(08/01/2019-ல் எழுதிய வாசிப்பனுபவத்தின் மீள்பதிவு)
நான் வாழ்வின் ஆதாரத் தேடுதலுக்காக பார்க்கும் மென்பொருள் உருவாக்கும் பணியில், எழுதிய மென்பொருள் நினைத்தபடி வேலை செய்கிறதா என்று சுய பரிசோதனை (unit testing) செய்ய வேண்டும். அப்புறம் ஒரு கட்டமைப்பானா அடிப்படை சோதனைகளை (Smoke Testing) கடக்கிறதா என்று பார்க்கவேண்டும். இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, மற்ற பயனர்கள் பார்வையில் , எழுதியவன் நினைத்து பார்க்காத சோதனைகளைகளையெல்லாம் (Regression testing) கடக்கவேண்டும். அதையும் கடந்து நாள் கணக்கில், வார கணக்கில் எந்தக் குறைபாடும் இல்லாது ஓடுகிறதா (Performance / sustainability testing) என்று பார்க்கவேண்டும். ஒரு மாதத்திற்கு முன், எஸ். செந்தில்குமாரின் , விலகிச் செல்லும் பருவம் , சிறு கதை தொகுப்பை வாசித்தேன். நன்றாக எழுதப்பட்ட மென்பொருள் நிற்காமல் மாதக்கணக்கில் ஓடுவதைப் போல், வாசித்து ஒரு மாதம் ஆகியும், எஸ். செந்தில்குமாரின், ‘கழுதைக்காரன்’, ‘மாலாவின் சகோதரிகள்’, ‘பெயரிடப்படாதா சம்பவம்’ கதைகளின் மாந்தர்கள் என் நினைவில் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். கதைகளைப் பொறுத்தவரையில், நீண்ட நாள் இம்சை செய்து, கேள்வி கேட்டுக்கொண்டு, உறுத்திக்கொண்டு இருந்தால், மற்ற சோதனைகளை கடந்துவிட்டது எனலாம். எஸ். செந்தில்குமார், அவரே வாழ்க்கையை ரசனையுடனும், ஆழ்ந்தும் பார்த்து கேள்விகள் கேட்டுக்கொள்ளவில்லை என்றால் (unit testing) , கதைகள் இந்த அளவு நேர்த்தியுடன் வந்திருக்காது. வெவ்வேறு தொழில்கள் செய்பவர்கள், சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள், சிறுவர்கள், பதின்ம வயது பையன்கள், பெண்கள், கல்யாணம் ஆகி காதலை சொல்லமால் தனியாக வாழ்பவர்கள், பால் ஊற்றி பிழைப்பவர், இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என கதை மாந்தர்களை வாசகனுடன் உரையாட வைப்பதால், அவர் கதைகள் தொடர் சோதனையிலும் (Regression Testing) தேர்வு ஆகிவிட்டன. நான், எஸ். செந்தில்குமாரின் கதைகளை வாசிப்பது இதுவே முதன்முறை. யாரும் சொல்லாமல் எப்படி அவர் கதைகள் எனக்கு பிடித்தமானவை ஆயின என்று என்னை நானே கேட்டுக்கொண்டதால், எனது தொழிலோடு ஒரு ஒப்பீடு.
கழுதைக்காரன், சுஜாதாவின், நகரம் கதையில் வரும் அந்தக் கிராமத்து பெண்ணைப்போல எனக்குள் வந்து குடிகொண்டுவிட்டான். அடுத்தவர்களின் துணியை துவைத்து பிழைப்பு நடத்திய அவனது தொழில் , புதிதாக வந்த இயந்திரங்களால் இல்லாமல் ஆகிவிட்டது. குழந்தையிலிருந்து செய்து பழகிய தொழில் , கை, கால்களை போல கூடவே வளர்ந்து ஒன்றோடு ஒன்றாகிவிடுகிறது. கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும், புதிதாக கற்றுக்கொண்டு செய்யும் தொழில் அந்த இடத்தை பிடிக்கப் போவதில்லை. கழுதைக்காரனுக்கு அப்படித்தான், மகள் கூப்பிட்டாள் என்று , அவனது மனைவி, ஆஸ்பத்திரியில் , நோயாளிகளின் துணிகளை துவைத்துக்கொடுக்க சென்றுவிட்டாள். கழுதைகளுடன் , வாழ்ந்த ஊரிலேயே இருக்க முடிவு செய்துவிடும் அவனுக்கு, கழுதைப்பால் விற்பதே தொழில். அவன் விற்க வந்த கழுதைப் பாலை , அந்த ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் வாங்கவில்லை என்ற கவலை எனக்கு ஒட்டிக்கொண்டது. கழுதைக்காரன் பிழைப்புத்தான் , சாப்ட்வேர்-காரனுக்கும். Cobol ப்ரோக்ராம் கற்றுக்கொண்டு வேலையை ஆரம்பித்தவன் இன்று இருக்கும் Full Stack Development-க்கு மாறாவிட்டால் சோற்றுக்கு ஜிங்கி அடிக்கவேண்டியதுதான். ஒரு வேளை, அந்த அப்பட்ட உண்மையை , இந்தக் கதை வெளிச்சம் போட்டு காட்டியதால், உறுத்துகிறதோ ?
மாலாவின் சகோதரிகள் என்று தலைப்பை பார்த்ததும், வாராந்திர பத்திரிகைகளில் வரும் கதைகளை வாசிக்கும் அந்த வாசகன் எட்டிப் பார்த்து இரண்டு இளவயது பெண்களை கற்பனை செய்தான். கதையில் வந்தவர்கள் அடர்ந்த வெள்ளை நிற கூந்தலை அள்ளி முடியும் விஜயமாலா, ஜெயமாலா என்ற இரண்டு கிழவிகள். சாந்து தட்டையும், செங்கல்லையும் மண்ணையும் சுமந்து கட்டிட வேலை செய்தவர்கள். வயதானதால். வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள். சென்ட்ரிங் அடிக்கும் அன்று கிடைக்கும் சாப்பாட்டிற்கு தூக்குச்சட்டி எடுத்துச் சென்று வாங்கி உண்பவர்கள். விஜயமாலாவிற்கு இளம் வயதில் அவளுடன் வேலை பார்த்த தாங்கராஜுவிடம் காதல் இருந்தது. அவனுக்கும் ஒண்ணாம் நம்பர் பூச்சுக் கரண்டியின் மீது சத்தியம் செய்து கல்யாணம் செய்துகொள்ளுமளவு ஆசை இருந்தது. விஜயமாலாவை ஏமாற்றி விட்டு , உறவுக்கார பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளும் வஞ்சமும் அவனுக்கு இருந்தது. விஜயமாலா எடுத்துச் சென்ற தூக்குச்சட்டி , ‘அன்பளிப்பு தங்கராஜு” என்று போட்டு அவன் கொடுத்தது. அந்த முதல் காதலுக்கு பின் விஜயமாலா யாரையும் காதலிக்கவுமில்லை கல்யாணமும் செய்துகொள்ளவில்லை. அக்காவிற்கு துணையாக , தங்கை ஜெயமாலாவும் அம்மாவும் அப்பாவும் வாழ்ந்த வீட்டிலேயே இருந்துவிட்டாள். விஜயமாலா எடுத்துச் செல்லும் தூக்குச் சட்டியில் இருக்கும் தண்ணீர் , க்ளக் க்ளக் சத்தம் , தங்கராஜ், விஜயா விஜயா என்று சொல்வதுபோல் இருந்தது. காதல் வலி சொல்ல இந்த க்ளக் சத்தத்தைவிட வேறு என்ன இசை வேண்டும் ? கட்டுமஸ்தான இளைஞனையும், பெரிய விழிகளுடைய பெண்ணையும் வைத்துத்தான் காதல் கதை சொல்ல வேண்டுமா, என்ன ?
‘பெயர் சொல்லமுடியாத சம்பவம்’ கதை, பருவ வயதினரின் உணர்வுகளை, செயல்பாட்டை, உடல் உஷ்ணத்தை, பயத்தை, தவிப்பை , சின்ன சின்ன நுணுக்கங்களுடன், அழகிய வர்ணனைகளுடன், செல்வி , ஜீத்து மற்றும் தூரத்தில் இருந்து பார்க்கும் மந்திரம் போடும் தாத்தா மூலம் எடுத்துச் சென்று, பருவத்தில் வருவது காதலா , இச்சையா என்று எந்த பெயரையம் வைக்காமல், வாசகனுக்கு அனுபவத்தையும், உணர்வையும் விட்டுச் செல்கிறது. கதையின் முடிவில் வரும் கவிதை, கதையை மீண்டும் வாசிக்க வைக்கிறது. கவிதை வாசகனுக்குள் அமர்ந்துவிடுகிறது.
‘விலகிச் செல்லும் பருவம்’, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள் நுழைந்து பழைய நினைவுகளை தோண்டி எடுத்துவிட்டது. ஆங்கிலப் பரீட்சையில் கேட்கும் கடிதத்தில், வாத்தியார் மாரியப்பன் யோசனைப்படி, அனுப்புநர் , பெறுநர் எழுதினாலே ஆறு மதிப்பெண்கள் வந்துவிடும் என்று கணக்குப் போடும் தனஞ்சேகர். தன்வரலாறு கூறுதலை மனப்பாடமாக எழுதுவதில் சிரமம். நண்பன் நம்பிராஜனுக்கு அதில் ஒன்றும் கஷ்டமில்லை. இருவருக்கும் இன்னொரு சிரமம் இருந்தது. அது அவர்களது பொருளாதார பின்னணி. நம்பியின் அப்பாவிற்கு ஐஸ் கம்பெனியில் வேலை. நம்பி விடுமுறையில் ஐஸ் விற்பான். சேகரின் அப்பா தியேட்டரில் கடை போட்டிருப்பவர். சேகர் , தியேட்டரில், ஈயத் தட்டில் முறுக்கு விற்பான். நம்பி, அவன் அப்பா, அம்மா படும் கஷ்டம் பார்த்து , தொடர்ந்து பள்ளிக்கு போகாமல் , ஐஸ் விற்று அவர்களுக்கு உதவலாம் என்கிறான் சேகரிடம். ஏழாம் வகுப்பு ஆரம்பித்த முதல் வாரம். எனது நண்பனை , வா பள்ளிக்கு செல்வோம் என்று நான் ஒரு கையை இழுக்கிறேன். அவனது அம்மா , இல்லை , நீ வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், பள்ளிக்குச் செல்லாதே என்று இன்னொரு கையை இழுக்கிறார். அவனது படிப்பு அப்படியே நின்றுவிட்டது. அவனது ஆங்கில புத்தகத்தில் கடினமான வார்த்தைகளின் மேல், தமிழ் எழுத்துக்களால் அந்த உச்சரிப்பு வருவதுபோல எழுதிவைத்திருப்பான். இப்பொழுது படித்தவர்கள் தமிழை இப்படித்தான் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இன்னொரு நண்பன் வெற்றிலை விற்பவரின் மகன். நான், சின்ன கணக்கு போட்டுக்கொடுத்தால் , ஐந்து பைசா கொடுப்பான். பெரிய கணக்கு போட்டுக் கொடுத்தால், பதினைந்து பைசா கொடுப்பான். வார விடுமுறையில், அப்பாவிற்கு துணையாக , சந்தையில் வெற்றிலை விற்பதால் அவன் கையில் காசு எப்பொழுதும் புரளும். நான், பதினொன்று , பனிரெண்டு , கல்லூரி என்று சென்ற பின்னரும், சந்தைக்கு சென்றால், அவனை பார்க்காமல் வரமாட்டேன்.
பகலில் மறையும் வீடு: செந்தில்குமாரின் கற்பனை வளத்தையும், வாழ்வை ரசித்து அதை தரிசனமாக வாசகனுக்கு மாற்றுவதில் உள்ள மகுடி வித்தையையும் அறிந்துகொள்ள, மேஜிக்கல் ரியலிசம் ததும்பும் இந்த ஒரு கதை போதும். ‘பொய்யைப் பொருத்தமாக சொன்னால், நிஜம் நின்னுக்கிட்டு முழிக்கும்’ என்று நண்பர் ஒருவர் சொல்வார். மேஜிக்கல் ரியலிசம் அப்படித்தான், நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடும்படியான மாந்தர்களையம், நிகழ்வுகளையும் சொல்வதோடு கற்பனை வடிவங்களையும், அதிசியக்கத்தக்க விஷயங்களையும் கலந்து கொடுத்தால், வாசகன் உண்மை எது மாயம் எது என்று மயங்கி விடுவான். மதுரை ஜில்லாவில் உள்ள பாளையத்தில், இரவில் காட்சி தரும் வீடு, பகலில் காணாமல் போய்விடுகிறது என்று சொல்லப்படும் அதிசயத்தை கண்டு ஆராய மூன்று ஆங்கிலேயர்கள், ஆளுநரிடம் அனுமதியெல்லாம் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்பவர் பாளையத்தில் இருக்கும் மேஜர் டேவிஸ்சன். மேஜர் வெஸ்டன் கேவ் நகரிலிருந்து பொருளீட்டுவதற்காக தன் மகன் பிலிப்புடன் இந்தியா வந்தவர். பிலிப்பை , அதிசய வீட்டை பார்க்க வந்தவர்களுடன் மேஜர் அனுப்புகிறார். வெஸ்டன் கேவ் நகரில், மேஜரின் மனைவியும், மகளும் சாப்பிடுவதற்கு ரொட்டி கூட இல்லாமல் தக்காளி ரசம் வைத்து பாசியாற்றிக்கொள்கிறார்கள். அந்த ரசத்தை எப்படி வைப்பது என்று மகளுக்கு கற்றுக்கொடுத்தது, மேஜர் தான். கணவனும் மகனும் , சம்பாரித்துக்கொண்டு வருவார்கள், மககளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று மேஜரின் மனைவி காத்திருக்கிறாள். மகளும் தந்தையின் நினைவாகவும் அருமைத் தம்பி பிலிப்பின் நினைவாகவும் வாடுகிறாள். வீட்டை பார்க்க வந்தவர்களில் ஒருவர், உறவையும், நாட்டையும் விட்டு வந்த ஆங்கிலேயர்கள் அவற்றை மறக்க வேண்டி குடிப்பதும், வன்கலவி கொள்வதுமாக உள்ளனர் என்று ஊரின் நினைவாக இருக்கும் பிலிப்பிடம் சொல்கிறார். பூதலிங்கம் என்பவன் மூலம், பின் வாசல் வழி சென்றால் வீடு எங்கு முடியும் என்றும், முன் வாசல் வழி சென்றால் எங்கு முடியும் என்று அறியும் அவர்கள் , இரவில் , இரு குழுக்குளாக பிரிந்து வெவ்வேறு வாசல் வழி சென்று வெளி வருகிறார்கள். பகலில் அனைவரும் வந்து சேர்ந்த பிறகு டேவிஸ்சனுடன் காத்திருக்கும், கீல்வென் என்பவன், “இது வீடல்ல, வீட்டின் தோற்றத்தில் சாதுர்யமாக கட்டப்பட்ட வாசல்” என்று விளக்குகிறான். டேவிஸ்சன் பகலில் மறைந்து போகும் ரகசியம்தான் என்ன என்ற கேள்விக்கு, கீல்வென் அவரை மதிலில் உள்ளங்கை வைத்து பார்க்கச் சொல்கிறான். அவரது கையில் ஏதோ ஊருகிறது, என்று பார்த்தால், மின்மினி பூச்சிகள். பகலில் ஒளிராத மின்மினி பூச்சிகளையும் அவைகள் விரும்பி அமரும் மரத்தையம் தக்கபடி உபயோகித்து சுவர் எழுப்பியதை கீல்வென் விளக்க, டேவிஸ்சன் நம்புவதுபோல் வாசகனும் நம்பிவிடுகிறான். பிலிப் ஊருக்கு கிளம்பி செல்லுகிறான். அவனது சகோதரியும் , அம்மாவும் இந்தியா வருவதற்கு கப்பல் ஏறக் காத்திருக்கிறார்கள்.
தொகுப்பில், சிரித்து ரசிக்க, ருசி பேதம் என்றொரு கதை. திருமணத்திற்கு முன் நிறைய சாப்பிடும் குண்டுப்பெண், திருமணத்திற்கு பின் காய் கறிகளை பச்சையாக சாப்பிடுகிறாள். சட்டினியை அரைக்காவிட்டால் என்ன என்று, தேங்காய் தனியாக, பச்சை மிளாகாய் தனியாக சாப்பிடுகிறாள். அவளை கல்யாணம் செய்துகொண்ட அவளது மாமன் மகன், நிறைய சாப்பிட ஆரம்பித்து விடுகிறான். என்ன மாமா, இப்படி சாப்பிடறீங்க என்று அவள் கேட்குமளவு ஆகிவிடுகிறது.
‘விலகிச் செல்லும் பருவம்’ தொகுப்பில் இருந்த கதைகள், மழை படத்தில் , தன்னை மறந்து, அடுத்தவர்களின் குடைகளையெல்லாம் பிடுங்கி எரிந்து மழையில் நனைந்து பாடி ஆடும் ஷ்ரயாவைப் போல் என்னைக் குதூகலம் கொள்ளச் செய்தது என்றால் மிகையாகாது.

Leave a comment