என் அம்மா பிறந்த ஊரில் , குத்தகைக்கு தோட்டம் பிடித்து அங்கேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால், ஊரே எல்லாம் என் தந்தையை மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். அவர் குத்தகைக்கு எடுக்கவிருந்த தோட்டம் ஒன்றில், அதிகம் நடமாட்டமுள்ள பாதையின் அருகில் வீடு இருந்தது. போவோர் வருவோர் எல்லாம், “மாப்பிள்ளை, நீ அந்தத் தோட்டத்தை குத்தைக்கு எடுத்தைனா, சாப்பாட்டுச் செலவு அதிகமாகும் பாத்துக்கோ” என்றார்கள். மண்ணின் தன்மையையும், நீர் வளத்தையும் மட்டும் பார்த்து ஒரு தோட்டத்தின் விளைச்சலை நிர்ணயித்து குத்தகைக்கு எடுக்கும் என் தந்தைக்கு, அதுவெல்லாம் யோசனையில் செல்லாது. வேலை, என் அம்மாவுக்குத்தான். பாதையில் செல்பவர்கள், “தாயீ, தாகமாக இருக்கிறது” என்று வருவார்கள். வந்தவர்கள் நீருடன், மோர் சாதமாவது சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். “மகராசியாக இரும்மா” என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். என் அக்காக்கள் , சமைப்பதற்கு முன் , “அம்மா, அரிசி எத்தனை படி போடறது இன்னைக்கு” என்பார்கள். அம்மா, “அரைப்படி சேர்த்துப் போடு” என்பார்.
எங்கள் தோட்டத்திற்கும், நண்பர் எல். துரையன் தோட்டத்திற்கும் இடையில் ஓடும் ஓடையில், பொதுவாக மணல்தான் ஓடாமல் நிற்கும். அவர்கள் வீடு அந்த எதிர் தோட்டத்தில் இருந்தது. ஓடையைத் தாண்டி எங்கள் தோட்டத்தின் அருகிலும் அவர்களுக்கு ஒரு தோட்டம் உண்டு. அன்று அங்கு வேலை செய்ய வந்த அவன் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லோரும் தீடிரெனப் பெய்த மழையின் காரணமாக எங்கள் வீட்டில் ஒதுங்க வேண்டியதாகிவிட்டது. கடந்து செல்லமுடியாத அளவு ஓடையில் தண்ணீர். எங்கள் அம்மா, “எல்லோரும் சாப்பிடலாம்” என்றார்கள். “நாங்க நாலு பேரு இருக்கோம், உலை இன்னந்தான வைக்கனும் எல்லக்கா” என்றார்கள். “சாப்பாடெல்லாம் இருக்கு, வாங்க உட்காருங்க” என்றார் என் அம்மா. எல் துரையனின் பாட்டி, “எல்லக்கா, இன்னொரு உலை வைக்காம நாலு பேத்துக்குச் சாப்பாடு போட்டா” என்று ஊரெல்லாம் சொன்னார்கள்.
ஆஸ்டினில் எங்கள் வீட்டின் பின்னால்தான் ஆண்டெர்சன் மில் ரோட். மால் ஒன்று பத்து நிமிட தூரத்தில் உள்ளது. மாலிற்கு வந்தவர்கள் அப்படியே எங்கள் வீட்டிற்கும் வருவார்கள். உண்டு உரையாடி உவகையுடன் செல்வார்கள். “அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித்தான் அமெரிக்காவில் யாரையும் பார்க்கமுடியும் என்று சொல்வார்களே ? “ என்று கேட்கும் நண்பர்களிடம் ராதா-வின் புன்னைகை மட்டுமே பதிலாக இருக்கும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வளைகுடாப் பகுதியில் நாவல் எழுதும் பயிற்சிப் பட்டறை நடத்தினார். ஐம்பது நண்பர்கள் கலந்துகொண்ட அந்தக் கூடுகையில் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும், சமைத்து எடுத்து வந்தார், நண்பர் பன்ஸியின் மனைவி, சுபாஷினி பாலகிருஷ்ணன். “ஐம்பது பேரும்மா, கஸ்டம்மா! நாங்க வெளியில் ஆர்டர் பண்ணிக்கிறோம்மா” என்று பன்ஸி சொல்லியும் கேட்காமல், இதுதானே பிஸ்கோத்து என அனைவருக்கும் சமைத்து அவரது ஹோண்டா சிஆர்வி-யில் எடுத்து வந்த அந்த சகோதரியின் செயலே நான் இந்தப் பதிவு எழுதுவதற்கான அகத்தூண்டுதல்.
ஜெயமோகன் அமெரிக்கா வரும்பொழுதெல்லாம், நண்பர்கள் தங்கள் வீட்டில் விருந்து வைக்க நான், நீ என்று போட்டி போடுவார்கள். அப்படிக் கேட்பவர்களிடமெல்லாம், “நீங்கள் நினைப்பதைவிட ஐந்து அல்லது பத்து பேர் அதிகமாக சாப்பிட வருவார்கள், பரவாயில்லையா?” என்பேன். சென்ற வருடம், டாலஸில் வசிக்கும் வெங்கட் எனும் நண்பரிடம், “நீங்க ஜெயமோகனைப் பார்க்கனும்னா, வாஷிங்டன் டி.சி-தான் வரனும்” என்றேன். பரவாயில்லை, அங்கேயே வருகிறேன் என்று சொன்ன அவரும், அவரது மனைவி சங்கீதாவும், குழந்தை துருவ்வும் திடுமென வந்து நின்றது, நிர்மல் / ராஜி தம்பதிகள் வீட்டில். இந்த விருந்தில்தான், நான் தயிர் சாதத்திற்கு உப்பெல்லாம் போட்டுக்கொள்ளாமல், தங்கை ராஜி செய்து வைத்திருந்த பருப்பு உசிலியையும், உருளைக்கிழங்கு பொடிமாசுவையும் போட்டுப் பிசைந்து சாப்பிட்டேன்.
சென்ற வருடம் டிசம்பரில், பெருந்தேவி, “சௌந்தர் , இங்கே ஒரே குளிரா இருக்கு. நான் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ஆஸ்டினுக்கு வந்து இரண்டு மூன்று வாரம் தங்கிட்டுப் போகிறேன் “ என்றார். நண்பர்கள் கிரியும், பூரணியும், “அது எங்கள் பாக்யம்” என கவிஞரை அவர்கள் வீட்டில் வைத்து உபசரித்தார்கள். இந்த வருடம் கவிதைக்காக இயல் விருது பெற்ற, ரவிசுப்பிரமணியனை, டொராண்டாவில் எங்கு தங்கவைக்கலாம் என்று நான் யோசிப்பதற்கு முன்னர், நண்பர் வெங்கட்ரமணனின் குடும்பமும், இந்துமதியின் குடும்பமும் அவரைப் பார்த்துக்கொள்வதாக அழைப்பின் மேல் அழைப்பு விடுத்தார்கள். ரவிசுப்பிரமணியன் யாருக்கும் பங்கம் வரவேண்டாமென இருவரது வீட்டிலும் தங்கிச் சென்றார். தமிழ் எழுத்தாளர்கள் , கவிஞர்களை தங்கவைத்துப் பார்த்துக்கொள்வதில், எதிர்பாராமல் பார்க்கவரும் விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போடும் பொறுப்பு உண்டு. உதாரணத்திற்கு, இந்துமதியின் வீட்டில் ரவிசுப்பிரமணியன் தங்கியிருந்தபொழுது, போற வழில அப்படியே இந்து விட்டிற்குப் போவோமென , நானும், ராதாவும், நண்பர் விபி-யும் சென்று நின்றோம். ரவிசுப்பிரமணியன், இந்துமதி சுட்டு வைத்திருந்த வடைகளை அவர் கையால் எஙகளுக்குப் பரிமாறினார்.
ஜெயமோகனின் டெக்ஸாஸ் பயணத்தில் ஆஸ்டினில் காலைல யார் விட்டுல, மதியம் யார் வீட்டுல, டாலஸ் வந்தா சாப்பாடு எந்த ஹோட்டல் அல்லது வீடு , என்று ஆராய்ச்சி பண்ணாத குறையாக நண்பர் மூர்த்தி நிமிடக் கணக்கில் அட்டவணை போட்டு வைத்திருந்தார். சத்யா, ரம்யா என முகம் தெரியாத ஜெயமோகனின் வாசகர்களை, “அப்படியே சாப்பிட அங்க வந்திருங்க” என்று கிரி வீட்டிற்கு அழைத்திருந்தேன். சத்யா வந்தமர்ந்ததும், பாயசம் கொடுத்த பூரணியை பிரமிப்புடன் பார்த்தார். கவிதா வீட்டில் காலையிலேயே , மூர்த்தியும், பாலாஜியும், அன்னபூர்ணாவும் டாலஸில் இருந்து வந்து நிற்க, ஜெயமோகன், மூன்றரை மணி நேரம் பயணம் செய்து என்னைப் பார்க்கா வந்தாங்களா என்று புருவத்தை உயர்த்தினார். எத்தனை நண்பர்கள் வந்தால் என்ன, கவிதாவும் பால்கியும் ஆம்லெட் வேண்டும் என்பவர்களுக்கு ஆம்லெட், இட்லிக்கு வெள்ளைச் சட்னி கேட்பவர்களூக்கு அதுவுமென தயாராக இருந்தார்கள்
டாலஸில் தங்கை ராதாவிற்கும் பாலாஜிக்கும் கல்யாண நாள் வாழ்த்துச் சொல்ல ஞாயிற்றுக்கிழமை அழைத்திருந்தேன். பார்ன்ஸ் அண்ட் நோபலில் நடந்த, Stories Of The True புத்தக அறிமுக விழா அன்று, ராதாவின் கைப்பக்குவத்தில் சிக்கனும், தயிர்சாதமும் சாப்பிட்டது நினைவுக்கு வர, அன்னமிட்ட அன்னை ஒருவரைக் கூறி, அந்தப் பண்பை தங்கை ராதா-விடம் கண்டேன் என்றேன்.
இது நடந்து நாற்பது வருடங்களாவது இருக்கும். எங்கள் பக்கத்து கிராமத்தில், சிறுவன் ஒருவன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தான். பதினொன்று / பனிரெண்டு படிக்கத் தூரத்தில் இருக்கும் டவுனுக்குச் செல்லவேண்டும். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் வசதிகள் எல்லாம் அவன் குடும்பத்திற்கு இல்லை. டவுனுக்குப் பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் என் நண்பன் ஒருவனின் அன்னையை அணுகி, அவனை அவர்கள் வீட்டில் தங்கவைத்து சாப்பாடு போட்டு பள்ளிக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டேன். “அரைப்படி அரிசிச் சேர்த்துப் போட்டா நான் என்ன குறைஞ்சா கண்ணு போய்டுவேன்!” என்றார்.

Leave a comment