அம்மாவின் நம்பிக்கை

Published by

on

(மறு பிரசுரம்)

“எல்லம்மாள்தான் எனக்கு எல்லாம். எல்லாம் எனக்கு எல்லம்மாள்தான்” என்று இருப்பவன் நான். எல்லம்மாள் , எனது அம்மாவின் பெயர்.

இளங்கலை மூன்றாம் வருடம், கடைசித் தேர்வு. அந்தப் பாடத்தை , நான் எள்ளளவும் படித்ததில்லை. மற்ற தேர்வுகளுக்கும் அந்தக் கடைசி தேர்வுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை இருந்தது. அந்த மூன்று நாட்களில் , “எல்லாம் படித்துவிடலாம், என்ன பெரிய? “ என்று இருந்தேன். முதல் இரண்டு நாட்கள், முதலில் நடந்து முடிந்த தேர்வுகளுக்கு படித்த அயர்ச்சி, கடைசி பரீட்சையின் போது பழசெல்லாம் ஞாபகம் வந்து மனசை என்னவோ செய்யுமே?, அது என்று எல்லாம் சேர்ந்து இரண்டு நாட்கள் சரியாக படிக்கவில்லை. மூன்றாம் நாள், பயம் பற்றிக்கொண்டது. முக்கியமானது மட்டுமே படிக்கவேண்டும் என்ற நிலைமை நெருக்கியது. அம்மாவை அழைத்து, புத்தகத்தை அவர் கையில் கொடுத்து, அவர் போக்கில் வரும் பக்கங்களை திறக்கச் சொன்னேன். அப்படி வந்த பக்கங்களை படித்தேன். அந்தப் பாடத்தில் , பாஸ் மார்க்கைவிட கொஞ்சம்தான் அதிகம். பட்டம் பெற்றுவிட்டேன்.

அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை இருந்தது. எண்ணை ஜோஷ்யம் என்று ஒன்று பார்ப்பார். ஒரு செம்பில் நீரை நிறைத்து, மனதில் ஒன்றை நினைத்துக்கொண்டு அதில் மூன்று சொட்டுக்கள் எண்ணை விடுவார். அது மூன்றும் ஒன்று சேர்ந்தால், அவர் நினைத்தது நடந்துவிடும். தன் மகன் பொறியாளர் ஆவானா என்று நினைத்து விடும் மூன்று சொட்டுக்களில் , இரண்டு இணையும் , ஒன்று மட்டும் தனியாக நின்றுவிடும். தனது மகன் பொறியாளர் ஆகமுடியாது என்று சொன்ன அந்த ஜோஷ்யத்தை கைவிட்டுவிட்டார். நானும் பொறியியல் எல்லாம் படிக்கவில்லை. பயன்பாட்டு மண்ணியலில் முதுகலை பட்டம் பெற்று, கட்டடக்கலை படிக்கும் பொறியாளர்களுக்கு மண்ணியல் பாடம் புகுத்தும் ஆசிரியராக, ஒரு தற்கால பணி செய்தேன். எனது முதல் சம்பளத்தை , பொறியியல் கல்லூரி ஆசிரியராக அம்மாவின் கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினேன். அப்புறம் கணினி படிக்க, திரும்பத் திரும்ப , Software Engineer என்னும் வேலைகள் என் வீட்டுக் கதவை தட்ட , இப்பொழுது இருக்கும் நான், அம்மாவின் நம்பிக்கை!

மாணவனாக, படித்து வேலை இல்லாத பட்டதாரியாக எட்டு மணிவரை தூங்கும் என்னை, “டெல்லி ராஜா , எந்திரிச்சு சாப்பிடுப்பா” என்றுதான் எழுப்புவார். “இப்படித் தூங்கினா, எப்படி ராஜா ஆகறது” என்று ஒரு நாளும் திட்டி எழுப்பியதில்லை. டெல்லி எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது அவருக்கு. எனது முதல் வேலை டெல்லியில்தான். கனிமவளத் துறையின் அன்றாட அலுவலக வேலைகளை கணினியில் கட்டளைகள் மூலம் செயலாக்கம் செய்யும் பணியாளர்களில் ஒருவனாக இருந்தேன். தினேஷ் கோஷ்வாமி , கனிமவளத் துறை மந்திரியாக பொறுப்பேற்ற சமயம். புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு, அந்தத் துறை சம்பந்தப்பட்ட மேம்பாடுகளையம் சாதனைகளையும் படம் போட்டுக்காட்டவேண்டும். அப்படிச் செய்வதில் எனக்கு ஒரு கலைநயம் இருப்பதாக நினைத்த, எனது மேலாளர், எனக்கு அந்த பொறுப்பை விட்டிருந்தார். செயல் விளக்கப் படங்களையம், அவைகளை தன்னிடம் பெற்று திரையில் பிரதிபலிக்க செய்யும் கணினி மற்றும் பல உபகரணங்களையம் , நானும் எனது மேலாளரும் எடுத்துச் சென்று , அமைச்சர் உரையாற்றும் , பாராளுமன்ற வளாகத்தில் இருந்த ஒரு அரங்கில் ஏற்பாடு செய்தோம். நான் ஸ்பேஸ் பாரை தட்ட தட்ட , அடுத்து அடுத்து வந்த விளக்கங்களை, கனிமவளத்துறையின் தலைமை செயலாளர் எடுத்துச் சொல்லிய வண்ணம் இருந்தார். ஒரு கையில் ஸ்பேஸ் பார் தட்ட, இன்னொரு கை அம்மாவின் நினைவில் வந்த கண்ணீரை துடைத்த வண்ணம் இருந்தது.

குடும்பமாக உடுமலைபேட்டைக்கு சென்று, ராதாவை பெண்பார்த்துவிட்டு திண்டுக்கல் திரும்பும் வழியில், பழனியில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். கை கழுவும் இடத்தில், எனக்கும், என் தந்தைக்குமான ஒரு தனிமை கிடைத்தது. “பெண், அப்படியே அம்மா மாதிரி” என்றார்.

“எல்லம்மாள்தான் எனக்கு எல்லாம். எல்லாம் எனக்கு எல்லம்மாள்தான்”.

(முதல் பிரசுரம் – FB/05-12-2019)

Leave a comment