வணக்கம் தலைவி

Published by

on

அம்மா சமைத்துக்கொடுத்த இந்திய உணவை எடுத்துக்கொண்டு சென்று பள்ளியில் சாப்பிடும்பொழுது சக மாணவர்களின் கிண்டலுக்கு உள்ளாவதும், பெண்ணேன்றால் அடங்கிப்போ என்று ஆதிக்கும் செலுத்தும் அப்பாவும் என வலிகளை சுமந்த வாழ்க்கையை மீட்டெடுத்தது இசையும் பாட்டும்தான் என்று சொல்லும் பாடகி வித்யா வாக்ஸின் பன்மொழி மாஸ் அப் பாடல்களை பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். “We don’t talk anymore” என்ற செலினா கோமஸ் பாடலை வித்யா வாக்ஸும், “பானி டா ரங்” என்ற ஹிந்திப் பாடலை ஆயுஷுமான் குரானுவும் பாடியிருக்கும் “மாஸ் அப்” பாடலை கேட்பது எனது அன்றாடம்  என்று ஏழு வருடத்திற்கு முன்னர் ஒரு  பதிவு எழுதினேன்.  “ரானு பம்பாய் கி ரானு “, “மோனிகா” பாடல்கள் என்னை ஒரேயடியாக கட்டிப்போட்டுவிட்டதா எனத் தெரியவில்லை. வித்யா வாக்ஸை சில வருடங்களாக கேட்கவேயில்லையோ என உணர்ந்து,  இன்று அவரது சேனலில் அவர் பாடல்களை மட்டும் கேட்டேன். 

G.V. பிரகாஷ் இசையில் ராஜலக்ஷ்மி செந்தில்கணேஷும், வித்யா வாக்ஸும் பாட , “காகரத்தான்  பூத்துருச்சே கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே” பாடலை சென்ற வருடம் பொங்கலுக்கு கோக் ஸ்டுடியோ வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க நண்பர் ஒருவரை , நீங்கள் University of Austin-ல் படித்தீர்களா என்று கேட்கப்போக, அவர், “ஆமாம் உங்கள் சித்தப்பா பையன் எனக்கு வகுப்புத் தோழனாக்கும்” என்றால் எனக்கு ஆச்சிரியமாக இருக்கும். ராஜலக்ஷ்மி செந்தில் கணேஷும் வித்யா வாக்ஸும் பாடியிருப்பது அப்படிப்பட்ட உணர்வைத்தான் கொடுத்தது. வித்யா வாக்ஸ், கோட்டெல்லாம் போட்டுக்கொண்டு பொங்கல் வைக்கும் இந்தக் காணொளி காண்பதற்கும் கொண்டாட்ட மனநிலையைக் கொடுக்கிறது. 

ஸ்ரேயா கோஷல் குரலில் கீர்த்தி சனோன் நடனத்தில் வெளிவந்த “பரம் பரம் பரம சுந்தரி’ பாடலில் மூழ்கியவன்,  “சுந்தரி” என்ற பாடலில் வரும் தமிழ் வரிகளை மதன் கார்க்கி எழுத வித்யா காக்ஸ் பாடியதையும் கேட்காமல் விட்டிருந்திருக்கிறேன் என்று தெரிந்தது. இந்த ஆல்பத்தை தயாரிப்பதற்கு மூன்று வருடங்கள் உழைத்ததாக வித்யா குறிப்பிட்டிருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கொடுத்த நேர்முகத்தில், பெரிய பெரிய நிறுவனங்களே பாடலுக்குத் தேவையான ஊதியம் தருவதில்லை என்றும் கலைஞனாக வாழ்க்கை நடத்துவது பொருளாதார ரீதியாக கஷ்டமாகத்தான் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

2022-ற்கு புதுவருட பிறப்பிற்கு வாழ்த்தைச் சொல்வதுபோல வந்த பாடல் “வணக்கம்”. சடையும், பூவும், கையில் மருதாணியாகவும் வந்திருக்கும் தனக்கு வணக்கம் சொல்லக் கேட்கும் இந்தப் பாடல் அழகுப் பதுமையாக மட்டும் தன்னை சித்தரித்துக்கொள்ளவில்லை. கிண்டலுக்கு உள்ளாகும் தன் நிறப்  பெண்கள் உறுதியானவர்கள் , கொடுக்கவும் இருக்கிறோம், மரியாதையான வணக்கத்தையும் சொல்லுங்கள் என்கிறார். 

ஏ ஆர் ரஹ்மானின், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலையும், ஜஸ்டின் பீபரின் சாரி பாடலையும் கலந்து வந்த பாடல் ஒன்பது வருடம் ஆகியும் இன்றும் வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைக்கப்படுகிறது. முப்பத்திரண்டு மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. வித்யா வாக்ஸ் , கொடுமைப் படுத்தும் தனது அப்பாவிடமிருந்து, அவரது அன்னை, தனது பதினாறாவது வயதில் அவரையும் அவரது சகோதரியையும் அழைத்து தப்பியதாக கூறியிருப்பார். தனது அன்னையையும், பாட்டியையும் தனது தலைவிகள் எனக் குறிப்பிடும் அவரது, “தலைவி’ பாடல் தமிழ் நாட்டில் தப்பட்டையெல்லாம் கொட்டி படமாக்கப்பட்டுள்ளது. தலைவா என்று தமிழ் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் நடிகரின் ஸ்டைலை வித்யா வாக்ஸிடம் இந்தப் பாடலில் பார்க்கலாம். 

மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு தனக்கு விருப்பமான பாதையைத் தேர்ந்தெடுத்து பிடித்த வாழ்க்கைப் பயணம் செய்துவரும் வித்யா வாக்ஸ் எனும் சுந்தரிக்கு, தலைவிக்கு, வணக்கம் !

Leave a comment