தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல் விருதைப் பெறும் கவிஞர் ரவிசுப்பிரமணியன் கனடா வந்துள்ளார். அவரை நண்பர்கள் சகிதமாக சென்று பார்க்கும் நிமித்தம் முன்னிட்டு ஒரு airbnb வீட்டை பதிவு செய்துவிட்டு, அந்த விலாசத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு அவர் “ஏன் சௌந்தர் , நான் செக்க கண்டனா சிவலிங்கத்த கண்டனா வாடான்னா வரப்போறேன்” என்று பதில் அனுப்பியிருந்தார். இதைப்போன்ற சொல்லாடல்கள் புலம்பெயர்ந்த எங்கள் வாழ்வில் இல்லை. ஆங்கிலமும், தமிழுமாக பேசும் புலம்பெயர்ந்தவனின் அன்றாட வாழ்வில் மொழியும் எப்படித் தேய்ந்த நிலையில் உள்ளது என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அதுவும் ஒருவர் இப்படித்தான் பேசுவார் என்ற அடையாளமே இல்லாமல் போய்விடுமோ எனப் பயமாக இருக்கிறது. மேலே சொன்ன எதிர்வினை கவிஞர் ரவியின் மொழியில் , அவரை என் நண்பரென உணர வைக்கிறது
என் மகள் பப்லுவை, கிண்டல் செய்தாலோ, இல்லாத ஒன்றை இருப்பது போல அவளிடம் நான் சரடு விட்டாளோ, “எப்படித்தானோ ? “ என்று அவள் எதிர்வினையாற்றுவாள். அந்த எப்படித்தானோ அவளுக்கான அடையாளம். என் நினைவுகளில் அவள் வட்ட முகம் எந்த அளவுக்கு இருக்குமோ உடன் சேர்ந்து என் உணர்வுகளைத் தொடுவது அவள் சொல்லும் “எப்படித்தானோ ? “.
“ஏனுங்க சௌந்தர்” என்று ஆரம்பித்துப் பேசும் என் நண்பன் ரகுவின் பேச்சு அகம் நிறைக்கும். “ஏனுங்க” என்ற சொல் கோயம்பத்தூர், திருப்பூர் சுற்றுவட்டாரத்திற்கானது என்றாலும், அந்தச் சொல் ரகுவின் குரலிலேயே என் காதுகளில் ஒலிக்கும்.
நான் ஒன்று நினைத்துச் சொல்ல, என் அண்ணன் தேவராஜ் வேறு விதமாக புரிந்துகொள்ளும் தருணங்களில், அவர், “தம்பி, நீங்க அப்படி வந்தீங்க, நான் இப்படி வந்தேன்” என்பார். நகைச்சுவை கலந்த அவர் பேச்சு அவரது தனி அடையாளம்.
என் பால்யப் பிராயத்தில், உடன் விளையாடும் பக்கத்து வீட்டுப் பையனிடம், “அறைஞ்சேனா, உங்க அப்பன் அரையணாத் தரனும்” என்பேன். அவன், “விட்டனா உங்க அப்பன் எட்டணா தரனும்” என்பான். நாடு விட்டு நாடு வந்துவிட்ட என் குழந்தை பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் விளையாட முடிகிறதா என்பதே ஒரு கேள்வியாக இருக்க, குழந்தையின் சண்டைமொழி எனக்குத் தெரியாமலே போய்விட்டது.
நல்ல நிலா வெளிச்சம் இருக்கும் நாட்களில், என் தந்தை வீட்டில் உள்ள அனைவரையும், விளைந்து நிற்கும் கடலைச் செடியை பிடுங்கலாம் என்று காலை மூன்று மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார். எல்லோரும் எழுந்து இரண்டு மூன்று நிரைகளில் கடலைச்செடி பிடுங்கிய பின்னர், தூங்கித் தூங்கி எழுந்து நெட்டி முறிக்கும் நான் , நான்கு மணி வாக்கில் அவர்களுடன் இணைந்தால் பெரிது. அதே சமயம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு எனப் பரீச்சைகளுக்குப் படிக்கும் நாட்களில், நானே மூன்று மணிக்கு அலாரம் வைத்து எழுந்து விடுவேன். உடனே முகம் கழுவி, ஐந்து நிமிடத்தில் அரிக்கண் விளக்கின் முன்னர் படிக்க அமர்ந்துவிடுவேன். அதற்கு அவர், “தனக்கும் தனக்கும்னா, புடுக்கும் களை வெட்டும்” என்று என் அம்மாவிடம் சொல்லிச் சிரிப்பார். நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை என்று எடுத்ததற்கெல்லாம் வடிகட்டும் தற்கால வாழ்க்கையில் இப்படிப் பழமொழி சொல்வது சாத்தியமே இல்லை.என் தந்தை , எப்படி நான் தன்னலமாக இருந்தேன் என்பதை எப்படிச் சுட்டுவார் எனச் சொல்ல, அவரது மொழிப் பிரயோகம் உள்ளது. என் குழந்தைகள் , எந்தச் சொல்லை, சொற்கோவையை சொல்லி என்னை அவர்களது குழந்தைகளுக்கு அடையாளப்படுத்துவார்கள் ?
வீட்டுக்காரரின் பெயரை சொல்லக்கூடாத வழமை இருந்த காலத்தவர் என் அம்மா. வீட்டின் மூத்த பிள்ளைகளின் பெயரைச் சொல்லி, அவரது அப்பா என்று அழைக்கும் காலம். என் அம்மா, என் அப்பாவை , “ராஜாமணி அய்யா” என்று அழைப்பார். இப்படி அழைப்பதில் ஒரு காலத்திற்கான சொல்வழக்கு இருந்தது. “டாடிகிட்ட சொல்லிடுவேன்”, “டாடிகிட்டப் பேசிக்கோ” என்று தன் அன்னையின் மொழி கேட்டு வளரும் என் குழந்தையிடம், எந்த மொழி எந்தப் பண்பாடு தன்னை இணைத்துக்கொண்டுள்ளது?
நான் இருக்கும் டெக்சாஸ் மாநிலத்தில், எப்படி இருக்கிறாய் என்பதற்கு, ஹௌடி என்பார்கள். மண்டி, ட்யூஸ்டி என்று கிழமைகளை ‘டை’ என்ற விகுதிக்குப் பதிலாக ‘டி’ என்ற விகுதியுடன் முடிப்பார்கள். தமிழ் பேசும் என் குழந்தை , கிழமைகளை ஆங்கிலத்தில் அவர்களைப்போலத்தானே சொல்லும் ?
சொற்களில் கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்ற பாகுபாடுகள் இல்லை எனச் சொல்லும் கி.ரா-வையும் , நாஞ்சில் நாடனையும் பின்பற்றுபவன் நான். சோறு என்று சொல்ல அவமானப்படுகிறோம் என்று நாஞ்சில் நாடன் குறிப்பிட்டிருப்பார். ஒரு முறை நண்பர் ஒருவரை அழைத்திருந்தேன். அவர் தனக்கு ஒரு விபத்து நடந்தது எனவும், வண்டியையும் அவரையும் ஒரு சேரத் தூக்கிப் போட்டதில் அமர்ந்த வேகத்தில், உட்காரும் இடத்தில் நல்ல அடி என்றார். “என்ன பைக் சீட்டிற்கா?” என்றேன். மீண்டும் அவர், உட்காரும் இடத்தில் என்றார். குண்டியில் பலத்த அடி என்று சொன்னால் குடியா முழுகிவிடும்? கண்ணில் குச்சி குத்துவிட்டது என்று சாதாரணமாக சொல்லும் நாம், குண்டியில் கழுவேற்றிக் கொன்றுவிட்டான் என்று வாசிப்பதற்கு அசூயைப்படுகிறோம். மனிதனின் உறுப்புகளைச் சொல்ல என்ன கூச்சம்? பன்மொழி பேசும் இன்றைய வாழ்வில் ஒரு மொழியில் நல்லதைச் சொல்லும் சொல், பிறிதொரு மொழியில் பொல்லாததைச் சொல்லும். Butt என்ற குடும்பப் பெயரை உடையவர்கள் இருக்கிறார்கள்தானே ? அவர்கள் வீட்டுக் கல்யாணத்திற்குச் சென்று வந்தேன் என்பதை குடும்பப் பெயரைச் சொல்லிச் சொல்லும் கட்டாயத்தில்தானே உள்ளோம்.
சிற்றப்பாவையும் மாமாவையும் பிரித்தறியமுடியாத uncle என்ற ஒற்றை வார்த்தை உள்ள ஆங்கில மொழியுடன் பரிச்சயம் உள்ள என் குழந்தைக்கு, எந்தை என்றால் என் தந்தை, நுந்தை என்றால் உன் தந்தை என தனித்தனிச் சொற்கள் தமிழில் உள்ளன என்பதை சொல்லும் இடத்தில் நான் இல்லை. இதுவெல்லாம் தெரிய நானே நாஞ்சில் நாடனின் கம்பனின் அம்பறாத்தூணி படிக்கவேண்டியதாக உள்ளது. உபயோகத்தில் இல்லாத சொற்களை என் விவாதத்திற்கு கொண்டுவரவில்லை. என் வருத்தமெல்லாம், நான் அறிந்து வைத்த சொற்களே என்னிடம் இல்லாமல் போய்விட்டது. இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு நூலில் ஏகாந்தம் என்ற சொல்லை வாசித்தேன். நான் மதுரைக்குப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதுபோல ஏகாந்தம் என்ற வார்த்தையை என் அன்றாடத்தில் பிரயோகித்து வருடங்கள் ஆகிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
சொல்லப்போனால், ஆங்கிலத்தில் சொற்றொடரை கொடுத்து அதற்கு இணையானது தமிழில் என்ன என்று ChatGPT-யிடம் கேட்டு எனக்கான சொற்களை தேர்வு செய்து கட்டுரை எழுதுகிறேன். எனது சொல்லாழியில் சொற்கள் இல்லை என்று நாஞ்சில் நாடனிடம் எப்படி சொல்வேன்?
புத்தும் புது சமுதாய சிந்தனைகளுக்கும், மாற்றங்களுக்கும், தமிழ் வளைந்துகொடுத்து ஏற்றுக்கொள்ளும் சொற்கள் அவ்வளவு உள்ளன. அறிவியல் பூர்வமாக ஆண், பெண் என்று மட்டும் அடையாளப் படுத்தினால் மட்டும் போதுமானதல்ல. எந்த ஒரு பாலையும் குறிப்பிடாமல் திருநர் என அழையுங்கள் என்று சொல்லுமிடத்திற்கு மானுடம் நகர்ந்துள்ளது. அவன், அவள், அது என்று சொல்வது போய் அவன், அவள் , அவர் என்று மரியாதையுடன் அழைப்பதற்குத் தமிழ் கொடுத்திருக்கும் கொடை அளப்பரியது. இந்திய வடகிழக்கு மாநிலம் ஒன்றில் ஆட்சியாளராகப் பணிபுரியும் என் நண்பர் பகிர்ந்துகொண்டது இது. 2020 – நோய்த்தொற்று காலத்தில் அதை எப்படி அந்த மாநில மொழியில் தொகுத்துச் சொல்வது என தேடியபோது வார்த்தைகளே இல்லையாம். ‘நோய்த்தொற்று’ எனும் வார்த்தையை அவர் சிலாகித்துப் பேசினார்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி மாறிப் பேசும் என்னிடம் பேசுபவர்களும் அப்படித்தான் பேசுகிறார்கள். நான் ஆங்கிலத்தில் கேட்டால் தமிழில் பதில் சொல்கிறார்கள். தமிழில் எழுதிய மின்னஞ்சலுக்கு ஆங்கிலத்தில் எதிர்வினையாற்றுகிறார்கள். அன்றாடத்தை நடத்திச் செல்ல அது போதுமானதாக உள்ளது. வாங்கிய பொருள்களை இலாபத்துடன் விற்கவும், வீட்டை வாடகைக்கு விடவும், ஒரு பாஷையை அரைகுறையாகப் பேசினாலே போதுமானதாக உள்ளது. நமக்குத் தேவையானதை நிறைவேற்ற ஒரு மொழியில் 1200 வார்த்தைகள் தெரிந்தால் போதும் என்ற கணக்குப் பொதுவெளியில் உள்ளது. கரூரில் பிறந்து, திருச்சியில் படித்து, டில்லியில் அரசாங்க அலுவலகத்தில் லோல்பட்டு, அமெரிக்காவில் ஜல்லி தட்டும் எனக்குச் சிந்தனை மொழி தமிழ்தான். ஆனால் அது வடிவெடுத்து என்ன சாயமெல்லாம் பூசிக்கொண்டு எனக்கான மொழியாக எப்படி வரும் என்பதே இன்றைக்கான என் கேள்வி. என் நண்பனையும், சகோதரனையும், மகளையும், தந்தையையும், அவர்களுக்கான மொழியுடன் உங்களிடம் அறிமுகப்படுத்தியதுபோல, என் கதாபாத்திரங்களையும் அவர்களுக்கான மொழியுடன் என் புனைவுகளில் பேசவைக்க வேண்டும் என நினைக்கிறேன். புலம்பெயர்ந்தவனாக, எனது பெரும் இழப்பு, எனக்கான மொழியை உருவாக்கிக்கொள்ளாமல் போனது. அதை மீட்டெடுத்ததும், நானும் என் கதாபாத்திரங்களும் அவரவர்களுக்கான மொழியுடன் ஆயிரம் கதைகளை உங்களுக்குச் சொல்லவிருக்கிறோம்.

Leave a comment