இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிய கணத்தில் அவர்களுக்குள் காதல் பிறந்தது. விஷ்ணுபுரம் விருது விழா – 2019-ல் இசையின் கண்களை நான் சந்தித்த கணத்தில் “இவரை பார்த்தா எம் எல் ஏ மாதிரி இருக்காரு. இவர் எப்படிக் கவிதை எழுதுவாரு” என்றுதான் லௌகீக சௌந்தராக முதலில் நினைத்தேன். அவருக்கான விழா அமர்வில், அவர் பேசப்பேசவே வாசகன் சௌந்தராக, கவிஞர் இசையை இனம் கண்டு கொண்டேன். திருச்சிக்குப் போனால் தவறாமல் மலைக்கோட்டைக்குப் போகவேண்டும் என்பதுபோல, கோயம்புத்தூர் போனால், விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு கட்டாயம் போகவேண்டும் என்பது நான் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் வழமைகளில் ஒன்று. அப்படி பதிப்பகத்திற்குச் சென்று, வேண்டிய புத்தகங்களை வாங்கி அடுக்கிக்கொண்டே, பதிப்பாளர் மீனா அவர்களின் மேசையில் ,” நறுமணத் துயரே! நறுமணத் துயரே!” நூல்கள் , அதன் ஆசிரியர் இசை முன்கூட்டியே கையெழுத்திட்டு அடுக்கப்பட்டிருப்பதை கண்ணுற்றேன். “கம்ப நேயருக்கு அன்புடன்…” என்று விற்பனைக்குத் தயார் நிலையிலிருந்த அவற்றிலும் ஒன்றை வாங்கிக்கொண்டேன்.
இசை, கம்பராமாயணத்திலிருந்து காதல் கவிதைகள் என தேர்ந்தெடுத்து தொகுத்திருந்தாலும் முழு ராமாயணக் கதையையும் வாசகன் மீட்டுக்கொள்ளலாம்போல, இராமன் கன்னிமாடத்தில் நிற்கும் சீதையை கண்ணோடு கண் நோக்கியது முதல், போரில் ராமனது அம்பு இராவணணின் இதயத்தில் தைத்து அவன் நெஞ்சில் சீதை இன்னும் துய்க்கிறாளா என துளைத்துப் பார்ப்பது வரை கம்பனின் கவிதைகளையும் அவற்றுக்கான தனது ரசனையையும் விமர்சனத்தையும் சீராக வரிசைப்படுத்தியுள்ளார். நவீனக் கவிஞனாக சலிக்கும் இடங்களையும், கேள்விகளுக்கு உட்படும் இடங்களையும் குறிப்பிடவே செய்வதால் தெரிந்த கதைக்கும் கவிதைக்கும் மாற்றுப் பார்வைக்கு வழி வகுக்கிறார் எனலாம். 2025 விஷ்ணுபுரம் விருது பெற்ற ரமேஷ் பிரேதன், பின் நவீனத்துவம் என்பது எழுத்தில் இல்லை வாசிப்பில்தான் உள்ளது எனும்பொழுது கம்பராமாயணத்தையும் குறிப்பிட்டிருப்பார். அந்தக் கண்ணோட்டத்தில், இசையின் பின் நவீனத்துவ வாசிப்பும் இந்த நூலில் உண்டு எனச் சொல்லலாம்.
கோபம், தாபம், பச்சாதாபம், பசி என எல்லா உணர்வுகளுக்கும் ஒரு வண்ணம்தான். காதல் எனும் உணர்வுகளுக்கு மட்டும் பல வண்ணங்கள். பிரியமானவர் உடன் இருந்தால் இன்பம் எனும் வண்ணம். பிரிந்தால் துன்பம் எனும் வண்ணம். தனக்குப் பிடித்தவரை இன்னொருவர் நேசித்தால் அவர் மீது பொறாமை. காதலையும் காமத்தையும் இனம் பிரிக்கமுடியாத வண்ணமும் காதலுக்கு உண்டு. கம்பனின் பாடல்களின் துணையோடு காதலின் பல வண்ணங்களையும், இசையின் “நறுமணத் துயரே ! நறுமணத் துயரே!” தொட்டுச் செல்வதாக இருக்கிறது என்பதே என் வாசிப்பு.
இன்பம்
சட்டெனக் காதல் வயப்படும் நண்பர்களை, ‘அண்ணலும், நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என கம்பராமாயணம் அறியாதவர்களும் அணுக்கமான பழமொழி போல சொல்லிக் கிண்டல் செய்வது எண்பதுகளில் இருந்தது. டேட்டிங்க் செயலிகளில் தனக்கு உகந்த காதலனோ காதலியோ கிடைக்காமல் நூற்றம்பதாயிரம் டாலர்கள் வரை அதற்கென இருக்கும் நிறுவனத்தில் பணம் கட்டி துணை தேடும் காலத்தில், என் எண்பதுகளின் அனுபவம்கூட மிகப் பழமையாகிவிட்டது. திருக்குறளில் காமத்துப்பாலின் முதல் குறளும், குறுந்தொகையும் “கண்டதும் காதல்” பற்றி கூறுகிறது என்ற குறிப்புகளுடன், ஆசிரியர் விஸ்வாமித்திரன் , தம்பி இலக்குவனனுடாக மிதிலை வீதி வழி நடக்கும் இராமன் கன்னிமாடத்தில் நிற்கும் சீதையை நோக்கும் அந்தப் புகழ்மிகு பாடலை ரசனையுடன் விளக்குகிறார்.
எண்ண அரு நலத்தினாள் இணையள் நின்றுழி
கண்ணோடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
சூர்ப்பணகை இராமனைக் கண்டு, இந்திரனோ, சிவனோ, மன்மதனோ என அவனது அழகில் மயங்கி சிந்தையை இழக்கும் பாடல்.
சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம் நயனம்; ஈசற்கு
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று; நான்கு தோள்;
உந்தியில் உலகு அளித்தாற்கு’ என்று உன்னுவாள்.
கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் காலகட்டத்தில், என் நண்பன் ஒருவன், “மச்சி , வெள்ளிக்கிழமை பெண் பார்க்கப் போகாதீங்க, ஏமாந்துருவீங்க” என்பான். வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக் குளித்து, நீர் ஒழுக , நீள் குழலை முடிச்சிட்டு வரும் எல்லாப் பெண்களும் அழகாக இருப்பார்கள் என்று எச்சரிப்பான். சீதையின் “தளை அவிழ் குழல்” (லூஸ் ஹேர்) கண்ட இராவணன், இவளைக் காட்டித் தந்த சூர்ப்பணகைக்கு, தனது மொத்த ராஜ்யத்தையும் பரிசளிப்பேன் என்கிறான்.
‘உளைவுறு துயர் முகத்து ஒளி
இது ஆம் எனின்,
முளை எயிறு இலங்கிடும்
முறுவல் என்படும்?
தளை அவிழ் குழல் இவட்
கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென், என் அரசு’
என்று எண்ணினான்.
ஊடல்
இராமன் , சீதை , இராவணன், சூர்ப்பணகை காதல்களை மட்டும் பாடவில்லை கம்பன். எளிய மனிதர்களின் காதல்களையும் பாடியுள்ளான் என இசை சுட்டிக்காட்டுகிறார். இராமன் மிதிலையில் வில்லொடித்த செய்திகேட்டு, இராமனின் திருமணம் காண தயரதனுடன் கிளம்பும் பெருங்கூட்டத்தில் ஆடவரும் மகளிரும் கொள்ளும் காதலை , ‘குயில், பூனை, புழு, தலைவைன்’ அத்தியாயத்தில் பத்துப் பாடல்களின் உதவியுடன் தன் ரசனையை இசை முன்வைக்கிறார். காதலில் பெருஞ்சுவை ஊடல். ஊடலைக் காணாத காதல் வறியது என்கிறார் இசை. காதலியின் பெயரை விளிக்கும் இடத்தில் நண்பனின் பெயரை குறிப்பிட, “அவந்தான, போ, அவனையே கட்டிக்கோ” என்று சிக்காதவர்கள் இந்தப் பாரில் யாரேனும் உளரோ ? பின்னால் வந்து கட்டிப்பிடிக்கும் காதலியை “யார்” என கேட்டு மாட்டிக்கொள்ளும் ஒரு எளியவன், கம்பராமாயணத்திலும் உண்டு.
‘போர்’ என்ன வீங்கும் பொருப்பு அன்ன
பொலங் கொள் திண்தோள்
இருந்தானை, வந்து ஓர்
மாரன் அனையான், மலர் கொய்து
கார் அன்ன கூந்தல், குயில்
அன்னவள், கண் புதைப்ப.
“ஆர்” என்னலோடும், அனல் என்ன
அயிர்த்து உயிர்த்தாள்.
ஊடலின்போது மனைவி உயர்ந்து நிற்பதும், கணவன் பணிவதும் மானுட வாழ்வில் இயல்பாக இருக்கலாம். பெண்களின் காலில் விழுந்து ஊடலை நிவர்த்தி செய்யும் வழக்கம் அரக்கர்களின் வாழ்வில் இல்லை. இசை, பாதம் பணிதல் என்ற அத்தியாயத்தில் கம்பன் இலங்கையில் அரக்கர்களை பாடும் பாடலை உதாரணமாகத் தருகிறார்.
எறிந்த குங்குமத்து இளமுலை
எழுதிய நொய்யில்,
கறுத்த மேனியில் பொலிந்தன,
ஊடலில் கனன்று
மறித்து நோக்கியர் மலர் அடி,
மஞ்சளப் பஞ்சி
குறித்த கோலங்கள் பொலிந்தல;
அரக்கர்தம் குஞ்சி
அரக்கர்களின் தலை சிவப்பதேயில்லையாம். ஏனெனில் ஊடலின்போதும், செம்பஞ்சு குழம்பு தீட்டிய அரக்கியர் பாதங்களில் அவர்கள் வீழ்வதில்லையாம். பாதம் பணிந்தால்தானே தலை சிவக்க ?
துன்பம்
அண்ணலும் அவளும் நோக்கியது இரு நிமிடங்கள்தான். அதற்குப் பிறகு சீதையின் மனம் அங்குசத்திற்கு அடங்காத யானை போல பிளறுகிறது. மேனி மெலிந்து ஆபரணங்கள் கழன்று விழுகின்றன. இப்படி அவள் ஆனதற்கு காரணம்தான் என்ன ? அண்ணலின் முறுவல்.
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்;
சுந்திர மணி வரைத் தோளுமே அல;
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே !
சீதையை இராவணன் கவர்ந்து சென்றவுடன், அண்ணனும் தம்பியுமாக அவளைத் தேடிச்செல்கையில், கிஷ்கிந்தையில், இராமன் , சீதையற்ற நோயில் செத்தேன் என்றே இருக்கட்டும் என்று இலக்குவனிடம் கூறுகிறான்.
‘ஈண்டு நின்று, அரக்கர்தம்
இருக்கை யாம் இனிக்
காண்டலின், பற்பல
காலம் காண்டுமால்;
வேண்டுவது அன்று இது; வீர!
“நோய் தெற
மாண்டனன் என்றது”
மாட்சிப்பாலது ஆம்’
அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதையை கண்டு வந்து இராமனிடம், “கண்டனன் கற்பினுக்கு அணியை” எனச் சொல்லும் அனுமன், பிரிவில் வாடும் அவளது துயரைச் சொல்லும் பாடல். அவள் கண்ணில், கருத்தில், ஒவ்வொரு சொல்லிலும் நீ இருக்கிறாய். உன் பிரிவால் வாடும் அவள் முலை மேட்டில் காமன் ஓயாது அம்பெய்ய, அந்தப் புண்ணெல்லாம் நீ தான். அவள் எப்படி உன்னைப் பிரிந்தவள் ஆவாள்? என்கிறான் அனுமன்.
கண்ணிலும் உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின்
எண்ணிலும் உளை நீ; கொங்கை இணைக் குவைதன்னின் ஓவாது
அண்ணல் வெங்காமன் எய்த அலரம்பு தொளைத்த ஆறாப்
புண்ணினும் உளை நீ; நின்னைப் பிரிந்தமை
பொருந்திற்று ஆமோ?
இராமனைக் கவர்ந்த சீதையின் கண்கள் நஞ்சென ஆகிறது இராவணனுக்கு. போரில் இறந்த இராவணனுக்கு இறுதிக்கடன் செய்யும் வீடணன், “சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்’ என அண்ணனின் உடல் மேல் விழுந்து புலம்புகிறான்.
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு,
சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே, போக்கியதே
உயிர், நீயும் களப் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான்
எண்ணுதியோ? – எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம்
பிரளயமே ! அமரர் கூற்றே !
சொற்களின் செல்வன் கம்பன் , சீதையின் தங்கை என பொதுவான சொல் கொண்டே ஊர்மிளையை குறிப்பிடுகிறான். இசை , ஊர்மிளையையும் இலக்குவனும் தண்டிக்கப்பட்ட இரண்டு உடல்கள் என அவர்களுக்கு ஒரு தனி அத்தியாயம் கொடுக்கிறார். ஊர்வசி குறித்து வட இந்தியாவில் எளிய மக்களிடையே உலவும் இரு நாட்டார் கதைகளை சொல்கிறார். அதில் ஒன்று , இராமனை பாதுகாப்பதற்காக இலக்குவன் விழித்திருந்த பதினான்கு வருடங்களும், நித்திரா தேவி, ஊர்மிளையை ஆக்கிரமித்துக்கொள்கிறாள்.
இந்த நூலை வாசிக்க வாசிக்க , இசை-க்கு என் எண்ணங்களை அனுப்பிய வண்ணம் இருந்தேன்.
நான் : ஊர்மிளை குறித்து ஒரு அத்தியாயம் எழுதி அவள் சார்ந்து ஒரு சொல்லவொணா துயரையும் கொடுத்துவிட்டீர்கள்.
இசை : ஆம்.. அவளே முழுத்துயர்தானே

பொறாமை
மிதிலையில் இராமன் உலா வரும்பொழுது, அவனைப் பார்க்கத் திரளும் பெண்கள் கூட்டத்தில் ஒருவள் இப்படிப் பெருமூச்செறிகிறாள். ஆம், ‘தோள் கண்டார், தோளே கண்டார் ‘ என்ற பிரசித்த பெற்ற பாடல் வரும் படலத்தில்தான்.
‘மண் கடந்து, அமரர் வைகும் வான் கடந்தானை, தான் தன்
கண் கடவாது காத்த காரிகை பெரியள் காண்!’
மண்ணையும் விண்ணையும் இரண்டடிகளால் கடந்து விட்ட உலகளந்த பெருமானை, தன் கண் கடவாது காத்துக்கொண்ட அந்தச் சீதை உண்மையில் பெரியவள்தான்.
இராமன் மேல் காதல் கொண்டு காமத்தீயில் கொதிக்கும் சூர்ப்பணகை அவனுடன் இருக்கும் சீதையின் அழகைக் கண்டு பொறாமையில் பொருமுகிறாள். திருமகளைக் காட்டிலும் அழகாய் இருக்கும் இவளை விடுத்து இராமன் எப்படி என்னைப் பார்ப்பான் என வருந்துகிறாள்.
‘காவியோ, கயலோ, எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும் கொலோ?’ எனும் –
ஆவி ஓயினும், ஆசையின் ஓய்வு இலாள்.
காமம்
இந்திரன் , சிவன், திருமால் போன்ற தேவர்களின் மனைவியரைக் காட்டிலும் சீதையே உயர்ந்தவள் என இராவணனுக்கு சொற்களால் சீதையின்மேல் காமத்தீயை மூட்டுகிறாள் சூர்ப்பணகை. கற்றவரேயானாலும் ஞானம் இல்லை எனில் காமத்தைக் கடக்க முடியாது என்கிறார் கம்பர். நவீனக்கவி இசைக்கோ அந்த ஞானத்தின்மீதும் நம்பிக்கையில்லை.
காமக் கனலை அணைப்பதற்கு ஒழுக்கம் ஒன்றால்தான் முடியும் எனும் கம்பனுக்கு, இந்த நூலில் இசை சொல்லும் பதில் “மனிதன் மனிதனைப் போன்று தோற்றமளிக்கிறான். உள்ளே குரங்கு குதித்துக்கொண்டிருக்கிறது.” “Quote”-களின் காலம் எழுதிய கவியின் இந்த Quote-ம் இனி முக்கியத்துவம் பெரும்.
கபிலரின் “வேரல் வேலி வேட்கோ பலவே” போல , “காமமோ பெரிது” என நவீனக் கவிதை எழுதிய இசை , கம்பனின் துணையுடன் இந்த நூலில் தூய காமம் என்று ஒன்று உள்ளது என்கிறார். அது தீங்கானதல்ல, தந்திரசாலியல்ல என்கிறார். கம்பராமாயணத்தில் இராமன்பால் சூர்ப்பநகை இச்சை கொண்டதுபோல, இலக்குவன்பால், இச்சை கொள்பவள் அயோமுகி. அவளை, இசை தூய காமுகி என்கிறார். இலக்குவனிடம் அவள் அறிமுகம் செய்துகொள்ளும் பாடலுக்கு தனக்கான விளக்கத்தை வைக்கிறார்.
பேசினேன்; அங்கு அவள்
பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி
சிந்தையளும்தான்,
நேசம் இல்
அன்பினளாயினும், நின்பால்
ஆசையின் வந்த
தனது நூல் முழுக்க கம்பராமாயணப் பாடல்களின் விளக்கங்களுக்கு அற நிலைப் பதிப்பை சார்ந்திருக்கும் இசை, ‘நேசம் இல் அன்பினளாயினும்’ என்கிற இந்தப் பாடலின் வரிக்கு, “நேசமோ அன்போ கலவாத தூய காமம்’ என தனது விளக்கத்தை தருகிறார். கூடுதலாக, அயோமுகிக்குப் பிடிக்குமென 21-ஆம் நூற்றாண்டு கவிதை ஒன்றை வாசிக்கிறார்.
//பெயர்களில் என்ன இருக்கிறது ?
அயோமுகி
உன் பெயர் பெண்
என் பெயர் ஆண் //
என முடியும் அந்தக் கவிதை காமம் பற்றிப் பேசும் கவிதைகளில் முக்கிய இடம் பிடிக்கவிருக்கிறது.
காதலின் பல வண்ணங்களென என் வாசிப்பனுபவத்தை தொகுத்துக்கொண்டாலும், இசையின் ஒரு கேள்வி அவருடனான உரையாடலில் நீங்கள் என்ன நாரதரா என என்னை கேட்கவைத்தது. அதையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்.
கன்னி மாடத்தில் நின்று கண் கவர்ந்தவள் வேறாக இருந்து , வில் ஒடித்து மணம் முடிக்கவிருக்கும் மணமகள் வேறாக இருந்தால் ராமன் என்ன செய்திருப்பான் என்று தீ பறக்கும் கேள்வியை, இசை சுதா ஶ்ரீனிவாசனிடமும் கேட்கிறார், ஶ்ரீனிவாசனிடமும் கேட்கிறார். (இவர்கள் யார் எனத் தெரியாதவர்களுக்கு, சிறு விளக்கம். ஜெயமோகன் மஹாபாரதத்தை மறு ஆக்கம் செய்து வெண்முரசு எனும் தொடராக அவர் தளத்தில் நாள் தவறாமல் எழுதிய காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் தவறாமல் மெய்ப்புப் பார்த்த தம்பதிகள்). இசை, நவீன நாரதராக இதை சுவாரஸ்யம் கருதி மட்டும் இந்தக் கேள்வியை வைக்கவில்லை. ஶ்ரீனிவாசனின் பதிலில் இருக்கும் நேர்மையைப் பார்த்தால், இசை கேட்டதில் ஒரு உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வம் தெரிகிறது.
2025 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்ற ஐந்து நூல்களில் இதுவும் ஒன்று என விஷ்ணுபுரம் பதிப்பகம் உரிமையாளர்களில் ஒருவரான Quiz செந்தில் கொடுத்த நேர்காணல் ஒன்று பார்த்தேன். “நறுமணத் துயரே! நறுமணத் துயரே!” வாசகனாக , எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

Leave a comment