நட்பின் குறுக்கே வந்த கணினி சூத்திரங்கள் 

Published by

on

பாரதிராஜாவின் கடலோரக்கவிதைகளில், சின்னப்ப தாஸ் (சத்யராஜ்) சுவரில் எழுதியிருக்கும் எழுத்துக்கள் எல்லாம் வௌவ்வால்கள் தொங்குவது போல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, ஜெனிஃபர் (ரேகா) டீச்சரைக் காதலித்த காலகட்டத்தில், நான் திருச்சி தேசியக் கல்லூரியில், முதுகலை இரண்டாம் வருடம்  படித்துக்கொண்டிருந்தேன்.  கல்லூரியின் வாசலில்,  வலது பக்கத்தில் இருக்கும் கோவிலில் பிள்ளையார் கிழக்குப் பார்த்து அமர்ந்திருப்பார். கல்லூரி வாசலுக்கு நேர் எதிரே இருந்த குடித்தனங்களின் சுற்றுச் சுவரில், கல்லூரியின் சுற்றுச் சுவரில் எனப் பார்க்கும் இடங்களிலெல்லாம் பேசிக், கோபால், பாஸ்கல்,  போர்ட்ரான் படியுங்கள் வேலை உத்திரவாதம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

அந்தப் போஸ்டர்களும், பிள்ளையாரும் பார்த்திருக்க, நானும், சக்தியும், ராம்ஸும் , செந்திலும், அசோக்கும் கல்லூரி முடிந்த மாலையில் பேசிக்கொண்டிருப்போம்.  நாங்கள் பிற்காலத்தில் கல்யாணம் செய்யவிருக்கும் பெண், பக்கத்து தியேட்டரில் ஓடும் படம், ஜேசுதாஸ் கச்சேரி என்று பேசிக்கொண்டிருந்த எங்களை நினைத்து பிள்ளையார் கவலைப்பட்டிருப்பார். டைப் ரைட்டிங் கற்றுக்கொள்ளுங்கள், ஷார்ட் ஹேண்ட் கற்றுக்கொள்ளுங்கள் என்பதற்கும் கோபால் படியுங்கள் விளம்பரங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதே எங்கள் எண்ணமாக இருந்தது. 

எங்கள் ஐவர் முன்னிலையில், பிஸிக்ஸ் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த , சென்னையைச் சேர்ந்த நண்பனை, வாடா இதுவெல்லாம், வேஸ்ட், REC-யில் M.C.A படிக்கலாம் என்று அவன் அப்பாவும் அம்மாவும் அழைத்துச் சென்றார்கள்.  விபரங்களாக கொட்டித் தள்ளும் ராம்ஸ், “இப்படித்தான் லேசர் டெக்னாலாஜியில் M. Tech ஆரம்பித்தார்கள். ஒரு வருடத்திற்கு அப்புறம் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை” என்று தெரிந்த நண்பர்களின் பெயர்களைச் சொன்னான். ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் தியேட்டரில், அன்று இரண்டாவது ஆட்டத்திற்குப் போகலாமா என்று சக்தி கேட்டான். நான், “கொத்துப் பரோட்டாவும், ஹா̀ஃப் பாயிலும் சாப்பிட்டுவிட்டுப் போவோம்” என்றேன். 

அசோக்கிற்கு பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவன் என்ற அடிப்படையில், தமிழக அரசில் வேலை கிடைத்தது. மற்ற நால்வருக்கும், ஓரங்களில் ஓட்டை நிரையுள்ள கம்ப்யூட்டர் பேப்பரில் குருவிப் படம் போட்ட தீபாவளி , பொங்கல் வாழ்த்துக்கள் அனுப்ப ஆரம்பித்தான். செந்தில், M.Phil சேர்ந்தான். அதை முடிக்காமலேயே, IIT-யில் Main Frame Training சென்றான். அதற்கான நுழைவுத் தேர்விற்கும் அசோக்கும் சென்றான் , தேர்வாகவில்லை என்பது எனக்குச் சிறிது காலம் சென்று தெரிந்தது. அதற்கு அசோக் சொல்லும் விளக்கம், நுழைவுத் தேர்வில் தீர்வு சொல்லக் கேட்ட கேள்விகளில் ஒன்று, செந்திலின் M.Phil பாடத்திட்டத்தில் இருந்த ஒரு கணித சூத்திரம். “அந்த ஒரு கணித சூத்திரம் வாழ்வை மாற்றிவிட்டது” என்று அசோக் அவ்வப்பொழுது சொல்வான்.

கணினியின் அருமை புரிந்து, நானும் சக்தியும், ராம்ஸும், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு ஜமால் முகமது கல்லூரியில் PGDCA-விற்கு விண்ணிப்பிக்கலாம் என்று முடிவு செய்தோம். சக்தியும், நானும் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் அறைக்கு முன்னர் க்யூவில் நின்றுகொண்டு, ராம்ஸுக்கு காத்திருந்தோம். எங்களுக்குப் பின்னால் உள்ளவர்களை “நீங்கள் போங்கள், நீங்கள் போங்கள்” என்று சொல்லிக்கொண்டேயிருந்தோம். ராம்ஸ் வரவேயில்லை. நானும், சக்தியும் , மன்னார்புறம் நால் ரோட்டின் அருகில் அறையை வாடகைக்கு எடுத்து, முத்து மெஸ்ஸில் சாப்பிட்டு, திருச்சி ஜங்சன் ஆஞ்சநேயரை வணங்கி, அருகில் இருந்த டெண்ட் கொட்டகையில்  வந்த படங்களையெல்லாம் பார்த்தோம்.. ஒவ்வொரு படம் பார்க்கப் போகும் முன்னரும், சக்தி, “மச்சி , இதை நாம் பார்த்ததே இல்லை “ என்பான். படம் அரை மணி  நேரம் ஓடிய பிறகு, முழுக்கதையையும் சொல்லிவிடுவான். COBOL பரீச்சை மறுநாள் என்றால், அதற்கு முதல் நாள்கூட ஒரு படம் பார்த்தோம். சக்தியால் A = B+C என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

IIT-யில் மெயின் ப்ரேம் படிக்கச் சென்ற செந்தில்தான், அரசாங்கத்தைக் கணினிமயமாக்கும், ஒரு அரசு நிறுவனத்தைப் பற்றிக் குங்குமத்திலோ, சாவியிலோ சுஜாதா ஒரு கட்டுரை எழுதியிருப்பதாக தகவல் கொடுத்தான்.  “நிறைய ஆட்கள் எடுப்பார்கள், நீங்கள் அங்குதான் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என்றான். பிற்காலத்தில் “ஓரிரு எண்ணங்கள்”  என்ற கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்பொழுது, ஒரு கட்டுரையின் சில வரிகள் , இதுவாகத்தான் இருக்கும் என்று ஊகிக்க வைத்தது.

“ராஜீவ் காந்திக்கும் கம்ப்யூட்டர் மொழி ஃபார்ட்ரான் தெரியுமாம். அவர் வந்த பின் டில்லியில் அரசாங்க நாய்க்குட்டிகூட கம்ப்யூட்டர் பற்றி பேச ஆரம்பித்து விட்டது. டிபார்ட்மெண்ட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் ஸி.ஜி.ஒ காம்ப்ளெக்ஸில் தேசிய தகவல் இயல் கேந்திரம் அமைத்து ஜப்பானிலிருந்து ஒரு ராட்சச கம்ப்யூட்டர் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சர்க்கார் இலாக்காவும் வெறி பிடித்தது போல கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் என்று அலைகிறார்கள்.”

“ஒரு நாட்டின் தலைவனின் சொந்த விருப்பம் அல்லது சலுகை எப்படி காட்டுத்தனமாக நாடு முழுவதும் பரவுகிறது என்பதற்கு கம்ப்யூட்டரின் பரவலே அத்தாட்சி.”

“ராஜீவை ‘கம்ப்யூட்டர்ஜி’ என்று அழைக்கிறார்கள். ‘இன்டோனெட்’ என்று நகரங்களில் பெரிய கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கொன்று செய்தி பரிமாறிக் கொள்ள ஸாட்டிலைட்  தரையடி கேபிள்கள் மூலம் இணைக்கப் போகிறார்கள்.வங்கிகளில் இன்ன தேதிக்குள் கம்ப்யூட்டர் கொண்டு வரவில்லையெனில் ‘படவா கையை ஒடிப்பேன்’ என்று உத்தரவு கொடுத்துவிட, ஏதாவது டப்பா கிடைத்தால் போதும் என்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். டை கட்டிய கம்ப்யூட்டர் விற்பனை இளைஞர்கள் நெருப்பாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.”

செந்திலின் ஆலோசனைப்படி, நானும் சக்தியும், National Informatics Center என்ற மத்திய அரசாங்க நிறுவனத்தில் வேலை செய்ய விண்ணப்பித்தோம்.  நுழைவுத் தேர்வையும்,   நேர்முகத்தையும் எப்படி எதிர்கொள்ளவிருக்கிறோம் என்றிருந்த ஒரு நாளில், என் தம்பி, அவனது தோழிக்கு கணினி கற்க உதவி வேண்டும் என்றான். தம்பியின் தோழி வீட்டிற்குச் சென்று, ஒரு பெரும் வீட்டில், இரண்டு மணி நேரம் , அவளுக்குப் பாஸ்கல் ப்ரோக்ராம் கற்றுக்கொடுத்தேன். டில்லி NIC நுழைவுத் தேர்வில், கேட்ட கேள்விகளுக்கு போர்ட்ரானில் அல்லது பாஸ்கலில் பதில்கள் எழுதலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  அசோக், செந்திலிடம், M.Phil -ல் படித்த கணித சூத்திரம்தான் என்று சொன்னால், சக்தி, அந்தப் பெண்ணிற்கு நான் பாஸ்கல் நடத்தியதுதான் என்று சொல்லுவானாக்கும்.

Leave a comment