ப்ளம் கேக் – திகட்டாத இனிப்பு

Published by

on

விருந்திற்குச் சென்ற இடத்தில் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமோ, கேக்கோ கொடுத்து மேலும் உபசரிப்பை இனிமையாக்குவார்கள். கனடா தோழி இந்துமதி, அவர் வீட்டு விருந்து முடிந்து எங்களுக்குப் பரிமாறியது, ஆனந்த் குமார் கவி மனதுடன் படைத்துக் கொடுத்த ‘ப்ளம் கேக்’. இந்தப் பிரபஞ்சத்தின் மீது இருக்கின்ற பிரியத்தையெல்லாம் பிரயோகித்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் துளித் துளியெண உண் எனச் சொல்லும் கவிஞனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது.

இந்த நாள்தான்

உன் உணவு

முன்னிரு கால்கள்மட்டும்

தரையில் ஊன்ற

ஒரு குட்டி நாய்

உண்டு உண்டு 

சரிந்து சரிந்து 

உணவில் வீழ்வதுபோல்

இதற்குள் வீழ்.

மூன்று வருடங்களுக்கு அப்புறமும், கவி ஆனந்த் குமார்,  “டிப் டிப் டிப்” தொகுப்பில், சம்மதமென்றால் விட்டுச்சென்ற பலாப்பழத்தின் மணம் நம் மூக்கின் சுவாசத்தில் உணரமுடிகிறது. கடையில் வாங்கிவந்த செடி வளர்ந்து பந்தலில் படரும் வரை அது மீன் எனவே உணரும் மாயம் ஒன்றை நிகழ்த்துகிறார் “பந்தல்” எனும் கவிதையில்.  குளம் நீர்வற்றிச் சிறிதானால் குட்டை. படியிறங்கும் இந்தக் கவியின் குளத்தில் இருந்து நீர்க்குட்டி பிறக்கிறது. 

குளம் ஒரு படி

இறங்கியது தெரியாமல்

மேலேயே நின்றுவிட்டது

ஒரு நீர்க்குட்டி. 

கொஞ்சநேரம் பார்த்துவிட்டு

ஒரு அதட்டு அதட்டி 

அழைத்துப் போகிறது

அக்காள் அலை. 

நகரத்தின் வீதி நெரிசலில், கசங்கிய புடவை, அக்குளை நிறைக்கும் வியர்வை என வேதனை படாமல் அழகிய சிலையாகிறாள் இவர் பார்க்கும் பெண் (சிலை வழி).  காரில் செல்பவருக்கு நடக்கமுடியாதவர் உதவுகிறார் என ஒரு சிறுகதையின் இலட்சணத்துடன் அன்றாடத்தை சித்தரிக்கும் ‘உதவி’ கவிதை நல்லதொரு வாசிப்பனுபவத்தை நல்குகிறது.

கவி தேவதேவன் மீதும், லக்ஷ்மி மணிவண்ணன் பாலும் , பிரியம் கொண்டு அவர்களுக்கென்று தனித்தனி கவிதைகளை சமைத்திருக்கிறார், ஆனந்த். முன்னவர் போல பிரபஞ்சத்தின் மீது கொண்ட பிரியமும், பின்னவர் போல் எந்த அன்றாடத்தையும் தத்துவார்த்தமாக ஆக்கும் பாணியையும்  ஆனந்தின் கவிதைகளில் பார்க்கிறேன். 

பிரபஞ்சத்தின் ஆக்கமான கடலின்மேல் நம்பிக்கை வைத்த தேவதேவன்,

// கடல் ஓர் அற்புதம்!

ஓர் அலை என்னை மூழ்கடிக்கும்;

மற்றொரலை வந்து கைதூக்கிவிடும் // என்றார்.

கனியை மலர்போல் திறப்பவன் என்று அவரைச் சொல்லும் சிஷ்யன் ஆனந்த் , உலகில் காதலுடன் நாம் உய்த்திருக்கச் சொல்லும் வரிகள் இவை.

எல்லாப் பக்கமும் திறந்திருக்கிறது

குழப்பமான வழி

எல்லாப் பக்கமும் திறந்திருக்கிறது

எளிமையான வழி

நீர்ச்சுனைக்கு

தாகம்தான் வழி 

சிறிது என்று ஆரம்பிக்கும் காரியம் பெரிது பெரிதெனச் சென்று கொண்டே இருக்கக் காண்போம். லக்ஷ்மி மணிவண்ணன் தனது கவிதையில் 

//சிறிதுக்கு

வருவீர்கள்

அப்போது தெரியும்

சிறிது எவ்வளவு பெரியது

என்று // என்பார்.

ஆனந்த் குமார், மீனின் ஆழம் கடலுக்கில்லை என்று சொல்லி வியக்கவைத்து யோசிக்க வைக்கிறார்.

எங்கள் வீட்டில் , சரோஜா அத்தை பாத்திரங்களை தேய்த்துக் கழுவும் அழகை காலம் முழுக்க பாராட்டிக்கொண்டிருப்பார்கள். என் அம்மா இளம் வயதில் இரண்டு குடங்களில் தண்ணீர் சுமந்து நடப்பதை , என் அப்பா சொல்லக் கேட்ட, என் மூத்த தமக்கை , பின் பிறந்த எங்களுக்கெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். மகள் சிந்து , இரு கால்களை மடித்து அருகில் அமர்ந்து, லேப்டாப்பை திறந்து வைத்து,  தான் எழுதும் ஜாவா கட்டளைகளை காண்பித்த அழகை நினைத்தால், அவளை எப்படி இன்னொரு வீட்டிற்கு அனுப்பி வைத்தேன் என்ற கவலை பற்றிக்கொள்ளும். என் வாழ் நாளில், நான்  நேரில் பார்த்த, கேட்டறிந்த சித்திரமென இயங்கிய பெண்களை கண்முன்  நிறுத்தியது, “மதியத்திற்கு நகம் வெட்டுதல்” கவிதை. 

மத்தியானமாய் குளித்துமுடித்து

நகம்வெட்ட அவளுக்குப் பிடிக்கும் 

குழந்தைகளின் நகங்கள் போல்

கிள்ளியெடுக்கும் பருவத்தில்

நொதிந்திருக்கும் அவை

இன்று 

ஈரம் சொட்ட வந்தவள்

ஆடையை தூக்கிச்சொருகி அமரவும்

கால்களில் கண்டாள்

ஐந்து வயதுகளில் 

ஐந்து குழந்தைகளை

சிரித்தபடி 

தலைச்சனுக்கு வெட்டி

நடுவனுக்கு வெட்டி

இளையவனுக்கு வந்ததும் 

கொஞ்சம் தயங்கினாள்

சின்னஞ்சிறிய குஞ்சுவிரலை

கைகளில் பற்றி

வளர்ந்தும் வளராத வரிபோன்ற நகத்தில் 

கவனமாக நகவெட்டியை பொருத்தினாள்

பொருத்தியதாய்  நினைத்தவள்

கொஞ்சம் பிசகி

இந்த மதியத்தை சிறிது வெட்டிவிட்டாள்.

ஆனந்த் குமார் கவிதைத் தொகுப்பு என்றால் அள்ளித் தெளித்த அழகும், அன்பும், பிரியமும் நிறைந்த கவிதைகள் அடங்கும். ‘டிப் டிப் டிப்’ தொகுப்பில் நகர் நடுவில் இருக்கும் குளம் தனது ஒற்றை விரல் நீட்டுவதின் அழகு கண்டு நான் இன்றும் மீண்டபாடில்லை. இந்தத் தொகுப்பில், ‘விரிந்து உதிர்ந்த மலரென நகர் நடுவில் ஒரு மைதானம்’ அவதானித்திருக்கிறது. காலை நடை செல்லும் பெரியவர்களையும், விளையாடும் பிள்ளைகளையும் கொண்டு மைதானத்தை மலரென சித்தரிக்கும் கற்பனையை அடுத்த தொகுப்பு வரும் வரை அகத்தில் வைத்து ரசிக்கமுடியும். 

அம்மாவின் கண் பார்த்துச் சிரித்து பால்குடிக்கும் குழந்தை, அப்பா ஆபிஸ் சென்ற பிறகு பூமி சுற்றும் சிறுமி, பூமியை முதுகில் கட்டிக்கொண்டு வானில் ஏற எத்தனிக்கும் குழந்தை என குழந்தைகளை தொகுப்பு முழுக்க நடமாட வைத்திருக்கிறார்.  சீருடை அணிந்த குழந்தைகளில் தன் குழந்தையை இனம் காணுதல் கடினம் என்பது என் பொதுப்புத்தி.  வண்ண உடை அணிந்த குழந்தைகள் கூடிய கூட்டத்தில் தன் சிசுவைக் கண்டுபிடிப்பதும் சிரமம் என ஆனந்த் குமார் கவிதை சுட்டிக்காட்டியதும், ஆமாம் என்கிறது மனது.

அடைக்கப்பட்ட வாயிலுக்கு 

அந்தப் பக்கம் 

பிள்ளைகள்

வண்ணங்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்

வண்ணங்கள் குழந்தைகளை 

ஒரே முகமென மாற்றின

எத்தனை சொல்லியும்,  நானும் என் நண்பர்களும் சிறுவர்களாக குளத்திலும், கிணற்றிலும் கல் எறிவதை நிறுத்தியதில்லை. என் அம்மாவும் , அக்காக்களும், கிணற்றில் கல் எறிந்தால் , கல்யாணம் நடக்காது என்றெல்லாம் விரட்டியிருக்கிறார்கள்.  நீர் எனக் காணின் கல் எறியும் என் குல மக்கள் தன் இனம் காணும் கவிதை இது. 

எத்தனை கற்கள்

உள்கிடந்தாலும்

நானும் ஒரு கல்லை 

ஆற்றில் எறிகிறேன்

அத்தனை நீர் 

தழுவி ஓடினாலும்

நட்ட கல் வளருமா

வளரும்

எவ்வளவு நீர் குடித்ததோ

அவ்வளவு வளரும்

“டிப் டிப் டிப்” தொகுப்பில், கொண்டாட்டத்தின் மறு நாள், வீட்டிற்கு வெளியே மரமேறிய பலூன், இந்தத் தொகுப்பிலும் வெவ்வேறு இடத்தில். அட்டைப் படத்தின் அப்படிப்பட்ட கவிதைகளை கண்டு உணர்ந்து சித்தரித்திருப்பது பாராட்டுக்குறியது. தூங்கும் பலூனை அறிமுகப்படுத்தும் கவிதையும் , பூமியில் நடாதே என அறிவுறுத்தும் கவிதையும் உண்டு. 

இரண்டு முழு நாட்கள் , ப்ளம் கேக் கவிதைகளை வைத்துப் வைத்துப் படித்தேன். அதன் இனிமை தீர்ந்த பாடில்லை. திகட்டாத இந்த கேக்கை என் மேசையை விட்டு அகற்றப் போவதமில்லை. பாரதியின் கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள் போல, இதுவும் என் மேசையின் ஒரு புறம் இருக்கட்டும். குண்டு மழை பொழியும் போர்ச் செய்திகளை சுமக்கும் பத்திரிகைகளின் நடுவே, பிரபஞ்சத்தின் மீதான பிரியத்தை வளர்க்கும் ஆனந்த் குமார் கவிதைகள் என்னை ஆசுவாசப்படுத்தும் அமிர்தமாக அமையட்டும்.

Leave a comment