எனக்குப் பெண்களைப் பிடிப்பல்லை. குறிப்பாக, மிகக்குறிப்பாக என் வகுப்பில் படிக்கும் பெண்களைப் பிடிப்பதில்லை. பத்து வயதான நான் இப்படிச் சொன்னால், அம்மா, அதற்கு, இன்னும் ஐந்து வருடம் கழித்து இப்படிச் சொல்கிறாயா என்று பார்க்கலாம் என்று குறுஞ்சிரிப்பு சிரிப்பார்கள்.
எனக்கு அந்தக் குறுஞ்சிரிப்பின் அர்த்தம் புரிவதில்லை. கதை, என்னைப் பற்றியோ, எனக்குப் பெண்களைப் பிடிக்காததைப் பற்றியோ அல்லது என் அம்மாவின் கிண்டலைப் பற்றியோ இல்லை. இந்தக் கதை, அங்கிள், ஆண்டி உங்களைப்பற்றியது. என்றாவது ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வரும் உங்களைப் பற்றியது. கோவிலில் என்னை எதிரில் பார்த்ததும், போனமுறைப் பார்த்தபோது கேட்ட அதே கேள்விகளைக் கேட்கும் உங்களைப் பற்றியது.
எனக்கு சாருக்கானை மிகவும் பிடிக்கும். நான் பார்த்த அவரின் எல்லாப் படங்களுமே எனக்குப் பிடித்தது, சென்னை எக்ஸ்பிரஸைத் தவிர. சென்னை எக்ஸ்பிரஸில் அவர் அடி வாங்குவதுபோல் நடித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சாருக்கானின் படங்களைப் பார்ப்பது எவ்வளவு உற்சாகமோ, அதே உற்சாகத்துடன் இன்னொரு விஷயமும் செய்வேன். அது கற்பனையாகப் படங்கள் வரைவது. நான் வரையும் படங்களை, என் அம்மாவும், என் அம்மாவைப் போலவே அழகாக இருக்கும் என் கிலாஸ் டீச்சரும் விரும்பிப் பார்ப்பார்கள். பாராட்டுவார்கள்.
என் அம்மா சொல்வார்கள். பிடித்தவர்களைத்தான் அதிகமாகக்கிண்டல் செய்வோமாம். ஆதலால்தானோ என்னமோ, இப்படி இரண்டு படங்களை வரைந்திருக்கிறேன்.,ஒன்று, சாருக்கானின் தலைகொண்ட ஒரு தவளையின் படம். இன்னொன்று, தவளை தலை கொண்ட சாருக்கானின் படம். இந்தப் படங்களைப் பார்த்து ஆச்சிரியப்பட்டுப்போன எங்கள் பக்கத்து வீட்டு அண்ணன், அவரதுக் கம்ப்யூட்டர் கேமுக்கு, நான் தான் படம் போடவேண்டும் என்றுச்சொல்லிக்கொண்டிருக்கிறார்.
நாங்கள் சென்னையிலிருந்து, ஊருக்குச் செல்லும்போதோ, ஊட்டி கொடைக்கானல் என்று பயணம் செல்லும்போதோ, தூங்கமாட்டேன். அம்மா காரில் கேம் விளையாடக்கூடாது என்று சொல்லியிருப்பதால், கேம் எதுவும் விளையாடமாட்டேன். போகின்ற வருகின்றக் கார்களை வேடிக்கை பார்ப்பதுதான் எனக்குப் பொழுதுபோக்கு. வேண்டுமென்றால், ஒரு காரின் பின்பக்கத்தை மட்டும் காட்டுங்கள், அது என்ன கார் என்று சொல்லிவிடுவேன். கண்ணை மூடிக்கொள்கிறேன். உங்களின் கார் ஆரணை அடியுங்கள். என்ன கார் என்று சொல்லிவிடுவேன்.
எத்தனை முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாலும், கோவிலில் என்னை எதிரில் பலமுறைப் பார்த்திருந்தாலும், நான் இங்கே சொன்னது எல்லாம் உங்களுக்குப் புதிதாக இருக்கிறதா. இருக்காதா பின்னே.
என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் இரண்டே கேள்விகள்தான் கேட்கிறீர்கள். ஒரு கட்டளையை வைக்கிறீர்கள்.
கேள்விகள்: என்ன தம்பிப் படிக்கிறே? கிலாஸில் எத்தனாவது ரேங்க்??
கட்டளை : பெரிய டாக்டராயிடனும், என்ன?
பின் குறிப்பு – 05/03/2014-ல் நான் கற்பனையாக எழுதியது. காரின் எந்தப் பாகத்தைக் கண்டாலும், இனம் காணும் துருவ் எங்கள் வாழ்வின் இனிமை. அவனுக்காக இதை மறுபிரசுரம் செய்கிறேன்.

Leave a comment