பாரதி ராஜா – அஞ்சலி

Published by

on

நான் முளைத்து மூன்று இலை விடாததற்கு முன்னரே, என்னைவிட வயதில் மூத்த சகோதர்களால் ,  நல்ல படத்திற்குப் பின்னால் இருப்பவர் இயக்குனர் என்பதை கற்றுக்கொண்டேன். திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி. நாகராஜனிடம் என்ன சிறப்பு, பாலச்சந்திரனின் கதாநாயகி செருப்பைக் கழட்டிக்கொண்டே வசனம் பேசுகிறாள், ஶ்ரீதர் படம்,  என்று வீட்டு முற்றத்தின் நிலா வெளிச்சத்திலும், பள்ளி சென்று வீடு திரும்பும் நடைபாதையிலும்,   பாலபாடம் எடுத்தார்கள்.  பெல்பாட்டம் பேண்ட் போட்ட ஒரே ஒரு வெண்டனரி டாக்டர் உள்ள ஊரிலிருந்து ஏழு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துச் சென்று சின்ன டவுனில் இருக்கும் டெண்ட் கொட்டகையில்தான் படம் பார்க்கவேண்டும். அதுவும் டவுனில் ரிலீசாகி, இங்கு வர ஒரு வருடம், இரண்டு வருடம் கூட ஆகலாம். கல்லூரியில் படிக்கும் அண்ணன்கள், படிக்கிறார்களோ இல்லையோ , வார்டனை ஏமாற்றிவிட்டு படம் பார்ப்பார்கள். அப்படி டவுனில் படிக்கச் சென்ற ஒரு அண்ணன் பதினாறு வயதினிலே படம் பார்த்துவிட்டு வந்து , பாரதி ராஜா-வை பாராட்டித் தள்ளிவிட்டார்.  அவர் பார்த்து ஒரு வருடம் கழித்துத்தான், நான் சப்பாணியையும், பரட்டையையும், மயிலையும் பார்த்தேன். பரட்டையைப்  பார்த்தால், எங்கள் கிராமத்தின் அரசமரத்தடியில் சட்டை போடாமல் அமர்ந்து வெட்டி நியாயம் பேசும் இளைஞர்களை நினைவுறுத்தினான். சப்பாணியை நினைவுறுத்தும் அப்பாவி இளைஞர்களும் எங்கள் கிராமத்தில் இருந்தார்கள்.  வாரம் ஒரு முறை சந்தைக்குப் போவதென்பதும் எங்கள் ஊர்ப்பழக்கம். ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுனு’  பாடல் ஒன்று போதும், சிறுவன் எனக்கு  படத்தைப் பிடிக்க. குருவம்மாள் பக்கத்து வீட்டாரை வாய்க்கு வந்தபடி பேசும்பொழுது ஏன் எல்லோரும் காதை பொத்திக்கொள்கிறார்கள் என , கல்லூரி அண்ணன் விளக்கம் சொன்னார். இயக்குனர் பாரதி ராஜா நெஞ்சில் நுழைகிறார். 

 அடுத்து வந்த ஒரு கல்லூரி விடுமுறையில் , அதே அண்னன் , கிழக்கே போகும் ரயில் பற்றி , என் அம்மா கொடுத்த காப்பித் தண்ணியைக் கூட குடிக்காமல் பேசிக்கொண்டேயிருந்தார். பரஞ்சோதி-போல கவிதை எழுதும் பாத்திரங்களை தெரியாதெனினும், படித்து வேலையில்லாவிட்டாலும், காதலிக்கத் தெரிந்த அண்ணன்களுடன் ஒப்பிட முடிந்தது. படத்தின் ஆரம்பத்தில் பாஞ்சாலிக்கு வழி சொல்பவர் , போர்த்தியிருக்கும் போர்வை மிகவும் பரிச்சயமாக இருந்தது. ராமையா மாமா, பாஞ்சாலியை தூக்க யத்தனிக்கும் சூட்சுமத்தை என்னைவிட பெரிய அண்ணன்கள் சொல்லிச் சிரித்தார்கள். பாஞ்சாலியை ஊரே கூடி நிர்வாணமாக ஓடவைக்க, புரிந்தும் புரியாமலும் சோகமானேன்.  ‘கோவில் மணி ஓசை’ ,’மாஞ்சோலை கிளிதானோ’, ‘பூவரசும் பூ பூத்தாச்சு’ எல்லாம் விருப்பப் பாடல்கள் ஆயின.

சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்களை என் வழிகாட்டி அண்ணன் அதே வரிசையில் பார்த்துவிட்டார். நான், நிழல்கள் பார்த்த பிறகுதான் மற்ற படங்களைப் பார்த்தேன். நான் புதிதாக +1-ல் சேர்ந்திருந்தேன். நோட்டுப் புஸ்தகம் வாங்கவேண்டும் என்று வீட்டில் சொல்லி, அனுமதி வாங்கி  நானும் நண்பனும் நாள் முழுக்க பக்கத்து டவுனில் சுற்றி வலம் வந்து , வறுமையின் நிறம் சிவப்பு, நிழல்கள் படம் பார்த்தோம்.  என் அப்பாவை நேருக்கு  நேர் பார்த்தால், உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது.  படம் பார்க்கத்தான், நோட்டுப் புஸ்தகம் வாங்கச் சென்றோம் என்று போட்டு உடைத்துவிட்டேன். நண்பன், ‘மாப்பிளே, நீ சரியான காந்திடா’ என்றான். வீட்டுக்கு ஒரு அண்ணன் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பார்கள். ‘நிழல்கள்’  நிஜம் எனத்தெரியும் வயது. பாரதி ராஜா-வை பிடிக்காமல் போகுமா ?

‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வந்தபொழுதெல்லாம், டவுனுக்குத் தனியாக செல்லமுடியும். சித்தப்பா வீட்டிற்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களையும் பார்த்தாகிவிடும், படமும் பார்த்தாகிவிடும். பதின்பருவம் , படம் பிடிக்காமல் போகுமா? சிகப்பு ரோஜாக்களும், சித்தாப்பா வீட்டிற்குச் செல்கிறேன் என்று சித்தப்பா மகனையும் கூட்டாளியாக இணைத்துக்கொண்டு பார்த்தேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை அது ஓடும் நகரங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் பார்த்தேன். நண்பன் சக்தி, என்னைக் கலாய்ப்பது இந்தப் படத்தின் மீது எனக்குள்ள obsession-ஐ வைத்துத்தான். 

கிராமத்துப் படமா எடுக்கிறார் பாரதி ராஜா என்று கிண்டல் செய்ய, ‘டிக் டிக் டிக்’ எடுத்தார் என்று பேசிக்கொள்வார்கள். அவர் எதனால், எதற்கு எடுத்தால் என்ன, நம்ம டைரக்டர் படம் என்றுதான்  நான் பார்த்தேன். காதல் ஓவியம் படம் மட்டும் பார்க்கவே தோணவில்லை. இன்றுவரை அதை பார்க்கவில்லை. 

‘மண்வாசனை’ , திருச்சி தேசிய கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும்பொழுது வந்தது. என் அறை நண்பன், அச்சு அசல், மண் வாசனை கதாநாயகனைப் போலவே இருப்பான். அவனது இயற்பெயர் மறந்து, ‘டே பாண்டியா’ என்று அழைக்க ஆரம்பித்தோம். காரைக்குடி நண்பன் மெய்யழகன் தலைமையில், ரேவதி-க்கு “எங்கள் பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கிரீர்கள். குடும்பப் பாங்கான படங்களையே ஏற்று நடிக்கவும்”,  என்று கடிதம் எழுதினோம். அவரும் “அப்படியே நடிக்கிறேன்” என்று பதில் எழுதியதாக ஞாபகம். 

முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் சம்யம், கிராமத்து டீக்கடை ஒன்றில், பெரியவர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்ன நினைத்தாரோ, தம்பி , நீ முன்னேறனும்னா , சினிமாவே பார்க்கக்கூடாது என்றார். அவர் வாக்கால், ஒரு வருடம் முழுக்க சினிமா பார்க்காமல் இருந்தேன். விடுதியில் வெளியரங்கில் படம் போட்டால்கூட, அறையில், போர்வையை தலைக்கும் சேர்த்து இழுத்துப் போர்த்தி தூங்கிவிடுவேன். அந்த விரதத்தில் ‘முதல் மரியாதை’ வரிசைக் கிரமமாக, பார்க்கத் தவறவிட்டேன். இதுகாறும், நான் நல்ல இலக்கிய வாகனாகவும் மாறியிருந்தேன். முதல் மரியாதை , மலைச்சாமி குயில் காதலை புரிந்துகொள்ள முடிந்தது. நணபன் ராம்ஸ், குயில் (ராதா) படகிலிருந்து இறங்கி காலை வைத்ததும், மலைச்சாமி (சிவாஜி) துடித்து எழுவதை, வாரத்தில் ஒரு முறையாவது சொல்லிச் சொல்லி ரசிப்பான். 

திருச்சியில் மாரிஸ் தியேட்டர் என்றொரு காம்ப்ளெக்ஸில், மூன்று அரங்குகள் இருக்கும். ஆங்கில இலக்கியம் படிக்கும் நண்பருடன் பார்க்கச் சென்றேன். சத்யராஜ், சின்னராசுவாக, எழுதப் படிக்கத் தெரியாதவராக மனதில் நின்றார். அவரை நினைத்துக்கொண்டே, படம் பார்த்துவிட்டு, விடுதிக்குத் திரும்பிச் செல்ல, பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நாலணா பற்றாமல் நானும் அவரும் நடந்தே சென்றோம்.

‘வேதம் புதிது’ , வெளிவந்த சமயம், திண்டுக்கல், பொறியியல் கல்லூரியில் லெக்சரர் வேலை. படம் பார்க்கச் சென்றால் மாணவர்களும் இருப்பார்கள். ஒரு சங்கோஜத்துடன் , நண்பன் ரகுவுடன் படம் பார்த்தேன். ரகு,  நான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகைகளுக்குப் படம் போடும் ஓவியன். சினிமா-வை அலசுபவன். சத்யராஜுக்கு சரியான பாத்திரம் , என்று சொல்லிக்கொண்டே பார்த்தோம். 

புது நெல்லு புது நாத்து படம் வரும்பொழுதெல்லாம்,  டெல்லி வந்தாச்சு. கேஸட்டையும் டெக்கையும் வாடகைக்கு எடுத்து விடியவிடிய மூன்று நான்கு படங்கள் பார்க்கும் காலம். எனக்கு சுகன்யாவை பிடிக்கவில்லை.  அறை நண்பன் சுப்பையா, அவர் ஒரு ரவுண்ட் வருவார் என்றார். அவர் சொன்னதுதான் உண்மையாச்சு. நெப்போலியன், நம்ம மாவட்டம் திருச்சி என்று எனக்குப் பிடித்துப் போனது.  டில்லித் தமிழ்ச்சங்கத்தில், புதிதாக ரிலீஸ் ஆகிய படத்தை பெட்டி எடுத்துக்கொண்டு வந்து, தியேட்டரை வாடடைக்கு எடுத்து , சனி ஞாயிறுகளில் திரையிடுவார்கள்.  அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களை தேடிச் சென்று டிக்கட் விற்கும் பணி இருக்கும்.  நான் கர்ம சிரத்தையாக, நாடோடித் தென்றல் படத்தின் டிக்கட்களை என் பிரிய இயக்குனருக்காக விற்றேன். 

ராதா , புது மணப்பெண். டில்லியில் இரு அறைகள், ஒரு குட்டி கிச்சன் உள்ள வீட்டில் வாழ்க்கை. ‘தென்கிழக்குச் சீமையிலே’ எங்கள் நினைவில் நீங்கா இடம் பெற்ற பாடல் உள்ள படமான ‘கிழக்குச் சீமையிலே’ வாழ்வின் இந்தக் கட்டத்தில் பார்த்தோம்.  

எப்படியும் அமெரிக்கா சென்று சம்பாதித்தே ஆகவேண்டும் என்று, முயற்சியோ முயற்சி செய்த காலத்தில், கருத்தம்மாவை படம் வெளிவந்தவுடன் பார்க்காமல் பிறகுதான் பார்த்தேன். உனக்குப் பிடித்த படங்களைக் கூறு என்று சொன்னால், கருத்தம்மா, முதல் பத்துக்குள் நினைவுக்கு வருவாள். ‘போறாளே பொண்ணுத்தாயி’ பாடலும், அந்தப் பாத்திரமும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தன.  ஒரு படத்தைப் பிடித்திருந்தால், அந்தப் படப்பிடிப்புக் குழுவில், தேநீர் கொடுக்கும் பையனாகவேணும் நான் வேலை செய்திருக்கவேண்டும் என்று என் அபிப்ராயத்தை சொல்வேன். கருத்தம்மா-பற்றித்தான் அப்படி அடிக்கடி சொல்வேன். 

 நான் என்ன உ.வே. சாமிநாத ஐயரா, சாதனை புரிந்தவனாக , என் சரித்திரம் எழுத? அப்படி எழுதப்படுமெனின், வருடங்களை போட்டு எழுதுவதைப் போல பாரதி ராஜாவின் படங்களையும், காட்சிகளையும், பாடல்களையும்  போட்டுத்தான் எழுதவேண்டும்.

 நான் என்ன உ.வே. சாமிநாத ஐயரா, சாதனை புரிந்தவனாக , என் சரித்திரம் எழுத? அப்படி எழுதப்படுமெனின், வருடங்களை போட்டு எழுதுவதைப் போல பாரதி ராஜாவின் படங்களையும், காட்சிகளையும், பாடல்களையும்  போட்டுத்தான் எழுதவேண்டும்.  

சரித்திர நாயகனே, இயக்குனர் இமயமே!  உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். 

Leave a comment