தனக்கிருக்கும் அசையா சொத்து அசையும் சொத்து எனப்பேசி நான் பெரிய ஆளென பெருமை கொள்ளும் தற்பெருமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதிவு இல்லை இது. எழுத்தாளனாக, ஓவியனாக, இசைக்கலைஞனாக, பாடகனாக, அறிவியளாலனாக தனது துறையில், தனக்கென தனித்துவம் கொண்டு, அயராது உழைக்கும் ஒருவர், கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பவருக்கு, தன்னை முன்னிறுத்தலையும் அதை சார்ந்து ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் பதிவு.
அமெரிக்க நிறுவனங்கள், வசந்த காலத்தில், கல்லூரி பல்கலைக்கழகங்களிலிருந்து சில மாணவர்களை intern என்ற பெயரில் குறைந்த ஊதியத்தில் நிறைய வேலைபார்க்கும் கணினிப் பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும். அவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்தால் (இதை எந்தவிதமான கேள்விகளும் கேட்காமல் தானே முட்டி மோதி கொடுத்த வேலையை செய்து முடிப்பது என்றும் வாசிக்கலாம்) அங்கெயே நிரந்தர வேலையாக மாற்றமடைய வாய்ப்பு உண்டு. எங்கள் நிறுவனத்தில் அந்த வருட வசந்தத்தில் intern-ஆக விருப்பப்பட்டு நேர்முகத்திற்கு வந்திருந்த, மாணவனை நேர்முகம் செய்த ஒவ்வொரு முதன்மை கணினி நிரலாளரும், அவனுக்குப் பேசவே நா எழவில்லை என்றார்கள். மற்றவர் முன்னிலையில் தன்னை சரியாக முன்னிறுத்த முடியாத அவனை, நேர்முகத்திற்கு முன் வைக்கப்படும் எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களை வைத்து மட்டுமே வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தோம். தற்காலிக வேலை என்பதால், இது சாத்தியமானது. முழு நேர வேலையென்றால், அது அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவர் அன்று எழுத்துத் தேர்வில் காட்டிய புத்திசாலித்தனம், வேலை கிடைத்ததற்கான காரணியாக அமைந்தது. கணினித் துறையில் தீர்வு காண்பதற்கான பிரச்சனைகள் ஏராளம். ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்த, கணித அறிவு கூடிவரப் பெற்ற, பிரச்சனைகளின் காரணிகளை ஆய்ந்து அறியும் ஒருவர் கணினி நிரல்களை எழுதிவிடலாம். எனது பணியாளர் அப்படிப்பட்டவர்களில் ஒருவர். செயல்திறன் மதிப்பாய்வுக்காக அரையாண்டுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை, அவராகவே அவரைப் பற்றி எழுதிக் கொடுக்கும் மதிப்பீடுகளில் ஓரிரு வரிகளே இருக்கும். எனது மேலாளாரோ (அவருக்கு மேல் இரண்டாம் நிலையில் உள்ளவர்), அடுத்த துறையின் மேலாளர்களோ அந்த மதிப்பீடுகளை வாசித்துப் பார்த்தால் சர்வ சாதாரணமாக இருக்கும். அவர் எழுதிய சில நிரல்களால், நிறுவனத்திற்கு அந்தக் காலாண்டின் வருவாய் கூடியிருக்கும். பல வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்கள் பயனிகளை வாங்கத் தயாராகியிருப்பார்கள். இதில் அவரது பங்கு என்ன என்று அவரது சாதனைப் பட்டியல்களில் மேற்கண்ட எதுவும் குறிப்பிடப்பட்டிருக்காது. நான் அவரது மேலாளராக இதையெல்லாம் தாங்கள் இணைத்துக்கொள்ளலாமே என்று சொல்வேன். இந்தத் தன்னை முன்னிறுத்தலை பற்றித்தான் நான் இங்கு பதிவிடுகிறேன். மேலாளர் என்ற முறையில் இவரது சார்பாக நான் அவரை முன்னிறுத்துக்கொண்டே இருந்தேன். நிறுவனங்களில் தங்கள் வேலையில் என்ன சாதித்திருப்பீர்கள் என எல்லோரும் புரிந்துகொள்ளும் எண்களாக மாற்றி தனது மதிப்பை மற்றவர் முன்னிலையில் தன்னை உயர்த்துபவராக இருக்கவேண்டும்.சில உதாரணங்கள்.
1) முன்னர் இருந்த செயலியால் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய ஐந்து நாட்களாகும். நான் முன்னெடுத்து மாற்றி எழுதிய கட்டளைகளின் திருத்தத்தால் அரை மணி நேரம்தான் ஆகிறது.
2) நான் திருத்தி தெரிவு செய்து வெளியிட்டுள்ள புதிய செயலி, பழைய செயலியை விட 50 சதவீதம் குறைவான கணினி நினைவகத்தையும், 75 சதவீதம் குறைவான மையச் செயற்பகுதியையும் பயன்படுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவை முன்னெடுப்பவரகள் எண்களின் வழியாக ஆட்குறைப்பை காண்பித்து அதை முன்னெடுக்கிறார்கள். அதற்குப் பின்னால் இருக்கும் உங்கள் மூளையையும் எடுத்துச் சொல்லி முன்னிறுத்தவேண்டிய காலகட்டம். சரியான கேள்விகளை (Prompt) கேட்டு சரியான பதில்களை சொல்லவைத்து நீங்கள் உதவி பெற்றிருக்கலாம். எத்தனை குறைவான கேள்விகளை கேட்பீர்கள் என்பது முக்கியம். அதன் மூலம் கிடைத்த தீர்வில் இருக்கும் பிழைகள் எத்தனை, அதை திருத்துவதில் உங்கள் பங்கு என்ன என்று பட்டியலிடலாம்தானே ?
தற்காலக் கலைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், Instagram-ல் அவர்களை எத்தனைபேர் பின் தொடர்கிறார்கள் என்பது. சமீபத்தில் ஒரு எழுத்தாளரிடம், ஒரு பதிப்பகத்தார் இந்தக் கேள்வியை கேட்டார்களாம். எனக்கான தேடலுக்காக எழுதுகிறேன், மகிழ்விற்காக எழுதுகிறேன் என்று எழுதும் படைப்பாளிகளாக இருந்தாலும், அவர்கள் எழுத்தை அச்சில் பார்க்க விரும்பும் ஒரு குழந்தை ஒளிந்திருக்கும் அல்லவா? சமூகவெளியில் தன்னை முன்னிறுத்தக் கூச்சப்படும் கலைஞர்கள், அவர்களது ரசிகர்களின் உதவியை நாடலாம். அவருக்கென்று சிறு குழுவாக இருப்பினும், அவர்கள் அந்தக் கலைஞனுக்கான சமூக வலைதளங்களை உருவாக்கி பராமாரிப்பவர்களாக இருக்கலாம். இதுவொன்றும் புதிதல்லவே எனக் கேட்பவர்களுக்காக இதை சொல்லவில்லை. உள்ளுக்குள் ஒடுங்கிக்கொள்ளும் கலைஞனுக்காக இதை எழுதுகிறேன். வெளிப்படையாக உரையாடத் தயாராக இருந்தும், பொருளாதாரச் சூழ்நிலையால், தொழில் நுட்பத்தின் மீதுள்ள மனத்தடையால் தனக்கான வலைதளம் கூட வைத்துக்கொள்ளாமல் இருக்கலாம். விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதனை பற்றி உரையாற்ற தகவல்களை சேகரிக்க. இணையத்தில் தேடினால், அவர் படைப்புகள் சார்ந்து விவாதங்கள் இல்லை. அவரது வலைதளமும் அவ்வளவாக பராமரிக்கப்படவில்லை. அவரை சமூகத்திற்கு முன் முன்னிறுத்தி தொடர்ந்து உரையாடும் நண்பனோ , குழுவோ அவருக்கு அமையவில்லை என்றே நான் எடுத்துக்கொண்டேன்.
நமக்குப் பிடித்த எழுத்தாளராக இருக்கலாம். அவரைப்போல் எழுத உலகில் யாருமில்லை என்று சொல்லலாம். அதே எழுத்தாளரின் எழுத்தை ஒரு அமெரிக்க பதிப்பகத்தாரிடம் எடுத்துச் சென்றால் , இதில் எத்தனை பிரதிகள் விற்கும் என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். ஆயிரக்கணக்கில் விற்கும் என்பதெல்லாம் செல்லுபடியாகாது. மில்லயன் கணக்கில் விற்குமா என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கும். இலக்கியத் தரமான நூல்கள் எங்கே ஆயிரக்கணக்கில் விற்கும் என்று கேட்கலாம். அப்படியெனில் அதற்கு பெயர் சொல்லத் தக்க இலக்கிய விருதுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டா என்ற கேள்வி வரும். எழுத்தாளர், கற்பனையில் தனது பாத்திரங்களை படைப்பாரா, எத்தனை விற்கும், என்ன விருது கிடைக்கும் என்று கற்பனை செய்வாரா ? அப்படியெல்லாம் கற்பனை செய்து எழுதினால் அதற்குப் பெயர் வணிக இலக்கியம் என்ற வகைப்பாடும் உண்டு. இலக்கிய எழுத்தாளருக்கு அவரை இனம் கண்ட வாசகன், அவரை தானாக நினைத்து முன்னிறுத்த வேண்டும்.
“நான் பேசவேண்டாம், என் இசை பேசும் “ என்று சொல்லும் இசையமைப்பாளராக இருந்தால் மட்டும் போதாது. அந்த இசையமைப்பாளரின் இசையை நுணுக்கங்களுடன் பேசும், அலசும், எழுதும் முன்னிறுத்தும் ரசிகன் , ரசிகர்கள் தேவை. காசு கொடுத்தால் எழுதுகிறார்களே என்று கேட்கலாம். நல்லெழுத்தும் நல்லிசையும் தேர்ந்த விமர்சகனாலேயே ரசிகனாலேயே கண்டறியப்படும். அப்படிப்பட்டவர்கள்தான் கலைஞனுக்குத் தேவை. இசையமைப்பாளரும், ரசிகனும் இணைந்து பணிபுரிபவர்களாக, அவர்களுக்குள் உரையாடிக்கொள்பவர்களாக இருக்கவேண்டும். பாரதியை உலகுக்கு உணர்த்த, திருலோக சீதாராம், பாஞ்சாலி சபதத்தை ஊர் ஊராக சென்று பாடிச் சேர்க்க வேண்டியிருந்தது.
இன்றைய கலைஞர்களுக்குத் தேவை அவர்களை தானென முன்னிறுத்தும் ரசிகர்கள் , விமர்சகர்கள். கம்பராமாயணத்தை வாசித்து வாசித்து, அதிலிருந்து பிரித்தறியமுடியாத ஒரு பாடலை எழுதுவானே அந்த வாசகனை சொல்கிறேன். வெறுமனே விசிலடிப்பவர்களை, லைக் போடுபவர்களை சொல்லவில்லை !

Leave a comment