வாழ்வெனும் நெய்யில் புரட்டிய வண்டல்

Published by

on

“ஏம்மா,  இப்பல்லாம், நெய் காய்ச்சுனா முருங்கை இலையே போடறதில்ல” என்றேன் ராதாவிடம். “இந்தக் கோபி முருங்கைக் கீரை கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுத்தார், எப்ப பார்த்தாலும் முருங்கை முருங்கைனு பேசிக்கிட்டு, எழுதிக்கிட்டு.  ஒண்ணு பண்ணுங்க, உங்க தங்கச்சி சித்ராவ டிக்கட் போட்டுக் கூட்டிக்கிட்டு வாங்க. தம்பி கோபிய வாரா வாரம் முருங்கைக் கீரை, காய்னு கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க. அவங்களாச்சு, நீங்களாச்சு. நானே சமைச்சு சாப்பிட்டு எனக்கும் நாக்குச் செத்துப்போச்சு.  சித்ரா கையால சாப்பிட்டுட்டு படம் கிடம் பார்த்துக்கிட்டு ஜாலியா இருக்கேன்” என்றார்.  

“நீ வேறம்மா.. பாவண்ணனோட வண்டல்னு ஒரு கதை படிச்சேன். அதுல வர தயிர்க்கார அம்மா, நெய் காய்ச்சுறப்ப முருங்கை இலையை போடறாங்க. காய்ச்சி முடிச்சதும் வாணலில ஒட்டி இருக்கிற நெய்யில கொஞ்சம் கேப்பை மாவை அள்ளிப் போட்டு, ஒரு பொரட்டு பொரட்டி உருண்டை பிடிச்சுக் கொடுக்கறாங்க. அதை சாப்பிட்ட கதை சொல்ற பொடியன்  நாக்குல கரைய வைச்சே தொண்டை வழியா.. விழுங்குறான் பாரு.. அந்த நினைப்பில கேட்டுட்டேன்.” என்றேன்.

பாவண்ணன்  “ஆனந்த நிலையம்” தொகுப்பில் உள்ள பத்து கதைகளில் முதல் கதை, வண்டல். சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் கதையில் நெய் காய்ச்சி முடித்ததும் , வீட்டில் செய்யும் வண்டல் உருண்டையை உண்டு அவன் மகிழ்கிறான். கதையை வாசிக்கும் நமக்கு, வண்டலென கிராம வாழ்வியல் படிந்து விடுகிறது. எல்லோரையும் முறைசொல்லி அழைத்து சொந்தம் கொண்டாடும் வாழ்க்கை. சிறுவன் வண்டி ஓட்டிச் செல்பவரை முனுசாமி மாமா என்கிறான்.  நெய்க்காய்ச்ச வரும் பெண்ணை, தயிர்க்கார அத்தை என்கிறான். கதைசொல்லியின் அம்மாவை, தயிர்க்காரப் பெண் அண்ணி என்கிறாள். கிராமத்தில் தோட்டத்தில் களையெடுக்க வந்தாலும், வீட்டில் நெய் காய்ச்ச வந்தாலும் அவர்களும் கதை சொல்வார்கள். வீட்டில் உள்ளவர்களும் கதை சொல்வார்கள். நெய் காய்ச்ச காய்ச்ச அவர்கள் பரிமாறிக்கொள்ளும் கதைகளும் நமக்கு மேலும் மேலும் கிடைக்கும் வண்டல் உருண்டைகள்.

தொகுப்பின் தலைப்பிட்ட “ஆனந்த நிலையம்” கதையை நான் சொல்வனம் இணைய இதழில் வந்தபொழுதே வாசித்திருக்கிறேன். வீட்டுத் தரகரின் உதவியாளராக உள்ளவர் கதை சொல்கிறார். கதையோடு கதையாக அவர் கதையை சொல்வார். அதுதான் என்னில் நீண்ட நாட்களாக படிந்து நின்ற வண்டல். அப்பாவின் சொத்து அவருக்குப் பின் யாருக்குச் சொந்தம் ? பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்பொழுது அவர்களை அக்கறையாக பார்த்துக்கொண்டவர்களுக்கா? பணம் சம்பாதிக்க நாடுவிட்டு நாடு சென்றவர்களுக்கா? புலம்பெயர்ந்து வந்துவிட்ட பெரும்பாலானோர் சந்திக்கும் அதே கேள்வி. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான ஆனந்த நிலையத்தை தராசில் நிறுத்திப் பார்க்க வைக்கும் கதைகளும் பாத்திரங்களும். பாவண்ணன் விலகி நின்று வேடிக்கை பார்க்கிறார். 

நூலுக்கு முன்னுரை எழுதிய கவிஞர் ரவிசுப்பிரமணியன், தொகுப்பில் தனக்குப் பிடித்தது முறிமருந்து என்கிறார். எங்களைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். நாங்கள் இருவரும் பால்ய நண்பர்கள் போல சண்டை போட்டுக்கொள்வோம். அது எப்படி அவர் சொன்னால் நான் சரி என்பது. இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும். நல்ல படைப்பை இருவருமே ஒன்றெனக் காண்போம். ஆதலால்தான் நாங்கள் நீண்டநாள் நண்பர்கள். 

நானும் ராதாவும், சென்ற வருடம் செப்டம்பரில், பெங்களூரில் வசிக்கும் பாவண்ணனையும் அவர் குடும்பத்தையும் பார்க்கச் சென்றிருந்தோம், அப்பொழுது அவர் அன்பளிப்பாக கொடுத்ததுதான்  “கனவு மலர்ந்தது”, “நயனக்கொள்ளை”, “ஆனந்த  நிலையம்” என மூன்று தொகுப்புகள்.  இந்த ஒரு வாரமாக பாட்டில் தேனை ஒவ்வொரு ஸ்பூனாக பருகுவதுபோல ஒவ்வொரு கதையாக வாசித்தேன். வாசிக்கும் சமயம் என்னை அறியாமலேயே,  நாக்கைச் சுழற்றி உச்சுக் கொட்டியிருக்கிறேன். பக்கத்து அறையில் இருந்து வந்த சஹா, “கதைகள் அவ்வளவு நன்றாக இருக்கா? ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாமா?’ என்று கேட்டார். முறிமருந்து (ஆனந்த நிலையம்), கலைமாமணி (நயனக்கொள்ளை) கதைகளை பரிசீலிப்போம் என்றேன். 

இந்தியப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் எவர் ஒருவருக்கும் சொல்லவேண்டியது இருபெரும் இதிகாசங்களை (மஹாபாரதம், ராமாயணம்). ஒரே மூச்சில் மஹாபாரதத்தைச் சொல்லி முடிக்க ஜெயமோகனுக்கு  ஆறரை ஆண்டுகள் பிடித்தன.   அன்றாடச் செயல்களோடு உரையாடலோடு உரையாடலாக, கதையோடு கதையாக  சொல்லவேண்டும்.  அப்படித்தான் குடும்பம் குடும்பமாக , கிராமம் கிராமமாக பேசப்பட்டு, பாடப்பட்டு , நடிக்கப்பட்டு இரு இதிகாசங்கள் இந்திய மண்ணில் அழியாத இடம் பெற்றுள்ளன. கலைமாமணி கதை , மஹாபாரதக் கதைகளை கூத்தாக நடிக்கும் ஒரு தாத்தாவின் கதை. கிராமத்தில் கூத்து நடத்தும் அவருக்கு , கதை சொல்லியின் அப்பா அவரது அபிமானியாக , கலைமாமணி பட்டம் வாங்க போராடுகிறார். அவருக்கு கிடைத்ததா கிடைக்கவில்லையா என்பதல்ல கதையின் உச்சம். கலையின் மேல் அந்தக் கலைஞனுக்குள்ள மரியாதையும், மக்கள் அவர் மேல் வைத்துள்ள நம்பிக்கையும்தான் கதையின் உச்சம். இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதன் மூலம், மஹாபாரதத்தின் பாத்திரங்கள் , தமிழக கிராமங்களில் நடக்கும் கூத்து, கூத்து நடத்தும் தாத்தா போன்ற கலைஞனை ஆங்கில வழியில் புனைவுகளை வாசிப்பவர்களுக்கு அறிமுகமாகும்.

இந்தியாவிற்கு என்று தனித்தன்மையுடன் ஆவணங்கள் அதிகம் எதுவும் இல்லாமல் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக கடத்தப்படும் ஞானங்களில் ஒன்று –  நாட்டு வைத்தியம். இதை பேசுபொருளாக கொண்டு எழுதப்பட்டுள்ள கதை – முறிமருந்து. டெக்ஸாஸில் ஒரு தேள் கடித்துவிட்டாலே ஆயிரம் ஆயிரம் டாலர்களாக மருத்துவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆங்கிலத்தில் இந்தக் கதையை வாசித்தால், இப்படியெல்லாம் பிழைக்கத் தெரியாத , வைத்தியம் பார்க்கும் மக்கள் இருக்கிறார்களா என்று அதிசயத்துப் போவார்கள். அப்படியென்றால், இந்தக் கதை  நாட்டு வைத்தியத்தைப் பற்றிய ஆவணம்போல் இருக்குமா என்றால் இல்லை. கதைக்கான சுவாரஸ்யமும், அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் உண்டு. 

பாவண்ணன் கதைகள் உண்மையை திரிப்பதில்லை. வாழ்வை வேண்டும் என்றே இனிதென சொல்வதில்லை. “நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பது போல இவர் கதையில் வரும் தன்னலமற்றவர்களும், தியாகிகளும், பேராசையற்றவர்களும், மானுடத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைக்கிறார்கள். கதைகளை இனிய பண்ணென வாசிக்கச் செய்கிறார்கள். அவர்கள் யாரும் வழிந்து திணிக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் அன்றாடத்தில் சந்திப்பவருடன் ஒப்பிடக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  “ஆனந்த நிலையம்” கதையில், எவ்வளவு சொத்து வந்தாலும், அப்பா சொத்தில் பங்கு கேட்பவர்கள் இருக்கின்ற உலகில்,  பங்கு (நயனக்கொள்ளை) கதையில் வரும் தனலட்சுமி சார்பாக அவள் கணவன் செல்வக்குமார் அன்று சொன்னதுதான் இன்றும் என சொத்தில் பங்கு வேண்டாம் என்கிறார். “புற்று” கதையில், தந்தை இறந்துவிட தனது படிப்பைத் தியாகம் செய்து வேலைக்குச் சென்று தம்பிகளை படிக்க வைக்கத் தயாராகும் மூத்தவன் “ நேசமணி “.  

பாவண்ணன் கதைகளில் காலம் நிகழ்வுகளாக வந்து குடியேறுகிறது. அந்த நிகழ்வுகள் நடந்த காலத்தை அறியாத வாசகன் எப்படிப் பொறுத்திக்கொள்வான் என்பது ஒரு புதிர். அது கற்பனையான நிகழ்வுகள் என்பதால் காலத்தோடுப் பொருத்திப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டுமா என்ற வாதத்தையும் எடுத்து வைக்கலாம். எம்.ஜி.ஆர் வரும் வள்ளல் கதையை வாசிக்கும் வாசகன் யாரோ ஒரு முக்கியமானவருக்காக மாடுமேய்க்கும் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியும்தான். வள்ளல் என்றும் வள்ளல்தானே ?. எம்.ஜி.ஆர் வரும் பாவண்ணன் கதைகள் என ஒரு கட்டுரை எழுதும் அளவு குறிப்புகள் குறியீடுகள் உள்ளது என்பதையும் ஒரு ஸ்மைலி எமோஜியுடன் பதிவு செய்துவிடுகிறேன்.  

சுதந்திர இந்தியாவிற்கு முன் வந்தவர்கள் , வெள்ளையாக வெளி நாட்டவர்கள் என்றால், பிரான்ஸ், போலந்து, அயர்லாந்த், பிரிட்டிஷ் எல்லோரும் வெள்ளைக்காரர்கள்தான். இந்திய நாட்டை விட்டுச் சென்றபொழுது, அவர்கள் இங்கே விட்டுச் சென்றது, கல்வி, அரசாங்க, பாராளுமன்ற அமைப்பு போன்றவைகளுடன்,  அவர்களால் உருவான அனாதைக் குழந்தைகளும்தான். ஜெயமோகனின் ஊமைச்செந்நாயில் ஒருவனை சந்தித்திருக்கிறோம். பாவண்ணனின் “நயனக்கொள்ளை” தொகுப்பில் ஒருவனை சந்திக்கிறோம். இவன் பாண்டிச்சேரியிலிருந்து வடக்கே பயணமாகி ஹிந்தியும் கற்றுக்கொள்கிறான். கடையில் வகைவகையாக பலகாரங்கள் செய்கிறான். 

பாவண்ணனுக்கும் சினிமாப்பாடலுக்குமான அணுக்கத்தை அவரது கதைகளில் காணமுடிகிறது. “கடைசிவரை (ஆனந்த நிலையம்)” கதையில் , துக்கவீட்டில் க்ளாரிநெட்டில் சினிமாப் பாடல்களை தன் குழுவுடன் வாசிப்பவன் தான் கதையே சொல்கிறான். அவன் கிளாரிநெட்டில் வாசிக்க வாசிக்க  ட்ரம்பட் வாசிப்பவன் எப்படி இசைவுடன் இணைகிறான் என்பதை நுணுக்கங்களுடன் சொல்லியிருக்கிறார். சிவப்புக்கல் மூக்குத்தி கதையில் நண்பர்கள் இணைந்து , “ஐந்து நட்சத்திரங்கள்” என்று இசைக்குழு வைத்திருக்கிறார்கள். “தனிவழி” கதையில், பி.பி. ஶ்ரீனிவாஸின் குரல் சோகப்பாட்டுக்குரியதுதான் என ஆர்மோனியம் வைத்துப் பாட்டுப் பாடும் நாடோடி தாத்தா நிறுவுகிறார்.  ஜெயமோகனின் , புறப்பாடு நாவலில், இரயில் பயணத்தில் ரேடியோவில், பயணிகள் பாடுவது என அடுக்கு அடுக்காக பாடல்கள் வந்த வண்ணம் இருக்கும். பாவண்ணனின் இந்தக் கதையிலும், சிறுவன் ஆனந்தும் , நாடோடி தாத்தாவும் பாடல்களாகப் பாடித் தள்ளுவார்கள். பாவண்ணனிடம்,  எனது தனிப்பட்ட உரையாடலில் இதைக் குறிப்பிட்டுக் கேட்டபொழுது, “படம் பார்ப்பதும், பாட்டுக் கேட்பதும் பாடிப் பாடி மகிழ்வதும் அந்தக்காலத்தில் மிகப்பெரிய பொழுதுபோக்கு. இன்பம். பாடல்கள் இன்றும் எனக்குப் பெரிய ஆறுதல் அளிக்கும் செயல்” என்றார்.

கதைசொல்லிக்கு யார் என்ன தொழில் செய்தால் என்ன ? அனைவரும் மானுடர்களே. அவர்களுக்கும் வாழ்க்கையுண்டு, வேதனை, இழப்பு, ஏற்றம், இறக்கம், காதல், தோல்வி எல்லாம் உண்டு.  கனவு மலர்ந்தது தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளை வைத்தே பாவண்ணனின் கதை மாந்தர்களின் தொழில் எப்படியெல்லாம் வேறுபடுகிறது என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். இரும்புக்கோட்டை கதையில் சர்க்கஸ் குழுவினர், ரோஜாப்பூக்கள் கதையில் பழைய கட்டிடத்தை இடித்து பெயர்த்து பாகம் பாகமாக பிரித்து வைக்கும்  குழுவினர், “மணம்” கதையில் சமையல் கூட்டம், கனவு மலர்ந்தது கதையில், ஊர்த்திருவிழாவில் நாடகம் போடும் நண்பர்கள்.  மானுடத்திற்குச் சொந்தமான துக்கமும் இன்பமும் மட்டும் போதுமா கதை சொல்பவனுக்கு ? கதையை விரித்தெடுக்க வேண்டாமா ? அந்தந்த கதையில் வரும் தொழிலுக்கான நேர்த்திகளை பாவண்ணனின் எழுத்தில் காணமுடிகிறது. இரும்புக்கோட்டை கதையில் வரும் விவரணை. //இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரமும் லதாவும் மேடைக்கு ஓடி வந்தார்கள். அரங்கத்தினரை நோக்கி குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு அரங்கத்தின் வட்டப்பாதையிலேயே ஓடி ஆளுக்கொரு கயிற்றை எம்பிப் பற்றி ஊஞ்சலாடினார்கள். வலது கையும் வலது காலும் மட்டும் கயிற்றைப் பற்றியிருக்க இடது கையையும் காலையும் அந்தரத்தில் விரித்தபடி ஒரு குடையைப் போல சுழன்றார்கள். //  மணம் கதையில்  தன் எஜமான் பிரியாணி சமைத்து முடிப்பதை கதை சொல்லி விவரிக்கும் வரிகள். // முறத்தில் நறுக்கிவைத்திருந்த கொத்துமல்லியையும் புதினாவையும் எடுத்து அண்டாவுக்குள் தூவினார் அண்ணன். சோறும் கறியும் சேரத் தொடங்கியதும் லேசான மணமெழுந்து பரவியது. கடைசியாக எஞ்சியிருந்த நெய்யையும் எலுமிச்சை சாறையும் ஊற்றிவிட்டு ஜல்லிக்கரண்டியை அண்டாவின் விளிம்பு வழியாகக் கொண்டு சென்று மெல்ல மெல்ல நடுப்பகுதிக்கு இழுத்துவந்து நாலைந்து முறை புரட்டிவிட்டு நிறுத்தினார். // 

பாவண்ணன் கதைகளை குடும்பமாக வாசிக்கலாமா என்று சினிமா பாணியில் சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டால், அவரது கதைகளை கூட்டாக வயது வரம்பின்றி படிக்கலாம் என்று தைரியமாக சொல்வேன். காமம் இல்லாமல் வாழ்க்கையை சரியாக எழுதமுடியுமா என்று இலக்கியவாதிகள் கேட்டால்,  அதன் பாதிப்புகளை நிகழ்வுகளின் வழியாக சொல்லமுடிகிறது பாவண்ணனால் என்பேன். ஆனந்த நிலையம் தொகுப்பில், பழுது என்றொரு கதை அதை தொட்டுச் செல்கிறது. வாசிப்பவன் தன் வாழ்வில் சந்தித்தவனாக அன்புக்கனியை நினைவு கூறுவான். 

காதலுக்கு கண்ணும் இல்லை. பணம் காசும் இல்லை. சங்கராபரணி கதையில் முயல் வேடம் இட்டு மங்களா டெக்ஸ்டைல் வாயிலில் நிற்கும் எட்டாம் வகுப்பே படித்திருக்கும் மகாதேவனுக்கு விற்பனைப் பெண் அபிராமியின் மேல் காதல். அது ஒரு தலைக்காதலா ? நிறைவேறுமா என்பதெல்லாம் வாழ்க்கையிடமும் காலத்திடமும் கொடுத்துவிடலாம். வாசிப்பதற்கு இனிமையான காதல் கதை.  தன் பழைய காதலியின் பெயரை தன் குழந்தைக்கு வைக்கும் காதலனை பார்த்து கேட்டுச் சலித்தவர்களுக்கு வடிகாலாக, சிவப்புக்கல் மூக்குத்தி கதையில், காதலி , காதலனின் நினைவாக அவள் குழந்தைகளுக்கு அவன் பெயரை வைக்கிறாள்.  இதில் வரும் காதல் தோல்விக்கு காரணம் பெற்றோர்களின் அரசியலா இல்லை கதை சொல்லும் கையாளாகதவனா ?

மூன்று தொகுப்பில் முப்பது கதைகளில் வாழ்வின் அனைத்து ருசிகளும் பொதிந்துள்ளன. வாழ்வெனும் நெய்யில் புரட்டியெடுத்த வண்டல் உருண்டைகள் என்று பாவண்ணனின் கதைகளை சொல்வேன். வாசிக்கும் எவரும் அவை தொண்டைக்குழியில் சிறுகச் சிறுக இறங்குவதை உணரலாம். 

Leave a comment