கிராமத்து வீட்டில் இருக்கும் நாட்களில் , காலை நடைக்குத் தயாரானால், ‘சாமி, பனி தலையில் இறங்கும்’ என்று அக்கா தடுத்துவிடுவார்கள். மாலை நடை மட்டும்தான். அப்பாவையும், அக்காவையும், குடும்பத்தையும் தெரிந்தவர்கள், எங்களை வழியில் நிறுத்திப் பேசுவார்கள். அப்பாவின் வார்த்தைகளில் உரம் பெற்று வாழ்க்கையை சுமுகமாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு எங்களிடம் சொல்வதற்கு நிறைய இருக்கும். வேறு யாரோ என்று எங்களை புரிந்துகொண்டு நலம் விசாரிப்பார்களும் உண்டு. பள்ளி முடிந்து திரும்பும் குழந்தைகள் யாரென கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டு இணையாக நடப்பார்கள். பார்வைகள் சந்தித்துவிட்டால் குறுஞ்சிரிப்பு சிரிப்பார்கள். சாலையின் இருபுறங்களில் இருக்கும் தோட்ட வீட்டு நாய்கள் புதிய ஆட்கள் என குரைக்கும். “கையில் குச்சி வைத்துள்ளதால்தான் குரைக்கிறது”, என்று ஒரு வீட்டுக்காரர் சொன்னார். நினைத்ததுபோல் உடல் நலன் காக்கும் நடை நடக்கமுடியாது, ஆனால் மனநலன் காக்கும் சுவாரஸ்யமான நடைப்பயணமாக அமைந்துவிடும்.

வேம்பு, புளி, நொச்சி, என மரங்களை சஹாவிற்கு அறிமுகப்படுத்துவோம். வேலியோடு வேலியாக நிரையாக நிற்கும் தேக்கு மரங்களை காண்பித்து, இவற்றில் வீட்டு கட்டுவது பெருமை என சொல்வோம். எருக்கலாம் பூ-வை பார்க்கும் ராதா, சஹாவிடம், “இந்தப் பூவை உடைத்தால் பட் என்று சத்தம் வந்தால், நாங்கள் பரீச்சையில் பாஸ் என்று சொல்வோம்’ என்று பள்ளிக்கால நினைவுகளைப் பகிர்வார். கொழுஞ்சி , நெருஞ்சி எனப் பூக்களை காண்பித்து, தீப்பெட்டியில் போட்டுக் குலுக்கிப் படம் காண்பிப்போம் என்பார். கோவைப் பழத்தைக் கண்டால், இதை சாப்பிடலாம் தெரியுமா என்று சொல்வார். ஊமத்தைம் பூவையும் காயையும் காண்பிக்க, “இந்த அத்தை , ஊமையா?” என்று கடித்தார் சஹா. மாலையில் முழுக்குழந்தையாக மாறிவிடும் ராதாவைப் பார்ப்போம்.
குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல், அனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல் என பல நோக்கங்களுடன் திறக்கப்பட்டிருக்கும், ஊர்ப்புற நூலகங்களில் ஒன்று எங்கள் கிராமத்திலும் இருப்பதை இந்த நீண்ட நாட்கள் ஊர்த்தங்கலில் கண்டேன். ஞாயிற்றுக் கிழமை தவிர, மற்ற நாட்களில், காலை ஒன்பது மணி முதல் மாலை மூன்று மணி வரை , இந்த நூலகம் வாசகர்களுக்காக கதவைத் திறந்து காத்திருக்கிறது. இலக்கிய வாசகனின் கண்களுக்கு, நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் தொகுப்பு, எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், சா. கந்தசாமி தொகுத்த மலேசியா, சிங்கப்பூர், ஶ்ரீலங்கா தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைள் அடங்கிய நூல், “அயலகத் தமிழ் இலக்கியம்” உடனே கண்ணில்பட்டன. அரசு சார்ந்த நூலகங்களில், அண்ணாத்துரை, கருணாநிதியின் நூல்களும் இருந்ததில் ஆச்சரியப்படவதற்கு ஒன்றும் இல்லை. வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வாசிக்குமளவு புத்தகங்கள் உள்ளன என்பதை என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவனுக்கு ஆங்கில கதைகளின் அறிமுகம் கிடைப்பதற்கும் தேவையான நூல்கள் இருந்தன. என் உடன் வந்த என் அக்கா மகன் பிரசன்னா, எத்தனை நூல்களை எடுத்துச் செல்லலாம் என்று கேட்டதற்கு, எத்தனை வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லுங்கள், நானே வந்து உங்கள் வீட்டில் வாங்கிக்கொள்கிறேன் என்று நூலகரின் உதவியாளர் சொன்னார். நான்கு நூல்களை எடுத்து வந்தோம்.

வீட்டின் முன்னிருந்த, இலைகள் எல்லாம் கருப்பாகி வாடியிருந்த வேப்பமரத்தை கவலையுடன் பார்த்து வாசல் கட்டிலில் அமர்ந்திருந்தேன் . வருடா வருடம் இரண்டடி உயரம் இப்படிக் கருகி உதிர்ந்து விடும் இலைகளாலும் கிளைகளாலும், மரம் பெரிதே ஆவதில்லை என்று அக்கா வருந்தினார். கம்பிமுள் வேலியின் அந்தப்புறம் நின்று, கொத்து வாங்கலையா என்று கேட்டு ஒருவர் அழைத்தார். சிறுகதவைத் திறந்து இப்புறம் வந்த அவரிடம் , கொத்து அருவாமணை, தேங்காய்த்துருவி, கொடுவாள் என தோட்ட வீட்டுத் தளவாடச் சாமான்கள் அவரது பைக்கின் பின்னாலிருந்த கூடையில் அமர்ந்திருந்தது. அக்கா நானூறு ரூபாய்க்கு இரு கொத்துக்கள் வாங்கினார். இவருக்கு அப்புறம் இதையெல்லாம் செய்வதற்கு , தொழில் தெரிந்த ஒருவர் இருப்பாரா என்ற கேள்வி என் மனதில் எழ அவருடன் உரையாட ஆரம்பித்தேன். இவருக்கு அப்புறம் வேறு யாரும் இல்லை என்று சொன்ன ராஜகோபால், இதை செய்வதில் ஒரு திருப்தியுணர்வைக் கொண்டிருந்தார். பொருளாதார ரீதியாகவும் திருப்தியானவராக இருந்தார். இவற்றை வாங்குவதற்கு விவசாய மக்கள் இருந்துகொண்டே உள்ளார்கள், தன் ஊரான செம்பக்கணத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர்கள் பயணம் செய்து இங்கு வந்தால் போணியாகமல் சென்றதிலை என்றார். “பலகுழிகள் கொண்ட பணியார கல் இருக்கும். ஒரு குழி கொண்ட பணியார கல் , உங்களிடம் உள்ளதா?” என்று கேட்டேன். அவர் உறவினர், மீனாட்சிவலசில் அப்படிப்பட்ட கல்லை செய்பவரெனவும், தான் அதை கற்றுக்கொண்டு செய்வதில் சிரமம் எதுவும் இல்லை என்றார்.

தேங்காய் மட்டையை உரிப்பது என்பது சிலருக்கு சவால். பலருக்கு எளிது. என் அப்பா, கடப்பாரையை தலைகீழாக நட்டு, தேங்காயை குத்தி, ஒரு அமுக்கு அமுக்கி, பாளம் பாளமாக பிரிப்பார். அல்லது, மண்வெட்டியை தரையில் வைத்து, பிடியில் கால் ஊன்றிக்கொண்டு உரிப்பார். அம்மா, தேங்காயை நட்டமாக நிற்க வைத்து, அதன் தலையில் ஓங்கி கல்லைப் போட்டு மட்டையை உரித்துவிடுவார். சென்ற ஆண்டு ஊர் வந்த சமயம், ஒரு உறவினர் அவரது குடும்பத்துடன் அப்பா இறந்த துக்கத்தை விசாரிக்க வந்திருந்தார். வந்தவர்களை உபசரிக்க தயாரானார்கள். சட்னிக்கு தேங்காய் வேண்டுமென, குவிந்திருந்த மட்டை உரிக்கப்படாத தேங்காய்க் குவியலில் ஒன்றை எடுத்துக்கொடுத்து, “தம்பி, உரித்து எடுத்து வா!” என்று அக்கா கட்டளையிட்டார். வீட்டுச் சுவற்றோரம் ஒரு கடப்பாரையும் இதற்கென்றே தலைகீழாக நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதில் நான் உரிக்கும் வேகத்தைப் பார்த்த உறவினர் பெண், “அண்ணா, நான் உரித்துக் கொடுக்கிறேன்” என்று படப்பட என்று செய்து முடித்தார். “நீ என்னம்மா வேலை செய்யறே?” என்றேன். “கம்ப்யூட்டர்தாங்க” என்றார்.

இப்பொழுது வீட்டில் தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் இருக்கிறது. அக்காள் மகன் பிரசன்னா இதில் உரிப்பதை பார்த்தேன். அதன் தலையில் உள்ள இணைந்த வேலின் கூர்மையில் குத்தி, கைப்பிடியை மேலாக தூக்கினால். வேல் இரண்டாகப் பிரிய, மட்டையும் பிரிகிறது.

Leave a comment