தங்கையின் கைப்பக்குவம்

Published by

on

ஞாயிற்றுக்கிழமை காலை.  இளையராஜா இசை வீடு முழுக்க காற்றென நிறைந்தது.  whatsapp-ல் ஒரு அழைப்பு. 

“என்னக்கா, பண்ணிக்கிட்டிருக்கீங்க… “ சித்ரா

“முருங்கைக் கீரையை, யூஸ்வலா, இந்தியன் ஸ்டோர்ல வாங்குவோம். முத்தன இலையா இருக்கும். இது சான் ஆண்ட்னியோ ஃப்ரெண்ட் கோபி, அவரு வீட்டுத் தோட்டத்திலிருந்து கொடுத்தது. கொழுந்து இலையா நல்லா இருக்கு . ஒவ்வொண்ணா பிய்க்கறதுக்குத்தான் கடியா இருக்கு…  “ ராதா

“ஒவ்வொண்ணா எவ்ளொ நேரம் அக்கா பிய்க்கிறது. அப்படியே ஒரு துணில சுத்தி நைட் வைச்சுட்டீங்னா, காலைல எல்லாமே உதிர்ந்திரும். ஈஸியா இருக்கும். ஆனா குட்டி குட்டியா இருக்கிற இலையோட குச்சிக இருந்தாலும், வறுக்கும்போது அதுவும் சேர்ந்து வெந்துரும். சூப்புக்கும் நீங்க அப்படியே போடலாம். ரெண்டு கப்பு தண்ணிய ஊத்தி, ஒரு கை அள்ளி முருங்கை கீரையை போட்டுட்டு , வெள்ளப்பூண்டு சீரகம் மிளகு தட்டிப் போட்டு உப்பை அளவா போட்டுட்டு, நல்லா கொதிக்க வைச்சு, எடுத்து வடிகட்டிட்டீங்கன்னா, சூப்பு ரெடி. வடிகட்டறதால குச்சிகளும்  நின்னுறும்., சூப்பு நல்லா இருக்கும், அக்கா ”

“நல்ல ஐடியாவா இருக்கே… “

“ஒரு ஸ்பூன் கொள்ளுப் பருப்பு..துவரம் பருப்பு ரெண்டையும் வறுத்துக்கிட்டு, கொஞ்சம் பூண்டு, வர மிளகாய், தேங்காய் கூட வைச்சு அரைச்சிட்டு, தாளிக்கும்போது வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு , கருகப்பிள்ளை, முருங்கத் தலையை போட்டு ஃப்ரை பண்ணிட்டு, அரைச்சதை ஊத்திட்டா.. கொழம்பு ரெடிக்கா.. அரைக்கறப்ப கூட புளியும் வைக்கனும்.. சப்பாத்தி இட்லி தோசைக்குத் தொட்டுக்கலாம்.. ரைசையும்  பிசைஞ்சு சாப்பிடலாம்…. “

திங்கள் மதியம், முருங்கைக் கீரை சூப் குடித்துவிட்டு, கொள்ளு, துவரம்பருப்புடன் இணைந்த முருங்கைக் கீரை குழம்பை தொட்டு சாப்பிட்டுக்கொண்டே,  “ஏம்மா, பாவ் பாஜில இதை பாஜியா தொட்டுக்கலாம்தானே” என்றேன்.  இரவு உணவிற்கு நான்கு பன்களை முருங்கை கீரை குழம்பைத் தொட்டுச் சாப்பிட்டேன். “கொஞ்சம் மீதம் இருக்கிறது, இதை அப்படியே சாப்பிடட்டுமா ?” என்ற கேள்விக்கு ராதா அனுமதி கொடுக்கும் முன் பாத்திரம் காலியாகியது. 

விமானம் எதுவும் ஏறாமல், ஊருக்கே போகாமல்,  நாள் முழுக்க தங்கையின் கைப்பக்குவத்தில் சாப்பிட்ட திருப்தி. 

புதுமணத் தம்பதிகளான எங்களை ராதாவின் தாய் மாமன் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். பக்கம்தானே என்று ராதாவும் நானும், பாரதியும் செல்லம்மாவைப்போல  கைகோர்த்து நடந்தே சென்றிருந்தோம். விருந்து முடித்து , திரும்பும் சமயம் , தம்பதிகள் நடக்கவேண்டாம் என்று அவர்கள் வீட்டில் இருந்த TVS-50-ஐ கொடுத்து “இதுல போய்டுங்க தம்பி” என்றார்கள். என் முதல் உதையில் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. தன் சடையை தோளின் வழியாக முன்விட்டு, தாவணி அணிந்த கதவு ஓரம் சாய்ந்திருந்த அவ்வீட்டுச் சிறுமி, “அண்ணா, வண்டி ஓட்டத் தெரியுமா தெரியாதா? “ என்று கன்னத்தில் குழிவிழ சிரித்தாள். அந்தக் கணம்தான், அந்தச் சிறுமிதான், உடன்பிறவா தங்கையென என் நெஞ்சில் அமர்ந்தவர் என்று இன்று நினைத்துப் பார்த்தால் தெரிகிறது .  

அன்னையை இழந்த வீட்டில் , சிறு வயதிலேயே அனைவருக்கும் சமைத்துப் பரிமாறி தன் தந்தைக்கும், மூன்று சகோதரர்களுக்கும் அன்னையென ஆனவர். விருந்தினர் என வருவோருக்கும் போவோருக்கும் அன்னம் படைக்கும் அன்னையானவர்.  காலம் முழுக்க, பிழைப்பிற்காக, வெளியூரில் வேலை பார்த்த நான், ஊருக்குச் சென்றால், அவர் சமையலை சாப்பிடாமல் வந்ததில்லை. 

அவளுக்குத் திருமணமாகி குடும்பஸ்தி ஆனபின்னும், அவளும் அவள் கணவனுமாக, அவளும் அவள் மகனுமாக, நாங்கள் ஊருக்குச் சென்ற நாட்களெல்லாம், எங்களுக்கு முன்னர் ராதாவின் வீட்டில் வந்து காத்திருப்பார். அண்ணனுக்குப் பிடிக்குமென லட்டும், ரவா லட்டும் செய்து எடுத்து வந்திருப்பார். உடுமலையில் இருக்கும் நாட்களில் உடன் இருந்து சமைத்துப் போடவும் எங்களுடனேயே தங்கி விடுவார். “ஏம்மா மாப்பிள்ளை ஒண்ணும் சொல்லமாட்டாரா” என்று நான்தான் கேட்டுக்கொண்டே இருப்பேன். அதற்கெல்லாம் புன்னகைதான் பதிலாக இருக்கும். அவர் அப்படி வந்து எங்களுக்காக காத்திருக்க முடியாத எங்கள் ஊர்ப்பயண நாட்களில், பயணக் களைப்பெல்லாம் பார்க்காமல், அவர் வீடு தேடி நாங்கள் சென்றதும் உண்டு. அவரைப் பார்க்கவா, அப்படி அவசர அவசரமாக செல்வீர்கள் எனக் கேட்டால், இல்லை அவர் கைப்பக்குவத்தில் சாப்பிட என்று சொல்வதற்குத் தயங்க மாட்டோம். 

இந்த அத்தைக்குத்தான் முடி எவ்வளவு நீளம் என்று சொல்லும் சஹாவிற்கும், அவரது சமையல் பிடிக்கும்.   அவரும் அவர் தோழியுமாக இணைந்து விசேட நாட்களுக்கு காரம் இனிப்பு என செய்து டப்பாவில் அடைத்து ஊரெல்லாம் கொடுப்பார்கள். தங்கை சித்ராவின் கைப்பக்குவத்திற்கு ஊரும் அடிமை என்பது அவரை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. 

Leave a comment