முப்பது நாற்பது வருடங்களாக எழுத்தையே தவமாகக் கொண்ட எழுத்தாளுமைகள், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம் என்று தத்துவார்த்தமாக படைப்புகளை அலசும் விமர்சகர்கள், சுவாசிப்பதற்கு இணையாக வாசிக்கும் வாசகர்கள் உள்ள ஒரு கூடுகைவில் / விழாவில் இங்கு பேச அழைக்கப்பட்டிருக்கும் நான் யார் ? கடந்த ஏழு எட்டு வருடங்களாக, அமெரிக்காவிலிருந்து ஊர் வரும் சமயம் சுற்றம் , கோவில் குலதெய்வங்களை பார்க்கும் வழமையிலிருந்து, எழுத்தாளர்களை / ஆளுமைகளையும் சந்திப்பது என்ற ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அப்படி ஒரு முறை எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களை சந்திக்கச் சென்றபொழுது, ஒவ்வொரு எழுத்தாளாராக போனில் அழைத்து அவர் என்னை அறிமுகப்படுத்தியதையே இங்கே நான் யாரென உங்களுக்குச் சொல்கிறேன். எஸ். ராமகிருஷ்ணனை அழைத்து இப்படிச் சொன்னார், “ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமியை வாசிக்கிற, ஜெயமோகனை வாசிக்கிற, என்னை உன்னை வாசிக்கிற, எல்லோரையும் வாசிக்கிற ஒரு வாசகன் வந்திருக்கிறார். அவர்ட்ட போனை கொடுக்கிறேன் “ என்றார். தமிழில் எழுதும் எழுத்தாளர்களை முடிந்த அளவு அவரது படைப்புகளை ஒரு முறையாவது வாசிக்கும் வாசகனாக, உங்களில் ஒருவனாக இந்கு பேசவிருக்கிறேன்.
நான் எழுத்தாளர்களை பார்த்துச் சென்ற பிறகு, அவர்களுடன் தொடர் உரையாடலில் இருப்பேன். அந்த உரையாடல்களில் ஒரு எழுத்தாளரின் பெயர் அடிக்கடி அடிபடும். அப்படித்தான் ரமேஷ் பிரேதன் எனக்கு அறிமுகமாகிறார். அவரைப் பற்றிச் சொல்லும்பொழுதெல்லாம் பின் நவீனத்துவம் என்ற சொற்றொடரும் வந்து போகும். இந்த விருது அறிவிப்பிற்குப் பின் அவரை அழைத்து வாழ்த்துச் சொல்ல அழைத்தேன். தொடர்பில் கிடைக்காததால், என்னால் பேசமுடியவில்லை. ஆனால், அவர் படைப்புகளை பற்றி அவருக்கான விழாவில் பேசுவதற்கான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி சென்றிருக்கிறார் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் பிறக்கும்பொழுதே பின் நவீனத்துவ காலத்தில்தான் பிறந்தேன் என்று சொல்லும் ரமேஷ் பிரதேனின் பிறந்த வருடத்தில் பிறந்தவனான நான், அவர் ஊருக்கு அருகில் பிறந்திருந்தால், நண்பனாக விளையாடியிருப்பேன். பதின் பருவத்தில் அவர் எழுதிய கதைகளையும் கவிதைகளையும் வாசித்திருப்பேன். அவர் அன்னை அவருக்குச் சொன்ன கதைகளை என்னிடம் கூறக் கேட்டிருப்பேன். பிரபஞ்சத்தின் விதியின்படி, நான், அவரது படைப்புகளை மட்டும் வாசித்தவனாக, என் அகத்தை தொட்டவராக, சமூகத்தின் முன் நான் கூச்சமுற்று கேட்கமுடியாத கேள்விகளுக்கு பதில் சொல்லி உரையாடுயவராக, அவர் படைப்புகள் எங்கனம் என்னை ஈர்த்தன என்பதை இங்கு முன் வைக்கிறேன்.
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் பாலு இப்படி சொல்வான். “புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக்கூடியது. மற்றொன்று ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது. ஜே. ஜே. இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது என் அபிப்பிராயம்”. ரமேஷ் பிரேதன் எழுத்தை புரியாத எழுத்து என்று அவரது தமிழ் மொழியின் வளமையை கண்ட வாசகனாக என்னால் சொல்லமுடியாது. ஆனால் அவரது எழுத்து பொது வாசகர்களுக்கான எழுத்து அல்ல என்று அவரே நேர்முகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று சுவாரஸ்யம் கருதி வாசிக்கும் பொது வாசகனுக்கு, தனது பாடுபொருளை தர்க்கங்களால், பன்முகப் பார்வையில் பின் நவீனத்துவத்தின் துணையுடன் நிறுவும் ரமேஷ் பிரேதனின் கதைகள் அயர்ச்சியைத் தரும்.
பின் நவீனத்துவம் என்பது எழுதும் எழுத்தில் இல்லை வாசகனின் வாசிப்பில் உள்ளது என்று ரமேஷ் பிரேதன் சொல்கிறார். கம்பராமாயணத்தையும் திருக்குறளையும் கூட பின் நவீனத்துவ வாசிப்புக்கு உள்ளாக்கலாம் என்று சொல்கிறார். வள்ளலாரையும், கம்பரையும், பாரதியையும், வெளி மொழி இலக்கியங்களையும் வாசித்த, தொன்மங்களை அறிந்த வாசகனுக்கு அவரது படைப்பின் / பாத்திரத்தின் வழியாக சொல்லவருவது என்ன என புரிபவனுக்கு ஆர்வமூட்டக்கூடியது. இரண்டாயிரம் வருடங்கள், ஆயிரம் வருடங்கள் வாழ்பவன் என்று சித்தரைப் போல கதைசொல்லும் ரமேஷ் பிரேதனின் நாவலில், பாரதியாரும், ஔவையும், கண்ணகியும் எந்த நிமிடத்திலும் வரலாம். இலக்கிய வாசகனுக்கு காலம் கடந்த பயணம். பொது வாசகனுக்கோ வெற்றுத் திகைப்பு.
ஆலயக்கலை வகுப்பில் ஆசிரியர் ஜெயக்குமாரிடம், ஏன் ராமனின் சிலையில் வில் இருக்கிறது அம்பு இல்லை என்று கேட்டோம். அம்பு பார்ப்பவனின் கற்பனைக்கு விடப்படுகிறது என்றார். வாசக இடைவெளி என்பது எல்லாக் கலைக்கும் பொறுந்தும் என்றார். அதை இட்டு நிரப்புவது வாசகனின் / பார்ப்பவனின் பங்கு என்றார். ஐந்தவித்தான் நாவலில் 9310 வார்த்தைகளைத் திரட்டிப் பிசைந்து செய்யப்பட்டவள் ழகரி எனும்பொழுது திருக்குறளை குறிப்பிடுகிறார் எனப் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு 1330* 7 என்ற கணக்கு மட்டும் இல்லை. திருக்குறளின் மேல் / தமிழின் மேல் உள்ள பிரியம் உள்ளது. அதன் முப்பாலும் நமக்கு கொடுத்த கொடை உள்ளது. திருக்குறளை வாழ்வின் அறமாக கொண்டிருக்கும் வாசகன் ஒருவன் இந்த ஒரு வாக்கியத்தால் ஆர்வமடையலாம்.
இணையத்தில் “மூன்று பெர்னார்கள்” சிறுகதை, ஒரு சொடுக்கில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் யார் வேண்டும் என்றாலும் வாசிக்கலாம். வாசித்து அது பேசும் எதிர் வரலாறை புரிந்துகொள்ள, வள்ளலார் வாழ்வின் யதார்த்தத்தையும், எழுதப்பட்ட வரலாறையும் அறிந்திருக்கவேண்டும்.
ரமேஷ் பிரதேன் பல கனவுகளை (விடுதலைகளை) தன் படைப்புகளின் வழியாகவும் , உரையாடலின் வழியாகவும் முன்வைத்தவர். “சாதியவிடுதலை, மொழித்தேசிய இனங்களின் விடுதலை, மதங்களின் பாசிச ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை, பெண் விடுதலை, மனநோயாளர் விடுதலை, பாலியல் விடுதலை இவை பற்றி பேசியும் எழுதியும் வருகிறேன். பின்நவீனத்துவ எழுத்தியலையும் வாழ்வியலையும் வடிவமைக்கிறேன், போதிக்கிறேன். பாசிச மனவமைப்புக்கு எதிரான அரசியலையும் கவிதையியலையும் வரைகிறேன். பெளத்தம், மார்க்சியம், அம்பேத்கரியம் இம்மூன்றையும் வழித்துணையாக அரசியலிலும்; அறம், பொருள், காமம் இம்மூன்றையும் வள்ளுவம் வழிநின்று கவிதையியலிலும் கடைபிடிக்கிறேன்.” என்று தன்னை வரையறுத்துக்கொண்டவர். இந்த விடுதலைகளை , நான் அவர் படைப்புகளில் பேசுபொருளாக / பாடுபொருளாக எனக்கு ஆர்வமூட்டியவை என் தேடலை ஒட்டியவையை பார்ப்போம்..
ஆண், பெண் , ஆபெண் சார்ந்து –
எழுத்தாளர் கி. ராஜநாரயாணன் , வெளிப்பார்வைக்கு ஆணாக தெரியும் ஒருவன் , தன்னைப் பெண்ணாக உணர்வதை ‘கோமதி’ எனும் சிறுகதையில் சித்தரித்திருப்பார். நான் இதை வாசித்த காலத்தில் Trans, திரு நங்கை, திருநம்பி போன்ற புரிதல்கள் இல்லாத உலகம் அறியா ஒரு வாசகன். கோமதி எனக்கு உணர்வுப்பூர்வமாக என்னைத் தொட்ட கதாபாத்திரம். வாழ்க்கையும், பிறகு வாசிக்க கிடைத்த படைப்புகளும் என்னுடன் வாழும் சகமனிதரைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியுள்ளன என்று சொல்லவேண்டும். தேவதேவன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் படைப்புகளால் எல்லா வகையான மானுடர்களும், என் அகம் தொட்ட இடங்கள் உண்டு.
பால் சார்ந்த குழப்பத்தில் இருக்கும் இளைஞர்கள் சார்ந்து, என் அகத்தைச் சீண்டிய இரு வாழ்க்கை நிகழ்வுகளை சொல்கிறேன். இது நடந்து ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இருக்கும். கலிபோர்னியாவில் நடந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த , அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட, பெற்றோர்களிடம் அவரது புதல்வன் , தான் ஒரு ஒரு பாலினத்தவன் என்று சொல்கிறான். பெற்றோர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முடிவில் இது ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளும் துயரத்தில் முடிகிறது. இதற்கும், ரமேஷ் பிரேதனின் , கூத்தாண்டவர் சிறுகதையில் தற்கொலை செய்தவனுடன் ஒரு கோடை இங்கு இழுத்துக்கொள்கிறேன். [நேர்கோட்டுக் கதை வாசிக்கும் வாசகர்கள் இதை வாசிக்கலாம்]. இதே ஒரு பாலின ஈர்ப்பை, இன்னொரு என் அலுவலக நண்பர் , எப்படி எதிர்கொண்டார் என்பதை சொல்கிறேன். நாங்கள் நால்வர் அவரவர் குழந்தைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த உரையாடலில், ஐர்லேண்டை சேர்ந்த அமெரிக்கவாசியாகிவிட்ட அவர், என் மகள், அவனா இல்லை அவளா என்ற குழப்பத்தில் உள்ளாள் , அதை அவள் முதலில் முடிவெடுக்கவேண்டும் என்றார். அவர் எந்தவிதமான தயக்குமும் இல்லாமல், சர்வசாதரணமாக, என் மகள், என் மகன் என்பதைப்போல, என் குழந்தை Trans என்று சொல்வதில் இருந்த ஏற்புத் தன்மையை கண்டு என் மனம் வியந்தது. என்னை அவரது இடத்தில் வைத்து நடித்துப் பார்த்தேன். அதை விவாதித்துப் பார்க்க ரமேஷ்-பிரேதனின் தர்க்கம் மிகுந்த படைப்புகள் உதவுகின்றன. உடலரசியல் பேசும் ரமேஷ் பிரேதனின் வார்த்தைகளில்.
ஆணையும் பெண்ணையும் எதிரெதிராக நிறுத்துவதில் எனக்கும் உடன்பாடில்லை. ஓர் உடம்பை ஒற்றையாக நிறுத்தி எதிர்கொள்வதில் வரும் பிரச்சினை இது. உடம்பு என்பது ஒரு பிரதி. ஒரு பிரதி பன்முக வாசிப்பைக் கோரும்போது, ஓர் உடம்பை ஒற்றைப் பாலடையாளத்துக்குள் ஒடுக்கும் வன்முறையை சமூக இலக்கணம் வரையறுக்கிறது. பிறந்ததிலிருந்து சாகும்வரை ஒற்றைப்பாலடையாளத்திற்குள் அடைக்கப்பட்டுப் பால் கைதிகளாக வாழ்கிறோம். நேர்க்கோட்டு வாசிப்புக்குப் பழக்கப்பட்டுவிட்ட நம் உடம்பைக் கலைத்துப் போடவேண்டும். புலன் களாகப் பிரித்து அவற்றைத் திசை மாற்றிக் கோர்க்க வேண்டும். ஐம்புலன்களும் ஐந்திணைகளும் திரிந்து புதிய பொருண்மைகளை உருவாக்க வேண்டும்.
சென்ற வார இறுதியில் மாசாணியம்மனை வணங்கிவிட்டு வாயில் வழியாக வெளி வரும் சமயம், ஒரு திரு நங்கை என்னிடம் காசு கேட்டு நின்றார். நான் கொடுத்த ரூபாயை வாங்கிகொண்டு, எங்கள் குடும்பத்தினர் அனைவரின் தலையையும் தொட்டு, நாங்கள் நினைத்தது நடக்கட்டும் என்று வாழ்த்தினார். நான் அந்த இடத்தில் சக மனிதனாக, நீங்கள் எங்களில் ஒருவராக , எந்தக்கேள்விகளுமற்று நடமாட வேண்டும் என்று பிரார்த்தித்தேன் என்று சொல்லவேண்டும்போல் இருந்தது. அதுதான் என் பிரார்த்தனை என்று என் அகம் சொன்னதை அவரிடம் நான் சொல்லவில்லை. ரமேஷ் பிரேதன் எழுப்பியிருக்கும் உடலரசியலுக்கு விடை கிடைக்கும் நாளில், ஒரு ஏற்புடன் உரையாடல் நடக்கும்.
வேலைக்கு விண்ணப்பித்தாலோ , ஏன் சில சமயங்களில் விமான டிக்கட் பதிவு செய்யப்போனாலோ, இன்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அது ஆண் / பெண் / மற்றவர் – இல்லை சொல்ல விரும்பவில்லை. இதில் சொல்ல விரும்பவில்லை என்ற கட்டத்தை தாண்டி நான் ஆபெண் என்று சொல்லும் இடம் வரவேண்டும்.
தமிழ் மொழியின் மேல் கொண்ட பிரியம் –
எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுதே பாரதியின் கவிதைகளுக்கு அடிமையானேன் என்று சொல்லும் ரமேஷ் பிரேதன், அன்னிய மண்ணின் கதாப்பாத்திரங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெயர்களைத் தவிர மற்ற அனைத்தும் செந்தமிழில்தான் எழுதியுள்ளார். ஜெயமோகனின் கொற்றவையை அது எழுதப்பட்டிருக்கும் கலப்படம் இல்லாத மொழிக்காக, நாவலின் பல பக்கங்களை வாய்விட்டு வாசித்துப் பார்த்திருக்கிறேன். “காற்று”, “மழை’ “வெய்யில்”, “ஆறு”, செடி, மரம் என்று வார்த்தைகளைச் சொல்லும்பொழுதே அகத்தில் காட்சிகளாக காண்பவன் நான் , “அம்மா” என்று சொன்னாலே கவிதை எனச் சொல்லும், மொழியுயிரி, சொல்லுயிரி எனச் சொன்னவரின் படைப்புகளை பிடித்து வாசித்தேன்.
சூன்யதா நாவலில் , அவர் ஹெட்ஸெட்டை செவியொலிப்பான் என்கிறார். அவன் காதிலிருந்து ஒலிக்கருவியை பிடுங்கி எறி என்கிறார். // அவன் செவியொலிப்பான் கொண்டு திரைப்படப் பாடலைக் கேட்டபடி, நான் உன்னிடம் பேசுவதைச் செவிமடுக்கத் தவிர்க்கிறான். அவனது காதுகளிலிருந்து அந்த ஒலிக்கருவியைப் பிடுங்கி எறி, அவன் என்னைத் தவிர்ப்பதன் மூலம் தன் இருப்பைத் தனக்காக மட்டுமே கைக்கொள்கிறான்”//
ஐந்தவித்தான் நாவலை முன்வைத்து , மாதவன் பாத்திரம் சொல்வதை இங்கு நினைவு கூறுகிறேன். திருமணமாகி குழந்தையே இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு நாளொரு குறளாக சொல்லிவந்தால், கடைசிக் குறள் சொல்லி முடிக்கும் நாளில் கரு உண்டாகும் என்கிறான். இதற்கு குறு நகை கொள்ளும் வாசகன், வெகுஜன காமெடிக்கு வாய்விட்டுச் சிரிப்பவனல்ல..
திருக்குறளை மறை நூலாகக் கொண்டு செயல்படும் தனித்தமிழ் நாடு வேண்டும் என மொழித்தேசிய இனங்களின் விடுதலை பற்றி பேசியவர், ரமேஷ் பிரேதன். தமிழின் படைப்புகளை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்வது என்பது எனது அன்றாடப் பணி. கடல்களாலும் மலைகளாலும் பிரிக்கப்படாமல், ஒருங்கமைந்த நிலப்பரப்பு உடைய நாட்டில், ஒரே மொழிதான் , நாட்டையும் மொழியையும் இணைத்தே சிந்திக்கும் இடத்தில், இருபது இருபத்திரண்டு மொழிகள் உள்ள ஒரு நாட்டில் தமிழும் ஒரு மொழி உள்ளது என்று ஒரு மெனக்கெடலுடன் தான் முன்னெடுக்க வேண்டி உள்ளது. அந்த வகையில், தனித் தழிழ் நாடு, அட பரவாயில்லையே எனத் தோன்றுகிறது. உலகம் யாவையும் எனச் சென்றுகொண்டிருக்கும் இந்த வேளையில் மொழி சார்ந்து ஒரு நாடு வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஜாதி மதம் சார்ந்த அரசியல் –
தனிமனிதன் இணைவதற்கும், பிரிவதற்கும் அடிப்படை ஜாதிதான் என்ற சொல்லாடலை புனைவகளிலும், கட்டுரைகளிலும் பேசியவர் ரமேஷ் பிரேதன். இமையம் கதைகளில் யதார்த்தத்துக்கு இணையான ஆணவப்படுகொலைகள் நடக்கும் சித்திரங்கள் இவர் புனைவுகளில் இல்லை. ராமசாமியை,அவரது உடல் வாகை வைத்து முஸ்லீம் என ஊகித்து பொது இடங்களில் பாய் என அழைக்கிறார்கள். டிசம்பர் 6 அன்று கோவிலுக்குள் செல்லும் அவரை முஸ்லீம் என போலீஸ் கைது செய்து வதைக்கிறது. முஸ்லீமாகவே ஒரு கதாப்பாத்திரத்தைச் சித்தரிப்பதற்கு பதிலாக, இந்துவாக இருக்கும் கதாப்பாத்திரம் முஸ்லீம் போல் தோற்றமளித்தாலே, சந்திக்கும் இன்னல்களை உணரவைக்கிறார்.
மரபையும் தொன்மத்தையும் புதியபார்வை கொண்டு பார்ப்பது –
நம் அகம் தொன்மக் கதைகளாலும், காப்பியங்களின் பாத்திரங்களாலும் வடிவமைக்கப்பட்டது. கண்ணகி என்றால் கற்பு. கர்ணன் என்றால் கொடை, ஒருதார புருஷன் ராமன் இப்படி. மஹாபாரதம் தர்மத்துக்கும், அதர்மத்துக்குமான போர். பின் நவீனத்துவ இலக்கிய வாதிகள் இதை மறு ஆக்கம் செய்து சமூகத்தின் சிந்தனையை விரிவுபடுத்துகிறார்கள். வரலாற்றுக்கு எதிர் வரலாறு எழுதுகிறார்கள். கண்ணகி கண்ணனாகி ஆணுறுப்பை அறுத்து எறிகிறான் நல்லபாம்பு நாவலில்.
தம்பதிகளுக்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது, சமூக கேட்கும் கேள்விக்காகவா, தங்களின் விருப்பமா என்று கேள்வி எழுந்து உள்ள காலம். தங்களின் உடல் சார்ந்து / பொருளாதாரம் சார்ந்து முடிவு எடுக்கவேண்டிய சூழ் நிலையில், குழந்தை வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் சொல்வதுபோல , மஹாபாரதப் புகல்வர்கள் வியாசகுலத்தில் தோன்றியதை மாற்றுப் பார்வையில் வியாசகுலம் எழுதுகிறார் ரமேஷ் பிரேதன்.
புனைவுகள் என்பது கதாபாத்திரங்களின் வார்ப்புகளால், அவர்கள் நம்மை உணர்வு ரீதியாக தொடுவதால் நினைவு கூறப்படுவது. அசோகமித்தரனின், மணல் கதை நடுத்தர வர்க்கத்தின் சரோஜினியின் வழியாக. ஜெயகாந்தனின் , ஒரு வீடு ஒரு வாசல் ஒரு உலகம், ஹென்றியின் வழியாக, தி. ஜானகிராமனின் மோகமுள் யமுனா பாபுவின் வழியாக நினைவு கூறப்படுவதுபோல, ரமேஷ் பிரேதனுடைய ஐந்தவித்தானின் மாதவனும் தேவகியும் நடத்தும் கருத்தியல் ரீதியாக நடத்தும் உரையாடலால் நிற்பவர்கள். ரமேஷ் பிரேதனின் படைப்புகளில், ஒரு பாத்திரமே பன்முகமாகி, ஆண் பெண்ணாக,, இந்து முஸ்லீமாக, ஒரு உடல் பல உள்ளங்கள், இந்து கிருஷ்து, முஸ்லீம் உள்ள ஒரே குடும்பமாக என வருவதால் கதாபாத்திரங்களை நினைவு வைத்துக்கொள்வதில் சிக்கல் இருக்கும். பன்முகங்கள் கொண்ட பாத்திரத்தின் வழியாக அவர் பேசிய பாடுபொருளால்தான் வாசகன் மீட்டெடுத்து மீட்டெடுத்து தன் அகத்தை விரிவுபடுத்திக்கொள்வான் என்பது என் நிலைப்பாடு. அவர் பேசிய விடுதலைகள் அடுத்த கட்டத்தை அடைய, மானுடத்தின் மீது நம்பிக்கை கொண்டு, நான் பார்த்தேயிராத நண்பருக்கு என் விட்டுப்போன தழுவல்களை வழங்குகிறேன். வள்ளலாரும், பாரதியும், ஔவையும் , சுந்தர ராமசாமியும் படைப்புகளின் வழியே முன்வைத்ததையே நாங்கள் இன்னும் கண்டடைந்த பாடில்லை. நண்பரே , ரமேஷ் பிரேதனே, விண்மீன்களாகிவிட்ட அவர்களுக்குள்ள பொறுமை உங்களுக்கும் இருக்கட்டும்.
இப் பெருமேடையில் எனக்குப் பேச வாய்ப்புக் கொடுத்த விஷ்ணுபுர நண்பர்களுக்கு நன்றி ! என்னை இதுகாறும் கேட்டு உள்வாங்கிக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.
[விஷ்ணுபுரம் 2025 விருது பெற்ற ரமேஷ் பிரேதன் அவர்களின் படைப்புலகை பற்றி நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். என் சிற்றுரையில் பேச்சுத் தமிழில் சில கதைகளின் கதாபாத்திரங்களை, உதாரணங்களை மேடை சார்ந்து விரித்தெடுத்தேன். இருபது நிமிடத்திற்குள் பேச எழுதிய உரையை 17 நிமிடத்தில் பேசினேன்]

Leave a comment