வாசிப்புப் பயணம் – 2025

Published by

on

யாராவது , ஒரு ரகசியம், உங்களுக்கு அப்புறம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னால், பரவாயில்லை அப்புறம் சொல்லுங்கள் என்று எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் இருப்பேன். ராதா-விடம் , ‘சாப்பிடறப்பதான் இது ஞாபகம் வருகிறது. இப்பச் சொன்னா நல்லா இருக்காது’ என்று பீடிகை போட்டால், அவரால் சாப்பிடமுடியாது. இப்படி இருவரும் வெவ்வேறுவிதமாக இயங்குபவர்களாக இருந்தாலும் , ஜெகதீஸ்குமாரின், பொற்குகை ரகசியம், சிறுகதை தொகுப்பை, எந்தக் கதையில் என்ன ரகசியம் வைத்துள்ளார் என்று 2025-ன் வாசிப்புப் பயணத்தை ஆரம்பித்தோம். ஜெகதீஸ், பிறப்பொக்கும் கதையில், சங்கிலியை யார் திருடியது என்பதை மிக ரகசியமாகவே வைத்திருந்தார். பிப்ரவரியில், பொற்குகை ரகசியத்திற்கு ஒரு வாசிப்பனுபவமும் எழுதினேன். 

‘சமீபத்தில என்ன படம் பார்த்தீங்க?’ எனக் கேட்பவர்களின் மத்தியில் , ‘என்ன வாசிச்சீங்க?’ என்று கேட்கும் பெரும்  நண்பர்கள் கூட்டம் எனக்கு உண்டு. அந்தக் கூட்டத்தில் ஒருவரான ரீடர் செந்திலிடம், அதே கேள்வியை நான் கேட்க, அவர், தி. ஜானகிராமனின் நாவல்களை வாசித்துக்கொண்டிருப்பதாக சொன்னார். எனக்கும், தீ பற்றிவிட, செம்பருத்தி, அமிர்தம், பிடி கருணை, அபூர்வ மனிதர்கள், என்று மீண்டும் ஒரு வலம் வந்தேன். செம்பருத்தி நாவல், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பொழுது வாழ்ந்த மளிகைக் கடை வைத்திருக்கும் சிறு நகர் வாழும் சகோதரர்கள், அவர்கள் குடும்பம், என ஒரு சித்திரத்தை கொடுத்ததது. கதையின் நாயகனின் வாழ்வு ஒரு முழுச்சுற்று வருவதால், வாழாமல் வாழும் அனுபவம். 

சிறு வயதில், கோடைவிடுமுறையில், என் தந்தை, காடு முழக்குப் பரவியிருக்கும், முட்செடிகளை கொத்திப் பிடுங்கச் சொல்வார். நான் தேடித்தேடி ,  தோண்டிப் பிடுங்கிய பிறகும், உடன் உதவும் என் தந்தை, ‘அங்க பாரு,  ஒரு செடி சிரிக்குது’ என்று தப்பிவிட்ட செடியைக் காண்பிப்பார். ஜெயமோகனின் அனைத்து புனைவுகளையும் வாசித்துவிட்டேன் என்ற என் செருக்கை அடக்க, அனல் காற்று நாவல் அப்படித்தான் என்னைப் பார்த்துச் சிரித்தது. வாசித்துவிட்டு, இயக்குனர் வினோத்துடன்  நாவல் குறித்துப் பேசினேன். அவர் இந்த நாவலின் பாத்திரங்களின் குணாதிசியங்களை கூர்மையாக விளக்கினார். 

ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு யாராவது கொஞ்சம் லெமன் ஜூஸ் கொடுத்தால் ஆசுவாசமாக இருக்கும். அப்படித்தான், வாசிப்பில் தொய்வு வரமால் இருக்க, கவிதைகளை வாசிப்பது உண்டு. 2025-ல் துவக்கத்திலேயே துவண்டுவிடாமல் பார்த்துக்கொண்டது மதாரின் கவிதைகள் என்றால், மிகையாகாது. மார்ச்சில் இத்தாலிப் பயணம் ஒன்றும் சென்றோம். முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட முடியுமா? நான், மதாரின் கவிதைகளை எப்படி இத்தாலிப் பயணத்தோடு இணைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. 

பணம் கொடுக்கும் பணியிலிருந்து முழு நேர ஓய்வு பெற்று, முழு நேர வாசகனானதும் 2025-ல் என்பதால், வாரத்தில் ஒரு நாள் நூலகம் செல்வது என முடிவெடுத்தேன். எங்கள் வீட்டிலிருந்து , நான்கு மைல் தொலைவில் உள்ள , Spicewood Springs Road-ல் உள்ள நூலகத்திற்கு சென்று, தமிழ் நூல்கள் இருக்கிறதா, என்று பார்த்ததில், இருபதிற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இமையம் அவர்களின், திருநீறு சாமி தொகுப்பை அங்குதான் வாசித்தேன்.  WhatsApp-ல் தனது வகுப்பு மாணவியை sex torture செய்யும் ஒரு காமுக ஆசிரியன், குழந்தை கொடுக்கும் பேறு இல்லாத ஆண், தன் மனைவி மீது கொள்ளும் மூர்க்கம்,  என்று என் மனதைப் பிறாண்டிய கதைகள் அடங்கிய இந்த தொகுப்பை வாசித்துவிட்டு, இமையம்,  நல்ல கதை சொல்லி, என்று எனக்கு முன்னரே இருந்த அவதானிப்பை மேலும் அறுதியிட்டுக்கொண்டேன்.  அன்றாட வாழ்வின் அழகியலைச் சொல்லும் அவர் கதையின் பாத்திரங்களின் உரையாடல்கள், அவர்கள் சொல்லுவதெல்லாம் உண்மை என என்னை உணர வைத்தன.  

‘அவரை வாசிக்கனும், அவரை வாசிக்கனும்’ என்று அறிந்திருந்தும் பல வருடங்கள் வாசிக்காமல் இருந்துவிட்டு, ஏப்ரலில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும், க.நா.சு அரங்கு நிகழ்வை முன்னிட்டு, எம். கோபாலகிருஷ்ணனின் படைப்புகளை வாசித்தேன். மணல் கடிகை நாவல், தமிழ்நாட்டின் திருப்பூர் நகரில் வசிக்கும் ஐந்து நண்பர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது.  இந்த  நாவல், அவர்களின் வாழ்வில் ஏற்படும் வெற்றிகளையும் தோல்விகளையும் சித்தரிப்பதுடன் அவர்கள் தங்கள் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களையும்  நம்முடன் பயணிக்கவைத்து, ஒட்டுமொத்த திருப்பூர் நகரின் வளர்ச்சியை சூழியல் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறது. எம். கோபாலகிருஷ்ணனின் கற்பனை நவீனகால வாழ்வோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; வரலாற்று நிகழ்வுடன் பாத்திரங்களை இணைத்து,  அவரால் கதையொன்றை எளிதாகப் புனைய முடிகிறது. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்திலிருந்து லியனார்டோ டா வின்சியின் ‘மோனாலிசா’ ஓவியம் திருடப்பட்ட வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, எழுதப்பட்ட  மாயப்புன்னகை அதற்கு ஒரு உதாரணம். 

பிப்ரவரி – 2022-ல் ஆரம்பித்த உக்ரைன் ரஷ்யா போர், அக்டோபர் 7, 2023-ல் ஆரம்பித்த பாலஸ்தீன இஸ்ரேல் போர் என எதுவும் முடிவுக்கு வராத நிலையில், போரே இல்லாத உலகம் இனி இருக்குமா, அது அன்றாடத்தில் ஒன்றாக கடந்து செல்லும் தொடர் நிகழ்வாக ஆகிவிடுமோ என்று கவலையாக உள்ளது. ஒரு நேரப் பசியை ஏதாவது சாப்பிட்டு ஆற்றமுடியாதவன் வாழும் உலகில்,  ஒரு நாளின் மூன்று நேரமும் என்ன சாப்பிடலாம் என்று நிர்ணியிக்கும் நிலையில் உள்ளவர்கள், அவனைப் பற்றிய நினைவே இல்லாமல் வாழ்வதைப்போல, போரையும் அங்குதானே நடக்கிறது, இங்கு என்ன என்று நகரும் இயந்திர வாழ்க்கை. சொற்களில் சுழலும் உலகம், பனிவிழும் பனைமனம், இலங்கை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு கனடாவிற்குப் புலம் பெயர்ந்த செல்வம் அருளானந்தம் எழுதிய நூல்களில் உள்ள வாழ்வியல் கதைகள். காலம் செல்வம் நூலின் கதைகளை கதை சொல்லியாக சொலாமல்,  கதைகேட்பவராக கட்டமைத்திருக்கிறார். போரால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவமுடியாவிட்டாலும், அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள் என்று சொல்வதுபோல் உள்ளது.  இது சார்ந்து நான் எழுதிய கட்டுரை , அகழ் இதழில் பிரசுரமானது. 

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்டினில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சியில் (Great Austin Book Festival), Jerry Whitus என்ற ஆங்கில எழுத்தாளரை சந்தித்தேன். தனது மகளை தமிழ்ப் பையனுக்கு மணம் முடித்துக்கொடுத்துள்ளார் என்ற உபசெய்தியுடன், அவரது நூல் ஒன்றை வாங்கிக்கொண்டேன். கிழக்கு டெக்ஸாஸ் மாநிலத்து வாழ்வை ஒட்டி எழுதப்பட்ட சிறுகதைகளை வாசித்துவிட்டு, அவருக்கு நான் எழுதிய வாசக குறிப்பின் தமிழ் வடிவம் கீழே.

உங்கள் சிறுகதைகளின் தொகுப்பான  The Innocent and Others-லிருந்து ஒன்று அல்லது இரண்டு கதைகளை மட்டும்தான் வாசிக்கலாம்  என எடுத்தேன். ஆனால், கதைகளின் வசீகரம் என்னை தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் ஒரே மூச்சில் படித்து முடிக்கும்படி செய்துவிட்டது. சில கதைகளை நான் இரண்டு மூன்று முறைகளும் வாசித்தேன். 

2004 முதல் ஆஸ்டடினில் வசிக்கும் எனக்கு எப்பொழுதுமே டெக்ஸாஸின் நிலப்பரப்பு, மரங்கள், அடர்ந்த புதர்கள், பறவைகள், நீர் நிலைகள்  மற்றும் குக்கிராமங்கள், பெரும் நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை ஆழமாக அறியும் ஆவல் உண்டு. என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் மரங்கள் மற்றும் செடிகளின் பெயர்களைக் கேட்பது வழக்கம். மரங்களின் பெயர்களைத் தெளிவாகச் சொல்லும் எவரையும் நான் சந்திக்கவில்லை. உங்கள் எழுத்து வர்ணனைகளில் மரங்களின் பெயர்களும் இருந்தது வாசிப்பதற்கான புத்துணர்ச்சியை மேலும் தூண்டியது. The Chinquapin Tree என்ற கதையை, பெயர் கொடுத்த ஈர்ப்பால் மட்டுமே வாசித்தேன். ஆனால், ஒரு கதாபாத்திரம் தன் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் வலியைப் பற்றிய வேறொரு பரிமாணத்தை அந்தக் கதை தொட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும், அவனுக்கு மட்டுமே தெரிந்த, வேறு யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. அந்த வகையில் இந்தக் கதை என்னை உலுக்கிவிட்டது. இந்தக் கதையை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

Edith’s Goats என்பது மற்றொரு கதை; இதில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த விஷயங்களை எடித் இறுதியாக வெளிப்படையாகப் பேசுகிறாள். இத்தகைய துணிச்சல் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு நாள் தங்கள் மனதிற்குள் தேங்கிக்கிடக்கும் பாரத்தை இறக்கிவைக்க விரும்புபவர்களுக்கு, இக்கதை நிச்சயம் மனநிறைவை அளிக்கும். மேலும், கிழக்கு டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முழுமையானதொரு வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தையும் இக்கதை எனக்கு வழங்குகிறது.

Arlene And Ell — மரங்கள் மீது மிகுந்த பற்று கொண்ட ஒருவனாக, ஜேம்ஸின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் அந்த மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டார்கள் என்பதை அறிந்தபோது, ​​என்னால் சிறிது நேரத்திற்கு மூச்சுவிடவே முடியவில்லை.

உங்கள் கதைகளின் வழியாக, இந்த மண்ணையும், மனிதர்களையும், நன்கு அறிந்தவராக உங்களைப் புரிந்துகொள்கிறேன். ஒரு புத்தகத்தை வாசித்தால், அதில் வரும் பாத்திரங்களாக நான் வாழ்ந்தேன் என்று உணரவேண்டும். உங்கள் கதைகள் அந்த உணர்வை எனக்குக் கொடுத்தன. 

மலேசியா நவீன் எனும் ஆளுமையை அவர் நடத்தும் வல்லினம் என்ற மின்னிதழ் வாசகனாக, அவர் நடத்தும் இலக்கிய கூடுகைகளை அறிந்தவனாக, நேரில் சந்திக்காமலேயே அவர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தேன். ஆகஸ்ட், 2025-ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் க.நா.சு. அரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது சிறுகதைகளை இதழ்களில் வாசித்திருக்கிறேன். நிகழ்வை முன்னிட்டு, மண்டை ஓடி சிறுகதை தொகுப்பையும் சிகண்டி நாவலையும் வாசித்தேன். வெறும் தகவல்களாக நிரப்பப்பட்டுவிடக்கூடிய அபுனைவு சாரங்களை , நகரின் / மக்களின் வரலாற்றை, சமூகத்தால் அதிகம் சீண்டப்படும், சக மானுடரை, பண்பாட்டு நம்பிக்கையை இரத்தமும் சதையுமாக வாசகனின் அகத்தை தொடுமளவு புனையப்பட்டுள்ள நாவல், சிகண்டி.  எங்கள் ஊர்ப் பக்கம் (கரூர், தமிழ் நாடு), குடும்பங்களில் பையன்களை அய்யாவு என்று அழைக்கும் வழக்கம் உண்டு. சிகண்டி நாவலில் தீபனின் தாய், அவனை அய்யாவு என்றுதான் அழைப்பார். இது குறித்து, நவீனிடம், நான் கேட்டதற்கு,  நவீன், “ஆமாம், இங்கு நாங்களெல்லாம் அய்யாவுதான்” என்றார். 

தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் நூல்களையும் ஆசிரியர்களையும் முன்னெடுப்பவன் என்று மேடை கிடைத்தால் முழங்கும் நான், இந்த வருடம் வாசித்த மொழியாக்க நூல்களில் இரண்டு புதியது –  TAMIL :The Best Stories of Our Times மற்றும் Of Men, Women and Witches இரண்டு பழையது – Fourteen Years With Boss மற்றும் Sand and Other Stories .

தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கங்களை உள்ளடக்கிய, பெருந்தேவி தொகுத்துள்ள TAMIL : The Best Stories of Our Times குறித்து நான் வாசக நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் குறிப்பாக எழுதியதை தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறேன். 

அமெரிக்கப் பெற்றோர்களாக, நாம், நம் குழந்தைகளுக்குத் தமிழ் கலாச்சாரத்தையும் அதன் வேர்களையும் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். கதைகள் மற்றும் அவற்றைப் பற்றிய தொடர்ச்சியான உரையாடல்கள் மூலமாகவே அதை சாத்தியப்படுத்த முடியும். பெருந்தேவியின் TAMIL :The Best Stories of Our Times என்ற நூல், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்த நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதில் வெவ்வேறு எழுத்தாளர்களின் 22 கதைகள் உள்ளன. இவை உண்மையிலேயே தமிழின் சிறந்த கதைகளா என்பது வேறுவகையான விவாதத்திற்கு இட்டுச் செல்லும். தமிழ் வாழ்க்கை மற்றும் தமிழின் சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் கடமை நமக்கு உள்ளது என்ற நோக்கத்தை இந்த நூல் நிறைவேற்றுகிறது. கண்மணி குணசேகரனின் The King’s way, கலைக்குத்தாடி மற்றும் அவரது குழுவினரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. தங்களது நிகழ்வை நடத்த ஒரு கிராமத்தை அடைவதற்கு,  அவர்கள் மூன்று வெவ்வேறு பேருந்துகளில் பயணிக்கிறார்கள். வாக்குறுதியளித்தபடி அவர்களால் சரியான நேரத்தில் சென்றடைய முடியுமா என்ற ஒரு பரபரப்பை வாசகனுக்கு உணர்த்திவிட்டு, மனதை அள்ளும் அனுபவத்தையும் கையளிக்கிறது.

அசோகமித்திரனின் Harmonium எனும் கதை, ‘பூம் பூம் மாட்டுக்காரன்’ ஒருவனின் அன்றாடத்தையும் அவனது பாடலையும் அறிமுகப்படுத்துகிறது. ஹார்மோனியத்தை விரும்பாத நேரு, பாரதி உள்ளிட்ட அனைவரையும் அவர் நகைச்சுவையாக விமர்சிப்பது ஒரு சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.

நான், ஜே.பி. சாணக்யா மற்றும் ஷோபா சக்தி ஆகியோரின் படைப்புகளை அவ்வப்பொழுது வாசித்திருக்கிறேன். அவர்களின் கதைகள் என்னை ஒருபோதும் ஏமாற்றியதில்லை. ஜே.பி. சாணக்யாவின் கதை, குழந்தையில்லாத ஒரு தையல்காரர் அவரது மனைவி தம்பதிகள் வாழ்வைச் சித்தரிக்கிறது. கதை மெதுவாக நகர்ந்து, அவள் கருவுற காரணமான ஒரு நிகழ்வை வாசகனுக்குப் படைத்துவிட்டு, ஒரு தார்மீகக் கேள்வியை முன்வைக்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக,  என்னை அத்தகைய ஒரு சூழலில் வைத்து, பல தர்க்கங்களை எனக்குள் செய்யவைத்தது.

ஷோபா சக்தியின் கதை, பாரிஸில் வசிக்கும் ஒரு இலங்கைத் தமிழரைப் பற்றியது. அவர் uprising என்று குறிப்பிடுவது மேற்பார்வையில் புன்முறுவலை கொடுத்தாலும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் வலியை வாசகனுக்கு கடத்துவதில் சற்றும் தவறவில்லை.

இந்தத் தொகுப்பில், குழந்தை இல்லாத தம்பதியினர் என்ற பேசுபொருளை மூன்று கதைகள் கையாளுகின்றன. ஆனால், மூன்று கதைகளின் மாந்தர்கள் வாழும் நாடும், வாழ்க்கைச் சூழலும் வெவ்வேறானவை. இமையத்தின், Heart Break கதையில் வரும் தம்பதிகளான அசோக் மற்றும் சங்கீதா என் நினைவில்  நீங்கா இடம் பெற்றுவிட்டார்கள். ஒரு ஆணுக்கு ஆண்மைக் குறைவு என்று கண்டறியப்படும்போது அவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதை அசோக் பிரதிபலிக்கிறான். கதையின் முழு வீச்சமும் உரையாடல்கள் மூலமாகவே வாசகனை வந்தடைகிறது. நான் இதைத் தமிழிலும் வாசித்திருக்கிறேன். இரண்டு மொழிகளிலுமே, உரையாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.

லதா (சிங்கப்பூர்), வரிசையில் நிற்பதை விரும்பும் ஒரு பெண்ணை, Cheenalatchumj’s queue கதையில் அறிமுகப்படுத்துகிறார். அவள் எப்போதும் பல மணிநேரம் நிற்கக்கூடிய ஒரு வரிசையைத் தேர்ந்தெடுக்கிறாள். ஒரு வரிசையில் இரண்டு / மூன்று பேரைக் கண்டால், அவள் அவர்களைப் புறக்கணிக்கிறாள். இந்த சுவாரஸ்யமான கதாபாத்திரத்தின் மூலம், ஒரு சீனப் பெண்ணுக்கும் தமிழ் ஆணுக்கும் பிறந்த ஒரு குழந்தையின் வாழ்க்கையை, லதா சொல்லிச்செல்கிறார். தமிழ் மக்களின் வாழ்க்கை நம்பிக்கைகள் மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் நதி(கனடா)-யின்கதை, Slot, சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையான ஒரு பெண்ணை முக்கியப் பாத்திரமாகச் சித்தரிக்கிறது. சூதாட்டத்திற்கு அடிமையாவது மனிதர்களே; இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை.

நமது தமிழ் கலாச்சாரம் குறித்துப் பேசுகையில், சாதாரண மனித வாழ்வின் சலனங்களை பொருட்படுத்தாமல் காடுகளில் வாழும் ‘சாமிகள்’  பற்றிப் பேசாமல் அப்பேச்சு முழுமையடையாது. ஆயினும், அறிவியலால் விளக்க இயலாத ஏதோவொரு அமானுஷ்ய அம்சம் அங்கு நிலவுகிறது. சா. கந்தசாமியின் Known and Unknown எனும் கதை முடிந்தும் அமானுஷ்யத்தைக் குறித்தான வியப்பில் வாசகன் விடப்படுகிறான். 

எஸ். ராமகிருஷ்ணன் தனது Soundaravalli’s moustache என்ற Coming-of-age வகைமை கதையில் கையாண்டுள்ள கருப்பொருள், தமிழ்நாட்டுப் பதின்ம வயதுப் பெண்களுக்கு மட்டுமேயான ஒன்றல்ல; மாறாக, அது ஒரு உலகளாவிய உணர்வும் அனுபவமுமாகும். Bullying என்பதும் கலாச்சார எல்லைகளைக் கடந்து உலகம் எங்கும் குழந்தைள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும். உலகின் எந்தப் பகுதியில் வாழும் பதின்ம வயதுச் சிறுவரும் இந்தப் பிரச்சனையுடன் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியும். 

தொகுப்பில் உள்ள அ.முத்துலிங்கம், ஜெயமோகன், கீரனூர் ஜாகீர் ராஜா, சாரு நிவேதிதா, தேவிபாரதி, சுரேஷ்குமார இந்திரஜித், அம்பை எழுத்தாளர்களின் கதைகள் ஆங்கில மொழியாக்கத்தில் வாசகனுக்கு வெவ்வேறு வகையான வாழ்க்கை அனுபவங்களை கொடுப்பவையாக உள்ளன. 

இந்த நூலை , அமெரிக்கத் தமிழ்ப் பெற்றோர்கள் , தங்கள் நூலகத்தில் வைத்துக்கொள்ளலாம். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கானதல்ல. ஏழு அல்லது எட்டு வகுப்பு மாணவர்கள், வாசிக்கலாமா என்று பெற்றோர்கள் ஒரு முறை வாசித்துவிட்டு பரிந்துரைக்கலாம். குழந்தைகளுக்கும் சில விஷயங்கள் இன்றைய சமூகச் சூழலாலும், அமெரிக்கக் கல்விமுறையாலும் தெரியும் என்பதையும் நினைவில் கொள்ளவும். அவர்களை வாசிக்கவைத்து, உங்களுடன் உரையாடவும், கேள்விகளை எதிர்கொள்ளவும் தயாராகுங்கள். 

சாதாரணர்களின், எழாத குரல்களை தன் புனைவின் வலியாக அறிமுகப்படுத்தியவர் அசோகமித்திரன். அந்த வகையில் Sand and Other Stories  – கல்யாண் ராமன் மற்றும் கோமதி நாராயணன் மொழிபெயர்ப்பில் வந்துள்ள அசோகமித்தரனின் கதைகளை பரிந்துரைக்கிறேன். 

மஹாபாரதத்தை புதிய பார்வையில் சொல்லப்படும் புதினங்களை வாசிப்பதில் எனக்கு உள்ள ஆர்வத்திற்குத் தீனி போட,  எஸ். ராமகிருஷ்ணனின், உப பாண்டவம் வாசித்தேன். பாண்டவர்களை அரக்கு மாளிகையில் ஐந்து பேரும் அவரது அன்னையும் தப்பிக்க, இன்னொரு வேடுவப் பெண்ணும் அவர்களது புதல்வர்களும் பலியானார்கள் என்பது நாம் அறிந்த கதை. அந்த வேடுவப் பெண்ணின் கணவன் பார்வையில், விடுபட்ட குரல்கள் எனும் அத்தியாயம் பேசுகிறது. ஐவரை மணந்த திரௌபதி, ஒருவருடன் இணைந்து , சிசு ஒன்று பிறந்து பிறகு, அந்த சிசுவை தாதிகளிடம் விட்டுவிட்டு, மீண்டும் கன்னிமை கொண்டு மற்றொருவருடன் வாழும் சோகம், அவளது பார்வையில். ஒரு புதிய கண்ணோட்டத்துடன் மஹாபாரதத்தை அணுகும் எஸ். ராமகிருஷ்ணனின் இந்த நாவல் தமிழில் தவிர்க்கமுடியாதது.

டாலஸ் நண்பர்கள், மாதமிருமுறை, தமிழின் முக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்துவிட்டு, ஒரு நூலகத்தில் சனிக்கிழமை பின் மதியம் கூடி விவாதிக்கிறார்கள். ஆஸ்டினிலிருந்து ராதாவும், நானும், இலக்கிய ஆர்வலர்களுடன் சென்று அவற்றில் கலந்துகொள்வதுண்டு. அவர்கள், முத்துலிங்கம் புனைவுகளை கலந்தாலோசித்த வாரம் அப்படி ஒரு பயணம் சென்றதால், அ. முத்துலிங்கம் படைப்புகளை மீள்வாசிப்பு செய்தேன். ஜெயமோகனின், மத்தகம், ஈராறுகால் கொண்டெழும் புரவி  நூல்களை மீள்வாசிப்பு செய்ததும், டாலஸ் இலக்கிய கூடுகையை முன்னிட்டுத்தான். 

முதலீட்டாளர்களை முன்னிறுத்தும் நாட்டில் வாழ்வதால், முதலீடு சம்பந்தமான அறிவை விரிவாக்கும் நூல்களை வாசிப்பது அத்தியாவசியம் என்பது என் நிலைப்பாடு. அந்த வகையில், The Psychology of Money மற்றும் Die with Zero நூல்களை வாசித்தேன். 

புலம்பெயர்ந்தவனான எனது மொழி ஆங்கிலமும் இல்லாமல் தமிழும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது (புலம் பெயர்ந்தவனின் பெரும் இழப்பு).  எனது அன்றாடத்தில் மிகவும் குறைவான தமிழ்ச் சொற்களே உபயோகத்தில் உள்ளன. உதாரணத்திற்கு மேற்கண்ட பத்தியில் உள்ள அத்தியாவசியம் வார்த்தையை சரியாக எழுத கூகிளின் உதவியை நாடினேன். அம்மை பார்த்திருந்தாள், கறங்கி, பனுவல் போற்றுதும், தீதும் நன்றும், கம்பனின் அம்புறாத்தூணி என மீண்டும் மீண்டும்  நாஞ்சிலின் நூல்களை நாடுவது என் மொழிச்செறிவை மேன்படுத்த.

தஞ்சைப் பிரகாஷின், கரமுண்டார் வீடு  குறித்து தமிழ் இலக்கியச் சூழலில் இரு வேறுபட்ட கருத்துக்கள்  நிலவுகின்றன. எனக்கென்று ஓர் அவதானிப்பை உருவாக்கிக்கொள்ள வாசித்தேன். தமிழ் வாசகனாக இதை வாசித்துவிட்டு அவரவர்களுக்கான அவதானிப்பை உருவாக்கிக்கொள்வதே நன்று என்பது எனது பரிந்துரை. 

இவர்கள் எழுதியதை எல்லாம் வாசித்துவிடவேண்டும் என்று ஒரு வைராக்கியம் இருந்துகொண்டே இருக்கும். கமலதேவி, பாவண்ணன், அஜிதன் படைப்புகளை ஆராய்ச்சி மாணவன் போல வாசித்தேன். பாவண்ணன் சிறுகதைகள் குறித்து ஒரு கட்டுரையையும் எழுதினேன். கமலதேவியின் கதைகளில் தமிழக கிராமங்கள் மாறி வரும் சித்திரத்தைப் பார்க்கிறேன். எனது குறிப்பிலிருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன். ஊரில் இருக்கும் வீடுகள் என்றால் உயரமான திண்ணைகள்தான். ரைஸ்மில்கார அய்யா வீட்டுக்குப் போனா, அவங்க வீட்டுத் திண்ணையில் ரெண்டாப்பு படிக்கிற என்னால, ஒரு எம்பு எம்பித்தான் உட்காரமுடியும். கமலதேவி கதை திண்ணைகள் இல்லாத, மஞ்சள் , சிகப்பு,  நீல வண்ண வீடுகள் இன்றைய கிராமத்தின் காட்சியாகின்றன. அஜிதனின், வழித்துணை என்ற கதை முதல் பார்வையில் சாதாரணம் எனத் தோன்ற வைக்கும். மரணத்தை குறித்து, வழிப்போக்கனின் பார்வையில் ஒரு அவதானிப்பை கொடுக்கிறார் என்பதில் விவாதிக்கும் இடத்தை அடைந்து விடுகிறது.  இவர்கள் படைப்புகளை வாசித்த  உத்வேகத்தில் நான் பரிந்துரைத்த கதைகளை ராதாவும் சஹாவும், கூட்டுமுயற்சியில், தலா ஒருவரது கதையை மொழியாக்கம் செய்தார்கள். அஜிதனின் போர்க் ரோஸ்ட், கமலதேவியின் உடன்போக்கு, பாவண்ணனின் கலைமாமணி ஆங்கிலத்தில் வாசிக்க வழிவகுத்தன.

டிசம்பர் 2, 2025 முதல் டிசம்பர் 7, 2025 வரை வெள்ளி மலையில் ராதா, சஹா மற்றும் நானும் தங்கியிருந்தோம். டிசம்பர், 5, 6 மற்றும் 7 தேதிகளில் ஆசிரியர் ஜெயக்குமார் நடத்திய ஆலயக்கலை வகுப்பில் மூவரும் கலந்துகொண்டோம். வெள்ளி மலை நூலகத்தில் இருந்து , நான் சப்தங்கள் (வைக்கம் மு பஷுர் – குளச்சல் எம் யூசுப்), ஆக்காண்டி (வாசு முருகவேல்),  நூல்களை வாசிக்க, ராதா சப்தங்கள் , வல்லினம் பரிசு கதைகள் நூல்களை வாசித்தார். வல்லினம் பரிசு கதைகள் தொகுப்பிலிருந்து, நான் வாசித்த சில கதைகளில்,  மலேசியா அரவின் குமாரின், பதில் கதை நினைவில் நின்றது.

ஓர் இந்தியப் பயணத்தின் போது, கோவையிலிருந்து கரூர் செல்லும் வழியில், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் சென்று கடைகளில் கயிற்றில் தொங்கும் புத்தகம் இன்றைய சூழலிலும் விற்கிறதா என்று பார்த்தோம். வார மாத இதழ்களுடன், முனைவர் ப. சரவணனின், சங்க காலம் நூலும் கயிற்றில் தொங்கக் கண்டோம். அப்படி வாங்கிய அந்த நூலை, ராதா வாங்கிய அன்றே ஒரு மர்ம நாவலை வாசிக்கும் சுவாரஸ்யத்துடன் வாசித்துவிட்டார். நான் இந்த வருடம்தான் வாசித்தேன். இதை வாசித்ததால், எனக்கும் சங்ககால வாழ்க்கை பற்றிக் கொஞ்சம் தெரியும் என பொதுவெளியில் சொல்லலாம். சங்ககாலத்தில், பெண்ணேடுக்க, மாப்பிள்ளை வீட்டார்தான் பொருளும், கால்நடைகளும் என தட்சணை கொடுத்துள்ளார்கள். 

பழைய கிளாசிக் நாவல் வரிசையில், நான் , சுந்தரராமசாமியின் ஜே.ஜே சிலகுறிப்புகளை கையில் மீள்வாசிப்புக்கு எடுக்க, ராதா, தமிழ் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முதல் நாவலான மாயூரம் வேத நாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் வாசித்தார்.  ராதா, பிரதாப முதலியார் சரித்திரம் வாசிக்கிறார் என நான் whatsApp status வைக்க, நண்பர் ஒருவர், இயக்குனரும்  நடிகருமான விஜய் ஆண்டனி, மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் கொள்ளுப்பேரனாக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். 

2025 வருடம் முடிந்தும் முடியாமலும்,  இத்தனை வருட வாசிப்பிற்கு எனக்கு கிடைத்த அங்கீகாரம் என பெருமைப்பட்டுக்கொள்ளும் நிகழ்வும் நடந்தேறியது. இந்தியாவில் இரண்டு மாதங்கள் இருக்கலாம் என்று சென்றிருந்த என்னை போனில் அழைத்து, எழுத்தாளர் ஜெயமோகன், விஷ்ணுபுரம் விருது 2025 விழாவில், விருது பெற்ற ரமேஷ் பிரேதனின் படைப்புகளை முன்வைத்து பேச வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ரமேஷ் பிரேதனின், ஐந்தவித்தான், அவன் பெயர் சொல், நல்ல பாம்பு-நீல அணங்கின் கதை,  நாவல்களையும், 23 சிறுகதைகளையும், ஆண், பெண், ஆபெண் தொகுப்பின் சில கவிதைகளையும், காந்தியைக் கொன்றது சரிதான் தொகுப்பில் உள்ள கவிதைகளையும் வாசித்திருந்தேன். மானுடம் சார்ந்த ஒரு கரிசணையுடன் அவர் முன்வைத்த கருத்தியல்களை அவர் புனைவுகளின் வழியாக நான் எப்படி அவதானித்துக்கொண்டேன் என்ற புரிதலை விழாவில் பகிர்ந்துகொண்டேன். 

2025-லும் ராதாவும் சௌந்தரும் வாசிப்பார்கள் என்று சென்ற வருடம் எனது வாசிப்பு கட்டுரையை முடித்திருந்தேன். 2025-ல், நான் 70 நூல்களையும், ராதா 36 நூல்களையும் வாசித்து எங்கள் உறுதிமொழியை காப்பாற்றியுள்ளோம் (இந்த இடத்தில் ஒரு கைதட்டல் அல்லது ஒரு புன்னகை முக்கியம்). எங்கள் வாசிப்புப் பயணமும் அது சார்ந்த விவாதங்களும், கலந்துரையாடல்களும், பதிவுகளும், நண்பர்கள் உங்களின் அயராத ஒத்துழைப்பைப்போல தொடரும். 

Leave a comment