கமலதேவியின் சீதா, துறையூரில் இறங்கி , பனிக்காலம் முடித்த புதுவெயிலில் கொடுத்த எரிச்சலில் கைக்குட்டையையெடுத்து முகத்தைத் துடைக்க, கதையின் உள்சென்றுவிட்ட வாசகன் சௌந்தர் உளப்பூர்வமாக சீதாவைத் தொடர, யாரோ தன் முன்னர் நிற்பதுபோல் மாயையெனத் தோன்ற நிமிர்ந்து பார்த்தார். கடுகைப்போட்டால் வெடிக்கும் என்ற முகத்துடன் கொதி நிலையில், மேலாளர் சௌந்தர் நின்றார்.
வா. சௌந்தர் : என்னங்க சார் ?
மே. சௌந்தர் : எத்தனை நாளைக்குத்தான் கமலதேவி கதைகளையே படிச்சிக்கிட்டே இருப்ப..? மேல .. லைப்ரரி ரூம் டேபில்ல பார்த்தா, Salman Rusdie-யோட Midnight’s Children-ம் Robert Macfarlane-வோட Is A River Alive புத்தகங்களும் இருக்கு.
வா.சௌந்தர் : அது வந்து சார், கமலதேவி கதைகளை படிச்சா ஊருக்கே போய்ட்ட மாதிரி இருக்கு. நான் வந்தப்ப இருந்த கிராமங்கள் இப்ப எப்படி மாறியிருக்குனு ஒரு சித்திரம் கிடைக்குது. பெண்கள் காலேஜுக்கெல்லாம் போய் படிச்சிட்டாங்க. ஏதாவது மாற்றம் இருக்கானு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு. ஆனா பொண்ணுங்க கஷ்டம் அப்படியேதான் இருக்கு. கமலதேவி கதைகள்ள என்னால ஈசியா மூழ்கிட முடியுது. சல்மான் ருஷ்டி, நாற்பதாவது பதிப்புக்கு எழுதுன முன்னுரைய படிச்சுட்டு, முதல் அத்தியாயத்தில் மூணு நாலு பக்கம் படிச்சேன். அவரோட எழுத்து ஸ்டைல்ல என்னால உடனே உள்ள போமுடியல.
மே. சௌந்தர் : Midnight Children வாசிக்காததற்கு ஒரு சாக்காடு சால்ஜாப்பு எல்லாம் வைச்சிருக்க. Whatsapp Status-ல என்னமோ நாலு பாயிண்ட்ஸ் போட்டு, சூழியல், ஆறு, வறட்சி அப்படின்னு, Is A river Alive ? புத்தகத்தை உடனே படிக்கிறமாதிரி பீலாவெல்லாம் விட்ட.
வா.சௌந்தர் : அதுவா.. விவேக், மதன் மாதிரி நண்பர்கள் இருக்காங்க. அவங்க என்ன படிச்சாங்கன்னு பார்த்தீங்கன்னா ஒரே English books-ஆ இருக்கும். அந்த ரெமீதா மேடம் இருக்காங்கல்ல.. அவங்களும் அப்படித்தான். இடையில நம்மலும் English books படிக்கிறம்னு கொஞ்சம் பீலா விடனும். நானும் ரெண்டு காலில நிக்கிற சாதாரண மனுஷந்தான. அதே ஆதங்கம் , ஷோ காமிக்கிறது எல்லாம் இருக்கும்.
மே. சௌந்தர் : உன்னைப் பார்க்கறவங்க என்னையும் பார்ப்பாங்கன்னு தெரிஞ்சிக்கோ. நான் எள்ளுனு சொன்னா எண்ணையோட நிக்கிறவங்க இருக்காங்க. இந்த மாதிரி பீலா விடற ஆளோட நான் பிரெண்ட்ஷிப் வைச்சிருக்கேனு தெரிஞ்சா அவங்ககிட்ட என் மதிப்பு போய்டாதா ?
வா. சௌந்தர் : அப்படியெல்லாம் ஆகாது சார். It is human … அப்படின்னு தத்துவமும் இலக்கியமும் தெரிஞ்ச வாசக நண்பர்கள் அவர்கள்.
மே. சௌந்தர் : போன வாரம் டாலஸ் பிரதீப் பாரதி, அதான், சொல்வனத்தில, மருத்துவத்தில் நிலைத்தவையும் அழிந்தவையும்-னு ஒரு தொடர் எழுதறாருல்ல.. அவர் சொன்னாரு… நீ.. முக நூல்ல Game of Thrones காப்பியடிச்சு ஒரு தொடர் எழுதினயல்ல, அதை அவர் வாசிப்பாராம். அது இப்ப காணோம்னு கேட்டாரு…
வா. சௌந்தர் : தலையை சொறிந்துகொண்டு ஒரு அசட்டுச் சிரிப்பு.
மே. சௌந்தர் : எதையாவது ஆரம்பிக்கவேண்டியது. முடிக்கிறது இல்ல. எனக்குத்தான் வெளியே மூஞ்சை காமிக்க முடியல. வாஷிங்டன் டி.சி-ல ஒரு தங்கைச்சி இருப்பாங்கல்ல. அவங்ககூட அதை வாரா வாரம் வாசிப்பேன் சொல்லியிருந்தாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாரு அந்த தொடருக்கு இன்னும் மவசு இருக்கு.
வா. சௌந்தர் : நிறைய படிக்க வேண்டியது இருக்கா.. இதுல படிச்சி படிச்சி மொழியாக்கம் பண்ணி எழுதுறது இன்னும் கொஞ்சம் உழைப்பை போடனும். பார்க்கிறேன்..
மே. சௌந்தர் : வீட்டிலேயும் ஒரு வேலையும் உதவியும் செய்றதில்லை. படிக்கிறது எழுதறது அப்படினு தண்ணி தெளிச்சு விட்டாச்சு. அப்புறம் என்ன கஷ்டம் உனக்கு ?
வா. சௌந்தர் : என்னைப் பற்றி உங்ககிட்ட வத்தி வைக்கிறதுக்கு ஊர் எல்லாம் ஆளுக இருப்பாங்க போல.
மே. சௌந்தர் : உனக்கு என்ன Books வாங்குறதுனு தெரியாமா, நண்பர்களெல்லாம், gift cards கொடுக்கறாங்க, அதுக்கெல்லாம் books வாங்குறயா இல்லை சட்டை பேண்ட், கார் ரிப்பேர் கிட் வாங்குறயா ?
வா. சௌந்தர் : Books-தான். பெருந்தேவி , தேர்ந்தெடுத்த தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கில மொழியாக்கத்தில் வெளியிட்டாங்கல்ல Tamil : The Best Stories of Our Times, அது, மதார் கவிதைகள், ம. நவீனின் நூல்கள், Emily Dickinson poems – எல்லாம் நண்பர்கள் கொடுத்த Gift Cards-லதான் வாங்கினேன்.
மே. சௌந்தர் : ஆனா, Emily Dickinson Poems-ல்லாம் படிக்காம அப்படியே அழகுக்கு லைப்ரரில வைச்சிருப்பயே..
வா. சௌந்தர் : ஹி..ஹி..
மே. சௌந்தர் : பெருந்தேவி இருபது தமிழ் எழுத்தாளர்கள் கதைகளை கஷ்டப்பட்டு மொழியாக்க வல்லுனர்களோட வேலை செஞ்சு தொகுத்து ஆங்கிலத்தில கொண்டு வந்திருக்காங்கல்ல. அதை படிச்சிட்டு, எப்படி வந்திருக்குனு அவங்ககிட்ட சொன்னயா ?
வா. சௌந்தர் : ஜெயமோகனின், பலி கதையை ஆங்கிலத்தில் Sacrificial Stone-ங்கர்ர பெயர்ல சுசித்ரா மொழியாக்கம் செய்திருக்காங்க. அதை மட்டும் படிச்சிட்டு நல்லா வந்திருக்குனு சொன்னேன்.
மே. சௌந்தர் : மற்றதெல்லாம் யார் படிப்பா? உங்க அப்பாவா ?
வா. சௌந்தர் : அவரு மேல போய்ட்டாரு. சும்மாதான இருப்பாரு. அவரு படிச்சாலும் படிச்சிருப்பார். கனவுல வர்ரப்ப அவரு கருத்தை கேட்டுட்டு அப்படியே நான் படிச்ச மாதிரி பெருந்தேவிகிட்ட சொல்லிட்டாப் போச்சு. ஹி..ஹி..
மே. சௌந்தர் : உன்னைவிட எவ்வளவு சின்னப்பொண்ணு. மது. கம்பராமாயாணம் காண்டம் காண்டமா படிச்சுத் தள்றாங்க. நீ என்னடான்னா.. 200 பக்கம் உள்ள புத்தகத்தையெல்லாம் வாசிச்சேட்டேன் வாசிச்சிட்டேன்னு ஸ்டேட்டஸ் போட்டுட்டு பீத்திக்கிற..
வா. சௌந்தர் : ஒருத்தராட்டா ஒருத்தரு இருக்கமுடியுமா. அது மது தங்கச்சியோட ஸ்பீடு. இது என் ஸ்பீடு.
மே. சௌந்தர் : ராதாகிட்ட சொல்லிட்டு செய்யாமா இருக்கிற மாதிரி என்கிட்ட ஒண்ணும் நடக்காது தம்பி. வாரத்தில ஒரு நாளு ரெண்டு நாளு லைப்ரரி போய் படிக்கிறேன் சவடால் விட்டீங்களே அது எப்படி போய்க்கிட்டு இருக்கு.
வா. சௌந்தர் : அட நீங்க வேற. உங்களை கூட ஏமாற்றிரலாம். ராதாவை ஏமாற்ற முடியாது. நான் லைப்ரரிக்கு போய் உண்மையிலேயே படிக்கிறானானு பார்க்க அவங்களும் கூட வர்ராங்க.
மே. சௌந்தர் : அந்தப் பிள்ளைகிட்ட அங்கேயும் டீ போடறயானு நீ கேட்காமா இருந்தா சரி.
வா. சௌந்தர் : அந்த வயித்தெறிச்சல வேற ஏங் கேக்கறீங்க. அங்க வந்தா அவங்கதான் ஒரு புத்தகத்தை வாசிச்சு முடிச்சுட்டுத்தான் எந்திரிக்கிறாங்க. நான்தான் ஒவ்வொரு புத்தகத்திலேயும் நாலு பக்கம் அஞ்சு பக்கம்னு படிக்கிறேன்.
மே. சௌந்தர் : பாவண்ணன் சாரோட மூணு புத்தகத்தில முப்பது கதைகள் படிச்சேன்னு அவர்கிட்டேயே பீத்திக்கிட்டு இருந்த. கமலதேவிக்கு நீ படிக்கிறது தெரியுமா ? வாசிப்பனுபவம் எழத வேண்டியதுதானே?
வா. சௌந்தர் : அதுக்கு ரெண்டு மூணு தடவை படிக்கப் போய்த்தான்.. நீங்க வந்து இப்படி காண்டு ஆகிற மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கறீங்க.
மே. சௌந்தர் : கேட்காம என்ன பண்றது ? வருசத்துக்கு பத்து பனிரெண்டு வாசிப்பனுபவம் எழுதிக்கிட்டு இருந்த… இப்பல்லாம்.. மூணு நாலுனு ஆயிடுச்சி. Game of Thrones-ஐ காப்பியடிக்கிறது கஷ்டம்னா, இந்த வாசிப்பனுபவம் எழுதறத மட்டும் நீ prioritize பண்ணிக்கோ.. என்ன ?
வா. சௌந்தர் : சஹா என்னைக் கதை எழுதச் சொல்றாரு…
மே. சௌந்தர் : முதல்ல நல்ல கட்டுரையை எழுது. அப்புறம் கதைய பற்றி யோசிக்கலாம்.
வா. சௌந்தர் : எனக்கு இவ்வளவு சொல்றீங்களே.. நீங்களும் வாசிச்சு எழுதிப் பார்த்தாத்தான் தெரியும்.
மே. சௌந்தர் : நான்தான் நீ. நீதான் நான். எனக்கு எல்லாம் தெரியும். போயி வாசிக்கிற வேலையைப் பாரு.

Leave a comment