் விளையாடுகிறார்கள். நான் வீடியோ கேம் விளையாடுகிறேன் “ என்றான். அப்படியே ஆகட்டும் என்று கைகுலுக்கி கொள்வதை தவிர அதற்குமேல் விவாதிப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஒன்றும் இல்லை.

யோசித்து யோசித்து மண்டை காயும் பொழுதுகளில் , அவனுக்கு வீடியோ கேம் என்றால் எனக்கு இந்திய மொழிகளில் சினிமா பாட்டுக்கள். பெரும்பாலானவை குத்துப்பாட்டுகளாகவும், சிறப்பான  நடனங்கள் கொண்டவையாகவும் இருக்கும்.. பதினைந்து / இருபது நாட்களுக்கு முன்னால், ஒரு நண்பருக்கு அவருக்கு கொடுக்கவேண்டிய டாலர்களை  கொடுத்திருந்த வாக்கின்படி அனுப்பினேன்.  பணம் அனுப்பும் சமயம்,  அவரது மின்னஞ்சலை கொடுத்ததுமே எனது வங்கியும் அவரது போட்டோவுடன் நான் சரியான ஆளுக்குத்தான் அனுப்புகிறேன் என அவரது புகைப்படத்தையும் முழுப்பெயரையும் காட்டி உறுதி செய்தது. அதை கணினியில் அச்சு எடுத்து அவருக்கு அனுப்பினேன். அவரும், ஆம் புரிந்தது என்று அனுப்பியிருந்தார். ஒரு கடன் தீர்ந்தது என்று சர்க்கரை போடாத காப்பியெல்லாம் குடித்து நிம்மதி பெருமூச்சு விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் , அவர் வங்கிக்கணக்கில்  இன்னும் அந்தப் பணம் வந்து சேரவில்லை, உனக்கு திருப்பி அனுப்பிவிட்டார்களா என்று பார்த்துச்சொல் என்று குறுஞ்செய்தி அனுப்பினார். எனது வங்கியிலிருந்து போனது போனதுதான். அதை அவருக்குச் சொல்ல, “ஹூம் ஏதோ பிரச்சனை “ என்று சொல்லியவண்ணம் இருந்தார். எனது வங்கியிலோ அந்தத்தேதியில் சென்று பார்த்தால், அவருக்கு அனுப்பியதை அவரது முகத்துடனும்  முழுப்பெயருடனும் தெளிவாக காட்டியது. அதை இன்னொரு கணினி அச்சு அனுப்புவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அன்று கிட்டத்தட்ட இப்படி, பதில் சொல்வதற்கு என் தரப்பில் ஒன்றும் இல்லை என அடுத்து அடுத்து மூன்று மண்டை காயும் சச்சுரவுகள். அதிலிருந்து வெளிவர எனக்கு உதவிய இந்திய மண்ணில் உதித்த பாடல்கள், அன்று கேட்ட அதே வரிசை கிரமத்தில். எனக்கு ஸ்வரம் ஏற்றிக்கொள்வதற்காக மினுக்கி மினுக்கி பாடலை மட்டும் இரு முறை கேட்டேன். 

  1.  மினுக்கி மினுக்கி :ஒரு படத்தின் ஒரு காட்சியோ ஒரு பாடலோ அந்தப் படக்குழுவில் அனைத்து துறையின்  மொத்த உழைப்பையும் சொல்லிவிடும். அதற்கு தங்கலான் படத்தின் மினுக்கி மினுக்கி பாடல் ஒரு நல்ல உதாரணம். “அன்னக்கிளி ஆ அன்னக்கிளி” என்று பிரிதி கிரன் கும்மியடித்துப் பாடி வர, அவருடன் மற்றவர்களும் “அன்னக்கிளி அன்னக்கிளி சாஞ்சாடுற சாயக்கிளி” என  இணைந்துகொள்ள, கொண்டாட்டமும் குதூகலமும் பார்க்கும் நம்மையும் பற்றிக்கொள்கிறது.. ஏகன் ஏகாம்பரம் மற்றும் அனிதா சுந்தரேசன் வடிவமைத்த ஆடைகள் அவர்களை குறிப்பிட்ட காலகட்ட  மாந்தர்களாக்குகின்றன. ஒரு நம்பகத்தன்மையை வரவைக்க அந்த ஆடைகளில் வேண்டுமென்றே கூட ஏகனும் அனிதாவும் அழுக்கேற்றியிருக்கலாம். பார்வதி, கெங்கம்மா பாத்திரத்தில் தன் காலம் முழுக்க வாழ்ந்தவரைப் போல,  சேலை முந்தானையை பின்கொண்டு சேர்ப்பதும், உலக்கையை கை மாற்றி மாற்றி தானியத்தை இடிப்பதும் என ரசிக்க வைக்கிறார். தனித்தனியாக யார் ஒருவரைப்  பார்த்தாலும் இந்தப் பாடலை ரசிக்கும்படியாக இருப்பது இப்பாடல் காட்சியின் தனிச்சிறப்பு. நடன இயக்குனர் சாண்டி அமைக்கும் நடனங்களில் குறும்புடன் சொல்லப்படும் ஒரு கதையிருக்கும். தங்கலான் வாங்கி வந்த ஜாக்கெட்டும் , அதை புதிதாக அணியும் பெண்களின் வெட்கமும், கிண்டலும் சாண்டியின் குறும்புக்கதை வடிவமைப்புக்கு பொறுத்தமாக அமைந்துவிட்டன.    “உமா தேவி”-யின் பாடல் வரிகளும், ஜி.வி. பிரகாஷின் இசையும்,  Spotify-ல் மட்டுமே காதால் கேட்கக்கூடிய பாட்டாகவும் இதை நிலை நிறுத்தும். 
  1.  ரானு பம்பாய்க்கு ரானு  டிக்டாக் காணொளிகளால், என்னை வந்தடைந்த பாடல். எனக்குத் தெரிந்த அரை குறை தெலுங்கில்  “நான் வரமாட்டேன் நான் வரமாட்டேன் பம்பாய்க்கு வரமாட்டேன்” என்ற பொருளில் ,  வரிகளின் இனிமையில் உள் சென்றேன்.  ராமு ரதோட், லிகிதா-வுடன் மொத்தக் குழுவும் அதே வேகத்திலும் வசீகரமாகவும் ஆடுவதால் மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது.  ராமு ரதோட்டிற்கு எல்லா நைச்சியமான வார்த்தைகளையும் சொல்லி, பம்பாய்க்கு அழைக்க வைக்கமுடிகிறது என்றால், இந்த மாதிரி ஜோடனையான வார்த்தைகளால்தான் நான் உன்னை நம்பி பம்பாய் வரமுடியாது என்று புன்னகையுடன் லிகிதாவால் மறுக்க முடிகிறது.  நான்கு மாதங்களுக்கும் மேல் இந்தப் பாடல் என் கண்ணையும் காதையும் குளிர வைத்து வருகிறது. 
  1. உய் அம்மா : சிக்னி சமேளி பாடலுக்கு நடனமிடும் கட்ரினா கைஃபின் சாயலை  நினைவுறுத்தும் ரசா தடானி , “மூச்சேன் மே அகத் கெ தாவ் பரே, ஜப் மொஜடியே மே பாவ் தரே, ஜப் பாவ் தரே ஹாய் ஹாய், “ என்று எதிரில் இருக்கும் ஆணின் நெஞ்சில் தன் பாதத்தை வைத்துச் சீண்டி, பாடலுக்குள்ளும் நடனத்துக்குள்ளும் ரசிகர்களை ஈர்த்துவிடுகிறார். “திப் திப் பர்ஸா பானி” பாடலால் ரசிகர்களைக் கவர்ந்த ரவீனா டண்டனின் மகள் “உய் அம்மா” -விற்கு நடனமாடி, அய்யோ அம்மா நான் செத்தேன் என்று ரசிகர்களின் இதயத்தை உடைக்கிறார். 
  1. ஆயி நயி:  காதலிக்காக காத்திருப்பவனின் உணர்வுகளை நகைச்சுவையாகவும் பெண்ணின் நிலையை யதார்த்தத்திலும் சொல்லும் இந்தப் பாடலை தமிழில் மொழியாக்கம் செய்தால் எப்படியிருக்கும் என்ற ரசனையுடன் கேட்பேன்.  “பொய் சத்தியம் செய்தவளே , நீ வரவில்லை. இரவெல்லாம் நான் காட்டில் காத்திருந்தேன் நீ வரவேயில்லை. உனக்காக படுக்கையெல்லாம் வீட்டில் இருந்து கொண்டு வந்தேன், நீ வரவேயில்லை” என்று நாயகன் கேட்கிறான். “நான் நல்லா ஜோடிச்சி சிங்காரிச்சி வரலானும்தான் கிளம்பினேன், எங்க அம்மா மொறைச்சி என்னை நிறுத்திட்டாள்.  அதிர்ஷ்டம் கெட்டவளே எங்கே போகிறாய் என்று கேட்டாள். கல்யாணம் ஆகாத பொண்ணு காட்டுக்கெல்லாம் போக மாட்டாள். பையன்கள் காட்டுக்கு வாவென்று கூப்பிடுவார்கள். அவர்கள் ஏமாற்றுபவர்கள். கல்யாணம் செய்யமாட்டார்கள்” என்று நாயகி பதில் சொல்கிறாள்.
  1. குர்ச்சி மடதபட்டி : மடக்குச் சேரில் கையை ஊன்றிக்கொண்டு ஆடும் மகேஷ் பாபுவிற்காக இந்தப் பாடலை நான் பார்ப்பதில்லை என்று ஒரு வாக்குமூலம் கொடுத்துவிடுகிறேன்.  மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சவரக்கத்தியில் பிச்சைமூர்த்தியின் (ராம்) மனைவியாக , இரு குழந்தைகளுக்குத் தாயாக வரும் பூர்ணா-வா, இந்தப் பாட்டில் பல்லவி பாடி ஆரம்பித்து வைப்பது என்ற ஆச்சரியத்தில் பார்க்க ஆரம்பித்தேன். அவருக்காகவும் பாடலும் நடனமும் கொடுக்கும் வேகத்திற்காகவும் பார்க்கிறேன். 
  1. ஏண்டி கள்ளச்சி  : இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு சில நாட்களுக்கு முன் அமைந்து வந்தது. என்னைப் பாதித்த அவரது படங்களில் ஒன்றான தென்மேற்குப் பருவக்காற்றிலிருந்து “ஏண்டி கள்ளச்சி” அதுவாகவே தேர்வானது. தேனி வட்டாரத்து இளம் காதலராக வலம் வரும் விஜய் சேதுபதியும், வசுந்தராவும் பாடலின் வரிகளுக்கு உரமிடுகிறார்கள்.  தனக்கு அணுக்கமான கிராமத்தின் அழகை,  இயக்குனர் விளக்க, அதை உள்வாங்கிக்கொண்ட கேமராமேனின் கைவண்ணம் பாடல் முழுக்கத் தெரிகிறது. படம் வெளிவந்து பதினைந்து வருடங்கள் கடந்தும், இன்றும் கேட்க வைப்பது விஜய் ப்ரகாஷின் / ஸ்ரேயா கோஷலின் இனிமையான குரல்களும்தான்.  

Leave a comment