சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய சங்ககாலப் புலவர்கள், வெள்ளைக்குடி நாகனார், கோவார் கிழார் முதல், ராஜ ராஜ சோழனின் கதையை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காட்சி வடிவமாக்கிய மணி ரத்னத்தின் படத்திற்கு பாட்டு எழுதிய கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் வரை அவளைப் பற்றிப் பாடுவதும் எழுதுவதும் தொடர்கிறது. அவள் சரித்திரத்தைப் பாடுவது என்பது தமிழர்களின் வரலாற்றைப் பாடுவது. அவளின் கதையை எழுதினால், அது தமிழர்களின் கதை. தமிழர்களுக்கு இசையாகவும், இலக்கியமாகவும் நின்றவள் அவள். ஆதலால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எழுதப்படும் அவளின் சரித்திரம் ஆயிரக்கணக்கான நூல்களில் கிடைக்கும். எத்தனை நூல்கள் இருந்தால் என்ன இந்த மூன்று நூல்களை தொட்டெடுத்தால் மற்ற நூல்களை சென்று சேர வழி வகுக்கும்.
“கெடிலக்கரை நாகரிகம்” எனும் நூல் ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்டு, கடலூர் சீனுவால் எங்கு தேடியும் கிடைக்காமல், கனவில் எல்லாம் அந்த நூல் அவருக்கு வந்துள்ளது . 650 பக்கங்கள், 51 விளக்கப் படங்கள் கொண்ட அந்த நூலை எழுதியவர் சுந்தர சண்முகனார். அவ்வளவு பெரிய நூலை யார் வாசிப்பார்கள் என்ற அவ நம்பிக்கையில் “கெடில வளம் “ எனும் ஒரு வழி நூலையும் எழுதியுள்ளார். வாசகர் பற்றிய அவ நம்பிக்கையின் அதீதத்தில், சுந்தர சண்முகனார், 768 கிலோ மீட்டர்கள் ஓடும் காவிரி பற்றி, இரண்டாயிரம் வருடங்களாக பாடப்பட்ட பாடல்களை சிறு சிறு குறிப்புகளுடன் கொடுத்து, தொகுத்து “தமிழ்க் காவிரி” என்னும் நூலை , வெறும் 130 பக்கங்களில் எழுதியுள்ளார். இந்தக் குறைவான பக்கங்களிலும், காவிரியின் வரலாறையும், பெயர்க்காரணத்தையும், அவள் ஆழத்தையும் அகலத்தையும், தெய்வீகத் தன்மையையும், அவள் நிறைத்து வளர்த்த ஊர்களையும், நகர்களையும், தமிழ் இலக்கியத்தின் இன்றியமையாத பாடல்களின் வழியே மொத்த நூலையும் கட்டமைத்துள்ளார்.
காவேரி என்றும் எழுதுகிறார்கள். காவிரி என்றும் குறிப்பிடப்படுவதை பார்க்கிறோம். சுந்தர சண்முகனார் நூலில் இரண்டு பெயர்களுக்குமான விளக்கம் உள்ளது. அகத்தியன் தன் கமண்டலத்திற்குள் தண்ணீராக அடக்கி வைத்த அவன் மனைவியே காவேரி, கவேரனின் மகள். காகம் கமண்டலத்தை கவிழ்க்க நீர் விரிந்து ஓடியதால் காகாவிரி காவிரியாகிறாள். விரிந்தோடும் காவிரி வடக்கிலிருந்து தெற்காக, தென்கிழக்காக, கிழக்காக ஓடுபவள். தமிழ் நாட்டில் ஓமலூர், திருச்சங்கோடு மாவட்டங்களில் வடக்கு தெற்காக ஓடும் ஆறு, பின்னர் சோழ நாட்டில் தென்கிழக்காக ஓடுகிறது என்பதை அக நானூறு (76) பாடலின் மூலம் சுட்டிக்காட்டுகிறார்.
“சிறைபறைந் துரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அந்தண் காவிரி போல”

காவிரி பாய்ந்தோடும் திசைகளைச் சொல்லும் நூலில், அவளது ஆழத்தையும் அகலத்தையும் சொல்லும் இலக்கியச் சான்றுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. விசைப்படகுகள், பாலங்கள் இல்லாத அந்தக் காலத்தில், மூங்கில் கோலை ஆற்றின் மண்ணில் ஊன்றி பரிசலை செலுத்தியே ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் சென்றுள்ளார்கள். அந்தக் கோல் ஊண்றித் தொடமுடியாத ஆழம் (கழைனிலை பெறாஅக் காவிரி நீத்தம்) இருந்தது எனச் சொல்லும் அகநானூறு (6) பாடல்.
“பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்” .
ஆழம் அப்படியென்றால், காவிரியின் பரப்பு கடல்போல் எனச் சொல்லும் ஞானசம்பந்தர் திருப்பழனம் பற்றிய தேவாரப் பாடலில், “கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல்போல் காவிரி” எனக்குறிப்பிடுவதை நூலாசிரியர் உதாரணம் காட்டுகிறார்.
என் நினைவுகளில் மழைக்காலத்தில் இருகரை புரண்டோடும் காவிரியும், கோடையில் வற்றியும் மணல் திருடப்பட்டும் பாவமாக காட்சியளிக்கும் காவிரியும் உண்டு. “தமிழ்க் காவிரி” நூல் காட்டும் காவிரி என்றும் வற்றாதவள். மணிமேகலையில் கோடையிலும் தொடர்ந்து நீர்வலம் நல்கும் குளிர்ந்தவளாக காவிரி இருந்துள்ளாள்.
“கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை”
காவிரிப்பூம்பட்டினத்தில் காவிரி கடலில் கலக்கும் இடத்தில் கடலில் தீமை நீங்க ஆடுவார்கள், பின்பு மாசு போகக் காவிரி நீரில் குளிப்பார்கள் என , சுந்தர சண்முகனார், பட்டினப் பாலையின் பாடலை சொல்லி தெய்வக் காவிரியை இனம் காட்டுகிறார்.
“தீது நீங்கக் கடலாடியும்
மாசு போகப் புனல் படிந்தும்”
காவிரியில் வந்து சேரும் சிற்றாறுகளை வரவுகள் என்றும் கிளை பிரிந்து செல்லும் கிளை ஆறுகளை செலவுகள் என்றும் வகைப்படுத்தி எழுதப்பட்டுள்ள அத்தியாயம், மொத்த நூலில் இலக்கிய எடுத்துக்காட்டுகள் இல்லாத ஐந்து அத்தியாயங்களில் ஒன்று. இந்த அத்தியாயத்திலும் உலக ஆறுகளில் காவிரியின் இடம், காவிரிக்கரை நகரங்கள் மற்றும் அதன் சூழல், குடகு நாடு, கர் நாடக நாடு என்ற பண்டைய தமிழ் மாகணத்தின் சித்திரம் கொடுக்கும் அத்தியாயங்களிலும் பாடல்கள், இலக்கியக் குறிப்புகள் இல்லையெனினும் காவிரி பற்றிய மொத்தச் சித்திரத்தை கொடுப்பதாக உள்ளது.

சுந்தர சண்முகனார், சங்கத்தமிழ் பாடல்களாலும், இருபதாம் நூற்றாண்டு கவிஞர் பாரதிதாசன் கவிதைகளாலும் தமிழ்க் காவிரியை காட்சிப் படுத்தினார் என்றால், கோணங்கி, தனது நூலான, காவேரியின் பூர்வ காதை-யில், நவீனத் தமிழ் இலக்கியத்தின் நாவல்களையும், தேவதச்சன், ஆனந்த் கவிதைகளையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார். நூலில் உள்ள “காவிரித் தொன்மையும் நவீனத் தமிழ் இலக்கியமும்” என்ற கட்டுரையை நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சரியான அறிமுகக் கட்டுரையாகக் கூட வாசிக்கலாம். புதுமைப்பித்தனைத் தவிர மற்ற மணிக்கொடி எழுத்தாளர்கள் (க.நா.சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, எம்.வி வெங்கட்ராம்,கு.ப.ரா, பி.எஸ். ராமையா, மௌனி, ந. பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணியன்), காவிரிக்கரை காற்றில் இலக்கியம் சுவாசித்தவர்கள்.
க. நா. சுப்ரமண்யத்தை நாவல் மரபை உருவாக்கிய முன்னோடி என்கிறார் கோணங்கி. மேலக்காவிரியில், க.நா.சு தனது தாத்தா வீட்டில் இரண்டு வருடங்களில் முன்னூறு நானூறு தமிழ் நாவல்களை வாசித்துள்ளார். க.நா.சு நடத்திய இலக்கிய வட்டம் இதழில் அனேக கதைகள் கட்டுரைகளை எழுதிய நகுலன் கும்பகோணத்தில் 1922-ஆம் ஆண்டு பிறந்தவர். இரட்டையர்கள் எனப் போற்றப்படுபவர்கள் ந. பிச்சமூர்த்தியும், கு.ப. ராஜகோபாலனும். கோணங்கி, கு.ப. ராஜாகோபாலனின் படைப்புகளை குறித்து தனிப்பட்ட முறையில் சரியான மதிப்பீடு கொண்டிருந்தாலும், கு.ப.ரா-வின் எழுத்துக்களின் மேல் பொதுவாக உள்ள ஒரு விமர்சனத்திற்கு பதில் சொல்வதைப்போல, ந. பிச்சமூர்த்தி வாஷகங்களை எடுத்துக்கொள்கிறார் – “நிழலைப்போல் பெண்ணின் சித்தத்தை இருளாக்கும் உணர்ச்சிகளையும் கருவாக நின்றுவிட்ட வேட்கைகளையும் வெகு நுட்பமாகவும் அநாயசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்றவன். பெண்ணின் மனதை சித்தரிப்பதில் வல்லவன். “
மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பின்வந்த பசித்த மானிடம் நாவல் ஆசிரியர் கரிச்சான் குஞ்சு பற்றிய பதிவும், சா. கந்தசாமியின் எழுத்தின் மேல் கோணங்கி பாய்ச்சும் ஒளியும், வெகு சொற்பமான கதைகளே எழுதிய ந. முத்துசாமி கதைகள் கோணங்கிக்கு இலக்கியத்தின்பால் கொடுத்த ஈர்ப்பையும் அறிவதற்கென்றே ஒவ்வொரு இலக்கிய வாசகனும் இந்த நூலை வாசிக்கலாம்.
சுந்தர சண்முகனாரின் “தமிழ்க் காவிரி’யில் பட்டினப்பாலை , புற நானூறு, அக நானூறு பாடல்களில், வற்றாத நதியென பாராட்டப்ட்டவளின் நிலத்தில், கோணங்கியின் “காவிரியின் பூர்வ காதை”-யில் , காவிரியும் தமிழ்க் கலாச்சாரமும் என்ற பகுதியில், தேவதச்சனின் கவிதை கொடுக்கும் நவீன காலத்தின் சித்திரம் இப்படிப் பதிவாகிறது.
சோழ சீமை
‘அவன் யார்
வரப்பில்
பூச்சி மருந்தைக் குடித்து
கருகிய பயிர்நடுவே கிடப்பவன்
அவன் யார்
கால்களை கயிறுகளால் கட்டி
கடன் பத்திரத்தோடு
கிணற்றில் குதிப்பவன்’
கோணங்கியின் நூல், காவிரி நதியில் படிந்த அடிமைகளின் நிழல்கள், பெண்களின் கிரய சாசனம், காவிரி விவசாயக் கொத்தடிமை முறை, தாசிகளுக்கு பொட்டுகட்டும் முறை, என்ற இருள்களின் மேல் ஒளி பாய்ச்சி, காவிரி நதி நாகரிகத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. சோழர் காலத்தில் முத்திரை குத்தப்பட்ட பெண் அடிமைகள், தேவரடியாராகவும், கோவில் பணி செய்வோராகவும், உரலில் நெல் குத்திப்புடைத்து உமி நீக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆண் அடிமைகள் வேளாண்மையிலும், மாடுகள் மேய்ப்பதிலும் ஈடுபட்டுள்ளார்கள். அடிமைகளுக்குத் தண்டனைகளும் உண்டு. சோழர் காலத்தைவிட விஜயநகர பேரரசு கால ஆட்சியில் கூலி அடிமைகள் பத்திரம் எழுதி பண்டங்கள் போல விற்கப்பட்டிருக்கிறார்கள்.
நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்று என்னை துணுக்குறச் செய்த நிகழ்வு ஒன்று. //சுவாமி மலை சன்னதித் தெருவில் தாசி காலமுத்துவின் மகளான சண்முகம் என்ற தாசி வாழ்ந்து வந்தாள். இவர் வலங்கமானைச் சேர்ந்த பழனிப் படையாச்சியின் மனைவி லெட்சுமியிடமிருந்து அவளது மகளான நீலாயதாட்சி என்பவளை ‘கிரயசாசனம்’ செய்து (விலைக்கு) வாங்கியிருந்தாள். வயதுக்கு வந்திருந்த அப்பெண்ணை வீதிக்கு அழைத்துச் சென்று விற்பனை செய்தாள். தஞ்சாவூர் கோட்டைக்குள் வாழ்ந்து வந்த ‘அங்கு’ என்ற தாசியின் மகளான பெரியகோயில் தாசி கண்ணம்மாள் அப்பெண்ணை விலைக்கு வாங்கிக்கொண்டாள். ‘சிரைவிலைக்கிரய சாசன முறை’ (அடிமை விற்பனை ஓலைச்சீட்டு) ஆக எழுதியுள்ளனர். //
நூல் தொட்டுச்செல்லும் இன்னொரு இருண்மை , கவிஞர்களை இரட்டடிப்புச் செய்வது. கொள்ளிடம் கிளை விடும் இடத்தில், அரங்கத்தில் கம்பன் மண்டபம் இருக்கிறது. அங்குதான் கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டது. அரங்கேற்றப்பட்டும் இருநூறு ஆண்டுகள் இரட்டடிப்புச் செய்துள்ளார்கள். கருவூரார் எனும் சித்தர் பாடியதாக இந்த நூலில்.
‘கேளப்பா நூலுக்கெல்லாம் சாபமுண்டா’.
எத்தனை நல்ல படைப்புகளை எழுதினாலும், எழுத்தாளர்களை இரட்டடிப்புச் செய்வது என்பது மரபோ, சாபமோ இன்றுவரை தொடர்கிறது.
நூலில், கோணங்கியின் ‘பீடிகை’ (முன்னுரை) வாசிக்கும் ஒரு புதிய வாசகன் அவரது எழுத்து நடையில் சிறிது பின் வாங்கலாம். ஆண்டாள், பெரியாழ்வாரின் நந்தவனத்தில் கண்டெடுத்த மகளாக வளர்ந்து, ரங்கனுடன் ஐக்கியமாகியது, காவிரியில் நீர்ப்பெருக்கை கடந்து தனது மகளுக்குப் பிரசவம் பார்க்க வரமுடியாமல் தவித்த தாயின் துயர் தீர்க்க தாயுமானவன் பிரசவம் பார்த்த கதை என காவிரியின் காதையை கோணங்கி, தெரிந்த கதைகளை மீள் வாசிக்கவும், தெரியாத கதைகளை புதிதாக அறியவுமென சுவாரசியமாக எழுதியுள்ளார்.
பதினாறு வருடங்களாக பொழுது விடிந்தால், பொழுது சாய்ந்தால் காண்கிற காவிரியை , காணாததைக் கண்டதுபோல பார்ப்பதாக அம்மா வந்தாள் அப்பு சொல்வான். அவனது படைப்பாளி தி. ஜானகிராமனும், காவெரி வெறும் ஆறு மட்டுமல்ல, அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் என உணர்ந்த சிட்டி எனும் பெ.கோ.சுந்தரராஜனும் காவிரி பாயும் நிலம் முழுக்க காரில் பயணம் செய்து எழுதிய நூல் நடந்தாய் வாழி காவிரி. இந்த முழு நூலை யார் எழுதினார்கள், யார் மெய்ப்பு பார்த்தார்கள் என்று எந்த இடத்திலும் இல்லை. இருவரும் பயணம் செய்தார்கள், இருவரும் எழுதினார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். மேற்கொண்ட இரு நூல்களில் வாசித்து காவிரியின் விரிவை அறிந்தவன், நேரில் சென்று பார்க்காமலேயே, அதை பார்த்ததுபோல் உணர்ந்து அனுபவிக்க இந்தப் பயண நூல் உதவியாக இருக்கும்.
“தமிழ்க் காவிரி” நூலில், குடகு நாட்டுப் பகுதியில் சையம் எனும் ஒரு மலையில் தலைக்காவிரியில், முப்பது சதுர அடி அகலமும், இரண்டரை அடி ஆழமும் கொண்ட குளத்திலிருந்து நீர் பலவாறு பிரிந்து காவிரி பிறக்குமிடம் விளக்கப்பட்டிருக்கும். நடந்தாய் வாழி காவிரியில் தி. ஜானகிராமனும், சிட்டியும், “காவிரி பிறக்குமிடம் ஒரு சிறிய சுனை, நான்கடிக்கு நான்கடி சதுரமாக ஒரு தொட்டிபோல் கட்டியிருக்கிறார்கள்” என வியக்கிறார்கள்.
காவிரி பயணிக்கும் திசையை வடக்கிலிருந்து தெற்காக, தென் கிழக்காக, கிழக்காக பயணிக்கும் என்று முன்னர் சொன்னதில் சின்ன மாற்றம். ஆறு வடக்காக நோக்கிப் பயணித்தால், அந்த இடத்தை புன்னிய ஸ்தலமாக கருதுவது இந்து மரபு. காவிரி உத்திரவாஹினியாக செல்லும் , விருபாட்சபுரம், ரங்க சமுத்ர பலகோடு, கொப்பா, கூடிகே, ஹூல்ஸே, கடுவினஹோஸ ஹள்ளி, ஸரகுரு, ஹெரளெ, மஞ்சன ஹள்ளி, இடத்துறை, சிவசமுத்திரம், பணங்கரை, செமங்கி, நெருவெளி, கீழையூர், மேலப்பாதி என்று பல இடங்கள் அங்கனம் புனிதமான ஸ்தலங்கள்.
காவிரியை இரு கரையோரமாகச் சென்று காண விரும்புபவர்கள், பூரண மன ஓய்வுடன், மாதக்கணக்கில் நடந்து சென்று பார்ப்பதுதான் சிறந்தது, என்று இந்தப் பயண நூலில் தி.ஜா-வும் , சிட்டியும் காவிரியின் மேல் உள்ள பிரியத்தில் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். மலையில் தோன்றும் காவிரி சிவசமுத்திரத்தில், 230 அடி உயரத்திலிருந்து பார்சுக்கி அருவியெனவும், 300 அடி உயரத்திலிருந்து கனகசுக்கி அருவியெனவும் விழுகிறாள். ஹன்னடு சக்ர எனுமிடத்தில், தன் பெரும் உடலையும், வேகத்தையும், சக்கர வளையமாகச் சுருட்டி செல்கிறாள். அவளுடன் விழவும் , சுழலவும் தயாராக இருப்பது யார் ? அதுவும் ஹன்னடு சக்ர சுழலில், எந்தப் பொருளைப் போட்டாலும், அது பன்னிரண்டு முறை சுழன்று அடியில் மறைந்துவிடுமாம். ஆடு தாண்டும் காவிரியை (மேகதாட்டு) அருகில் சென்று பார்க்கவேண்டுமெனில், பெரும் பாறைக் கற்களில், ஏறியும், தவழ்ந்தும், இறங்கியும், பற்றியும் போகவேண்டும் என்று நூலாசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
ஹொகனேக்கல் நீர்வீழ்ச்சியை புகை தரும் புனல் எனச் சொல்லும் நூலாசிரியர்கள், நீர் விழும் பள்ளத்தினை பிரம்மாவின் யாக குண்டம் என்று குறிப்பிட்டுவிட்டு, ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறார்கள். ஒரு சோழமன்னன் அருகில் வேட்டையாடச் சென்றபொழுது, பாறையின் ஆழ்ந்த பிளவு ஒன்று காவிரியை விழுங்கிவிட்டதைப் பார்த்தான். அந்தப் பிளவை மூடி, காவிரியை மீட்பதற்காக அந்த மன்னன் அரும்பாடுபட்டான். அப்பொழுது அங்கு வந்த ஒரு ரிஷி அவனிடம் , அந்த இடத்தில் மகா விஷ்ணுவின் சக்கரம் பூமிக்குள் நுழைந்ததால் அப்பள்ளம் ஏற்பட்டது என்கிறார். புண்ணியசாலியான அரசன் ஒருவன் நீரில் மூழ்கி தியாகம் செய்வதே அப்பள்ளத்தை மூடுவதற்கான வழி என்கிறார். உடனே அந்தச் சோழ மன்னன் நீரில் குதித்துக் காவிரியை மீட்டதாக கதை.
கோணங்கியின் நூலில் இலக்கிய மேதைகளை விரிவாகப் பேசுகிறார். இசைக்கும் காவிரிக்குமான இடத்தை , ஆற்றுடன் சம்பந்தபட்ட நாயன்மார்கள், ஆழ்வார்கள் சரித்திரத்தை பாடல்களையும் குறிப்பிட்டிருப்பார். நடந்தாய் வாழி காவிரி நூலும், இசை வெள்ளம் என்று ஒரு அத்தியாயத்தைக் கொண்டுள்ளது. சிவக்கொழுந்து தேசிகர், தியாகராசச் செட்டியார், உ.வே. சாமி நாத அய்யர், கல் நாகஸ்வரம் வாசித்த சிவக்கொழுந்து, மிருதங்கம் வாசித்த அழகநம்பியா பிள்ளை, சங்கீத மேதை உமையாள்புரம் சாமிநாத அய்யர் வாழ்ந்த கும்பகோணத்தைச் சொல்லும்பொழுது, கும்பகோண வாழ்வு , காவிரியின் வாழ்வு என்கிறது.
இசை, இலக்கியம், வரலாறு , பண்பாடு எனப் பேசும் இடத்தில் , தமிழ்க் காவிரியும் சரி, நடந்தாய் வாழி காவிரியும் சரி, காவிரியின் நீரை தமிழகம் உபயோகித்துக்கொள்ள 1924-ல் போட்ட காவிரி நீர்ப் பங்கீடு பற்றியும் , தமிழகத்தின் தீரா போராட்டத்தையும் குறிப்பிடுவதில் தவறவில்லை.
கோணங்கி அவரது நூலான நூலான “காவேரியின் பூர்வ காதை”-யில், ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கருவி நூற்பட்டியல் என்று அத்தியாயத்திற்கு உதவிய நுல்களின் பட்டியலை கொடுக்கிறார். தமிழ் விக்கியில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று பல கட்டுரைகள் படிப்பதுபோல், இந்த மூன்று நூல்களை வாசிக்கப் பல நூல்களை வாசிக்கும் சுழலில் சிக்கி காவிரி எனும் அழகியை ஆழமாக அறிந்து கொள்வோம்.

Leave a comment