வாழ்க்கைச் சுழல் (மறு பதிவு) 

Published by

on

சுழல் – 1: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து , பொறியியல் கல்லூரியா, கலை அறிவியல் கல்லூரியா என்று காத்திருந்த நாட்கள் அது. திண்டுக்கல்லில் பெரிய அண்ணன் ஒருவர் , “தம்பி, நம்ம திருச்சி MLA -கிட்ட சொல்லி, பொறியியல் கல்லூரியில்  உனக்கு சீட் வாங்கிவிடலாம்”  என்றார். அவரைப் பார்க்க சில காலை நேரங்களில் காத்துக்கிடந்திருக்கிறேன்.  காலங்கள் பல கடந்து, NIC-யில் வேலை பார்க்கும்பொழுது , அதே பெரிய அண்ணனின் பெரிய மகன், டெல்லியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில், தன்னை MBA-வில் சேர்த்துவிட முடியுமா என்று என்னிடம் கேட்டு வந்தார்.

சுழல் – 2: இளங்கலை முடித்து, முதுகலை படிப்புக்கு , எந்தப் பல்கலைக்கழகத்தில் நமக்கு இடம் கிடைக்கும் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த  சமயம் , எனது துறையில் முதுகலை பட்டம் வாங்கிய அண்ணன் ஒருவர், “நான் சொன்னால், நான் படித்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  முதுகலை  படிப்பிற்கு  இடம் கிடைத்துவிடும்” என்று உற்சாகம் கொடுத்தார்.   டெல்லியில் சாஸ்திரி பவனில் இருந்த அரசாங்க அலுவலகத்தில், நான் மும்முரமாக இரு கைகளையும் keyboard-ல் வைத்துக்கொண்டு Foxpro கட்டளைகள் எழுதிக்கொண்டிருந்தேன். என் பின்னால், யாரோ நிற்பதுபோல் இருந்தது. திரும்பிப் பார்த்தால்  அந்த அண்ணன். “தம்பி, உனக்கு தெரிந்த அமைச்சர் யாரிடமாவது  சொல்லி எனக்கு வேலை மாற்றல் வாங்கித் தரமுடியுமா”,  என்று கேட்டு என் தோளில் கைவைத்தார்.

சுழல் – 3 : கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சன்னி வேல் நகரில் இருக்கும் அலுவலகத்திலிருந்து டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகருக்கு வேலை மாற்றம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன். அப்பொழுது, எனது துறையின் இயக்குநராக இருந்தவர் சம்மதம் சொல்லுவாரா என்று தினம் தினம் மின்னஞ்சலை எதிர்பார்த்திருப்பேன். பல வருடங்களுக்கு  அப்புறம் நடந்த எங்களது நிறுவன ஆள்குறைப்பில் அந்த இயக்குநருக்கு வேலை போய்விட்டது.(அமெரிக்க வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம்).  அன்று மாலை எனக்கு, “ராஜன், உனக்குத் தெரிந்த இடத்தில் வேலை இருந்தால் சொல்லு”,  என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

சுழல் – 4 : இதற்கு முன்னர் வேலை பார்த்த அலுவலகத்தில் , பதின்முன்று வருடங்கள் வேலை பார்த்தேன். இருந்தாலும், போரடித்துப்போய் வெவ்வேறு துறைகளுக்கு வேலை மாற்றம் செய்துகொள்வேன். இருக்கும் நிறுவனத்திலே வேறு வேலை தேடினாலும், விண்ணப்பிப்பது,  நேர்முகம் என்று எல்லாமும் இருக்கும். 2005-ல் அப்படி நிறுவனத்திற்குள்ளேயே ஒரு வேலைக்கு விண்ணப்பித்ததில், நேர்முகம் செய்யும் குழுவில் ஒரு நண்பர் இருந்தார். 2015-ல், நான் இப்பொழுது வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு ஒரு வேலைக்கு உடனடியாக ஆள் தேவையாக இருந்தது. அவருக்கு போனை போட்டு நீ வருகிறாயா என்றேன். இப்பொழுது எனது குழுவில் அவரும் உள்ளார். அதாவது எனது மற்றும் எனது குழுவினரின் நேர்முகத்தில் தேர்வு ஆகிய பின்னர்

சுழல் – 5 : 2000-ல்,  கலிபோர்னியா மாகாணத்தில் , பாஸ்டர் சிட்டி என்னும் நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசித்துக்கொண்டிருந்தேன். ஒரு இரவு நேரத்தில், படுக்கை அறையில் நின்றுகொண்டு , NIC-யில் வேலை பார்க்கும் நண்பன் ஒருவருக்கு போன் செய்து, “ எனக்கு Green Card Process” செய்கிறார்கள். உன்னால் எனக்கு வேலைச்சான்றிதழ் தரமுடியுமா”,  என்று கேட்டேன்.  அந்தக் கடமை தவறாத நண்பரும்,  ஓரிரு நாட்களில்,  வேலைச்சான்றிதழை நான் கேட்டுக்கொண்ட படிவத்தில் அனுப்பினார்.  இந்த வாரத்தின் ஆரம்பத்தில் வாட்ஸப்பில்,  என்னிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வேலை பார்த்த பெண் ஒருவர்,  அவருக்கு I-140 file  செய்ய இருக்கிறார்கள் என்றும் அனுபவச் சான்றிதழ் கொடுத்து உதவமுடியுமா என்றும் மெசேஜ் அனுப்பியிருந்தார். இந்தப்  பதிவை எழுதும் கையோடு, எனது scanner-ல் அவருக்கு அனுபவச் சான்றிதழும் பிரதியும் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

(முதல் பதிவு – 04/19/2018)

Leave a comment